தாவது விபரீதமா நடந்த பிறகுதான், 'வேண்டாம்’னு ஒரு விஷயத்தை குழந்தை மறுத்ததுக்கான காரணம் புரியும்னு போன இதழில் சொல்லியிருந்தேன். அப்படி ஒரு விபரீதம் அந்தக் குடும்பத்தில் நடந்துச்சு!

அப்பா, அம்மா, அண்ணா, தங்கைனு அழகான குடும்பம் அது! தங்கை படுசுட்டி... எப்போதும் சேட்டை. அன்னிக்கு எல்லாரும் டின்னருக்காக உக்காந்தப்போ, 'வயிறு வலிக்குது’னு சிணுங்க ஆரம்பிச்சா குட்டிப் பொண்ணு. நாள் முழுவதும் வேலை பார்த்து, களைச்சு ஓய்ஞ்சு போயிருந்த அம்மா... எரிச்சலாகி, அவ முதுகில் ஓங்கி வெச்சாங்க. ஏன்னா, எப்பவுமே சாப்பிடறதுக்கு அவ பண்ற அடம் அவங்களை ரொம்பவே படுத்தியிருந்ததுதான். அடியை வாங்கினாலும் அந்தப் பொண்ணு 'வயிறு நெஜமாவே வலிக்குது’னு சொல்ல, இப்போ அப்பாவுக்கும் கோபம் வந்தது. 'எப்போ சாப்பிட உக்காந்தாலும் உன்னோட இதே தொல்லையா போச்சு!’னு சத்தம் போட்டு, அவளைக் கட்டாயப்படுத்தி சாப்பிட வெச்சாங்க.

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடுராத்திரியில் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்த குட்டிப் பொண்ணு, 'வயிறு வலிக்குது’னு துடிச்சு அழ, இந்த நேரத்தில் அவ அழறதுக்கு வலியைத் தவிர வேறு  காரணம் இருக்காதுனு ஒருவழியா ஹாஸ்பிட்டலுக்கு அள்ளிட்டுப் போனாங்க. 'உங்க பொண்ணுக்கு அப்பெண்டிசைட்டிஸ் (குடல்வால் பிரச்னை) இருக்கு. உள்ளேயே வெடிச்சிடுச்சு. நல்லவேளை, இப்பயாச்சும் கூட்டிட்டு வந்தீங்க. காலை வரை விட்டிருந்தா, காலம் கடந்திருக்கும்... உங்க பொண்ணை இழந்திருப்பீங்க!''னு ஆபரேஷனை முடிச்சுட்டு டாக்டர் சொன்னதைக் கேட்டு உறைஞ்சு போனார் தாய். டின்னரின்போது மகள், 'வயித்தை வலிக்குதும்மா!’னு சிணுங்கியது ஞாபகம் வர, கண்ணீர் விட்டுக் கதறினார்.

குழந்தையின் சிணுங்கல், கத்திரிக்காய் பொரியல் சாப்பிடறதைத் தவிர்க்கிறதுக்காக இல்லை, தனக்கு உதவி வேண்டி உண்மையிலேயே வடிச்ச கண்ணீர்தான்னு, அந்தப் பெற்றோருக்கு உணர்த்தியது அந்த விபரீதம்தான்!

நம் குழந்தைகளுக்கு நம்மால முடிஞ்ச மிகச்சிறந்த வாழ்க்கையைக் கொடுக்கணும்ங்கிறதுக்காக, நம்மில் பலர், அளவுக்கு மீறி வேலை செய்றதும், அப்படித் தொடர்ந்து வேலை செய்றதால பயங்கர ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகறதும் எனக்குத் தெரியும்! இந்த பரபரப்பான வேகத்தில் சிலசமயங்களில் அல்லது பலசமயங்களில் கூட, 'நம்ம குழந்தை சந்தோஷமா இருக்கிறதுக்கு, உண்மையிலேயே அவன்/அவளுக்கு தேவைப்படுறது என்ன?’னு ஒரு நிமிஷம் நின்னு யோசிக்கக்கூட நேரம் கிடைக்கிறது இல்லை பலருக்கும். குழந்தைங்க சொல்றதைக் காதுகொடுத்துக் கேட்கிறதுக்கு, உபரியா ஒரு நிமிஷம்கூட நாம செலவழிக்கிறதில்லை. தங்களோட புத்தியையும் திறமையையும் வெச்சு, அவங்க ஒரு வெற்றி பெற்றாலோ... நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலோ, உடனே நம்ம நண்பர்கள்கிட்டே பெருமையா சொல்லிக்கிறோம். அதே சின்ன மனசு, நம்மால் மதிச்சு கவனிக்கப்படுறதுக்கும் தகுதியானது தான்ங்கிறதை உணர மறக்கிறோம்!

நாம சின்னவங்களா இருக்கிறப்போ, "நீ குழந்தை... உனக்கு ஒண்ணும் தெரியாது!'னு பெரியவங்க சொன்னதைக் கேட்டு வளர்ந்தோம். அதையேதான் நாமும் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்கிறோம். அதில் தப்பு இல்ல... ஆனாலும், பல இடங்கள்ல அவங்க சொல்றதையும் நாம நின்னு, காதுகொடுத்துக் கேக்கணும். ஏன்னா, அவங்களுக்குள்ள நடக்கிறதை  அது உடம்போட வலியோ, மனசோட வேதனையோ  எதுவாக இருந்தாலும், அவங்க சொன்னாத்தானே நமக்குத் தெரியும்!

குழந்தைகளின் தற்கொலை, தற்கொலை முயற்சி பத்தின செய்திகளைக் கடக்கும்போதெல்லாம், என் நெஞ்சே வெடிச்சிடுற மாதிரி இருக்கும். தனக்கான வாழ்வை வாழவே தொடங்கியிருக்காத ஒரு குழந்தையை, இனிமேல் வாழவே கூடாத அல்லது வாழவே முடியாத ஒரு மனநிலைக்கு எப்படித் தள்ளமுடியும்? ஒரு குழந்தை பிறக்குதுனா, அது ஒரு தனிப்பட்ட ஜென்மத்தின் அல்லது உயிரின் பிறப்பு. அது ஒரு தனிப்பட்ட வாழ்க்கை! உயிரியல் ரீதியாகக் குழந்தைகள் நம்மோட நீட்சியாக இருந்தாலுமேகூட, அவங்க 'நாம்’ இல்லைங்கிறதுதான் உண்மை!

நம்முடைய நிறைவேறாத ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேத்திக்கிறதுக்காக அந்தச் சின்ன உயிர் பிறக்கலை. நாம டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டு, அது முடியாத பட்சத்தில், நம்ம குழந்தையைக் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து டாக்டர் ஆக்கிப் பார்க்கிறதுல இல்லை சந்தோஷம்! ஏன்னா, அந்தக் குழந்தைக்கு ஆர்கிடெக்ட் ஆகணும்னோ, ராணுவத்தில் சேரணும்னோ அல்லது ஜர்னலிஸ்ட் ஆகணும்னோ கூட விருப்பம் இருக்கலாம், இல்லையா?

மேலைநாடுகளில் ஒரு 'கான்செப்ட்’ பார்த்திருக்கேன். அடுத்து அடுத்து இருக்கும் வீடுகள்ல ஆரம்பிச்சு, சங்கிலித் தொடரா இருக்கிற ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரன்ட்ஸ், கடைகள்னு நிறைய விஷயங்கள் அப்படியே அச்சு அசல் ஒரே மாதிரி இருக்கும். வீடோ, கடையோ ஒரு விஷயத்தை ஆரம்பிச்சு, அதை நல்லபடியா டெவலப் பண்ணி பெரிய அளவில் கொண்டு போறப்போ, அதேமாதிரியே இன்னொண்ணு செய்றதும், அதுக்கு அப்புறம், அந்த விஷயத்தை ரொம்ப

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 3

விரைவிலேயே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரமாண்ட அளவில் உருவாக்குறதும் தயாரிக்கிறதும் ரொம்பவே மலிவு... சுலபமும்கூட. இதை ஆங்கிலத்தில் 'குக்கீ கட்டர் அணுகுமுறை'னு (Cookie Cutter approach)  சொல்வாங்க. பிஸ்கட் அல்லது குக்கீஸ் செய்யும்போது, மாவைப் பெரிய உருண்டையா பிசைஞ்சு, ஏதாவது ஒரு வடிவத்தில் இருக்கிற அச்சை (Mould) வெச்சு, எல்லா மாவையும் ஒரே மூச்சில் பிஸ்கட்டா செய்து தள்ளிடறதில்லையா? அதுபோலத்தான்.

இதைத்தாங்க நாம நம்ம குழந்தைங்ககிட்டேயும் நிறைய விஷயங்கள்ல பண்ணிட்டிருக்கோம். குழந்தைகளை வளர்க்கிறதுக்கும் படிக்க வைக்கிறதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் குறிப்பிட்ட அச்சுகளை தயாரா வெச்சுருக்கோம். எப்படிப் பணம் சம்பாதிக்கிறதுனும், அவங்க வாழ்க்கையை எப்படி வாழணும்னும் கத்துக்கொடுக்கிறதுக்கு, ஏற்கெனவே அமைக்கப்பட்ட வடிவம் (format) இது. அறை பிதுங்கும் மாணவர்களையும் அந்த விகிதத்துக்குப் பொருத்தமில்லாத மிகக் குறைந்த ஆசிரியர்களையும் கொண்ட நம்ம பள்ளிகள், வகுப்பறைகளில் இருந்து, மதிப்பெண்களின் அடிப்படையில் குழந்தைகளைக் கடைஞ்சு எடுக்குது.

ஒரு நல்ல வாழ்க்கை வாழத் தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க, 'விவேகமான சாய்ஸ்'னு அவங்களால கருதப்படும் சில படிப்புகள்ல இருந்து ஒண்ணைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி, உந்தித் தள்ளும் இடமாத்தான் உயர்கல்விக் கூடங்கள் இருக்கு! எல்லா பள்ளி, கல்லூரிகளையும் சொல்ல வரல... சில இடங்களில் நல்லா பண்ணிட்டிருக்காங்க... ஆனா, இது ரொம்ப கம்மி!

குழந்தைகளுக்காக நாம எடுக்கிற முடிவுகள், உண்மையிலேயே அவங்களுடைய நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சந்தோஷம் தர்ற முடிவுதானா? நம் குழந்தையின் ஆசைக்கும், ஆர்வத்துக்கும், மகிழ்ச்சிக்கும் ஏத்த சரியான முடிவுதானா... சரியான தேர்வுதானா? இந்தப் பாதையில் போனா அவங்க வாழ்க்கையை திருப்தியா, சந்தோஷமாக வாழ முடியுமா? இல்லை, வாழ்நாள் முழுதும் அவங்களுக்கு தண்டனை தரப்போற சிறையில் தள்ளுமா?

பேசுவோம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism