Published:Updated:

`அக்காக்களுக்கு கல்யாணம், ஆதரவற்றவர்களுக்கு பசியாற்றல்!' - அறந்தாங்கி டீக்கடை ராதிகாவின் கதை

எப்பவோ, கண்ணாடி மாதிரி உடைந்துபோயிருக்க வேண்டிய என் குடும்பத்தை, இந்த டீக்கடைதான் காப்பாத்திக்கிட்டு இருக்கு. 

'ராதிகா டீக்கடையா... தியேட்டருக்குப் பக்கத்துல இருக்கு'.

அறந்தாங்கியில் யாரைக் கேட்டாலும் உடனே வழி சொல்கிறார்கள். அந்தளவுக்கு அந்த டீக்கடை பிரபலமாகியிருக்கிறது.

அப்படி என்ன ஸ்பெஷல்?

டீக்கடைகளில் பாக்கெட் பாலில் டீ, காபி போட்டுத்தருவது வெகு இயல்பான நடைமுறையாக மாறிவிட்டது. ஆனால், இந்தக் கடையில் சுத்தமான பசும்பாலில்தான் டீ போடப்படுகிறது. மறந்தும்கூட பாக்கெட் பாலை பயன்படுத்துவதில்லை.

இந்தக் கடையின் உரிமையாளரும் டீ மாஸ்டரும் ராதிகாதான். தரமான டீ தருவது மட்டுமல்ல, அந்தப் பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாப்பாடே, இவர் தரும் டீ தான். ஆதரவற்ற நிலையில் தெருக்களில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இவர் கடைப்பக்கம் வரும்போது டீ, பிஸ்கட்டுகள் கொடுத்து அவர்களிடம் கனிவு காட்டுகிறார்.

ராதிகா
ராதிகா

35 வயதாகும் ராதிகா, தன் விருப்பங்கள், ஆசைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, குடும்பத்தின் நலனை முன்னிறுத்தியே வாழ்கிறார். இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் முடித்தது, அம்மாவுக்கு மருத்துவச் செலவு எனக் குடும்பத்தின் பாரங்களைச் சுமக்கிறார்.

அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து, கடையைத் திறக்கிறார். டீ போடுவது முதல் கிளாஸ் கழுவது வரை கடையின் அனைத்து வேலைகளையும் தனி ஆளாகச் செய்கிறார்.

அதிகாலை 5 மணிக்கு இந்தக் கடைக்குச் சென்றால், பசும்பாலில் தயாரான சுவையான டீ ரெடியாக இருக்கும். விடியற்காலையில் தயாராகும் டீக்கென்றே தனி வாடிக்கையாளர் உண்டாம்.

அதிகாலை 5 மணியிலிருந்து தொடர்ந்து மூன்று மணிநேரம் கடை பரபரப்பாகவே இருக்கும். அந்த நேரத்தில், ஒரு நிமிடம்கூட ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருப்பார்.

ராதிகா
ராதிகா

கடையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ராதிகாவிடம் பேசினோம்.

"நான் பொறந்து வளந்தது எல்லாம் அறந்தாங்கிதான். என்கூட பிறந்தவங்க அஞ்சு பேரும் பொண்ணுங்கதான். நான்தான் கடைக்குட்டி. பொறந்த கொஞ்ச நாள்ல ஒரு அக்கா இறந்து போய்ட்டாங்க. அப்பா, தள்ளுவண்டியில டீ வியாபாரம் செய்வார். ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் எங்க எல்லாரையும் வளர்த்தார்.

பள்ளி விடுமுறை நாள்ல அப்பாவோட டீக்கடைக்குப் போயிருவேன். டீ குடிச்சிட்டு வைக்கிற கிளாஸ் எல்லாத்தையும் கழுவிக்கொடுப்பேன். அக்கா யாரும் கடைக்கு வரமாட்டாங்க. நான் மட்டும்தான் போவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பாவும் மொதல்ல என்னையும் வரவேண்டாம்னுதான் சொன்னாரு. நான் பிடிவாதம் பிடிப்பேன். அதனால, என்னைக் கூட்டிக்கிட்டுப் போவார். அந்தப் பிடிவாதம்தான் இன்னைக்கு அப்பாவுக்கு அப்புறம் இந்தத் தொழிலை விடாமல் நடத்த வெச்சுக்கிட்டிருக்கு" என்றவரிடம், 'அப்பாவுக்கு என்னாச்சு?' என்றோம்.

"அன்னிக்கு, அப்பா வேலைக்குப் போயிட்டு வந்து, எங்களோட நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தாரு. திடீர்னு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. கொஞ்ச நாள்ல இறந்துட்டார். அப்போ, நான் 11-ம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன். அப்பா, திடீர்னு இறந்தது, எங்க குடும்பத்தையே நிலைகுலைய வெச்சிருச்சு. அந்த நேரத்துல அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல. அப்படியே சில வருஷத்தை ஓட்டிட்டோம்.

அம்மா, அக்காவுடன் ராதிகா
அம்மா, அக்காவுடன் ராதிகா

அப்பா இருக்கும்போது ஒரு அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வெச்சார். அதுக்கு வாங்கின கடன் கொஞ்சம் இருந்துச்சு. வருமானமும் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற சூழ்நிலை வந்திருச்சு. சொந்த பந்தங்கள் யாரும் உதவிக்கு வரலை. என்ன செய்யறதுன்னே தெரியலை. அம்மாக்கிட்ட, `அப்பாவோட டீக் கடையை  நான் எடுத்து நடத்துறேன். குடும்பத்தை நான் பாத்துக்கிறேன்'னு சொன்னேன். அம்மாவுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஏன்னா, அப்ப எனக்கு 16 வயசுதான். 'நீ சின்னப் பொண்ணு, நீ ஏன் கஷ்டப்படணும்'னு சொன்னாங்க. அம்மாகிட்ட பேசிப்பேசி சம்மதிக்க வெச்சிட்டேன்.

அப்பா டீ போடும்போது பார்த்த அனுபவத்துல, கடையை ஆரம்பிச்சிட்டேன். ஆனா, ஒரு கடையில என்னென்ன வேலை, அதை எப்படி நேரம் ஒதுக்கி செய்யணும்னு ஒரு ஐடியா கிடைச்சுடுது. மூணாவது அக்கா, எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தாங்க.

சரி, கடையைத் திறந்தாச்சு. டீ குடிக்க வர்றவங்களை எப்படி தக்க வைக்கிறதுன்னு தெரியல. ஏன்னா நான் டீ போடறதுக்கே ரொம்ப சொதப்புவேன். டீ குடிக்க வந்தவங்க, `என்ன டீ இது... நல்லாவே இல்ல'னு சொல்லி, என் கண் முன்னாடியே டீயைக் கீழே ஊத்திட்டு போயிருக்காங்க. அப்படிப் போனவங்க, கண்டிப்பா திரும்ப வர மாட்டாங்க.

Tea shop
Tea shop

மூணு மாசம் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அந்த நேரத்துல எல்லாம், அப்பா கடையில ரொம்ப வருஷமா வாடிக்கையாளர்களா இருந்தவங்கதான் என்னை ஊக்கப்படுத்தினாங்க. அதுதான், என்னைச் சோர்ந்திடாம சீக்கிரமாகவே கத்துக்க வெச்சிருச்சு.

அதற்குப் பிறகு, கடைக்கு ஒருத்தர் ஒரு தடவை வந்ததுமே, அவர் ஸ்ட்ராங்கா, லைட்டா... எந்த வகையான டீ கேட்பார்னு பார்த்துப்பேன். அடுத்த முறை அவர் வந்தவுடன், அவர் கேட்பதற்கு முன், டீ போட்டுக்கொடுப்பேன். இப்படி ஒவ்வொரு விஷயமா பழகினேன். 

டீக்கடை நடத்துவதில் பெரிய சவாலே, கடன் கேட்கிறவங்களைச் சமாளிக்கிறதுதான். ஆமா சார், இப்பவும் பல பேர் கடன் சொல்றாங்க. அவங்கல கடுமையா பேசணும்னு தோணும். ஆனா, என் கஷ்டத்தை பக்குவமாச் சொல்லி, பணத்தை வசூல் பண்ணிடுவேன்.

கடைக்கு வந்துட்டா, அதை விட்டுட்டு வேற எங்கேயும் போக முடியாது. கடையிலிருந்து பப்ளிக் டாய்லெட்டுக்கு ரொம்ப தூரம் போகணும். வீடும் பக்கத்துல இல்ல. அந்தக் கஷ்டத்தையெல்லாம் பெரிசா நினைக்காம டீக்கடையை நடத்தி, மூணு வருஷத்துல அப்பா வெச்சிருந்த கடன் எல்லாத்தையும் கட்டிட்டேன்.

 ராதிகா
ராதிகா

கையில இருந்த கொஞ்ச பணத்தை வெச்சுத்தான் இரண்டாவது அக்காவுக்குக் கல்யாணம் செய்தோம். எனக்கு ஒத்தாசையா இருந்த மூணாவது அக்காவுக்கு சீரும் சிறப்புமா கல்யாணம் செய்யணும்னு ஆசைப்பட்டேன். கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் நான் நினைச்ச மாதிரியே கல்யாணம் செய்து வெச்சேன். அதுக்கப்புறம், சிறுகச் சிறுக பணம்சேர்த்து வீட்டையும் கட்டி முடிச்சிட்டேன்.

கடன் பிரச்னை எதுவும் இல்லை. வாழ்க்கை நிம்மதியாக போய்க்கிட்டு இருந்துச்சு. அந்த நேரத்துலதான் அம்மாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததால, திடீர்னு ஒரு காலை எடுக்க வேண்டிய சூழல் வந்திருச்சு. இந்த நெலமையில, நான் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போயிட்டா, இந்தக் கடையை நடத்த முடியுமா... இல்லை, அம்மாவதான் பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியுமா? இதையெல்லாம் சொன்னாலும் அம்மா கேட்க மாட்றாங்க.

அம்மாவுக்கு லட்சக்கணக்குல மருத்துவச் செலவு பண்ண வேண்டியதாயிடுச்சு. அதனால, கடனும் அதிகமாயிடுச்சு. அதையெல்லாம் அடைக்க ரொம்பவே கஷ்டப்பட்டுதான் மீண்டேன். அக்காக்கள் எல்லாரும் கல்யாணம் கட்டிக்கிட்டு, புகுந்த வீட்டுக்குப் போயிட்டாங்க. அம்மாவும் நானும்தான் இருக்கோம். போதுமான வருமானம் கிடைக்குது. அம்மாவுக்குக் கால் எடுத்ததிலிருந்து அவங்களைப் பார்த்துக்க சரியான ஆள் இல்லைங்கிறதால, மதியம் எல்லாம் கடையை முடிச்சிட்டு வீட்டுக்குப் போயிடுறேன். இப்பவும், அம்மா கல்யாணம் செஞ்சிக்கச் சொல்லி என்னைத் தொந்தரவு செய்றாங்க.

 ராதிகா
ராதிகா

இப்போ திருமணம் செய்யுற காலம் கடந்துபோயிருச்சுனு சொல்லி அவங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆகிருவேன். கண்ணாடி மாதிரி உடைந்து போயிருக்கவேண்டிய என் குடும்பத்தை, இந்த டீக்கடைதான் இன்னிக்கு வரைக்கும் உடையாமல் காப்பாத்திக்கிட்டு இருக்கு. கடையை டெவலப் பண்ணணுங்கிற ஆசை எனக்கும் இருக்கு. ஆனா, அது இப்போதைக்கு நிறைவேறாது. ஏன்னா, எங்க குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்த டீக்கடையைத் தொடர்ந்து நடத்தணும். ஆதரவற்றோர்களின் வயித்துப் பசியைப் போக்கணும். அம்மாவை நல்லபடியா பார்த்துக்கணும். அதனால, இப்போதைக்கு இது மட்டும் போதும்" என்கிறார் வெள்ளந்தியான சிரிப்புடன்.

`` `பொங்கிப் போட்டுட்டு வீட்ல கிட'ன்னாங்க. ஆனா, அந்த ஒத்த மனுஷி..!'' ஒரு பெண்ணின் வெற்றிக் கதை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு