Published:Updated:

நம்பிக்கை மனுஷிகள்!

ந.ஆஷிகா,  படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஈ.ஜெ. நந்தகுமார்

நம்பிக்கை மனுஷிகள்!

ந.ஆஷிகா,  படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஈ.ஜெ. நந்தகுமார்

Published:Updated:

‘பெண்ணாகப் பிறந்தவள், பிறவிப் பயன் அடைவது திருமணத்தில்தான்' என்பதே இந்தச் சமூகத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடரும் நம்பிக்கை. திருமணத்துக்கு முன் பெற்றோர், திருமணத்துக்குப் பின் கணவர் என ஆணைச் சார்ந்தே பெண்ணால் வாழ முடியும் என்கிற நம்பிக்கையே... இன்னமும் இங்கே விதைக்கப்படுகிறது. என்னதான் தற்காலத்தில் பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேறினாலும், பழைய நம்பிக்கை துளியும் சேதமடைந்துவிடாமல் ’கலாசார' பாதுகாப்பு தொடர்கிறது. இத்தனையையும் மீறி, தனக்காகவும், தான் தேர்ந்தெடுத்த துறைக்காகவும் சுதந்திரமாக செயல்பட, திருமணம் எனும் பந்தத்தில் சிக்கிக்கொள்ளாமல் வாழும் பெண்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்! இவர்களில் களத்தில் சுழன்றுகொண்டிருக்கும் சில பிரபல பெண்களின் பகிர்தல் இங்கே...

நம்பிக்கை மனுஷிகள்!

ஜோதிமணி, எழுத்தாளர், தேசிய செயலாளர், இளைஞர் காங்கிரஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கரூர் பக்கத்துல இருக்கிற பெரியதிருமங்கலத்தில் பிறந்தவ நான். உடுமலைப்பேட்டை, விசாலாட்சி கல்லூரியில படிக்கறப்ப, காலேஜ் எலெக்‌ஷன்ல ஜெயிச்சது... ஒரு திருப்புமுனை. எங்க ஊர்ல தலித் மக்கள் பல வருஷமா தண்ணி கிடைக்காம அவதிப்பட்டாங்க. இந்த பிரச்னைக்கு சாதாரண மனுஷியா தீர்வு ஏற்படுத்த முடியாதுங்கிறத உணர்ந்து, பஞ்சாயத்து எலெக்‌ஷன்ல நின்னேன். எங்க வீட்டுக்கு பேரதிர்ச்சி. ஆனாலும், எனக்குள்ள எதையும் மீறும் ஒரு துணிச்சல் குடியேறி இருந்துச்சு. தேர்தல்ல  ஜெயிச்சேன். கிட்டத்தட்ட மூணு வருஷ போராட்டத்துக்குப் பிறகு, தலித்துகளுக்கு தண்ணீர் கிடைக்க வெச்சேன்.

மக்களுக்கு என் மேல நம்பிக்கை வந்த பிறகு, இதுதான் நம்மோட பாதைனு புரிஞ்சு, அரசியல், சமூகப் பணினு முழுமையா என்னை ஒப்படைச்சுகிட்டேன். இதில் திருமண வயதுக்கான வருஷங்கள் உருண்டோடிட்டே இருந்ததை சட்டை செய்யல. வீட்டில், திருமணத்துக்கான சம்மதம் கேட்டு ஓய்ஞ்சுட்டாங்க. அதேசமயம், 'எப்போம்மா கல்யாண சாப்பாடு போடப் போற?’னு பொதுமக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

திருமண உறவுக்கு எதிர்பார்ப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்துப் போறதுனு பல பண்புகள் தேவை. அது எனக்கு வரப்போகும் துணைக்கு இருக்காதுனு நான் சொல்ல வரல; எனக்கு இருக்குமானு தெரியலை. காரணம், நான் ஒரு முழுநேர களப்பணியாளர். கையில் எடுக்கும் பொறுப்புக்கு 100 சதவிகிதம் உழைக்கணும்னு நினைப்பேன். எப்போ வீட்டை விட்டுப் போவேன், எப்போ திரும்பி வருவேன்னு எனக்கே தெரியாது. இந்தப் பொதுவாழ்க்கையில ஏகப்பட்ட பிரச்னைகளும் சூழ்ந்துக்கும். இப்படி பிரச்னைகளுக்கும், போராட்டங்களுக்கும் நடுவில் வாழும் எனக்குத் திருமணம் தேவை இல்லைங்கிற முடிவை சந்தோஷத்தோடதான் எடுத்திருக்கேன்!''

சுகிர்தராணி, கவிஞர்

இந்தச் சமூகம் பெண்களுக்கு ஒதுக்கிய குணங்களோடு வளராமல், ஆணுக்கானவை என்று கொண்டாடப்பட்ட வீரம், தைரியம், மரமேறும், மலையேறும் சாகசங்கள் என்று இருந்தது என் இளமைக்காலம். மேல்நிலையைக் கல்வியை முடித்தவுடன் ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தேன். அது என் அப்பாவின் கனவு. என் கனவு... காவல்துறை அதிகாரி ஆவது. கல்லூரி வாழ்க்கை எனக்கு வாய்க்கவில்லை. அஞ்சல்வழியில் கற்றாலும், அதையும் கல்லூரியின் குதூகலத்துடன் மாற்றிக்கொண்டேன். தமிழின் மீது ஆர்வம் ஏற்படக் காரணம், என் தமிழாசிரியர்கள் கல்யாணி மற்றும் சியாமளா கௌரி. அவர்களுடைய ஆளுமையே என்னையும் ஒரு தமிழாசிரியராக மாற்றியிருக்கிறது.

நம்பிக்கை மனுஷிகள்!

பெண்ணியம் பற்றி நான் எழுதுவது ஆண்களுக்குப் பிடிக்கவில்லை. நிறைய மிரட்டல்கள் வரும். உடல் பற்றி எழுதுவதால் ஒழுக்கம் கெட்டவள் என்றுதான் நினைக்கிறார்கள். இதையெல்லாம் மீறி என்னைப் புரிந்துகொள்ளும் துணை இன்னும் கிடைக்கவில்லை என்றே சொல்வேன். வீம்புக்காக திருமணம் செய்துகொள்ளாமல் எல்லாம் வாழவில்லை, என்னுடைய சூழல் அப்படி முடிவெடுக்க வைத்துவிட்டது. நம் நாட்டில் இப்படிப் பெண்கள் தனித்து வாழ்வதைகூட ஒழுக்கக்கேடாகப் பார்க்கிறார்கள். இப்படி வாழும் பெண்களிடத்தில் எந்தவிதமான பலத்தையும் பிரயோகிக்கலாம் என்கிற எண்ணமும் வந்துவிடுகிறது. பெண்கள் முழுபாதுகாப்புடன், முழு மரியாதையுடன் தனித்து வாழும் சூழல் இன்னும் வரவில்லை. அது சாத்தியப்பட, ஆண் சமூகத்திடம் மிகப்பெரிய மாற்றம் தேவை!''

நம்பிக்கை மனுஷிகள்!

உமா ஸ்ரீ, சமூக சேவகர்

“எனக்கு 16 வயதானபோது, ராஜேஷ்குமாரின் 'நான்தான் கமலா’ படித்தேன். அது, பாலியல் தொழிலாளி ஒருத்தியின் கதை. எத்தகைய சூழலில் அவர்கள் பாலியல் தொழிலுக்கு வருகிறார்கள் என்று அறிந்தபோது என் மனம் கனத்தது. அவர்களின் வாழ்வு மேம்பட, என்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். 99ம் ஆண்டு முதல் எய்ட்ஸ் நோய்க்கான விழிப்பு உணர்வுக்காக செயலாற்றி வருகிறேன். பள்ளி, கல்லூரி, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நூறு நாள் வேலை திட்டத்துக்குச் செல்பவர்கள், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்று எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் களப்பணியாற்றி வருகிறேன். எய்ட்ஸ் மட்டுமல்லாமல், சமூகம் சார்ந்த பல தளங்களிலும் இயங்கி வருகிறேன். என்னிடம் வருபவர்கள் பெரும்பாலும் சைக்கலாஜிகல் பிரச்னைகளோடு வருவார்கள். அவற்றுக்கு தீர்வு சொல்லும்போது, அவர்களுக்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். இருபத்து நான்கு மணி நேரமும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான்  என் சிந்தனை இருக்கும். இந்நிலையில், திருமணம் என்ற பந்தத்துக்குள் சென்றால்... குடும்பப் பொறுப்புகளிலேயே என் கவனம் சிதறிவிடும் என்பதாலேயே திருமணத்தைத் தவிர்த்துவிட்டேன்.

ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். இதுவே என் கனவு.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism