Published:Updated:

"கூகுள் மேப் இடத்தை மாற்றிக் காட்டியதுதான் குழப்பம்!" - கேரள வெள்ள நினைவுகளைப் பகிரும் அன்ஷா

அன்ஷா
அன்ஷா

கேரள மாநிலம் மழை வெள்ளத்தில் மூழ்கியபோது தனிமைப்பட்டு தத்தளித்த மக்களின் மீட்பர்களாக வந்த கதாநாயகர்கள் பலர். அதில், 'கதாநாயகி' என மக்கள், தலையில் வைத்துக் கொண்டாடும் அளவுக்குக் களமாடியவர் அன்ஷா வி.தாமஸ்.

கேரள மாநிலத்தைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளப் பிரளயம் நடந்துமுடிந்து ஓர் ஆண்டு ஆகிவிட்டது. அழியாத ரணங்களை ஏற்படுத்திவிட்டுப்போன அந்த நினைவுகளை இப்போது அசைபோடுகின்றனர் கேரளத்து மக்கள்.

மழைப் பிரளயகாலத்தில் அரைமணி நேரத்துக்கு ஒரு ஹெலிகாப்டர் வந்துசெல்லும் செங்கனூர் கிறிஸ்டியன் கல்லூரியில், ஒருவாரமாகத் தூக்கத்தை மறந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அன்ஷா. கோவை சூலூர் விமானப் படையின் 40-வது பிரிவில் ஸ்க்வாட் ரன் லீடரான இவர், ஆயிரம் உயிர்களுக்கு மேல் காப்பற்றியவர். ஆம், கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்குள்ள செங்கனூரின் ராணுவ முகாமுக்குத் தலைமைதாங்கி ஹெலிகாப்டர்களைத் திறமையாகக் கையாண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.

அன்ஷா
அன்ஷா

இடுக்கி மாவட்டம் பழையரிகண்டம் பகுதியைச் சேர்ந்த அன்ஷாவை, 'இடுக்கியின் மிடுக்கி' (திறமையான பெண்) என்று மலையாளிகள் அப்போது செல்லமாகக் கொண்டாடினார்கள். கல்லூரி முடித்த கையோடு விமானப் படையில் சேர்ந்த அன்ஷா, சவாலான மீட்புப் பணியைத் திறமையுடன் செய்து பலரது பாராட்டையும் பெற்றார்.

ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்ற அவரது அம்மா லீலா தாமஸ், மின்சார வாரியத்திலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும், விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்திவரும் அவரது அப்பா வி.கே.தாமஸ், ஒரு சகோதரன், சகோதரி என ஆனந்தம் பெருக்கெடுக்கும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அன்ஷாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

மழைப் பிரளயத்தில் மிகவும் சவாலாக இருந்த மீட்புப் பணி என்று எதைச் சொல்வீர்கள்?

அன்ஷா
அன்ஷா

கல்லூரி விடுதியில் சிக்கிய 33 மாணவிகளை மீட்டது மிகவும் சவாலானதாக இருந்தது. நான் செங்கனூர் முகாமுக்குச் செல்லும்முன்பே, அவர்கள் உதவி கேட்டிருக்கிறார்கள். நான் சென்ற பிறகு, அவர்கள் கையில் மொபைல் இருந்ததால் கன்ட்ரோல் ரூமைத் தொடர்புகொண்டு மீட்கும்படி அழுதுகொண்டே இருந்தார்கள். ஆனாலும், அவர்களது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவிகள் இருப்பிடத்தை நாங்கள் அறிந்துகொள்ளும் வகையில், கூகுள்மூலம் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார்கள். ஜி.பி.எஸ் கருவிமூலம் அந்த இடத்துக்குச் சென்று தேடிய பிறகும் அவர்கள் இருக்குமிடம் புலப்படவில்லை.

கூகுள் மேப் 300 மீட்டருக்கு மேல் இடம்மாற்றிக் காட்டியதுதான் குழப்பமேற்படக் காரணமானது. இரண்டு நாள்கள் தீவிர தேடுதலுக்குப் பிறகு, அவர்களைக் கண்டுபிடித்து மீட்டோம். அதில் இரண்டு மாணவிகள், மூன்று நாள்களுக்குமேல் சாப்பிடாததால் உடல்நிலை சரியில்லாத நிலையில் மீட்கப்பட்டனர். மாணவிகளை மீட்டுக் கொண்டுவந்தபோது முகாமில் இருந்தவர்கள் அவ்வளவு கொண்டாடினார்கள். தண்ணீர் சூழ்ந்து தனிமைப்பட்ட இடநாடு பகுதியில், மூதாட்டி ஒருவர் ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருந்த மருந்துகள் தீர்ந்துவிட்டன என்றும் தனக்கு உடனடியாக அவை வேண்டும் எனக் கேட்டு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கூறினார்.

அந்த மருந்துகள் விலை உயர்ந்தவை. இருந்தாலும், அதை உடனடியாக சர்ச் பாதிரியார் ஒருவர் மூலம் பெற்று, அவரின் வீடு அருகே ஹெலிகாப்டரில் இருந்து கீழே வீசினோம். உணவுப் பொட்டலம்தான் வீசுகிறார்கள் என நினைத்து, வேறுயாரோ அதை எடுத்துச் சென்றுவிட்டார்கள். மீண்டும் அந்த மருந்துகளை வாங்கி ஹெலிகாப்டர் வரும்போது சிவப்பு நிறத் துணியைக் காட்டும்படி மூதாட்டிக்குத் தகவல்கொடுத்து அவருக்கருகில் அந்தப் பொட்டலத்தை வீசினோம். இதுபோல ஆயிரக்கணக்கான போன் அழைப்புகள், குறுந்தகவல்கள் வந்தன. அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பெற்று ஹெலிகாப்டரை அனுப்பி வைத்தேன்.

ஹெலிகாப்டர் உதவியுடன் மீண்டு வந்தவர்களின் மனநிலை எப்படி இருந்தது?

களப்பணியில் அன்ஷா
களப்பணியில் அன்ஷா

மழைக்காலத்தில் மூன்று நாள்களுக்கு மேல் வீட்டு மொட்டைமாடியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தவர்களை ஹெலிகாப்டரில் மீட்டுக் கொண்டுவந்தோம். உணவு இல்லாததாலும், மழைத் தண்ணீரைக் குடித்ததாலும் பலர் உடல்நலம் குன்றியிருந்தார்கள். ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பெண்கள், அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கதறியழுதனர். அவர்களுக்கு, நான் ஆறுதல் கூறியபோது என் கையைப் பிடித்து கண்ணீரில் நனைத்தார்கள். அந்தக் காட்சி என்னை உறங்காமல் இயங்க வைத்தது.

ஆகாயத்தில் இருந்து பார்த்தபோது, மழையால் பாதித்த கேரளா எப்படிக் காட்சியளித்தது?

அன்ஷா
அன்ஷா

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கோவைச் சூலூரில் நான் இருந்தபோது, கமாண்டிங் ஆபீஸர் என்னை அழைத்து, 'உடனே கேரளத்துக்கு புறப்பட்டுச் செல்லுங்கள்' என்று உத்தரவிட்டார். கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது குறித்து ஏற்கெனவே நான் அறிந்திருந்தேன். ஆனால், நான் நினைத்ததைவிடப் பயங்கரமாக மழை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கேரளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கிக்கிடந்தது. ஹெலிகாப்டரில் பயணித்தபடி கீழே பார்த்தபோது, பல பகுதிகள் தீவுகளாகக் காட்சியளித்தன. செங்கனூரை மட்டும் மூன்று நதிகள் சேர்ந்து சிதைத்திருந்தன. மழையால் மிகக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளான செங்கனூரை எனது பணிக் களமாக எடுத்துக்கொண்டேன். செங்கனூர் கிறிஸ்துவக் கல்லூரிக்குச் சென்று சேர்ந்ததும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தவித்துக்கொண்டிருப்பதாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்கள் வந்துகொண்டே இருந்தன.

ஒருவர் விடாமல் அனைவரையும் மீட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்த பகுதிகளில் படகுகளால் செல்ல முடியவில்லை. அந்தப் பகுதியில் உதவிகோரும் மக்களை மீட்க ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்தேன். செங்கனூர் கிறிஸ்டியன் கல்லூரி ஹெலிகாப்டர் தளத்தை நான் முழுமையாகக் கையாண்டேன். பகல் முழுவதும் ஹெலிகாப்டர்களின் மீட்புப் பணியை முடுக்கிவிட்டேன். இரவு முழுவதும், மறுநாள் பகல்வேளையில் மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர்கள் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து விவாதித்து ரூட் போட்டோம். விமானப் படை மட்டுமல்லாது, கடற்படையின் ஹெலிகாப்டர்களையும் நான் கையாண்டேன்.

மீட்புப் பணியில் மக்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருக்கும்போதே உடனுக்குடன் முடிவுகளை எடுக்க வேண்டும். சில இடங்களில், இரண்டு அடுக்குமாடி வீடுகளில் இருப்பவர்களிடமிருந்தும் அழைப்புவரும். ஒரு மாடியில் இருப்பவர்களும் அழைப்பார்கள். முதலில் உயரம் குறைவான மொட்டைமாடியில் இருப்பவர்களை மீட்கும்படி அறிவுறுத்துவேன். எங்கள் குழுவினர் அதற்கேற்ப விரைந்து பணிபுரிந்தார்கள்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

அதிலும் குறிப்பாக, செங்கனூரில் என்னுடன் கல்லூரியில் படித்தவர்கள் சேர்ந்து வாட்ஸ் அப் குரூப் தொடங்கினார்கள். அந்த குரூப்பில் இணைவதற்கான லிங்க்கை ஷேர் செய்தோம். வீடுகளிலிருந்து வெளியேறிவர முடியாதவர்கள் வாட்ஸ் அப் குழு மூலம் தொடர்புகொண்டனர். ஹெலிகாப்டரில் உணவுப்பொருள்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் செங்கனூர் கல்லூரி மாணவர்கள் உதவினார்கள்.

மழைப் பிரளயம் கற்றுத் தந்த பாடமாக எதை நினைக்கிறீர்கள்?

மலையாள மக்கள் மீது அதிகம் அன்புகொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமான நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தார்கள். ஒரு துன்பம் வந்தபோது எல்லாவற்றையும் மறந்து சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவினார்கள். மக்களை ஒன்றுசேர்த்தது மழை. இது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. என்னைப் பிரிய மனம் இல்லாத செங்கனூர் மக்கள், இறுதியாக எனக்குப் பெரிய சாக்லேட் பாக்ஸ் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.

வெள்ளத்துக்குப் பின் மீண்டும் உயிர்பெற்ற கேரளா சுற்றுலா!

மிகவும் சவாலான விமானப் படையில், சேர வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

இடுக்கியில் சிறிய கிராமத்தில் பிறந்த நான், செங்கனூர் ஐ.ஹெச்.ஆர்.டி. இன்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் படித்தேன். படிக்கும் காலத்தில் ஸ்கவுட், பசுமைப் படைப் பயிற்சிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டேன். அப்போதுதான் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை மனதில் துளிர்விட்டது. படித்துமுடித்த கையோடு, ராணுவம் மற்றும் விமானப் படையில் சேருவதற்கான தேர்வு எழுதினேன். முதலில் ராணுவத்தில் சேர வாய்ப்பு வந்தது.

அன்ஷா
அன்ஷா

சென்னையில் இரண்டு வாரங்கள் ராணுவப் பயிற்சியிலும் கலந்துகொண்டேன். அந்தச் சமயத்தில் விமானப் படை தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். விமானப் படையில் சேருவதில் அதிக விருப்பமாக இருந்ததால், ராணுவத்திலிருந்து விமானப் படை பயிற்சிக்கு மாறினேன். ஹைதராபாத்தில் 6 மாதம் பயிற்சி முடித்து 2014-ம் ஆண்டு கோவை சூலூரில் பணியில் இணைந்தேன்.

அடுத்த கட்டுரைக்கு