Published:Updated:

``ஒரு ஃபேஸ்புக் பதிவு... ஜப்பான் கவிதா அக்காவின் முகத்தைப் பார்க்கணும்!" - மாணவி சினேகா

கு.ஆனந்தராஜ்

`நல்லா படி! உன் எதிர்கால படிப்புச் செலவு முழுவதையும் நானே ஏத்துக்கிறேன். படிப்புல மட்டும் கவனம் செலுத்து.

சினேகா, கவிதா
சினேகா, கவிதா

விழுப்புரம் மாவட்டம் பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர், மாணவி சினேகா. வக்கீலாக வேண்டும் என்பது இவரின் பெருங்கனவு. அதற்கான தொடக்கப்புள்ளி இனிதே தொடங்கியிருக்கிறது. இந்த மாற்றங்களின் பின்னணியில் பலரின் உதவிகளும் ஊக்கங்களும் நிறைந்திருக்கின்றன. 

சினேகா
சினேகா

சட்டக்கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தாலும், மேற்கொண்டு படிப்புச் செலவுகளுக்குப் பணமின்றி தவித்திருக்கிறார். சினேகாவின் ஐந்தாண்டுக்கால படிப்புச் செலவுகள் முழுவதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார், ஜப்பானில் வசிக்கும் தமிழரான கவிதா. சினேகாவுக்கும், கவிதாவுக்கும் எந்த அறிமுகமும் இதற்கு முன் இருந்ததில்லை. ஆனாலும், மனிதநேயம் என்ற ஒற்றைப் புள்ளிதான் இருவரையும் இணைத்திருக்கிறது. சினேகாவின் கல்லூரிப் படிப்பால், ஒரு தலைமுறையே அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற இருக்கிறது.

தன் கல்விக் கனவு நிறைவேறிய மகிழ்ச்சி, சினேகாவின் வார்த்தைகளில் நன்கு பிரதிபலிக்கிறது. ``எங்க பாதிரி கிராமத்துல ஐந்தாம் வகுப்பு வரைதான் இருக்குது. பக்கத்து ஊர்லதான் ஆறாவது முதல் ப்ளஸ் டூ வரை படிக்கணும். நானும் அப்படித்தான் படிச்சேன். ரொம்பவே ஏழ்மையான குடும்பம் என்னுடையது. அப்பாவும் அம்மாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இதுதான்னு சொல்ல முடியாது. கிடைக்கிற தினக்கூலி வேலை எதுவா இருந்தாலும் செய்வாங்க. வீட்டுல நான் மூத்தப் பொண்ணு. எனக்கு ஒரு தம்பி, தங்கை இருக்காங்க. 

எங்க ஊர்ல படிச்சவங்க பலர் இருந்தாலும் இதுவரை யாரும் டிகிரி முடிக்கலை. நாமளாவது டிகிரி முடிக்கணும்னு ஆவலா இருந்தேன்.
சினேகா

எனக்கு நல்லா படிக்கணும்னு ஆசை. ஆனா, நான் படிக்க குடும்ப வறுமை பெரிய தடையா இருந்துச்சு. சொந்தக்காரங்க பலரும் எங்களைப் புறக்கணிச்சாங்க. இதெல்லாம் என் மனசுல பெரிய தாக்கத்தை உண்டாக்கிச்சு. எங்க ஊர்ல படிச்சவங்க பலர் இருந்தாலும் இதுவரை யாரும் டிகிரி முடிக்கலை. நாமளாவது டிகிரி முடிக்கணும்னு ஆவலா இருந்தேன்.

சமுதாயத்தின் மீது எனக்கு அதிக அக்கறை உண்டு. சமூகத்தில் நடக்கிற தவற்றைச் சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்யணும்னு சின்ன வயசுல இருந்தே நினைப்பேன். வக்கீலாகி ஏழை மக்களுக்கு உதவணும். அவங்களுக்காக நீதிமன்றத்தில் இலவசமா வாதாடி உரிய நீதியை வாங்கிக்கொடுக்கணும்னு நினைப்பேன். அதனால, நான் வக்கீலாகணும்னு என் பெற்றோரும் ஆசைப்பட்டாங்க" என்கிற சினேகா, கல்லூரிப் படிப்பில் சேர்ந்தது குறித்துப் பேசுகிறார்.

அம்மாவுடன் சினேகா
அம்மாவுடன் சினேகா

``ப்ளஸ் டூ தேர்வுல 600-க்கு 455 மார்க் வாங்கினேன். சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் வாங்கக்கூடப் பணமில்லை. என் புலம்பல் தாங்காம, எங்கம்மா 300 ரூபாய் கடன் வாங்கி கொடுத்தாங்க. பிறகு விண்ணப்பிச்சேன். எனக்குச் சென்னையை அடுத்த புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில படிக்க இடம் கிடைச்சுது. ஆனா, ஹாஸ்டல் கட்டணம் கட்டவும், மேற்கொண்டு படிப்புச் செலவுகளுக்கும் எங்ககிட்ட பணமில்லை. என் வக்கீல் கனவு, கனவாகவே போயிடுமோனு வருத்தப்பட்டேன்.

இரண்டாம் வகுப்பு வரை நான் நல்லா படிக்காமல் இருந்தேன். 3-ம் மற்றும் 4-ம் வகுப்புல, வகுப்பாசிரியரா கணபதி ஹரீஸ் சார் இருந்தார். அவர், எல்லா மாணவர்களையும் நல்லா படிக்க ஊக்கப்படுத்தினார். பிறகுதான் என் கல்வி ஆர்வமும் அதிகரிச்சுது. இந்த நிலையில், என் படிப்பு விஷயங்களை எங்கப்பா கணபதி சார்கிட்ட சொல்லியிருக்கார். என் கல்லூரிப் படிப்புக்கு உதவ வலியுறுத்தி, கணபதி ஹரீஸ் சார் அவருடைய ஃபேஸ்புக்ல ஒரு பதிவை வெளியிட்டார். அதைப் பார்த்து பலரும் எனக்கு உதவி செய்ய முன்வந்திருக்காங்க. ஜப்பானைச் சேர்ந்த கவிதா அக்கா, என் படிப்புச் செலவு முழுவதையும் ஏத்துக்கிட்டாங்க.

ஆசிரியர் கணபதி ஹரீஸ் சினேகா
ஆசிரியர் கணபதி ஹரீஸ் சினேகா

கவிதா அக்கா என்கிட்ட போன்ல பேசினாங்க. `நல்லா படி! உன் எதிர்கால படிப்புச் செலவு முழுவதையும் நானே ஏத்துக்கிறேன். படிப்புல மட்டும் கவனம் செலுத்து. நல்லா படிச்சு, எதிர்காலத்துல நிறைய ஏழை மக்களுக்கு உதவணும். படிப்பு தவிர மத்த எந்தத் தேவையா இருந்தாலும் என்னைக் கேளு'னு அன்போடு பேசினாங்க. என் ஓராண்டு கல்லூரிக் கட்டணம், 1,620 ரூபாய்தான். தவிர, ஹாஸ்டல் மற்றும் சாப்பாடு செலவு, டிரஸ் உட்பட இதர படிப்புச் செலவுகள் எல்லாத்துக்கும் சேர்த்து ஓராண்டுக்கு 25,000 ரூபாய் செலவாகுது. அத்தொகையை கவிதா அக்கா கொடுத்துட்டாங்க.

எனக்கு முன் அறிமுகம் இல்லாத கவிதா அக்கா, நான் நல்லா படிக்கணும்னு பெரிய உதவி செய்திருக்காங்க. அவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை. அவங்க உதவிக்கு உண்மையா நடந்துப்பேன்
சினேகா

ஐந்து வருஷத்துக்கும் சேர்த்து ஒன்னே கால் லட்சம் ரூபாய் செலவாகும்னு நினைக்கிறேன். அந்தத் தொகையையும் கவிதா அக்கா கொடுக்கப்போறாங்க. எனக்கு முன் அறிமுகம் இல்லாத கவிதா அக்கா, நான் நல்லா படிக்கணும்னு பெரிய உதவி செய்திருக்காங்க. அவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை. அவங்க உதவிக்கு உண்மையா நடந்துப்பேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் சினேகா.

ஜப்பானில் வசிக்கும் கவிதாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``ஆசிரியர் கணபதி ஹரீஸ் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன். சினேகாவைப் படிக்க வெச்சா, நிச்சயம் ஒரு சமூகமே மாற்றமடையும்னு நம்புறேன். அதனாலதான் உடனடியா பண உதவி செய்தேன். இதை ஒரு பெரிய விஷயமா நினைக்கலை. அதுக்காக, நான் ரொம்ப வசதியான குடும்பமில்லை. படிப்பின் அருமை எனக்கு நல்லா தெரியும்.

கவிதா
கவிதா

எங்கம்மா சிங்கிள் பேரன்ட். ரொம்பவே சிரமப்பட்டுத்தான் படிச்சு வளர்ந்தேன். நானும் கிராமத்துலதான் வளர்ந்தேன். வறுமையை மீறி, எங்கம்மா என்னைப் படிக்க வெச்சாங்க. தவிர, எங்கம்மா தன்னாலான உதவியைப் பிறருக்கு செய்து சந்தோஷப்படுவாங்க. குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியானேன். 2011-ல் என் அம்மா இறந்துட்டாங்க. சிங்கப்பூர், இந்தியாவைத் தொடர்ந்து, கல்யாணமாகி ஜப்பான்ல குடியேறிட்டேன். ஆறு வருஷமா ஜப்பான்லதான் வசிக்கிறேன். என் அம்மாவின் உதவி செய்ற குணத்தைப் பார்த்து வளர்ந்திருக்கேன். வறுமை நிலையில் அவங்களே பலருக்கும் உதவி செய்த நிலையில், இப்போ வேலையில இருக்கிற நானும் பலருக்கும் உதவணும். அதுதான் நியாயம்னு நினைச்சேன்.

நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாது. அதனால சம்பாதிக்கிற பணத்தைச் சேமிச்சு வெக்கிறதுல எனக்கு ஆர்வமில்லை. அதனால நிகழ்காலத்துல பலரின் வாழ்க்கை மாற்றத்துக்கு உதவிட்டிருக்கேன். அதுவும் படிப்புக்கு உதவ அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். இப்போ நான் ஓரளவுக்குச் சம்பாதிக்கிறேன். ஒருவேளை நான் வேலைக்குப் போகாட்டியும்கூட, என் கணவர் மற்றும் எனக்குத் தெரிஞ்சவங்க மூலமாவது பிறருக்கு உதவி செய்வேன். 

சினேகா நல்லா படிச்சு முடிச்சு, ஏழைகளுக்கு அவங்களால முடிஞ்ச உதவியைப் செய்தாலே போதும். மத்தபடி வேற எந்த உதவியையும் சினேகாவிடம் நான் எதிர்பார்க்கலை.
கவிதா

எனக்கு ஒரு வேண்டுகோள்தான். சினேகா நல்லா படிச்சு முடிச்சு, ஏழைகளுக்கு அவங்களால முடிஞ்ச உதவியைப் செய்தாலே போதும். மத்தபடி வேற எந்த உதவியையும் சினேகாவிடம் நான் எதிர்பார்க்கலை. நீதிமன்றத்தில் மக்களின் நியாயத்துக்கு சினேகாவின் குரல் ஒலிக்கணும். அந்த நிலையைப் பார்க்க ஆர்வமா இருக்கேன்" என உற்சாகத்துடன் முடித்தார் கவிதா.