Published:Updated:

ஊரெல்லாம் கழிவறை கட்டவைத்து தேசிய விருது பெற்ற செல்வி - மதுரைக்கு மற்றுமொரு பெருமை!

``குழந்தைத் திருமணம் வேண்டவே வேண்டாம். அதோட வலியை நான் அனுபவிச்சிருக்கேன்."

திறந்தவெளி மலம் கழிப்பதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பணிசெய்து, அதிக பேரைக் கழிப்பிடங்கள் கட்டச் செய்ததற்காக மத்திய அரசின் விருதைப் பெற்றிருக்கிறார் சக்கிமங்கலம் செல்வி.

அவரிடம் பேசினோம்.

selvi
selvi

“நான் பிறந்தது, மதுரை, ஒத்தக்கடை. என் கணவருக்கு அப்பா இல்லை. எனக்கு அம்மா இல்லை. கல்யாணமாகி சக்கிமங்கலத்திலதான் இருந்தோம். சமீபத்துல அவருக்கு இதயத்துல பிரச்னை. அதனால, ஒத்தக்கடையில வச்சு அவரைப் பார்த்துக்கிறேன்” என்கிற செல்விக்கு 36 வயதுதான். 14 வயது கடந்த மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்த இளம்வயதில் சேவை மனப்பான்மை எப்படி?

“17 வயசிலேயே எனக்குத் திருமணம் ஆகிடுச்சு. ஒருமுறை, எங்க பகுதியில செப்டிக் டேங்க் நிரம்பி தெருவுல ஓடிக்கிட்டிருந்துச்சு. மக்களுக்காகப் போராடினேன். அப்போவுல இருந்து எனக்கு மக்கள் வணக்கம் சொல்ல ஆரம்பிச்சாங்க. எனக்குக் கூச்சமா இருந்தது. அப்புறம்தான் புரிஞ்சது, பொதுச் சேவையில ஈடுபடுறவங்களை மக்கள் மரியாதையா பார்ப்பாங்கன்னு.

அதிகாரிகளும் நண்பர்களும் சேர்ந்து அத்தனை செலவையும் பார்த்துக்கிட்டாங்க. அந்த நல்ல உள்ளங்களைச் சம்பாதிச்சு வச்சிருக்கேன். அதுபோதும்.
செல்வி

அப்படியே சின்னச்சின்ன பணிகள் செஞ்சேன். திட்ட இயக்குநர் ரோகிணி அம்மா, எங்ககிட்ட கழிப்பறையோட அவசியம் பற்றிப் பேசினாங்க. அதுல இருந்து, மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கணும்னு எண்ணம் வந்துச்சு” என்று சொல்லும் செல்வி, அடுத்து தான் செய்த பணிகளைப் பட்டியலிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“புதூர்லதான் முதன்முதல்ல கழிப்பறை கட்ட வச்சேன். அந்த வீட்டுக்காரங்க முதல்ல மறுத்தாங்க. அரசாங்கத் திட்டத்தின்கீழ் பணம் வாங்கித் தர்றேன்னு சொன்னதும் சம்மதிச்சிட்டாங்க. அந்த ஊர்ல 55 கழிப்பறைகள் கட்டினாங்க. மத்திய அரசு கொடுக்கிற மானியத்தை வாங்கி கலெக்டர் கையால மக்களுக்குக் கொடுத்தேன். மானியம் வர்றது தெரிஞ்சு பசும்பொன் நகர், எம்.ஜி.ஆர் நகர், பி.டி.ஆர் நகர்ன்னு பல பகுதிகள்ல கழிப்பறைகள் கட்டினாங்க.

selvi
selvi

சுகாதாரச் சந்திப்புகள் நடத்தினோம். மக்குற குப்பை, மக்காத குப்பை பிரிக்க, மண்புழு உரம் தயாரிக்கக் கற்றுத்தர்றோம். திறந்தவெளியில மலம் கழிப்பதைத் தடுக்க அந்தப் பகுதியில இருந்த கருவேலமரங்களை அழிச்சு, விதைகள் நட்டுச் செடிகள் வளர்த்துட்டு இருக்கோம். குழந்தைகளிடமும் இதுகுறித்துப் பேசி விழிப்புணர்வு கொடுக்கிறோம்” என்றார்.

வக்கீலாக ஆசைப்பட்ட செல்வி, தற்போது இந்தப் பணியால் தான் மனநிறைவு அடைவதாகக் கூறுகிறார். “வேலைக்குப் பதிஞ்சு வச்சிருந்தேன். அங்கன்வாடி பணி கிடைச்சது. அப்புறம், வேண்டாம்னு தோணுச்சு. அதனால, அந்தப்பணியை ஏத்துக்கலை.

selvi
selvi

வேலைக்குப் போயிருந்தா, 20 குழந்தைங்களோடதான் பழக முடியும். இப்போ என்னால தினமும் பலநூறு குழந்தைகளிடம் பேசிப் பழக முடியுதே” என்கிறார்.

செல்வி, தற்போது திருமங்கலம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

“என் வீட்டுக்காரரும் மாமியாரும் எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க. என்னைப் புரிஞ்சுக்கிறாங்க. உலை கொதிச்சிட்டு இருக்கும். யாராச்சும் மீட்டிங்குக்குக் கூப்பிடுவாங்க. ஓடிருவேன். எல்லாத்தையும் எனக்காகச் சகிச்சிக்கிட்டு இருக்குது என் குடும்பம். என்கிட்டே கோவமாப் பேசிட்டு, அடுத்தவங்ககிட்ட என்னையப்பத்தி அவர் பெருமையாகப் பேசுவார்” என்கிறார்.

selvi
selvi

மத்திய அரசின் விருதை வாங்கிய அனுபவம் பற்றிக் கேட்டோம். “சிறந்த ஊக்கத்துக்கான விருது, செப்டம்பர் 6-ம் தேதி டெல்லி ‘மகா உத்சவ்’ நிகழ்ச்சியில கிடைச்சது. இதுதவிர, கலெக்டர்கள் கையில 7 விருதுகள் வாங்கியிருக்கேன்.

என் கணவருக்குத் திடீர்னு ஹார்ட் அட்டாக். சென்னையில அட்மிட் பண்ணினோம். கையில பைசா காசில்ல. இங்க இருக்கிற அதிகாரிகளும் நண்பர்களும் சேர்ந்து அத்தனை செலவையும் பார்த்துக்கிட்டாங்க. அந்தளவுக்கு நல்ல உள்ளங்களைச் சம்பாதிச்சு வச்சிருக்கேன். அதுபோதும்” என்று கூறி நெகிழ வைக்கிறார்.

“சுற்றத்தைத் தூய்மையா வச்சுக்கோங்க. குழந்தைத் திருமணம் வேண்டவே வேண்டாம். அதோட வலியை நான் அனுபவிச்சிருக்கேன். அந்த மன அழுத்தத்தில் இருந்து என்னைப்போலவே எல்லோரும் மீண்டு வந்திட முடியாது. அதனால, தயவுசெஞ்சு பெண் குழந்தைகளைப் படிக்க வைங்க” என்று கண்ணீர் மல்குகிறார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு