நித்ய சத்யமான கடவுளுக்கேது மறைவு? இதைத்தான் மகாசமாதியான பிறகு எண்ணற்ற பக்தர்களுக்குக் கனவிலும் நேரிலும் பாபா சொன்னார். 'நான் உங்களோடுதான் எப்போதுமிருக்கிறேன். இப்போதுதான் நான் கட்டற்ற சுதந்திரத்தோடு இருக்கிறேன்’. ஸ்வாமி வாக்கு சத்ய வாக்கு! முன் எப்போதும் போலவேதான் அவருடைய வருகையும் லீலைகளும் அற்புதங்களும் அங்கங்கே பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பலப்பல இடங்களிலும் திடீர் திடீரென்று ஸ்வாமி வந்து நடமாடுகிறார்... பேசுகிறார்... செய்திகள் கூறுகிறார். பக்தர்கள் கண்டும் கேட்டும் அதிசயித்து மகிழும் பாபாவின் அற்புதங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. எனக்கு ஸ்வாமி தந்த அனுபவம் ஒன்றும் இங்கு நல்லதொரு தெய்வசாட்சியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

'ஸ்ரீசத்யசாயி பாபாவின் கடல்கடந்த கருணை’ என்ற தலைப்பில் ஸ்வாமி தந்த ஆஸ்திரேலிய அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்டதே ஸ்வாமிக்குக் காணிக்கையாக்கிய என் முதல்நூல். அதன்பிறகு, பகவான் சத்யசாயி பாபாவிற்கு 'ஞான பூமி’யில் எழுதி வந்த கவிதைகளைத் தொகுத்து, 'ஸ்ரீ சத்யசாயி கவிதைகள்’ என்ற தலைப்பில் வெளியிட நினைத்தேன். எத்தனையோ பக்தர்கள் எழுதிய புத்தகங்களில் ஸ்வாமி ஆசீர்வதித்து எழுதியதைப் பார்த்திருக்கிறேன் என்பதால், எனக்குள்ளும் ஓர் எதிர்பார்ப்பு வந்தது. பாபா பௌதிக சரீரத்தில் இருந்தபோது, அவர் பேசும் சாயி சகோதரர் மூலம் கேட்டேன்... 'இந்தக் கவிதை நூலுக்கு மட்டும் ஸ்வாமி ஆசீர்வதித்து எழுதிக் கொடுப்பாரா?’ ஸ்வாமி, 'அப்படியே ஆகட்டும் அனுக்கிரஹிக்கிறேன்’ என்றாராம். மகிழ்ச்சியோடு அந்த தெய்வ வாக்கை மனதில் பதித்துக்கொண்டேன். அதன்பிறகு, மூன்றாண்டுகளுக்குப் பிறகே கவிதை நூலை வெளியிடும் சூழல் வந்தது. அதற்குள் ஸ்வாமி மகாசமாதியானார். ஸ்வாமியிடம் அனுமதி கேட்டுச் சொன்ன சாயிசகோதரரும் அமரரானார்.

சத்தியப்பாதையில்..! - 13

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓராண்டுக்குப் பிறகு புத்தகம் வெளியிடும் எண்ணம் தீவிரமாக வந்தது. புட்டபர்த்திக்கு, ஸ்வாமிக்கு கடிதம் எழுதிப்போட்டேன். மொத்தம் 36 கவிதைகளை மட்டும் வரிசைப்படுத்தினேன். ஸ்வாமி, 'தானே’ கவிதைபாடி ரசிப்பது போன்ற முகபாவத்தோடு அட்டை தயாரானது. இப்போது இன்னொரு சாயி சகோதரி மூலம் ஸ்வாமியிடம் கேட்டேன். ஸ்வாமி கவிதை நூலுக்கு ஆசீர்வதித்து எழுதுவதாய் முன்பு வாக்குத் தந்திருக்கிறார். அதன்படியே அவர் ஆசீர்வாதம் வேண்டும் என்றேன். அதற்கு... ஸ்வாமி 'உனக்குள்ளிருந்து எழுதுவது நான்தானே. எதற்கு தனியாக என் வாழ்த்து' என்று கேட்டிருக்கிறார். 'எத்தனையோ பக்தர்களுக்குள்ளிருந்தும் ஸ்வாமி எழுதுகிறார். ஆனால், அவர்களுக்கு தனியாக வாழ்த்தியும் எழுதிக் கொடுத்திருக்கிறார். எனக்கும் அப்படி தரவேண்டும்' என்றேன். 'இது என் தனிப்பட்ட சுயநலமான மகிழ்ச்சிக்காகக் கேட்கவில்லை. இந்தப் புத்தகத்தின் மூலம் எத்தனையோ பக்தர்களுக்கு அவருடைய இந்த ஆசீர்வாதம் போய்ச்சேர வேண்டும் என்றே கேட்கிறேன். ஸ்வாமி எழுதிக் கொடுத்தால் புத்தகம் போடுகிறேன். இல்லையென்றால் வெளியிடப்போவதில்லை' என்று மிகவும் வருத்தத்தோடு சொன்னேன். ஸ்வாமி மௌனமாக இருந்தாராம். இப்போது என்ன செய்வது என்று அந்த சாயி சகோதரியிடம் கேட்டேன். அவர் சொன்னார்... 'ஸ்வாமி கடிதம் எழுதி வைக்கும், உங்களுக்குத் தெரிந்த சாயிமனைகளில் ஸ்வாமி பாதங்களில் கவிதைக் கோப்பை வைத்துவிடுங்கள், ஸ்வாமி எழுதுவார் என்று தோன்றுகிறது'.  

அதன்படியே எனக்குத் தெரிந்த ஒரு சாயி சகோதரியின் வீட்டு பூஜையறையில் ஸ்வாமி பாதங்களில் கவிதைக் கோப்பை வைத்துவிட்டு வந்துவிட்டேன். அந்த வாரத்தில் 'குருபூர்ணிமா’ வந்தது. அன்று மதியம் அந்த சகோதரி தொலைபேசியில் என்னை அழைத்து, 'உடனடியாக வாருங்கள், ஸ்வாமி உங்களுக்கு ஆசீர்வதித்திருக்கிறார்' என்றார். மாலையில் சென்று ஸ்வாமியை வழிபட்டுவிட்டுப் பார்த்தேன். அந்தக் கவிதைக் கோப்பின் மேல் ஸ்வாமி விபூதியைக் கொட்டித் தள்ளியிருந்தார். முதல் பக்கத்தில் 'ஸ்ரீசத்யசாயி கவிதைகள்’ என்ற தலைப்புக்கும்

சத்தியப்பாதையில்..! - 13

ஸ்வாமி படத்துக்கும் மேலும் கீழுமாக ஆதியும் அந்தமுமாக 'ஓம்’ என்று நீல மையால் எழுதி ஆசீர்வதித்திருந்தார்! 'ஓம்’ என்ற பிரணவத்தில்தானே எல்லாமே அடக்கம். என்னால் அந்த மகிழ்ச்சியைத் தாளமுடியவில்லை. மறுபடியும் ஸ்வாமிக்கு நன்றி சொல்லியபடி மீண்டும் கேட்டேன். 'ஸ்வாமி ஆசீர்வாதித்து எழுதியதோடு புத்தகத்தை அச்சிற்குக் கொடுக்கலாமா?' 'தாராளமாக அச்சிற்குக் கொடுக்கலாம். என் ஆசீர்வாதம் எல்லா பக்தர்களுக்கும் போய்ச் சேரட்டும்' என்று சொல்லியிருக்கிறார் ஸ்வாமி. அதன்படியே, ஸ்வாமியின் ஆசீர்வாதத்துடன் 'ஸ்ரீ சத்யசாயி கவிதைகள் தயாராகி வந்ததும், புட்டபர்த்தியில் ஸ்வாமி மகாசமாதியின் மேலும்... அங்கிருந்த ஸ்வாமியின் சிம்மாசனத்தின் மேலும் வைக்கப்பட்டு, ஸ்வாமி சங்கல்பப்படி ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டு, சென்னை 'சுந்தரத்தில்’ ஸ்வாமி பாதங்களில் வைத்து வெளியிடப்பட்டது. அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டு சாயி பக்தர்களால், மகிழ்ச்சியாக வரவேற்கப்பட்டது.

'ஸ்ரீசத்யசாயி கவிதைகள்’ பரமாத்மாவின் பாதங்களை அடையத் துடிக்கும் ஒரு ஜீவாத்மாவின் அனுபவங்களே. ஸ்வாமி 'தன்னைப்’ பற்றித் 'தானே’, எனக்குள்ளிருந்து எழுதிக் கொண்ட கவிதைகள் அவை!

ஆஸ்திரேலியாவில் நான் தங்கியிருந்தபோது, ஸ்வாமி தந்த அனுபவங்களை, அங்கிருந்த சாயி பக்தர்களுடைய அனுபவங்களைத் தொகுத்து 'சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். இந்த இரண்டு நூல்களையும் சாயி ஜெயலட்சுமி என்ற பெயரிலேயே எழுதினேன். 'பகவான் ஸ்ரீசத்யசாயி பாபாவின் சின்னக் கதைகள்’ என்ற குறுந்தகட்டினை என் பெயரிலேயே வெளியிட்டேன். சாயி சங்கல்பத்தோடு அவை, சென்னை 'சுந்தரத்தில்’ ஸ்வாமியின் அருளாசியோடு வெளியிடப்பட்டது!

'அதிருத்ரமகாயக்ஞம்’ நிகழ்த்த ஸ்வாமி பாபா சென்னை வந்தபோது நிகழ்ந்த மாபெரும் வைபவத்தில், 'கண்டலேறு திட்டம்’ மூலம் 200 கோடி செலவில்... சத்ய சாயிபாபா சென்னை மக்களுக்கு தண்ணீர் வழங்கியதற்கு நன்றி கூறி, அன்றைய கலைஞர் அரசாங்கம், நான்கு மாநில முதல்வர்களோடு மிகப்பெரிய பாராட்டு விழா எடுத்தபோது, ஸ்வாமி பாபாவை தரிசித்து அவர் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தேன். திருவான்மியூரில் நடந்த 'அதிருத்ரமகாயக்ஞ'த்தின் தொடக்க நாளில் 'சாயி சுந்தரேஸ்வரர்’ ஆகிய சிவலிங்கத்துக்குக் கண் திறக்கும் வைபவத்துக்காக ஒரு பாடலை என்னிடம் கேட்டிருந்தார்கள். அப்போது மனதில் 'சிவபுராணம்’ ஓடியது. அந்த சந்தத்தில் 'அண்ட பேரண்டம் காக்கும் ஆண்டவா போற்றி!’ என்று தொடங்கும் போற்றிப் பாடலை எழுதினேன். அது, புட்டபர்த்தியில் ஸ்வாமியிடம் வாசித்துக் காட்டப்பட்டிருக் கிறது. ஸ்வாமி கேட்டு மகிழ்ந்து, உலக நன்மைக்காகவே இந்த யாகம் செய்யப்படுகிறது என்று இரண்டு வரிகளைச் சேர்த்து எழுதச் சொல்லுங்கள் என்றாராம். அதைக் கேட்டதும் எனக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி. அவர் சொன்னபடியே வரிகளை எழுதிச் சேர்த்தேன். அந்த முதல்நாள் வைபவத்திற்கு என்னால் போகமுடியவில்லை. ஸ்வாமியின் திருமுன்பு சிவலிங்கத்திற்குக் கண் திறந்த வைபவத்தில் அந்தப் போற்றிப் பாடல் பாடப்பட்டபோது, அது நெகிழ்ச்சியானதொரு புனிதத் தருணமாக இருந்தது என்று சொன்னார்கள்.

ஸ்வாமி பாபா எப்போதும் சொல்லும் சத்ய வாக்கு இது. ஒவ்வொருவரிடத்தும் மூன்று நிலைகள் உண்டு.

''நீ யாரென்று நினைக்கிறாயோ அந்த நீ

நீ யாரென்று மற்றவர்கள் நினைக்கிறார்களோ அந்த நீ

நீ உண்மையில் யாராக இருக்கிறாயோ அந்த நீ''

சத்தியப்பாதையில்..! - 13

முதலாவது உடல்... இரண்டாவது மனம்... மூன்றாவது ஆன்மா. இந்த மூன்றாவதை உணரத் தொடங்குவதே ஆன்மிகம். அதை உணர்த்துவதே தெய்வம்! தெய்விகம்!

சாயிசங்கல்பத்தால் பகவான் ஸ்ரீசத்யசாயி பாபாவின், 'சத்தியப் பாதையில்...’ நான் பயணிக்கத் தொடங்கியதற்கான நியாயமான காரணங்களை இங்கு எழுதுவதற்கான நல் வாய்ப்பு தந்தது சாயியின் பேரருளே! ஆதியிலிருந்து அந்தம் வரை இந்த ஆன்மிகத் தொடரை எனக்குள்ளிருந்து எழுதிய ஆண்டவன் சாயிக்கு ஆயிரங்கோடி வந்தனம்!

இந்த ஆன்மிகத் தொடரை பேரழகோடு வெளியிட்டுப் பெருமை சேர்த்த 'அவள் விகடன்’ ஆசிரியர் குழுவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி!

இந்தத் தொடரை வாசித்து மகிழ்ந்த 'அவள் விகடன்’ வாசகக் கண்மணிகளுக்கு என் மனம் நிறைந்து வழியும் நன்றி!

அனைவருக்கும் சத்யசாயிபாபாவின் அருளாசி கிடைக்கவேண்டி அவர்தம் பொற் பாதகமலங்களை வணங்கிப் பிரார்த்திக்கிறேன்.

பாபாவின் அவதாரத் திருநாளான அக்டோபர் 20-ஐ நோக்கி இந்தத் தொடர் நிறைகிறது. அவதாரத்தில் அவதாரமாய் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனாய் பகவான் ஸ்ரீசத்யசாயி பாபா இந்தப் பூமியைப் பொன்னுலகமாக மாற்ற மீண்டும் வரவேண்டும் என்று ஸ்வாமியின் பொற்பாதக் கமலங்களை வணங்கி பிரார்த்திக்கிறேன்.

 ''சத்குரு நாதனே வாவாவா!
சச்சிதானந்தனே வாவாவா!
சர்வதயாளனே வாவாவா!
சத்யசாயிநாதனே வாவாவா!

ஜெய் சாயிராம்!

நிறைவடைந்தது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism