Published:Updated:

`ஆறு வருஷம் கழிச்சு வரமா பிறந்த குழந்தை சுபஶ்ரீ!' - கலங்கும் பாட்டி ஜானகி

என்னை `ஜானு'னு செல்லமா கூப்பிடுவா.

சுபஶ்ரீ பாட்டி ஜானகி
சுபஶ்ரீ பாட்டி ஜானகி

கடந்த வாரம் வியாழக்கிழமை. சென்னைப் பள்ளிக்கரணையில் பேனர் சாய்ந்து சாலையில் விழுந்த சுபஸ்ரீ, உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பணியை முடித்துவிட்டு, மதியம் அவர் வீடு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. 

சுபஶ்ரீ
சுபஶ்ரீ

விபத்து ஏற்படக் காரணமாக இருந்த பேனரை வைத்தவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். சுபஸ்ரீயின் மரணத்துக்குப் பின்னர் பேனர் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சியினர், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

சுபஶ்ரீயின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். வீட்டில் பாட்டி ஜானகி மீதுதான், சுபஶ்ரீ அதிக பாசமாக இருந்திருக்கிறார். வயோதிகத்தில் இருப்பவர், பேத்தியின் இழப்பால் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகப் பேசத் தொடங்கினார்.

சுபஶ்ரீ பாட்டி ஜானகி
சுபஶ்ரீ பாட்டி ஜானகி

``ஆறு வருஷம் கழிச்சு, வரமா பிறந்த குழந்தை அவள். பிறந்ததிலிருந்து அவளை நான்தான் வளர்த்து ஆளாக்கினேன். என்மேலதான் ரொம்ப பாசமா இருப்பா. வீட்டிலிருந்து கிளம்பும்போதும், என்கிட்ட சொல்லிட்டுதான் போவா. வீட்டுக்குள் நுழைந்ததுமே நேரா என்னைப் பார்க்கத்தான் வருவாள்.

என்னை `ஜானு'னு செல்லமா கூப்பிடுவா. என்னை அப்படிக் கூப்பிடுற ஒரே ஆளு பேத்திதான். செல்போன், லேப்டாப் எல்லாத்திலயும் என் பேரைத்தான் பாஸ்வேர்டா வெச்சிருந்தா. இதை என்கிட்டயே அடிக்கடி சொல்லுவா. அவளோட பர்ஸ்ல என் போட்டோவை வெச்சிருப்பா. ரொம்ப திறமையான, தைரியமான பொண்ணு. 

சுபஶ்ரீ பாட்டி ஜானகி
சுபஶ்ரீ பாட்டி ஜானகி

கனடாவுக்கு வேலைக்குப் போக ஆசைப்பட்டு அதுக்கான ஏற்பாடுகளைச் செய்திட்டிருந்தா. `நான் கனடா போகும்போது நீயும் என்கூட துணையா வந்திடு. அதுக்கு இப்போவே தயாரா இரு'னு போன மாசத்துல இருந்து சொல்லிட்டே இருந்தா.  `என்னால ஏரோபிளேன்லயெல்லாம் ஏற முடியாதுடீ'னு சொல்வேன்.

நான் இறந்த பிறகு சடங்கு பண்ணுவானு நினைச்சா, சின்ன வயசுலயே போயிட்டா. எங்க வாழ்நாளை வேதனையாகிட்டுப் போயிட்டாளே..!
சுபஶ்ரீ பாட்டி ஜானகி

`உன்னை கப்பல்ல வெச்சாவது கூட்டிட்டுப்போவேன்'னு சொல்லுவா. நான் இறந்த பிறகு, சடங்கு பண்ணுவானு நினைச்சா, சின்ன வயசுலயே போயிட்டாளே..." - கண்ணீரை அடக்க முடியாமல் வெடித்து அழுகிறார் ஜானகி பாட்டி.