சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அந்த வீட்டின் உள்ளே முருகதாஸுடனும் அட்லீயுடனும் கமலஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார்; அஜித் மாடியிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கிறார்; வீட்டின் நடுவே ஜெய் - நயன்தாரா குஷி பொங்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்! இப்படி இந்த வீட்டுக்கு வரும் தமிழ்த் திரையுலகப் பிரபலங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்படி என்ன விசேஷம் இந்த வீட்டில்?

இந்த வீட்டின் சொந்தக்காரர்... ரீனா வேணுகோபால். குடும்பத்துடன் வசிப்பதற்காக ரசித்து ரசித்து இந்த வீட்டைக் கட்டினார் ரீனா. 'ரீனாஸ் வென்யூ’ என்று பெயரிடப்பட்ட இந்த வீட்டுக்கு மேனேஜராக பாலமுருகன் என்பவரையும் நியமித்தார். ஒரு நாள் இந்த வீட்டைப் படம் பிடித்த பாலமுருகன், நடிகை ராதிகாவிடம் காட்டியிருக்கிறார். 'அந்த வீட்டுல சீரியல் ஷூட்டிங் நடத்தலாம்னு நினைக்கிறேன்... கிளம்பி வரலாமா?!’ என்று மறுநாளே கேட்ட ராதிகா, இங்கே ஷூட்டிங் நடத்தியிருக்கிறார்.  விஷயம் வைரலாக பரவ, பிறகென்ன... ஷூட்டிங் வீடாக மாறிவிட்டது ரீனாஸ் வென்யூ. ரீனா, மேரேஜ் பிளானிங் பணிகளையும் செய்து வருபவர் என்பதால், திருமணங்கள் நடத்தவும் இந்த வீட்டைக் கொடுக்க, இப்போது ஓய்வே இல்லாமல், சினிமா, சின்னத்திரை மற்றும் விளம்பரப் படப்பிடிப்பு, திருமண நிகழ்ச்சிகள் என பிஸியாகவே இருக்கிறது இந்த வீடு!

கேரளா வீடு!

''ஏற்கெனவே சினிமா உதவி இயக்குநராக இருந்தவன். அதனால்தான் இந்த வீட்டின் கட்டமைப்பைப் பார்த்ததும், ஷூட்டிங் எடுக்க இதை வாடகைக்கு விடலாமே என்கிற ஐடியாவே வந்தது. பார்ப்பதற்கு கேரளா ஸ்டைல் வீடு போன்று இருப்பதால், 'ரீனாஸ் வென்யூ’ என்கிற இதன் பெயர் மறைந்து, 'கேரளா வீடு’ என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பெயரைச் சொன்னால் தான் சினிமாக்காரர்களுக்கு அடையாளமே தெரியும்'' என்று குஷியோடு சொல்கிறார் பாலமுருகன்.

கேரளா வீடு!

திருமண விசேஷங்கள் நடக்கும் இடமாகவும் இந்த வீடு மாறியது குறித்துப் பேசும் ரீனா, ''முதலில் என் மகன் விக்கியின் திருமணம்தான் இங்கே நடைபெற்றது. நான் மேரேஜ் பிளானிங் செய்து தருவதால், வீட்டை திருமணங்களுக்கும் பயன்படுத்தும் யோசனை வந்தது... உடனே

கேரளா வீடு!

செயல்படுத்திவிட்டோம். சிறிய அளவிலான திருமணங்கள் முதல் பிரமாண்ட திருமணங்கள் வரை  இங்கு நடக்கின்றன. அவரவர் தேவைக்கு ஏற்ப,  60 ஆயிரம் ரூபாயிலிருந்து கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. தேவைப்படுபவர்களுக்கு யானை, குதிரை ஊர்வலம் தொடங்கி மலர் அலங்காரங்கள், உணவு வரை அனைத்தையும் 'மேரேஜ் பிளானிங்’ செய்து தருகிறோம். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் இங்கே நடந்திருக்கின்றன. மண்டபம் போல வழக்கமான அமைப்பாக இல்லாமல், தேவைக்கு ஏற்ற மாதிரி டிசைன் செய்து வீட்டின் அமைப்பை மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான் இந்த வீட்டின் சிறப்பே!'' என்ற ரீனா,

''வழக்கமான மண்டபங்களில் நடக்கும் திருமணத்தைவிட, இந்த அழகிய வீட்டில் நடக்கும் திருமணம், ஏதோ நம் வீட்டிலேயே திருமணம் செய்துகொண்ட ஓர் உணர்வைத் தரும். திருமணம் ஓரிரு நாட்களில் முடிந்துவிட்டாலும், வாழ்க்கையில் இந்த வீடு மறக்க முடியாததாகிவிடும்!'' என்றார் அனுபவித்து!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு