Published:Updated:

இப்படியும் கொண்டாடலாம், ‘பேட்ச் டே’!

நா.இள.அறவாழி, படங்கள்: எஸ்.தேவராஜன்

இப்படியும் கொண்டாடலாம், ‘பேட்ச் டே’!

நா.இள.அறவாழி, படங்கள்: எஸ்.தேவராஜன்

Published:Updated:

ருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர் - மாணவிகள் தாங்கள் கல்லூரியில் சேர்ந்த தினத்தை 'பேட்ச் டே’ எனக் கொண்டாடுவது டிரெண்ட். பொதுவாக, ஹை கிளாஸ் ஹோட்டலில் பார்ட்டி, மல்டிப்ளெக்ஸில் சினிமா என 'பேட்ச் டே’ கொண்டாட்டங்கள் அமர்க்களப்படும். ஆனால், புதுச்சேரி, கிருமாம்பாக்கம், இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், நரிக்குறவ மக்களுக்கு முகாம் நடத்தி, தங்கள் 'பேட்ச் டே'வுக்கு பெருமை சேர்த்தனர்!  

புதுச்சேரி நகரிலிருந்து ஒதுக்குப்புறமாக, விமான நிலையத்தின் பின்புறம் உள்ள நரிக்குறவர் காலனியில், முந்நூறுக்கும் மேற்பட்ட அந்த இன மக்கள் வசிக்கிறார்கள். மருத்துவம் என்பதே இவர்களுக்கு அபூர்வம் எனும் சூழலில், இந்த பல் மருத்துவ முகாம் பயனுள்ளதாக அமைந்தது.

''எங்க பேட்ச்சுக்கு 'ஸினாக்சலர்ஸ்-2014’னு பெயர். பீச்சுல கேக் வெட்டி, சினிமாவுக்குப் போகணும்னுதான் பொதுவா பிளான் போடுவாங்க. நாங்க, சமூகத்தால புறக்கணிக்கப்பட்டவங்களுக்கு சிகிச்சை தர்றதைவிட பெரிய விஷயம் எதுவுமே இருக்க முடியாதுனு முடிவெடுத்தோம். முதல்ல இந்த இடத்தை நேரில் பார்த்தப்போ, இன்னும் பன்றி வளர்ப்பை பிரதான தொழிலா செய்யுற அவங்களப் பார்த்து மனசு வருந்தினோம். சின்னச் சின்ன வீடுகள்ல நிறைய பேர் தங்கியிருக்காங்க. இதுல பலர் பிரஷ் பயன்படுத்துறதே கிடையாது. அதனால, அந்த பழக்கத்தையும் கண்டிப்பா அவங்கிட்ட ஏற்படுத்தியாகணும், பல் பராமரிப்பு மட்டுமில்லாம சுகாதாரம் பத்தியும் நிறைய கத்துக் கொடுக்கணும்னு முடிவு செஞ்சோம். எல்லாருக்கும் பேஸ்ட், பிரஷ், சோப்னு இலவசமா கொடுக்க பிளான் பண்ணோம். இதுக்கு சில நல்ல உள்ளங்களும் ஸ்பான்சர் செஞ்சாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படியும் கொண்டாடலாம், ‘பேட்ச் டே’!

இந்த முகாம்ல எல்லாமே இலவசம். பல் க்ளீனிங் பண்றோம். பல் சொத்தை இருந்தா க்ளீன் பண்ணி சிமென்ட் போட்டு அடைக்கிறோம். நாள்பட்ட சொத்தையா இருந்தா பல்லை எடுத்துடுவோம். மேற்கொண்டு உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரச் சொல்லிடுவோம். அங்க இலவசமா ட்ரீட்மென்ட் பார்ப்போம். டீம் வொர்க்தான், இந்த பெரிய பொறுப்பை சாத்தியமாக்கிச்சு!'' என்கிறார் ஒருங்கிணைப்பாளர் சவிதா, பூரித்து.

ஓய்வு இடைவேளையின்போது 'செல்ஃபி’ கொண்டாட்டங்கள் அரங்கேற, அப்போதும் சீரியஸாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார் சவிதா. ''முதல் தடவையா முகாம் போடுறோம். கல்லூரியிலிருந்து 100 பேர் வந்திருக்காங்க. முதல் நாளே இங்க வந்து சுத்தம் செஞ்சுட்டு போனோம். ஆனா, பன்றிக் கூட்டம் அதை அசிங்கம் பண்ணிட்டு போயிடுச்சு. மறுபடியும் வந்து சுத்தம் செய்தோம். எங்களால முடிஞ்சதை இந்த மக்களுக்கு செஞ்சிருக்கோம். போதை பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, சிகரெட் புகைக்கக் கூடாது, உடம்பை சுத்தமா வெச்சிக்கணும், முக்கியமா பற்களைப் பராமரிக்கணும்னு பாடம் நடத்திஇருக்கோம். ஃபாலோ பண்ணுவாங்கனு நம்பிக்கை இருக்கு!'' என்றார் உற்சாகமாக.

இப்படியும் கொண்டாடலாம், ‘பேட்ச் டே’!

முகாமின் பொறுப்பாளர் டாக்டர் செந்தில் பேசும்போது, ''கடினமான பொருட்களையும் கடித்துப் பழகியதால் இவர்களுக்கு சொத்தை பற்கள் அரிதாக இருக்கின்றன'' என்று அதிசயித்த அதேசமயம், ''ஆனால், பல் பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை. புகையிலை பழக்கத்தால் பற்கள் முழுவதும் கறை படிந்திருந்தது. வாய் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளது. புகையிலை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளோம்'' என்றும் சொன்னார்.

''உடம்பு ரொம்ப நோய்வாய்ப்பட்டாதான் மருத்துவமனை பக்கமே எங்க ஜனங்க போவுங்க. எப்பயாவது, யாராவது நல்ல மனுஷங்க இது மாதிரி வந்து உதவி செய்வாங்க. ஆனா, மருத்துவ முகாம் போட்டதில்ல. இந்த மாதிரி இடத்துல எங்க மக்களுக்காக முகாம் போட்டு, நாள் முழுக்க கூடவே இருந்திருக்காங்க. இவங்க எல்லாரும் நல்லா இருக்கணும் சாமி!'' என்று வாழ்த்தினார் காலனியைச் சேர்ந்த சாரங்கபாணி.

முகாம் நிறைவாக, அந்த இனத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுமி, அனைவருக்கும் 'ஹேப்பி பேட்ச் டே!’ சொல்ல, வருங்கால மருத்துவர்கள் கண்களில் மின்னல்கள்!

- நா.இள.அறவாழி  

படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism