Published:Updated:

``இரவு 10 மணி... 1 லட்சம்... போலீஸ் ஸ்டேஷன் சந்திப்பு!” - The Great புஷ்பா பாட்டி

``எல்லாப் பொருளும் பத்திரமா இருக்கு'னு சொல்லி, காயத்திரியும் அவங்க வீட்டுக்காரரும் என்னை ரொம்பவே பாராட்டினாங்க" என்று நெகிழ்கிறார் புஷ்பா பாட்டி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில், சென்னை கோடம்பாக்கம் வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த பரதநாட்டிய ஆசிரியை காயத்திரி என்பவர், தன் ஹேண்ட் பேக்கைத் தவறவிட்டார். அதில், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏ.டி.எம் கார்டு உட்பட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் இருந்துள்ளன. அவ்வழியாக நடந்துசென்ற புஷ்பா என்பவர் அந்த ஹேண்ட் பேக்கைக் கண்டெடுத்ததுடன், அதைக் காயத்திரியிடம் பத்திரமாக ஒப்படைத்தார். இந்த நிகழ்வுகள் எல்லாம் அரை மணி நேரத்தில் நடந்துள்ளது. காய்கறிக்கடை நடத்திவரும் புஷ்பாவின் மனித நேயத்தை, காவல்துறையினர், காயத்திரியின் குடும்பத்தினர் உட்பட பல தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.  

புஷ்பா பாட்டி
புஷ்பா பாட்டி

கோடம்பாக்கம் லிபர்டியிலுள்ள மாநகராட்சி அண்ணா பூங்கா வாசலில்தான் தினமும் காய்கறி விற்கிறார், புஷ்பா. இரவு 7 மணிக்குக் காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த புஷ்பாவைச் சந்தித்துப் பேசினேன்.

``எனக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணு. கோடம்பாக்கம் காமராஜர் நகரிலுள்ள என் மகன் வீட்டுல வசிக்கிறேன். முன்னாடி பூக்கடை வெச்சிருந்தேன். என் கால்ல அடிபட்டு, ரொம்ப நாளா வீட்டுலயே இருந்தேன். மறுபடியும் வேலைக்குப்போய் என் தேவையைப் பூர்த்தி பண்ணிக்கலாம்னு காய்கறி வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். தினமும் மதியம் தி.நகர் மார்கெட்ல காய்கறி வாங்குவேன். கால்நடையா சாயந்திரம் 6 மணிக்கு மேல கோடம்பாக்கம் அண்ணா பார்க் வாசல்ல விற்க வந்திடுவேன்.

புஷ்பா பாட்டி
புஷ்பா பாட்டி

ஆரம்பத்துல பார்க் வாசல்ல காய்கறி விற்கக்கூடாதுனு எதிர்ப்பு வந்துச்சு. இந்த ஏரியா போலீஸ்காரங்கதான் எனக்கு ஆதரவா பேசி, தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதி வாங்கிக்கொடுத்தாங்க. ராத்திரி 8 - 9 மணிவரைக்கும் காய்கறி வித்துட்டு கிளம்பிடுவேன். அடுத்த நாள் காலையில 7 மணிக்கு வந்து மதியம் 12 மணிவரைக்கும் இதே இடத்துல காய்கறி விற்பேன். தினமும் 50 - 75 ரூபாய்தான் லாபமா கிடைக்கும். இப்படித்தான் என் அன்றாட பொழப்பு ஓடிட்டிருக்கு” என்பவர், ஹேண்ட் பேக்கை கண்டெடுத்து ஒப்படைத்த நிகழ்வை விவரிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் பார்த்துக்கிட்டே, தெரிஞ்ச சிலர்கிட்ட பேசிட்டிருந்தேன். ராத்திரி 10 மணி வாக்குல பார்க்ல இருந்து கிளம்பி, சந்திரபவன் ஹோட்டல் வழியா வீட்டுக்கு நடந்து போயிட்டிருந்தேன். அப்போதான், அந்தப் பை, சந்திரபவன் ஹோட்டலுக்கும் பதிப்பகச் செம்மல் கணபதி ஸ்கூலுக்கும் நடுவுல ஒரு டீக்கடைக்கிட்ட இருந்துச்சு. ஹேண்ட்பேக்கை இருட்டுல குப்பை பைனு நினைச்சு, அந்த வழியா போனவங்க பலரும் கால்ல தள்ளித் தள்ளி, அது என் கால்ல தட்டுப்பட்டுச்சு.  

`உங்ககிட்ட கிடைச்சதால எங்க ஹேண்ட்பேக் பத்திரமா கிடைச்சிருக்கு. வேற யார் கையிலயாவது கிடைச்சிருந்தா, ஹேண்ட்பேக்கும் அதுல இருந்த எந்தப் பொருளும் எங்களுக்குக் கிடைச்சிருக்காது'னு காயத்திரியின் வீட்டுக்காரர் சொன்னார்
புஷ்பா பாட்டி

அதைக் கையில எடுத்துப் பார்த்தப்போ சாப்பாட்டுப் பைனு நினைச்சேன். அதை யார்கிட்ட கொடுக்கிறது தெரியலை. அதனால, என் பையன்கிட்ட விவரம் கேட்கலாம்னு ஹேண்ட்பேக்கை என் காய்கறிப் பையில வெச்சுக்கிட்டு கிளம்பினேன். வீட்டுக்குப் போறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியில இருந்து, வீட்டுக்குப் போன பிறகும் செல்போன் அடிச்சிட்டே இருந்துச்சு. என் மருமகதான், `இந்தப் பையில இருந்துதான் சத்தம் கேட்குது அத்தை'னு சொன்னா. பையைப் பிரிச்சுப் பார்த்தேன். பெரிய செல்போனும், பணமும் இருந்துச்சு. எனக்கும், மருமகளுக்கும் அதிர்ச்சி. உரியவங்ககிட்ட பையைக் கொடுத்துடுறதுதான் சரினு, உடனே அந்தப் பையை மூடிட்டேன்.

மறுபடியும் போன் வர, `போனை அட்டெண்ட் பண்ணி பேசுங்க'னு மருமக சொன்னா. நான் மகன்கிட்ட கொடுக்க, அவன்தான் போன்ல பேசினான். ஹேண்ட்பேக் எங்ககிட்ட பத்திரமா இருக்கிறதா என் பையன் சொல்ல, காயத்திரி நிம்மதியானாங்க. உடனே கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக்கிறதா காயத்திரி சொல்ல, நான் போலீஸ் ஸ்டேஷன் போனேன். அங்க என்னைப் பார்த்ததுமே காயத்திரி கண் கலங்கிட்டாங்க.

Park
Park

அவங்ககிட்ட,`ரோட்டுல அனாமத்தா கிடந்த பையை என்ன பண்றதுனு தெரியாமத்தான் எடுத்துட்டு வந்தேன்'னு நான் சொன்னேன். `உங்ககிட்ட கிடைச்சதால எங்க ஹேண்ட்பேக் பத்திரமா கிடைச்சிருக்கு. வேற யார் கையிலயாவது கிடைச்சிருந்தா, ஹேண்ட்பேக்கும் அதுல இருந்த எந்தப் பொருளும் எங்களுக்குக் கிடைச்சிருக்காது'னு காயத்திரியின் வீட்டுக்காரர் சொன்னார்.

போலீஸ்காரங்ககிட்ட பையைக் கொடுத்தேன். `எங்ககிட்ட தராதீங்க. நேரடியா அதோட சொந்தக்காரங்ககிட்டயே கொடுத்திடுங்க'னு சொன்னாங்க. ஹேண்ட்பேக்கைப் பத்திரமா உரியவங்ககிட்ட கொடுத்துட்டதா எழுதி, அதுல கையெழுத்துப்போடச் சொன்னாங்க போலீஸ்காரங்க. கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன். ஹேண்ட்பேக்கைத் திறந்து பார்த்துட்டு, `எல்லாப் பொருளும் பத்திரமா இருக்கு'னு சொல்லி, காயத்திரியும் அவங்க வீட்டுக்காரரும் என்னை ரொம்பவே பாராட்டினாங்க. போலீஸ்காரங்களும் பாராட்டினாங்க.

நாங்க கஷ்டப்படுற குடும்பம்தான். தினமும் 50, 100 ரூபாய்க்குச் சிரமப்பட்டு காய்கறிகளை விற்கிற வேலை செய்தாலும், எப்போமே நாங்க மத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டோம். உழைச்சு சம்பாதிக்கிறதுதான் நிலைக்கும்னு நம்பி வாழ்றவங்க
புஷ்பா பாட்டி

எல்லோருக்கும் நன்றி சொல்லிட்டு கிளம்பிய என்னை, போலீஸ்காரங்களும், காயத்திரி குடும்பத்தினரும் வண்டியில வீட்டுக்குக் கொண்டுவந்து விடுறதா சொன்னாங்க. `பரவால! நடந்து போய்கிறேன்'னு சொல்லிட்டு, வீட்டுக்கு வந்துட்டேன்" என்று மனிதாபிமானத்துக்கு உதாரணமாக நடந்துகொண்ட புஷ்பா, அதன் பிறகு நடந்த நிகழ்வுகளைக் கூறுகிறார்.

``கீழ கிடந்த பையை நான் எடுத்துக்கொடுத்த தகவல் பேப்பர்ல, இன்டர்நெட்ல வந்திடுச்சு. திங்கட்கிழமை நான் வழக்கம்போல லிபர்டி பார்க்ல காய்கறி விற்க வந்தேன். அங்கிருந்தவங்க பலரும் என்னைப் பாராட்டினாங்க. செவ்வாய்க்கிழமை, எனக்குப் புதுப் பட்டுப்புடவை, பழங்கள், ஸ்வீட்ஸ் வாங்கிட்டு என்னைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க, காயத்திரி. அப்போ நான் வீட்டுல இல்லாததால, அதையெல்லாம் என் மருமககிட்ட கொடுத்து, அன்பா பேசியிருக்காங்க. `ஒருநாள் எல்லோரும் எங்க வீட்டுக்கு வாங்க'னு சொல்லியிருக்காங்க.

Anna Park
Anna Park

நான் வீட்டுக்கு வந்ததும் மருமக எல்லாத் தகவலையும் சொன்னா. நான் செஞ்சது சின்ன உதவிதான். அதுக்கு மதிப்புக்கொடுத்து காயத்திரி பொண்ணு புடவை, ஸ்வீட் வாங்கிட்டு வந்துகொடுத்தது பெரிய விஷயம். அவங்களோட நன்றிக்கடன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. என்கிட்ட போன் இல்லை. மருமககிட்ட போன் பண்ணித்தரச் சொல்லி காயத்திரி பொண்ணுக்கு நன்றி சொல்லணும்.

நாங்க கஷ்டப்படுற குடும்பம்தான். தினமும் 50, 100 ரூபாய்க்குச் சிரமப்பட்டுக் காய்கறிகளை விற்கிற வேலை செய்தாலும், எப்போமே நாங்க மத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டோம். உழைச்சு சம்பாதிக்கிறதுதான் நிலைக்கும்னு நம்பி வாழ்றவங்க நாங்க" என்று அழுத்தமாகக் கூறியவர், நமக்கு விடைகொடுத்துவிட்டு காய்கறி வியாபாரத்தில் மும்முரமானார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு