Published:Updated:

``குழந்தைங்க படிப்புக்காக நாடோடி வாழ்க்கையை விட்டுட்டோம்!'' - பழனியில் வட மாநிலத் தாயின் குரல்

Kesi with her family
Kesi with her family ( வீ.சிவக்குமார் )

"பசங்க ஸ்கூலுக்குப் போறதால பரவாயில்ல. ஏதோ ஒரு நேரமாவது ஸ்கூல்ல நல்ல சாப்பாடு சாப்பிடுறாங்க."

புகை, புழுதி, வாகனங்களின் இரைச்சல் இவற்றின் உறவினர்கள் அவர்கள். நெடுஞ்சாலையோரத்தில் தார்ப்பாயால் அமைக்கப்பட்ட குடில்தான் அவர்களின் வசிப்பிடம். அதனுள் மிகச்சிறிய சமையல் அறை. ஆங்காங்கே துணி மூட்டைகள். குடிலைச் சுற்றி முழுமை பெற்றதும் பெறாததுமாய் சுதை சிற்பங்கள். கை, கால், முகம், உடை என அனைத்தும் சுண்ணாம்பாலும், பெயின்டாலும் அழுக்குப் படிந்த உயிர்களாகக் காட்சியளிக்கின்றன. ஏக்கமும், புன்னகையும் கலந்த பார்வையை தங்களைக் கடந்து செல்வோர் மீது வீசுகிறார்கள். அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த நாடோடிகள். பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையின் ஓரத்தில் வசிக்கிறார்கள்.

Kesi's home
Kesi's home
வீ.சிவக்குமார்

ஒவ்வொரு வருடமும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாடோடிகள் பலரும் சீசன் காலத்தில் பழனியில் தஞ்சமடைவர். சீசன் முடிந்ததும் கூடாரத்தைக் கலைத்து வேறு இடம் கிளம்புவர். ஆனால், காளுவின் குடும்பம் மட்டும் 7 வருடங்களுக்கும் மேலாக பழனியில், அந்தச் சாலையோரத்தில் வசிக்கின்றனர். எத்தனையோ முறை போகிற போக்கில் கடந்துசென்ற அவர்களிடம் இன்று உரையாடினோம்!

"என்ன வேண்டும்?" என அரைகுறைத் தமிழில் கேட்கின்றனர். உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை என்றவுடன், அதைப் புரிந்தும் புரியாமலும் புன்னகைக்கின்றனர். தேசம் முழுவதும் வறியவர்களுக்கு ஒரே மொழி என்பதால் அவர்கள் பேசியது இயல்பாகவே புரியத் தொடங்கியது.

"என் பேரு கேசி. என் புருஷன் பேர் காளு. அவரோட தங்கச்சி பேரு காளி. சொந்த ஊர் குஜராத். வருஷத்துக்கு 10, 15 நாள் அங்க போயிட்டு வருவோம். பசங்க மோகன், வித்யா, சோமன்னு மொத்தம் ஆறு பேரு இங்க இருக்கோம். என்னோட அஞ்சு வயசு பையன் விஜய் மட்டும் குஜராத்தில் இருக்கான். என் மாமியார் அவன பாத்துக்குறாங்க. நாங்க இங்க வந்து ஏழு வருஷத்துக்கும் மேல இருக்கும். பொம்மை, சாமி சிலை செய்யுறதுதான் எங்க வேலை. பெரும்பாலும் குஜராத்துல எங்களுக்கு வேலை இருக்காது. அதனால நாங்க வேற வேற மாநிலத்துக்குப் போய் வேலை செய்வோம். இங்க வர்றதுக்கு முன்னாடி மும்பையில் நாலு வருஷம் இருந்தோம்.  

Kesi
Kesi
வீ.சிவக்குமார்

எனக்கு ஓரளவுக்குத் தமிழ் தெரியும். காளுக்கும் காளிக்கும் தமிழ் தெரியாது. அவங்க குஜராத்தியும் இந்தியும் பேசுவாங்க. பசங்க மோகனும் வித்யாவும் ஸ்கூல் போறங்க. அதனால நல்லா தமிழ் பேசுவாங்க. மோகன் நாலாவது படிக்கிறான், என்று கேசி சொல்லும்போதே, "நானு மூணாவது படிக்கிறேன் அக்கா" என்று ஓடிவந்து சொல்லும் வித்யாவுக்கு மருத்துவராக வேண்டுமென்பது ஆசை. மோகனுக்கு படித்து முடித்து ஒரு பொம்மை கடை வைக்க வேண்டுமாம்!

கேசி பேச்சைத் தொடர்ந்தார். "எங்க வாழ்க்கை ரொம்ப கஷ்டம் தான். இந்த பொம்மை எல்லாம் வித்தாதான் காசு. அடுத்த மாசம் விநாயகர் சதுர்த்தி வருதில்ல, அதுக்காக விநாயகர் சிலை செய்றோம். கார்த்திகை மாதத்தில விதவிதமான பொம்மை எல்லாம் செய்வோம். பழனி கோயில்ல கூட்டம் வரும்போதுதான் இதை விக்க முடியும். காசும் கிடைக்கும். அதுவரைக்கும் இருக்குற காச வச்சுதான் வாழணும். தினமும் ரொட்டிதான் எங்க சாப்பாடு. அதுவும் இப்போ சரியா சாப்பிட முடியல. நேத்திக்கு முந்துன நாள் எல்லாரும் பட்டினி. மோகனும் வித்யாவும் கூட பசியைத் தாங்கிக்குவாங்க. ஆனா சோமன்தான் பசில அழுதுகிட்டே இருப்பான்’’ எனக் கலங்கினார்.

Mohan
Mohan
வீ.சிவக்குமார்

"ஒரு குடம் குடி தண்ணி 15 ரூபாய்க்கு விக்கிது. 250 லிட்டர் உப்புத்தண்ணி 250 ரூவா. இப்போ குடிசை போட்டு இருக்க இடத்துக்கு மாசம் 1500 ரூபா வாடகை வேற. இருந்த காசுக்கு சுண்ணாம்பு பொடியும் பெயின்ட்டும் வாங்கியாச்சு. இன்னும் ஒரு மாசம் சமாளிக்கணும். அதுக்குள்ள எத்தன‌ நாள் பட்டினி கெடக்கணும்னு தெரியல. பசங்க ஸ்கூலுக்குப் போறதால பரவாயில்ல. ஏதோ ஒரு நேரமாவது ஸ்கூல்ல நல்ல சாப்பாடு சாப்பிடுறாங்க. புக், பை, டிரெஸ், செருப்புனு எல்லாத்தையும் ஸ்கூல்லயே கொடுக்கிறதால ரொம்ப உதவியா இருக்கு. எவ்வளவு நாளைக்கு நாடோடியாவே எழுத படிக்கத் தெரியாமத் திரியறது. அதான் டீச்சரம்மா வந்து ஸ்கூல்ல பசங்கள சேக்கச் சொன்னதும் அனுப்பிட்டோம். அவங்க ஸ்கூல் போகணும்கிறதுக்காக நாடோடியா சுத்தாம ஒரே ஊர்ல தங்கிட்டோம்!" எனக் குழந்தைகளை அணைத்தபடியே பேசி முடித்தார் கேசி.

வெளியிலிருந்து பார்க்க புழுதி படிந்து கிடக்கும் இவர்களின் குடில் முழுக்க அழகிய சிலைகள். காலடி உயரம் முதல் ஐந்து அடி அளவு வரை செய்கின்றனர். அளவுக்கு ஏற்ப ஐம்பது ரூபாய் முதல் ஐந்தாயிரம் விலை பெருகின்றன அவை. இதற்கான அச்சுகளை குஜராத்திலிருந்தே வாங்கி வருவதாகக் கூறினர். மொழி தெரியாமல் இவர்கள் படும் பாடு திண்டாட்டம்தான். இவர்களின் நிலை அறிந்தும் சிலர் ஏமாற்றுகிறார்கள்.

Mohan
Mohan
வீ.சிவக்குமார்.

பொருளாதாரச் சிக்கல்களை மீறி தம் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்கிற நம்பிக்கை கேசியின் பேச்சில் நிரம்பிக் கிடந்தது. `யாதும் ஊரே' எனப் பிழைக்கும் இவர்களுக்கு நாம் செய்யும் உதவி அவர்களின் தொழிலுக்கு மதிப்பளிப்பதுதான். இதுபோன்ற அழுக்கேறிய குடில்களிலிருந்துதான் பல மேதைகளும், தலைவர்களும் உருவான வரலாறு காலம் அறிந்ததுதான்.

அடுத்த கட்டுரைக்கு