Published:Updated:

"உச்சரிப்பு சரியில்லை; சொந்தக் கருத்து இல்லை; ட்ரால்களுக்கு என் பதில்..?!" - `சீரியஸ்' லயா

லயா

"முடியை இழந்ததால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. சொல்லப்போனால், இந்த ஹேர்ஸ்டைல்தான் எனக்கான அடையாளமாக மாறியிருக்கிறது."

"உச்சரிப்பு சரியில்லை; சொந்தக் கருத்து இல்லை; ட்ரால்களுக்கு என் பதில்..?!" - `சீரியஸ்' லயா

"முடியை இழந்ததால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. சொல்லப்போனால், இந்த ஹேர்ஸ்டைல்தான் எனக்கான அடையாளமாக மாறியிருக்கிறது."

Published:Updated:
லயா

தனித்துவமான தமிழில் தன்னம்பிக்கை கருத்துகளை வெளியிடுபவர் லயா. திண்டுக்கல்லைச் சேர்ந்தவர், சேவை நோக்கில் பலதரப்பட்ட மனிதர்களுக்கும் தன்னம்பிக்கைப் பயிற்சியளிக்கிறார். சமூக வலைதளத்தில் இவரின் பேச்சுக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதே சமயம் ட்ரால்களும் இவரை சுற்றாமல் இல்லை. அவருடைய சேவைப் பணி, தன்னம்பிக்கை பேச்சு மற்றும் அவர் மீதான ட்ரால்கள், விமர்சனங்கள் குறித்து லயாவிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னம்பிக்கை பேச்சாளர் பயணத்தைத் தொடங்கியது எப்போது?

லயா
லயா

"கல்லூரி படிக்கும்போது தோழிகளுடன் சிறிய அளவில் சேவை செய்யத் தொடங்கினேன். அப்பணி இப்போதுவரை தொடர்கிறது. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நாமக்கல்லிலுள்ள புற்றுநோய் பாதித்தோருக்கு உதவும் ஓர் அமைப்புக்குச் சென்றிருந்தேன். புற்றுநோய் பாதித்த, பாதிப்பிலிருந்து மீண்ட பெண்களுக்கு முடி கொட்டிப்போயிருக்கும். இதனால் அப்பெண்கள் தாழ்வு மனப்பான்மையில் வேலைக்குச் செல்லாமல் இருந்தனர். அந்தப் பெண்களைச் சந்தித்தேன். `இதெல்லாம் பெரிய பிரச்னையே இல்லை. இந்தத் தாழ்வு மனப்பான்மையை விட்டுவிடுங்கள். முடியில்லாத காரணத்தினால் வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டாம்' என்று சொன்னேன்.

`அவரவர் பிரச்னையின் வலி அவரவருக்குத்தான் தெரியும். எங்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் வேலைக்குச் செல்வீர்களா?' எனக் கேட்டார்கள். `அதனால் என்ன, நிச்சயம் செல்வேன்' என்றேன். அத்துடன் அப்பெண்களுக்கு நம்பிக்கையளிக்க, `நான் மொட்டையடித்துக்கொள்கிறேன்' எனக் கூறினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி உடனடியாக மொட்டையடித்துக்கொண்டேன். என் தொகுப்பாளர் வேலைக்கும் சென்றேன். அதன்பிறகு அந்தப் புற்றுநோய் பாதித்த பெண்களில் சிலர் நம்பிக்கையுடன் வேலைக்குச் செல்ல தொடங்கினார்கள். தொடர்ந்து புற்றுநோய் பாதித்த பெண்கள் பலரையும் சந்தித்து தன்னம்பிக்கை கொடுக்கத் தொடங்கினேன். இந்த நல்ல மாற்றம் எப்போதும் தொடரவேண்டும் என்பதற்காக, `பாய் கட்' ஹேர்ஸ்டைலில் இருக்கிறேன்.

லயா
லயா

முடியை இழந்ததால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. சொல்லப்போனால், இந்த ஹேர்ஸ்டைல்தான் எனக்கான அடையாளமாக மாறியிருக்கிறது. காவல்துறையினரின் வேண்டுகோள்படி விவாகரத்து வழக்கை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கும் தன்னம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தேன். தற்போது கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்குச் சென்று தன்னம்பிக்கை ஏற்படுத்திவருகிறேன். சேவையாகவே இப்பணிகளைச் செய்கிறேன்."

சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கியது பற்றி...

"'டிக் டாக்' வந்த பிறகு என் கருத்தை பெருவாரியான மக்களுக்குக் கொண்டுசெல்ல முடிவெடுத்தேன். சராசரியாக ஒரு `டிக் டாக்' வீடியோ ஒரு நிமிடம் இருக்கும். அந்த நேரத்துக்குள் ஒரு விஷயம் குறித்து பேசியாக வேண்டும். ஒரு நிமிடத்துக்குள் பயனுள்ள கருத்தைப் பேச வேண்டும். அது மக்களுக்குப் பிடிக்க வேண்டும். அந்த ஒரு நிமிடம் குறைவான நேரம்தான் என்றாலும், அந்தச் சவால் எனக்குப் பிடித்திருந்தது. வாரத்துக்கு மூன்று வீடியோக்களை பதிவிடுகிறேன்.

ஒரு நிமிடத்துக்குள் பயனுள்ள கருத்தைப் பேச வேண்டும். அது மக்களுக்குப் பிடிக்க வேண்டும். அந்த ஒரு நிமிடம் குறைவான நேரம்தான் என்றாலும், அந்தச் சவால் எனக்குப் பிடித்திருந்தது.
லயா

ஒவ்வொரு முறையும் புதிய விஷயம் குறித்துத்தான் பேசுவேன். என் சொந்தக் கருத்தைத் தவிர, தமிழ் அறிஞர்கள் மற்றும் முன்னோர்களின் கருத்துகளையும் பேசுகிறேன். நான் பேசும் வீடியோக்களை டிக் டாக், ஃபேஸ்புக், யூ-டியூப் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் பதிவிடுறேன். பெரும்பாலும் இளைஞர்களுக்கு உதவும் வகையிலான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்."

"உங்கள் பேச்சில் இலங்கைத் தமிழின் சாயல் இருக்கிறதே..."

லயா
லயா

"பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் பேசுவது மதுரை வட்டாரத் தமிழ். தனித்தன்மையுடன் பேசினால்தான், நமக்கென ரசிகர்கள் வட்டாரத்தைப் பெருக்க முடியும். ஆரம்பகாலத்தில் மீடியா பணிகேட்டுச் சென்ற இடங்களில் என் தமிழ்ப் பேச்சு சரியில்லை என நிராகரித்தார்கள். ஆனால், என் வழக்கத்தை நான் மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது என் தமிழ்ப் பேச்சைப் பலரும் பாராட்டுகிறார்கள். என் தாய்மொழி தெலுங்கு. ஆனால், சிறுவயதில் ஏற்பட்ட தமிழ் ஆர்வத்தினால், மேடைப் பேச்சு முதல் ஆசிரியர் பணிவரை பல அனுபவங்களைப் பெற்றேன். தற்போது வேந்தர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகப் பணியாற்றுகிறேன். தமிழ் ஆர்வத்தினால்தான் என் பயணம் சிறப்பாகச் செல்கிறது.

"உங்கள் பேச்சுக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு..."

லயா
லயா

"நான் சினிமா பிரபலம் இல்லை. மக்களிடம் பரிச்சயமான நபரும் இல்லை. ஆனாலும், என் பேச்சை தொடர்ந்து பலரும் கேட்கிறார்கள். சமூக வலைதளங்கள் மற்றும் நேரிலும் பாராட்டுகிறார்கள். நான்கு மாதங்களுக்கு முன்பு ஒருநாள். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். இரவு 2 மணிக்கு வீடு திரும்பும் வழியில் எங்கள் கார் விபத்துக்குள்ளாகி, ஒரு பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. நானும் கார் ஓட்டுநரும் சுயநினைவை இழந்துவிட்டோம். எங்கள் பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் எங்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உதவினார்கள்.

`நல்லது செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும்' என்பதை உறுதியாக நம்புவேன். இதற்கு உதாரணமான நிகழ்வுதான் நான் விபத்தில் உயிர்பிழைத்தது.
லயா

நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், என் பேச்சால் ஈர்க்கப்பட்டு என்னுடன் பேசவேண்டும் என நினைத்தவர்கள்தான் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்கள். எனக்கு நினைவு திரும்பியதும், அதை அவர்கள் சொல்லக் கேட்டு நெகிழ்ந்துபோனேன். `நல்லது செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும்' என்பதை உறுதியாக நம்புவேன். இதற்கு உதாரணமான நிகழ்வுதான் நான் விபத்தில் உயிர்பிழைத்தது. இன்னொரு நல்ல செய்தி, தற்போது மூன்று தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறேன். அதில், இரண்டு பெரிய ஹீரோக்கள் படம்."

"வார்த்தை உச்சரிப்பு தப்பா இருக்கு; ஏற்கெனவே பிறர் சொன்ன விஷயங்களைத்தான் அடிக்கடி பேசுறீங்க; இப்படியெல்லாம் உங்களைப் பற்றி சமூக வலைதளங்கள்ல வர்ற விமர்சனங்கள்/ட்ரால்கள் பற்றி?"

"'நீங்க எதுக்கு அறிவுரை சொல்றீங்க?'னு ஆரம்பத்தில் விமர்சனங்கள் வந்துச்சு. இன்னைக்கு சமூகத்துல மதிப்புடன் இருக்கிற பலரும் தொடக்கக் காலத்துல இப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பாங்க. அதனால, அவங்க தங்களோட நல்ல செயல்களை நிறுத்திக்கலை. அதுபோலவே நானும் வருத்தப்படுறதில்லை. என் பேச்சில், உச்சரிப்பு சரியா இல்லைனு நிறைய பேர் சொல்லியிருக்காங்க. அந்த விமர்சனங்களை நான் ஏத்துக்கிறேன். எல்லோருமே எடுத்ததுமே சரியா எல்லா வேலைகளையும் செய்வாங்கனு சொல்ல முடியாது. எனவே, என் தரப்பிலுள்ள தவறுகளைச் சரிப்படுத்திகிட்டிருக்கேன்.

நான் தெரிஞ்சுகிட்ட நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் என் நோக்கம். முன்பே நான் சொல்லியிருந்தேனே... மத்தவங்க ஏற்கெனவே சொன்ன விஷயங்களுடன் என் சொந்தக் கருத்துகளையும் பேசுறேன்னு. நான் பேசுறது எல்லாமே, என் சொந்தக் கருத்துனு நான் இதுவரை சொன்னதில்லை. `நீங்க சிரிச்சு நான் பார்த்ததில்லை. சிரிச்சு ஒரு வீடியோ போடுங்க. நடிச்சு ஒரு வீடியோ போடுங்க'னு கேட்பாங்க. பெரும்பாலும் விழிப்புணர்வு விஷயங்கள் குறித்துதான் நான் அதிகம் பேசுறேன். அதில் சிரிச்சுகிட்டு பேசுறது சரியா வராது. நான் ஜாலியான டைப்தான். காமெடியாவும் என்னால பேச, நடிக்க, கருத்துச் சொல்ல முடியும். வரும் காலங்கள்ல அதையும் செய்வேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism