Published:Updated:

`வனிதா அக்கா மீண்டும் வந்துட்டாங்க!' - புற்றுநோயிலிருந்து மீண்ட சேலம் பெண் காவலர்

`இந்த நோய் எனக்கு எதனால் ஏற்பட்டுச்சுனு தெரியலை. அந்த வருத்தம் எனக்குள் இருந்தாலும், புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திலும் வேகமா முன்னேறிட்டு இருக்கேன்’

`வனிதா அக்கா', `தங்கமான ஏட்டம்மா'... இவைதாம் சேலம் மாநகரக் காவல்துறை வட்டாரத்தில், வனிதாவுக்கான அடைமொழிப் பெயர்கள். அன்பாகப் பழகும் குணமும், கோபப்படாத இயல்பும்தான் இவரின் பிரதான அடையாளம். சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறார், வனிதா. பணித்திறனுக்கு இணையாக, விளையாட்டிலும் புகழ்பெற்றவர். மூத்தோர் தடகளப் போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் நூற்றுக்கும்மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வாங்கிக்குவித்தவர். 

Vanitha
Vanitha

வனிதாவுக்கு எல்லாமுமானவர், அவரின் அக்கா மட்டுமே! வாழ்க்கையில் வலி நிறைந்த தடங்களில் பயணித்தாலும், மன உறுதியால் பணியிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்திவந்தார். மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த வனிதாவின் வாழ்க்கையில், புற்றுநோய் வடிவில் புயல் வீசியிருக்கிறது. வனிதாவைவிடவும், காவல்துறை நண்பர்களுக்குத்தான் பெரும் அதிர்ச்சி.

அலங்கரிக்கப்பட்ட பதக்கங்களால் ஜொலித்த வனிதாவின் வீடு, தற்போது களையிழந்துள்ளது. ஓடி ஓடி வெற்றிகளைக் குவித்த வனிதாவின் கால்கள், தனியாக வீட்டைவிட்டு வெளியேறத் தடுமாறுகின்றன. தனி ஆளாக, இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணித்தவர். இன்று, சிகிச்சைக்குச் செல்லும்போது பிறர் துணையை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கிறார். 

with Medals
with Medals

``இந்த நோய் எனக்கு எதனால் ஏற்பட்டுச்சுனு தெரியலை. அந்த வருத்தம் எனக்குள் இருந்தாலும், புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திலும் வேகமா முன்னேறிட்டு இருக்கேன்" - தன்னம்பிக்கைக்கு உதாரணமாகத் திகழும் வனிதா, உத்வேகத்துடன் பேசுகிறார். தன் போராட்டக் குணத்தால், புற்றுநோயிலிருந்து வேகமாகக் குணமடைந்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நிறைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகிட்டேன். அதற்காகத் தொடர்ந்து பயிற்சியும் எடுத்திட்டிருந்தேன். என் உடலும், மனதும் ரொம்பவே ஆரோக்கியமா இருந்துச்சு. எனக்கு ஷட்டில் காக் விளையாட்டிலும் ஆர்வம் உண்டு. அதில், சில மாதங்களுக்கு முன்பு மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். அந்த வெற்றியின் சுவடு மறைவதற்குள், அதிர்ச்சி காத்திருந்துச்சு. 

என் பணிக்காலம் முடிய இன்னும் சில ஆண்டுகள் இருக்கு. அதுவரைக்குமாவது நான் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்துவேன். என் நம்பிக்கைக்கு, உடல்நிலை ஒத்துழைக்கும்னு உறுதியா நம்புறேன்.
வனிதா

திடீர்னு ஒருநாள் எனக்குக் காய்ச்சல் வந்துச்சு. டாக்டரை பார்க்கபோனபோது, ஏற்கெனவே எனக்கு மார்பகத்தில் இருந்த கட்டிகளுக்கும் சோதனை செய்துபார்த்தேன். நான்காம் நிலையில், மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதியாச்சு. பெரும் அதிர்ச்சிதான்! ஆனாலும், கலங்காம சிகிச்சைக்குத் தயாரானேன்.

புற்றுநோய் செல்கள், என் உடலில் பல இடங்களில் பரவி இருப்பதா மருத்துவர்கள் சொன்னாங்க. ஹீமோதெரபி சிகிச்சையை எடுத்துக்கிட்டேன். பலன் கிடைச்சுது. `இனி பயப்பட எதுவுமில்லை. தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்துக்கணும்'னு மருத்துவர்கள் சொன்னாங்க. புற்றுநோய் சரியாகிடுச்சுனு நம்பிக்கையோடு, என் காவல்துறைப் பணிகளை கவனிக்க ஆரம்பிச்சேன்" என்கிற வனிதாவின் மகிழ்ச்சி, ஒரு மாதம்கூட நீடிக்கவில்லை.

Vanitha
Vanitha

``சரியான சிகிச்சைகளை எடுத்துக்கிட்டதால, புற்றுநோய் பாதிப்பு குறைஞ்சது. சிகிச்சையினால், பல மாதங்களா விளையாட்டுப் பயிற்சி எதுவும் எடுத்துக்கலை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, போன மாதம் பயிற்சிக்காக மீண்டும் மைதானத்துக்குப் போனப்போ, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. தடகளம், சங்கிலி குண்டு எறிதல், ஷட்டில் காக்னு பல விளையாட்டுகளுக்குப் பயிற்சி எடுத்தேன். `வனிதா அக்கா மீண்டும் வந்துட்டாங்க!'னு என் தன்னம்பிக்கையைக் காவல்துறை நண்பர்கள் பாராட்டினாங்க.

இப்படியொரு நோயைக் கொடுத்த கடவுள், சீக்கிரமே அதிலிருந்து என்னைக் காப்பாத்திட்டார்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். என் மகிழ்ச்சி நீடிக்கலை. திடீர்னு தலைவலி, வாந்தினு உடல் உபாதைகள் அதிகரிச்சுது. வலி தாங்க முடியாம, என்னை மீறிக் கதறி அழுவேன்; கத்துவேன். என்னால இயல்பாகவே செயல்பட முடியலை. மீண்டும் மருத்துவரை அணுகினேன். புற்றுநோய் மூளையில் பரவியிருப்பது தெரியவந்துச்சு. தொடர்ந்து பத்து நாள்களுக்கு ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக்கிட்டேன். அந்தச் சிகிச்சை இப்போதான் முடிஞ்சிருக்கு.

`வனிதா அக்கா மீண்டும் வந்திட்டாங்க'னு காவல்துறை நண்பர்கள் சொல்றாங்க. அந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, புற்றுநோய் வலியை மறந்து சிரிக்கிறேன்.
வனிதா

இப்போதும் தலைவலி இருக்கு. முன்புபோல என்னால செயல்பட முடியலை. ஸ்கூட்டி வண்டியைக்கூடத் தனியா ஓட்ட முடியலை. உடலில் எனர்ஜி குறைந்த மாதிரி இருக்கு. இப்போ மெடிக்கல் விடுமுறையில இருக்கிற நிலையில், சீக்கிரமே வேலைக்குப் போகணும்." - தளராத நம்பிக்கையுடன் பேசும் வனிதாவுக்கு, அக்கா பக்கபலமாக இருக்கிறார்.

``விளையாட்டுப் போட்டிகளுக்காக நிறைய பயணங்கள் போயிருக்கேன். அதனால, ஆரோக்கியமில்லாத உணவு, சரியான தூக்கமின்மைனு உடல்நலத்துக்குப் போதிய முக்கியத்துவத்தைக் கொடுக்க முடியலை. அதனால்கூட புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்னு மருத்துவர்கள் சொல்றாங்க. 

Vanitha
Vanitha

என் பணிக்காலம் முடிய இன்னும் சில ஆண்டுகள் இருக்கு. அதுவரைக்குமாவது நான் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்துவேன். என் நம்பிக்கைக்கு, உடல்நிலை ஒத்துழைக்கும்னு உறுதியா நம்புறேன். அதிக எடையைக் கொண்ட பொருள்களைத் தூக்க வேண்டாம்னு மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க. ஆனா, வீட்டுலயே என்னால முடங்கியிருக்க விருப்பமில்லை. படிப்படியா குண்டு எறிதலுக்கான பயிற்சியை எடுத்துட்டிருக்கேன். இப்போதும், `வனிதா அக்கா மீண்டும் வந்திட்டாங்க'னு காவல்துறை நண்பர்கள் சொல்றாங்க. அந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, புற்றுநோய் வலியை மறந்து சிரிக்கிறேன்.

முன்பு சேலம் மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த சங்கர் சார், காவல்துறையின் சார்பில் எனக்கு 75 ஆயிரம் ரூபாய் உதவி செய்தார். என்னுடைய 1997-ம் ஆண்டு, போலீஸ் பேட்ஜ் நண்பர்கள் நூறு பேர் சேர்ந்து, இரண்டு லட்சம் ரூபாய் உதவி செய்தாங்க. சேலம் சரக காவல்துறையினர் பலரும், அவங்களால் இயன்ற பண உதவியைச் செய்தாங்க. அதன் மூலம்தான், சிகிச்சைக்கான பணத் தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்திசெய்துக்க முடியுது. மீண்டு வருவேன்; மீண்டும் வருவேன். காவல்துறைப் பணியிலும், விளையாட்டிலும் முன்புபோல துடிப்புடன் இயங்குவேன்" என்கிறார் வனிதா, தன்னம்பிக்கையுடன்.   

Vanitha
Vanitha

மீண்டு வருவீர்கள்; மீண்டும் வருவீர்கள் வனிதா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு