Published:Updated:

தண்ணீரில் மூழ்கிய இளைஞர்கள்! சேலையை வீசிக் காப்பாற்றிய வீரத் தமிழச்சிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உயிருக்குப் போராடிய இளைஞர்களை மீட்ட பெண்கள்
உயிருக்குப் போராடிய இளைஞர்களை மீட்ட பெண்கள்

"ரெண்டு பேரைக் காப்பாத்தினதை நினைச்சு எங்களால சந்தோஷப்பட முடியலை. இன்னும் ரெண்டு பேரைக் காப்பாற்ற முடியாமப் போயிடுச்சேன்னு நினைக்கும்போதுதான் மனசு தாங்கல."

நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர்களைத் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், அணிந்திருந்த புடவையை அவிழ்த்துவீசிக் காப்பாற்றியுள்ளனர் பெரம்பலூரைச் சேர்ந்த மூன்று பெண்கள். இவர்களின் வீரதீர செயலைப் பாராட்டி மாவட்ட நிர்வாகம் கல்பனா சாவ்லா விருதுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ளது கொட்டரை நீர்த்தேக்கம். இப்பகுதியிலுள்ள மருதையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக அப்பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், அந்தப் பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி அங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற ரஞ்சித், செந்தில்வேலன் கார்த்திக், பவித்ரன் நால்வரும் அந்த நீர்த்தேக்கத்துக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், நீர்த்தேக்கத்தில் குளிக்காமல், சுமார் 10 அடி ஆழத்துக்கும் மேற்பட்ட பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.

கொட்டரை நீர்த்தேக்கம்
கொட்டரை நீர்த்தேக்கம்

அப்போது அந்த ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்குப் போராடினர். அங்கு துணி துவைத்துக்கொண்டிருந்த, ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகிய மூன்று பெண்களும் அந்தக் காட்சியைக் கண்டதும் ஓடிவந்து, ஆற்றில் இறங்கி எதையும் யோசிக்காமல் உடுத்தியிருந்த புடவையைக் களைந்து கயிறாக்கி தண்ணீரில் வீசினர். இதில், செந்தில்வேலனும் கார்த்திக்கும் உயிர் பிழைத்தனர். பவித்ரன், ரஞ்சித் தண்ணீரினுள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்ட இந்த மூன்று பெண்களுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மூவரில் ஒருவரான செந்தமிழ்செல்வியிடம் பேசினோம், "எங்க ஊர்ல உள்ள முக்கால்வாசி பொம்பளைங்க இங்க உள்ள நீர்த்தேக்கத்துலதான் துணி துவைப்பாங்க. நாங்களும் துணிதுவைக்க வந்த நேரத்துலதான், இந்த நாலு பசங்களும் காற்றடைக்கப்பட்ட லாரி டியூப்களை எடுத்துக்கிட்டு குளிக்க வந்தாங்க. 'இங்கு குளிக்கலாமா அக்கா... ஆழம் எவ்வளவு இருக்கும்?'னு கேட்டாங்க. '10 அடிக்கும்மேல இருக்கும்ப்பா. பள்ளமும் கிடக்கு. இழுவைத் தண்ணியாவும் இருக்கு. இழுத்துக்கிட்டுப் போனாலும் போகும்ப்பா. குளிக்க இறங்க வேண்டாம் கண்ணுகளா'ன்னு சொன்னோம்.

கொட்டரை நீர்த்தேக்கம்
கொட்டரை நீர்த்தேக்கம்

`சரி... சரி...'ன்னு தலையை ஆட்டிக்கிட்டே குளிக்கிறதுக்கு நடந்தாங்க. `நீச்சலாவது தெரியுமாப்பா?'ன்னு கேட்டோம். `எல்லாம் தெரியும்'னு சொல்லி விளையாட்டு புத்தியில, பள்ளத்து தண்ணிக்குள்ள ரெண்டு பேரு தொப்புத் தொப்புன்னு குதிச்சாங்க. அவங்களோட ஆர்வத்தையும், குதிச்ச விதத்தையும் பார்த்தப்பவே நாலு பேர்ல யாருக்குமே நீச்சல் தெரியாதுன்னு புரிஞ்சுக்கிட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துணியைத் துவைச்சு முடிச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பிக்கிட்டிருந்த நேரத்துல, அதுல ரெண்டு பேரோட அலறல் சத்தம் கேட்டுச்சு. உடனே, பதற்றத்துல துவைச்ச துணிகளை அப்படியே கீழே போட்டுட்டு, பள்ளத்தை நோக்கி ஓடினோம். அதுக்குள்ள அவங்களைக் காப்பாத்த மத்த ரெண்டு பேரும் உள்ள குதிச்சுட்டாங்க. நாலு பேருமே தத்தளிச்சிட்டிருந்தாங்க.

``பெண் மனம் எதிர்பார்க்கும் சுதந்திரம் என்ன?!" - ஒரு பெண்ணின் கடிதம்

'ஏய் சேலையை அவிழ்த்து தண்ணியில வீசுங்கடி... ஆளுக்கு ஒரு சேலை முனையப் பிடிச்சாலும் கரை சேர்ந்திடுவாங்க'ன்னு சொல்லிக்கிட்டே ஆனந்தவல்லிதான் முதலில் சேலையைத் தூக்கி வீசினாள். அடுத்தடுத்து மற்ற ரெண்டு பேரும் சேலைகளை வீசினோம். அதைப் பிடிச்சுக்கிட்டு ரெண்டு பேரு மட்டும் கரையேறி வந்தாங்க. அதுக்குள்ள மத்த ரெண்டு பேர் தண்ணிக்குள்ள மூழ்கினதால காப்பாத்த முடியாமப் போயிடுச்சு. ரெண்டு பேரைக் காப்பாத்தினதை நினைச்சு எங்களால சந்தோஷப்பட முடியலை. மத்த ரெண்டு பேரையும் காப்பாத்த முடியாமப் போயிடுச்சேன்னு நினைக்கும்போதுதான் மனசு தாங்கல. அந்தப் பகுதியில் ஒரு எச்சரிக்கை போர்டுகூட இல்லை” என்றார் வேதனையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு