Published:Updated:

"பயணத்தில் பிரச்னையா... உடனே வாங்க!" - பெண்களுக்காக சென்ட்ரலில் இயங்கும் உதவி மையம்

கு.ஆனந்தராஜ்

சென்னை ரயில் நிலையத்தில் தினந்தோறும் நிகழ்த்தப்படுகின்றன, ஆச்சர்யமான மனிதநேயச் செயல்கள்!

All women passenger facilitation centre team
All women passenger facilitation centre team

அழுதுகொண்டே அறைக்குள் நுழைகிறார் அந்தப் பெண். உள்ளத்திலுள்ள பெரும் பதற்றம், அவரின் முகத்தில் படர்ந்திருக்கிறது. இருக்கையில் அமர வைத்து அந்தப் பெண்ணுக்கு குடிநீர் கொடுத்து, ஆசுவாசப்படுத்துகின்றனர் அங்கிருந்த மூன்று பெண்கள். மனம் சற்றே அமைதியானதும், அந்தப் பெண் நிதானமாகப் பேச ஆரம்பிக்கிறார். "தென்மாவட்டத்தைச் சேர்ந்த நான், குடும்பச் சண்டையால் விரக்தியுடன் வீட்டைவிட்டு வெளியேறினேன். அடுத்து என்ன செவதென்று தெரியாமல் சென்னை ரயில் நிலையத்துக்கு வந்தேன். தவறான முடிவெடுக்க நினைத்த நேரத்தில், ஒலிபெருக்கி அறிவிப்பு நம்பிக்கையைக் கொடுத்தது. உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், `மகளிர் பயணிகள் சேவை மைய'த்துக்கு வந்தேன்" என அழுகையை அடக்க முடியாமல் உடைந்த குரலில் பேசுகிறார்.

All women passenger facilitation centre team
All women passenger facilitation centre team

அவரிடம் மேலும் விவரங்களைக் கனிவுடன் கேட்ட அந்தப் பெண்கள், பிறகு அவருக்கு ஆலோசனைக் கூறி, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குத் தகவல் அனுப்புகின்றனர். அந்தப் பெண்ணின் கணவர் வந்ததும் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்புகின்றனர். இந்த மனிதநேயமுள்ள செயல் நடைபெற்றது, சென்னையிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் இயங்கிவரும், `மகளிர் பயணிகள் சேவை மைய'த்தில்.

பெண் பயணிகளுக்கு உதவுவதற்காக, இந்த ரயில் நிலையத்தில் 2016-ம் ஆண்டு `மகளிர் பயணிகள் சேவை மையம்' தொடங்கப்பட்டது. இதன் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவருகிறார் செந்தாமரைச் செல்வி. இவருக்குக் கீழ், இந்தச் சேவை மையத்தில் ஐந்து பெண்கள் பணியாற்றுகிறார்கள். பலரும் அறிந்திடாத இந்தச் சேவை மையத்தால், ஆச்சர்யமான, மனித நேயமுள்ள சேவைப் பணிகள் தினந்தோறும் நிகழ்த்தப்படுகின்றன.

Senthamil selvi with team
Senthamil selvi with team

"பல மொழிகளைச் சேர்ந்த, பலநூறு பயணிகள் தினமும் எங்களைத் தேடி வர்றாங்க. அவர்களின் மாறுபட்ட சிக்கல்களைத் தீர்த்து வைத்திருக்கிறோம். இதனால் ரொம்பவே பக்குவப்பட்டிருக்கிறோம். நாங்க கோபப்பட்டால், பயணிகளிடத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடியாது. அதனால, கனிவான உரையாடல் எங்களுடைய பிரதான குணமாகிடுச்சு" - அறிமுகப் பேச்சிலேயே இனிமை சேர்க்கும் செந்தாமரைச் செல்வி, இந்த ரயில் நிலையத்தில் முதன்மை பயணச்சீட்டு பரிசோதகராகவும் பணியாற்றிவருகிறார்.

பலரும் அறிந்திடாத இந்தச் சேவை மையத்தால், ஆச்சர்யமான மனித நேயமுள்ள சேவைப் பணிகள் தினந்தோறும் நிகழ்த்தப்படுகின்றன.

"இந்தியாவில் தினமும் பல கோடிப் பயணிகள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்றாங்க. அதில் பெண் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தான் எங்கள் சேவை மையம் தொடங்கப்பட்டது. பயணம் செய்ய வேண்டிய ரயிலை தவறவிட்டது முதல் முகவரியைத் தொலைத்து வழி தெரியாமல் தவிப்பதுவரை எல்லாவித பிரச்னைகளுக்கும் உதவி செய்கிறோம். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வீல் சேர் வசதியையும் ஏற்படுத்திக்கொடுக்கிறோம்.

All women passenger facilitation centre
All women passenger facilitation centre

தவிப்புடன் இருக்கும் பெண் பயணிகளிடம் பேச்சுக் கொடுத்து, எங்க மேல் நம்பிக்கை வரும்வகையில் பேசுவோம். பிறகு, அவர்களின் பிரச்னைகளுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம். பெரும்பாலும், நிறைய பேர் ரயிலை தவறவிட்டு தவிப்பாங்க. அவங்களுக்கு மாற்று ரயில் டிக்கெட் எடுத்துக்கொடுத்து உதவுவோம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவமனையில் சேர்ப்போம். வழிதெரியாமல் தடுமாறி நிற்பவர்களுக்கு, அவர் செல்ல வேண்டிய முகவரியைக் கண்டுபிடிச்சு வாகன வசதியை ஏற்படுத்திக்கொடுப்போம். அந்தப் பயணி பத்திரமாக வீட்டுக்குச் சென்றடைவது வரையும் எங்க கண்காணிப்பு தொடரும்" என்கிறார் செந்தாமரைச் செல்வி.

இந்தியாவிலேயே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இந்தச் சேவை மையம், டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 11-க்கு அருகில் இயங்கிவருகிறது. விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், இந்தச் சேவை மையம் பற்றி ஒலிபெருக்கியில் அடிக்கடி தகவல் தெரிவிக்கிறார்கள்.

"தவிப்புடன் இருக்கும் பெண் பயணிகளிடம் பேச்சுக் கொடுத்து, எங்க மேல் நம்பிக்கை வரும்வகையில் பேசுவோம். பிறகு, அவர்களின் பிரச்னைகளுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம்."
செந்தாமரைச் செல்வி

"பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள்னு பலரும் எங்க சேவை மையத்தை நாடிவருவாங்க. அவங்க பேசுற மொழி, எங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனாலும், சமாளிச்சுத்தான் ஆகணும். மொழிப் பிரச்னையில் தவறுதலா வழிகாட்டினால் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கு. அதனால, குழப்பம் ஏற்பட்டால் அவங்க உறவினர் / நண்பர்கிட்ட போன்ல பேசி, உரிய தீர்வைக் கொடுப்போம். இந்த மையத்துலயே, பாலூட்டும் தாய்மார்களுக்கான ஏ.சி வசதியுடன் கூடிய தனி அறையும் செயல்படுது.

எங்க ஒவ்வொருவருக்கும் 8 மணிநேர பணி. ஷிஃப்ட் அடிப்படையில், இந்தச் சேவை மையம் 24 மணிநேரமும் செயல்படும். தொடர்ந்து பயணிகள் வந்துகிட்டே இருப்பாங்க. எங்க பணியும் ஓய்வின்றி நடந்துகிட்டே இருக்கும். தினமும் பலநூறு பேர் எங்க சேவை மையத்தைப் பயன்படுத்துறாங்க. எங்க மையத்துல பெண் பயணிகள் மட்டும்தான் நுழைய முடியும். ஆனா, மையத்துக்கு வெளியில் இருந்தபடி ஆண் பயணிகளுக்கும் உதவிகள் செய்கிறோம்" என்கிற செந்தாமரைச் செல்வி, சேவை மையத்தால் பயணடைந்த சில பெண் பயணிகள் குறித்துப் பேசுகிறார்.

All women passenger facilitation centre
All women passenger facilitation centre

"பெங்களூரில் வசிக்கும் 18 வயது இளம்பெண்ணுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கு. `குணமானதும் திரும்பி வா'னு தங்கியிருந்த இடத்திலிருந்து அந்தப் பெண் விரட்டப்பட்டிருக்காங்க. அங்கிருந்து ரயில் மார்க்கமா சென்னைக்கு வந்தவரின் பணப்பை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருடப்பட்டிருக்கு.

All women passenger facilitation centre senthamil selvi
All women passenger facilitation centre senthamil selvi

உடனே அந்தப் பெண் எங்க மையத்தை அணுகினார். தெரிந்த என்.ஜி.ஓ ஒன்றின் ஒத்துழைப்புடன், அந்தப் பெண்ணை அரசு மருத்துவனையில் சேர்த்தோம். குணமாகும்வரை அவரைப் பார்த்துகிட்டோம். வழிகாட்டுவது வரை மட்டுமே எங்களுக்கான விதிமுறைகள் என்றாலும், மனிதநேய அடிப்படையில் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட பணிகளையும் மகிழ்ச்சியுடன் செய்கிறோம்.

அடுத்து, ஓர் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சித் தருணம். ஒருமுறை சென்னையிலிருந்து ஹைதராபாத் போக ஒரு பெண் பயணி டிக்கெட் எடுத்திருந்தார். எங்க மையத்தின் வாசலுக்கு வருவதும் போவதுமாக இருந்தார். சந்தேகம் வந்து அவர்கிட்ட பேச்சுக் கொடுத்தோம். குடும்பச் சண்டையில் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டிருக்கிறதா அந்தப் பெண் சொன்னதும் அதிர்ச்சியானோம். உடனே தன்னம்பிக்கைக் கொடுத்ததுடன், அவர் கணவரை வரவழைச்சு ஆலோசனைக் கொடுத்தோம்.

"நாங்க கோபப்பட்டால், பயணிகளிடத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடியாது. அதனால, கனிவான உரையாடல் எங்களுடைய பிரதான குணமாகிடுச்சு."
செந்தாமரைச் செல்வி

தற்கொலை எண்ணத்தைக் கைவிட்ட அந்தப் பெண்ணை, நல்லவிதமா அனுப்பிவெச்சோம். தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்மா திட்டியதால், கோபித்துக்கொண்டு ரயில்ல சென்னை வந்திட்டார். அந்தப் பெண்ணிடம் பேசி, அவரின் அம்மாவை வரவழைத்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினோம்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பெண் பயணிகள், இந்தச் சேவை மையத்தால் பயனடைந்திருக்கின்றனர். 5,300-க்கும் மேற்பட்டோர் வீல் சேர் வசதியையும், 8,400-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் தனி அறையையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

All women passenger facilitation centre
All women passenger facilitation centre

"எழும்பூர், எர்ணாகுளம், மதுரை, திருநெல்வேலி போன்ற பல ரயில் நிலையங்களிலும், இதுபோன்ற சேவை மையங்கள் செயல்படுது. ஆனால், டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் முழு உத்வேகத்தோடு சேவை மையம் இயங்கிவருது. அதனால் எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி. தூய்மையாகப் பராமரித்துவரும் எங்க சேவை மையத்துல, எங்களிடமிருந்து அன்பும் அன்லிமிட்டாகக் கிடைக்கும்" எனப் புன்னகையுடன் கூறுகிறார் செந்தாமரைச் செல்வி.