Published:Updated:

``வயிற்றில் பிள்ளையோட நீச்சலடிப்போம்!" - கடல்பாசி தேடும் பெண்களின் போராட்டக் கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இராமநாதபுரத்தில் கடல் பாசி எடுக்கும் பெண்கள்
இராமநாதபுரத்தில் கடல் பாசி எடுக்கும் பெண்கள் ( ICSF )

``How dare you!" என ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கேள்வி எழுப்பிய கிரேட்டா தன்பர்க்குக்கு ஆதி இந்த மீனாட்சியும் அவரது குழுவைச் சேர்ந்த பெண்களும்.

சென்னை, ஆழ்வார்ப்பேட்டையின் க்யூரியோ ப்ளேவில் சென்னைக் கலைத் தெருவிழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த 'புறம்போக்கு விழா'வில் மீனாட்சியையும் ராக்கம்மாவையும் சந்தித்தேன்.

மீனாட்சி மற்றும் ராக்கம்மாள் உரையாடலில்...
மீனாட்சி மற்றும் ராக்கம்மாள் உரையாடலில்...

காலநிலை மாற்றத்தின் மீதும், மாறிவரும் கடல்சூழல் பற்றியும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் மீனாட்சியையும் ராக்கம்மாவையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். `How dare you!' என ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கேள்வி எழுப்பிய கிரேட்டா தன்பர்க்குக்கு, முன்னோடி இந்த மீனாட்சியும் அவரின் குழுவைச் சேர்ந்த பெண்களும்.

ராமநாதபுரத்தின் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இந்த இரு பெண்களின் வாழ்வும் வேலையும் கடலில் பாசி எடுப்பது மட்டும்தான். 10 வயதில் நீந்தத் தொடங்கிய மீனாட்சிக்குத் தற்போது வயது 50. இன்று வரை பாசி எடுத்துக்கொண்டிருக்கிறார். ராமநாதபுரத்தின் கடலோரத்தில் இருக்கும் 20-30 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், கடற்பாசி எடுக்கும் தொழிலில்தான் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு குழுவாக இணைந்து கடலோரத்தில் இருக்கும் தீவுகளுக்குச் சென்று, கடலில் இறங்கிப் பாசி எடுப்பது இவர்களின் வேலை.

“நாங்க ட்ரெண்டிங் பெண்கள்!”

40 வயது மதிக்கத்தக்க ராக்கம்மா, 2015-ல் கணவரை இழந்தவர். நான்கு பிள்ளைகளில் கடைசிப் பெண்ணுக்குத் தற்போது வயது 25. அவள் வயிற்றில் இருந்த எட்டாம் மாதத்தில்கூட மூச்சைப் பிடித்துக்கொண்டு கடலில் பாசி எடுக்க நீச்சலடித்துச் சென்றதைப் பேச்சுவாக்கில் பகிர்ந்துகொண்டார். பெண்களின் வலிமை குறித்து எவ்வளவு சாதாரணமாக எடைபோட்டுவிடுகிறது இந்தச் சமூகம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தனைக்கும் நீச்சலுக்கு என்று தனி உபகரணம் எதுவும் இல்லை. கட்டிய புடவையைக் கச்சம்போல வாரிச் சொருகிக்கொள்கிறார்கள். ஒரு காலில் ரப்பர் செருப்பு மற்றொரு காலில் அலுமினியத்தால் ஆன வட்டவடிவிலான காலணி போன்ற ஒன்று. மூச்சைப் பிடித்துக்கொண்டு நீந்துவதற்கும் கடலில் கண் தெரிவதற்கும் உதவியாக முகத்தில் சதுரவடிவிலான முகமூடிக் கண்ணாடியை அணிந்துகொள்கிறார்கள்.

நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உபகரணங்கள்
நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உபகரணங்கள்

இடுப்பில் வளைப்பை ஒன்றைக்கட்டிக் கொள்கிறார்கள். எடுக்கும் பாசியை இந்தப் பையில்தான் நிரப்பிக் கொள்ளவேண்டும். பாசி எடுக்கும்போது பவளப்பாறையால் காயமடைந்துவிடாமல் இருக்க இரண்டு கைகளிலும் க்ளவுஸ் மாட்டிக் கொள்கிறார்கள்.

மீனாட்சி பேசுகையில், ``முன்னெல்லாம், காயம்படாம இருக்கிறதுக்காகப் பழைய துணியை ஒவ்வொரு விரல்லேயும் கட்டிப்போம். அதற்குப் பிறகுதான் இந்த க்ளவுஸ்களைப் பாத்தோம். ஆழ்கடல்ல நிறைய பேருக்கு ரொம்ப நேரம் நீச்சலடிக்க முடியாது. பாசி எடுக்க எடுக்க பை கணமாச்சுதுன்னா காலில் கட்டியிருக்கற இந்த அலுமினியத் தட்டியால் தண்ணீரில் ஒரே அழுத்து அழுத்துவோம். அது வேகமாக எங்களை மேல கொண்டுட்டுவர உதவியாக இருக்கும்” என்கிறார்.

மீனாட்சி அம்மாள்
மீனாட்சி அம்மாள்

காற்று ஒவ்வொரு திசையில் வீசும் காலத்தில், ஒவ்வொரு வகையான பாசியை இந்தப் பெண்கள் எடுக்கிறார்கள். ஆனால், எல்லாக் காலத்திலும் கிடைப்பதாக மரிக்கொழுந்து பாசி என்னும் ஒருவகைப் பாசி இருக்கிறது. நாம் உணவுகளில் பயன்படுத்தும் பாசி இந்த ரகம்தான். மாதத்தில் 15 நாள்கள் பாசி எடுப்பவர்கள் 15 நாள்கள் நிலத்தில்தான் இருக்கிறார்கள். 1986-கள் வரை, செழிப்பாக இருந்த பாசி எடுக்கும் தொழில் அரசாலும் கார்ப்பரேட்டுகளாலும் நொடிந்து வருகிறது என்பதுதான் இவர்களது புகார். இவர்களது போராட்டமும் இதற்கு எதிராகத்தான்.

ராமேஸ்வரத்தின் கடலோரம் இருக்கும் 21 தீவுகளை ஒட்டிதான் இவர்களது பாசி எடுக்கும் தொழிலும் நடக்கிறது. ஆனால், 1986-ல் இந்தத் தீவுப் பகுதிகளை தமிழக அரசு மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவாக அறிவித்தது. அதன்பிறகு, அந்தத் தீவுகளுக்கு இந்தப் பெண்கள் செல்லுவதற்கான அனுமதியை வனத்துறை அதிகாரிகள் மறுத்துவருகின்றனர் என்கிறார் மீனாட்சியம்மாள்.

இராமநாதபுரம்
இராமநாதபுரம்

``நீச்சலடிக்கும்போது குளிரெடுத்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமப் போனாலோ அந்தத் தீவுகளில்தான் ஒதுங்குவோம். நெருப்பு காயவைத்து எங்கள் உடலுக்கு வலுகூட்டிக் கொண்டு மீண்டும் கடலில் இறங்குவோம். ஆனால், பூங்காவாக அறிவிக்கப்பட்டதும் நாங்க அங்கே போறதுக்கான அனுமதி இல்லை. மீனவர்கள் என்கிற அடையாள அட்டை இருந்தால் போலாம் என அரசு அறிவிச்சது. ஆனால், உள்ளூர் வனத்துறையும், மாவட்ட கலெக்ட்ரும் அடையாள அட்டையில யாரு கையெழுத்து போடுறதுனு போட்டி போடுறதால எங்களுக்கு இப்போ வரைக்கும் அடையாள அட்டை கிடைக்கலை. நாங்க அந்தத் தீவுகளை அசுத்தமாக்கிடுவோம்னு சொல்லுறாங்க. எங்க இடத்தை நாங்க இல்லாம வேற யாரும் பார்த்துக்க முடியும். முயல் தீவுனு ஒரு தீவு இருக்கு, முன்னெல்லாம் அங்க முயலுங்க நிறைய இருக்கும். அதனாலயே அந்தப் பெயர் வந்தது. ஆனால், இப்போ முயலுங்க எண்ணிக்கைக் குறைஞ்சிடுச்சு. காரணம் இந்த ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்காரங்கதான். உண்மையில் வெளியிருந்து வரவங்கதான் அந்தத் தீவுகளை அசுத்தம் செய்யறாங்க. எங்களுக்கு அடையாள அட்டை கிடைக்க, அந்தத் தீவுகளைக் காப்பாத்த உங்களால எங்களுக்கு ஏதாவது உதவ முடியுமானு பாருங்க” என்று நிகழ்வில் தங்களைச் சந்திக்க வந்த அத்தனை பேரிடமும் முறையிடுகிறார்கள் ராக்கம்மாவும் மீனாட்சியும்.

அரசு ஒருபக்கம் இழுபறி செய்துகொண்டிருக்க கார்ப்பரேட் நிறுவனமான தனியார் குளிர்பான நிறுவனம் ஒன்று இவர்களது பிழைப்பைப் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயல்பாகப் பாறையிலிருந்து உருவாகும் பாசிகள் அல்லாமல் இந்த நிறுவனம் இராமநாதபுரம் கடல்பகுதிகளில் கொடிப் பாசிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வகைச் செயற்கைப் பாசிகள் விற்பனையால் இந்தப் பெண்கள் எடுக்கும் பாசிகளுக்கான சந்தைவிலை மிகவும் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கிரேட்டா முதல் அமரியன்னா வரை... பாய்ஸை விட கேர்ள்ஸுக்கு அக்கறை அதிகமா?!

இத்தனைக்கும் இடையிலும் இவர்கள் கடலுக்குச் செல்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழக அரசு இவர்களுக்கான உரிமையை மறுத்தாலும் அமெரிக்காவிலிருந்து சூழலியல் பாதுகாவலர்களுக்கான அங்கீகாரமும் சிறந்த பெண் ஆளுமைக்கான அங்கீகாரமும் இந்தப் பெண்களுக்குக் கிடைத்துள்ளது.

சூழலியல் அரசியல் பேசுபவர்கள் அதில் பெண்களைத் தவிர்த்துவிட்டுப் பேசமுடியாது என்பதற்கான நிகழ்கால சாட்சியம் இந்த ஆழ்கடல் ஆளுமைகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு