Published:Updated:

சுப்ரபாத தரிசனம்!

ஒரு லைவ் ரிப்போர்ட்எஸ்.கதிரேசன்

சுப்ரபாத தரிசனம்!

ஒரு லைவ் ரிப்போர்ட்எஸ்.கதிரேசன்

Published:Updated:

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே!
உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!

- எந்தச் சூழலில் ஒலித்தாலும், எந்த இடத்தில் ஒலித்தாலும், அந்த இடத்தை ஆன்மிகத்தால் நிரப்பி, தெய்விகப் பேரொளி தரும் வலிமை இப்பாடலுக்கு உண்டு. இது, திருமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீவெங்கடேசப்பெருமாளுக்கு, நாள்தோறும் அதிகாலையில் பாடப்படும் சுப்ரபாதம்.

ஓயாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பெருமான் துயில்கொள்வது... நள்ளிரவு 2.30 முதல் 3.00 மணி வரை என அரை மணி நேரம் மட்டுமே! பிறகு, அதிகாலை 3 மணிக்கு அவரை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சிதான் சுப்ரபாத தரிசனம். இந்த தரிசனத்தைப் பெறுவதில் மிகப்பெரிய ஆர்வமும் ஆவலும் பக்தர்களுக்கு எப்போதுமே உண்டு. மற்ற சேவைகளைக்கூட பக்தர்கள்  எளிதில் பெறலாம். ஆனால், சுப்ரபாத சேவையைப் பெறுவது கடினம் என்பதால், வாசக - வாசகிகளுக்கு தீபாவளிச் சிறப்பிதழுக்காக நேரடி வர்ணனையாக அதை வழங்குகிறோம்... சுருக்கமாக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ழ்வார்கள் கூற்றுப்படி, வழிவழியாய் ஆட்செய்யப்பட்டு வரும் கைங்கர்யங்களில் ஒன்றான சுப்ரபாத சேவை, ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்தில் (விடியற்காலை 3.00 - 3.30 மணியளவில்) நடைபெறுகிறது. சந்நிதி இடையர், ஸ்நானம் முதலானவற்றை முடித்துக்கொண்டு திருநாமம் தரித்து, தீவட்டி பிடித்துக்கொண்டு, வடக்கு மாடவீதியில் உள்ள அர்ச்சகர் இல்லத்துக்குச் சென்று தயாராக இருக்கும் அர்ச்சகரை வணங்கி, ஆலயத்துக்கு அழைத்து வருகிறார்.

சுப்ரபாத தரிசனம்!

பிறகு, கோயிலின் தங்கவாயிலை (பங்காரு வாஹிலி) திறக்கும் கருவியான குஞ்சக்கோல் எனப்படும் சாவிக்கொத்து (திறவுகோல்) பெட்டியைத் தோளின்மீது வைத்தபடி சந்நிதியை நோக்கி நடக்கும் சந்நிதி இடையரை, பின்தொடர்கிறார் அர்ச்சகர். பின்னர் கோயில் வாசல் (மஹாத்துவாரம்) அருகே சென்று, நகாரா மண்டபத்தில் உள்ள பெரிய மணியை எச்சரிக்கைக்காக ஒலிக்கச் செய்கிறார் சந்நிதி இடையர். அந்த மணியோசையுடன் முதலில் மஹாத்துவாரம் திறக்கப்படுகிறது. சந்நிதி இடையரைப் பின் தொடர்கிற அர்ச்சகர், துவார தேவதைகளை நமஸ்கரித்து, துவஜஸ்தம்பத்தை வலம் வந்து, வெள்ளி வாயிலைக் கடந்து, தங்க வாயில் முன்பாக ஸ்வாமியை தியானிக்கிறார்.

சந்நிதி இடையர், சந்நிதி வீதியில் உள்ள ஸ்ரீமான் பெரிய ஜீயர் மடத்துக்குச் சென்று, தயாராக இருக்கும் ஜீயர் ஸ்வாமிகள் அல்லது பரிசாரகரான ஏகாங்கியை அழைத்து வருகிறார். இதற்குள்ளாக ஆலய அதிகாரியான பேஸ்கார், சுப்ரபாதம் இசைக்கும் வேத பண்டிதர்கள், மஹந்து மடம் (ஹாதிராம்ஜி மடம்) உள்ளிட்ட பிற மடங்களின் பிரதிநிதி கள் தங்க வாயில் முன்பாக வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். தாளப்பாக்கம் அன்ன மய்யா வம்சத்தைச் சார்ந்த ஒருவர் தம்புராவை கையில் ஏந்தியபடி, துயிலெழுப்பு சங்கீர்த்தனையைப் பாடத் தயாராக இருக்கிறார். சுப்ரபாத தரிசனத்துக்கு கட்டணம் செலுத்திய பக்தர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அனைவரின் முன்னிலையில் தம்மிடம் உள்ள சாவிக்கொத்தைக்கொண்டு, தங்க வாயிலில் உள்ள சிறிய துளையின் மூலம் தாழ்ப்பாளை அர்ச்சகர் திறக்க... பேஸ்கா ரிடம் உள்ள சீல் செய்யப்பட்ட சிறிய பையில் உள்ள சாவிகளை எடுத்து, சீல் செய்யப்பட்டிருக்கும் மூன்று பெரிய பூட்டுகளைத் திறக்கிறார் சந்நிதி இடையர்.

தங்கவாயில் திறந்ததும், தீவட்டியுடன் முதலில் உள்ளே நுழைகிறார் சந்நிதி இடையர். மறுவிநாடி அர்ச்சகர், ''கௌசல்யா சுப்ரஜா ராமா...'' எனும் சுப்ரபாதத்தைப் பாடிக் கொண்டு தங்கவாயில் உள்ளே நுழைகிறார். ஜீயர், மஹந்து மடத்தினர் உள்ளிட்டோர் கொண்டு வந்த நவநீதம் (பால், சர்க்கரை, வெண்ணெய் தாம்பூலம்) உள்ள கிண்ணத்தை எடுத்துக்கொண்டு உள்ளே போகிறார்கள். தங்கவாயில் மூடப்படுகிறது.

சுப்ரபாத தரிசனம்!

வேத பண்டிதர்கள், சுப்ரபாதத்தை ஸ்ருதிலயத்தோடு பாடுகிறார்கள். அன்னமய்யா இயற்றிய திருப்பள்ளி எழுச்சிக் கீர்த்தனையை பூபாள ராகத்தில் இசைக்கிறார்கள். 'தங்கவாயில் கதவு எப்போது திறக்கும்... எம்பெருமானை எப்போது தரிசிக்க முடியும்?' என்கிற ஆவலுடன் பக்தர்கள் காத்திருக்கும் இந்த நிமிடங்களில் கிடைக்கும் சுகத்தை, வார்த்தை களில் விவரிக்க முடியாது.

தங்கவாயில் மூடியிருக்க உள்ளே... சந்நிதி இடையர், குலசேகரப்படி அருகே நின்று, தீவட்டி வெளிச்சத்தில் ஸ்ரீபோக ஸ்ரீநிவாச மூர்த்தியை (ஏழுமலையானின் சிறிய உருவச் சிலை) முதலில் தரிசனம் செய்துகொள்வார் (இவருக்குத்தான் முதல் தரிசனம் என்பது பெருமானின் உத்தரவுப்படி, வழிவழியாக  தொடர்கிறது). பின்னர், அர்ச்சகர் உள்ளிட்டோர் உள்ளே நுழைவார்கள்.

சந்நிதி இடையர் கையில் உள்ள தீவட்டியை வாங்கி, சந்நிதியில் உள்ள தீபங்களை ஏகாங்கி ஏற்ற, ராமர் மேடையில் உள்ள தீபங்களை ஏற்றுவார் சந்நிதி இடையர். பிறகு, அர்ச்சகர் எம்பெருமானிடம் பாத நமஸ்காரம் செய்து, சயனமண்டபத்தில் உள்ள தங்கப்பட்டு பஞ்சணை மீது துயில்கின்ற ஸ்ரீபோக ஸ்ரீநிவாச மூர்த்தியை நமஸ்கரித்து கைதட்டி, எழுந்தருளும்படி பிரார்த்திப்பார். பிறகு, மூர்த்தியின் விக்கிரஹத்தை, எடுத்துச் சென்று மூலமூர்த்தி சந்நிதியில் (ஜீவஸ்தானத்தில்) எழுந்தருள செய்வார். எம்பெருமானுக்கு அனுஷ்டான கிரியை களை சமர்ப்பித்து, மடத்தார் கொண்டு வந்த நவநீதத்தை நிவேதனம் செய்து, சுகந்த தாம்பூலங்களைச் சமர்ப்பிப்பார் அர்ச்சகர்.

வேத பண்டிதர்கள் சுப்ரபாதம், மங்களாசாஸனத்தை முடிக்கிறார்கள். உள்ளே எம்பெருமானுக்கு நவநீத ஹாரத்தி காட்டிக்கொண்டிருக்கும்போது தங்க வாயில் கதவுகள் திறக்கப்படுகின்றன. 'கோவிந்தா... கோவிந்தா' என்று பக்தி சிரத்தையுடன் எம்பெருமானை தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

ஜீயர் ஸ்வாமிகள், சந்நிதி இடையர் உள்ளிட்டோருக்கு தீர்த்தம், சடாரியுடன் நிவேதன வட்டிலில் உள்ள தாம்பூலத்தை சமர்ப்பிக்கிறார் அர்ச்சகர்.

பின்னர் தேவஸ்தான ஊழியர்கள் (பரிசாரகர்கள்) உள்ளே சென்று எம்பெருமானின் திருக்கட்டிலை எடுத்து, வெளியே உள்ள சபேரா அறையில் வைக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் சந்நிதிக்குள் சென்று ஹாரத்தி, தீர்த்தம், சந்தனம், சடாரி மரியாதைகளைப் பெறுகிறார்கள். சுப்ரபாத சேவைக்கென கட்டணம் செலுத்திய பக்தர்கள் வரிசையாக சென்று, தரிசிக்கிறார்கள். எங்கும் ஒலிக்கிறது...

'கோவிந்தா கோவிந்தா..!'

முன்பதிவு!

சுப்ரபாத சேவையில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், ஆன்லைனில் 3 மாதங்களுக்கு முன்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கான கட்டணம் 120 ரூபாய். அல்லது திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கட்டணத்துடன் கூடிய காசோலையை மூன்று மாதங்களுக்கு

சுப்ரபாத தரிசனம்!

முன்பாக அனுப்பி தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

'எம்.எஸ்’-க்கு சிலை!

சுப்ரபாதம் என்றாலே, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் பாடியதுதான் மிகவும் பிரபலம். இதன் மூலம் கிடைக்கும் ராயல்டி முழுவதையும் திருப்பதி ஏழுமலையானுக்கே அவர் வழங்கியுள்ளார். அந்தத் தொகை பல லட்ச ரூபாயாகும். அதனால்தான் கீழ்த்திருப்பதியில் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு சிலை வைத்து பெருமைப்படுத்தி உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism