Published:Updated:

மகிழ்ச்சி தந்த தங்கம்... மனதை நொறுக்கிய வெண்கலம்!

பொன்.விமலா

மகிழ்ச்சி தந்த தங்கம்... மனதை நொறுக்கிய வெண்கலம்!

பொன்.விமலா

Published:Updated:

ந்திய குத்துச்சண்டை விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் மேரி கோம், தற்போது தென்கொரியாவில் நடந்து வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், குத்துச்சண்டைப் பிரிவில் முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

பெண்களுக்கான கட்டுப்பாடுகள் நிறைந்த, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பிறந்த மேரி கோம், குத்துச்சண்டைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். திருமணத்துக்குப் பிறகு இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகி, அந்த இடைவெளிக்குப் பிறகு மீண்டும் குத்துச்சண்டையில் காலடி எடுத்து வைத்து, இந்தியாவுக்காக பல பதக்கங்களை அள்ளிக் குவித்துள்ளார். 2012-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றதும் இதில் அடக்கம். கடந்த ஆண்டு மூன்றாவது குழந்தைக்குத் தாயான மேரி கோம், உடல்ரீதியாக பெண்களுக்குச் சவால்விடுக்கும் இந்தக் குத்துச்சண்டை போட்டியில், தற்போது தங்கம் ஜெயித்திருப்பது சாதனையின் உச்சம்!

மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக, பிரியங்கா சோப்ரா நடித்த 'மேரி கோம்’ எனும் ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி அடைந்திருக்கும் சூழலில், இந்தத் தங்கப்பதக்க சாதனை, அவருடைய மகுடத்தில் மற்றொரு இறகாக சேர்ந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகிழ்ச்சி தந்த தங்கம்... மனதை நொறுக்கிய வெண்கலம்!

மணிப்பூர் மங்கை மேரி கோம், 51 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமையைச் சேர்த்திருக்கும் நிலையில், அதே மணிப்பூரைச் சேர்ந்த சரிதாதேவி, 60 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோனது... சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரையிறுதியில், தென்கொரிய வீராங்கனை ஜினா பார்க்குடன் மோதினார் சரிதா. ஜினா மீது பல பன்ச்களை விளாசித் தள்ளி ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தபோதும், இறுதியில் தென்கொரிய வீராங்கனை ஜினா வென்றதாக அறிவிக்கப்பட்டது. தனக்கே வெற்றி கிடைத்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பிய சரிதா, நடுவர்களின் முடிவை எதிர்த்து முறையீடு செய்வதற்காக கணவருடன் சேர்ந்து எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

அரையிறுதியில் சரிதாவை தோற்கடித்ததாக அறிவிக்கப்பட்ட ஜினா, இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் மோதி தோற்றுப் போனார். அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்து. சரிதாவுக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கம் அணிவிக்கும்போது, கண்ணீர் விட்டு அழுத சரிதா, வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணியாமல், கையில் வாங்கிக்கொண்டார். அதைச் சட்டென்று ஜினாவுக்கு அணிவித்து, அவரைக் கட்டிப்பிடித்து பாராட்ட... ஆசிய விளையாட்டுப் போட்டி மைதானத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

இத்துடன், ''இந்த அநீதி குறித்து, இந்தியாவில் இருந்து வந்திருந்த விளையாட்டுக் குழு அதிகாரிகள் ஒருவர்கூட கண்டுகொள்ள வில்லை. இந்தியாவிலிருந்து வரும் அதிகாரிகள், கேலரியில் அமர்ந்து போட்டிகளைப் பார்ப்ப திலும், பதக்கம் பெறுபவர்களுடன் போட்டோ எடுப்பதிலும்தான் அக்கறை காட்டுகிறார்கள்'' என்று சாடியிருக்கிறார்கள் சரிதாவும் அவர் கணவரும்.

இதற்கிடையில் இந்திய அரசின் விளையாட்டுத் துறை, இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் விரிவாக அறிக்கை கேட்டிருக்கிறது. இந்நிலையில், விளையாட்டில் தனது எதிர்கால நலனைக்கருதி, வெண்கலப் பதக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் சரிதா!

மகிழ்ச்சி தந்த தங்கம்... மனதை நொறுக்கிய வெண்கலம்!

குத்துவிடும் மேரி கோம்!

வெறுமனே விளையாடுவதோடு நின்றுவிடுவதில்லை மேரி கோம் என்பதுதான், அனைவரையும் அவரை உற்றுநோக்க வைக்கிறது. ஆம், இந்திய மக்கள் பலருக்கும், பற்பல விளையாட்டுகளின் மீது ஆர்வம் இருந்தாலும், அது கிரிக்கெட்டை நோக்கியே பெரும்பாலும் திசை திருப்பப்படுகிறது என்பதை மனதில் வைத்த மேரி கோம், ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள எல்லா வகையான விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தி, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த நோக்கத்துக்காக 'சேம்பியன் பியாண்ட் கிரிக்கெட்’ என்கிற தலைப்பில் உருவாக்கியுள்ள வீடியோ தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் பிட்சில் ஒரு வீரர் பந்தை வீசுகிறார்... எதிர்முனையில் குத்துச்சண்டை கிளவுஸ், வில், துப்பாக்கி, பேட்மின்டன் பேட், ஜிம்னாஸ்டிக் என ஒவ்வொரு வீராக அந்த பந்தை அடித்து நொறுக்குவது போல காட்சிகள் விரிகின்றன!

நீங்களும் பார்க்க: https://www.youtube.com/watch?v=Lffo4n5CPzA&app=desktop.
 

ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆதிக்கம் ஆரம்பமாக... மேரி கோமின் முயற்சிகளுக்கு ஆதரவு தருவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism