வடிகால் வசதியில்லாத நிலத்திலும், வளமை காட்டும் வாலான்!


மகசூல்
கு.ராமகிருஷ்ணன்
வடிகால் வசதியில்லாத நிலத்திலும், வளமை காட்டும் வாலான்!
பட்டைய கிளப்பும் பாரம்பர்ய நெல்..!

நெல் விவசாயிகளுக்குப் பெரியப் பிரச்னையே... தண்ணீர்தான். ஒன்று தண்ணீர் இல்லாமல் காயும்... இல்லையென்றால், அதிகமாக தண்ணீர் தேங்கி, படுத்தி எடுக்கும். இப்படி மத்தளம் கணக்காக இரண்டு பக்கமும் அடி வாங்கும் விவசாயிகளைக் காப்பதற்காகவே ஒரு வகை நெல் இருக்கிறதென்றால்... அது வரவேற்கத்தக்க விஷயம்தானே! அதன் பெயர் வாலான்!

''களிமண் உட்பட எந்த வகை மண்ணுலயும், எல்லா பட்டத்துலயும், வடிகால் வசதியில்லாத பள்ளக்கால் பகுதியிலயும், இருபது நாளைக்கு ஒரு தண்ணி கிடைக்குற இடத்துலயும்கூட அருமையா விளையக்கூடியது இந்த வாலான் நெல். இந்த நெல்லோட முனை வால் மாதிரி இருக்கறதாலதான் அப்படியரு பேரு.

50 வருஷத்துக்கு முன்ன, காவிரிக் கரையோரங்கள்ல உள்ள எல்லா கிராமங்கள்லயுமே வாலான் நெல்லை சாகுபடி செஞ்சுருக்காங்க. எந்த உரமும் இல்லாம வெறும் இலை, தழையைப் போட்டே இதை சாகுபடி செய்ய முடியும். எந்தப் பூச்சி, நோய்த் தாக்குதலும் இல்லாம விளையற வாலான் நெல்லை வெச்சுதான் ஆடிப் பெருக்கு அன்னிக்கு சாமி கும்பிடுவாங்க. நம்ம பாரம்பர்ய நெல் வரிசையில முக்கியமான இடத்துல இருந்த இந்த வாலான், இப்ப காணாமப் போயிக்கிட்டிருக்கு. என்னைப் போல சில பேரு மட்டும்தான் இப்பவும் இதை சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கோம்'' என்று அதைப் பற்றி நெகிழ்ச்சியோடு பேசுகிறார் கருர் மாவட்டம், குளித்தலை தாலூகா, பொய்யாமணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன்.

இயற்கை... செயற்கை... இயற்கை..!

“வடிகால் வசதியே இல்லாத பள்ளக்கால் பகுதி இது. இந்தக் களிமண் பூமியில இரண்டே முக்கால் ஏக்கர்ல வாலான் போட்டிருக்கேன். இந்தப் பயிருக்கு 45-நாள் வயசாகுது. நாங்க ஜனவரி 20-ம் தேதிக்குப் பிறகு விதைவிட்டு, 30 நாள் கழிச்சு நாத்து நட்டு, ஆடிப் பெருக்குக்கு முன்ன அறுவடை செய்வோம். கிட்டத்தட்ட ஆறு மாச பயிர்.

ஆரம்பத்துல எதுவுமே போடாம இயற்கை முறையிலதான் சாகுபடி செஞ்சுக்கிட்டிருந்தேன். இடையில உரம் போட்டா... மகசூல் கூடுதலா கிடைக்குமேனு உரம் போடப் பழகிட்டேன். உரம் போட்டப்ப வழக்கத்தைவிட நாலஞ்சு மூட்டை மகசூல் கூடுதலா கிடைச்சது. அதுனால இப்ப வரைக்கும் உரம் போட்டுக்கிட்டிருக்கேன். கூட்டிக் கழிச்சுப் பாத்தா, கூடுதலா கிடைக்குற வருமானம் முழுக்க உரத்துக்கே போயிடுது. நான் ரசாயனத்துல செஞ்சாலும், பூச்சிமருந்து அடிக்கிறதில்ல. வெறும் உரம் மட்டும்தான்.

இப்ப, 'செலவில்லாம இயற்கை முறையிலயே இன்னும் அதிகமா விளைய வக்க முடியும்'னு சில விவசாயிக சொல்லிக்கிட்டிருக்காங்க. அவங்க சாகுபடி செய்றதை பாத்துட்டு, அதேபோல சாகுபடி செய்யப் போறேன்'' என்றவர், தான் மேற்கொண்டிருக்கும் சாகுபடி முறையைப் பாடமாகச் சொல்லத் தொடங்கினார்.

தாமதமாக நட்டாலும் தப்பில்லை!

''ஒரு ஏக்கர் நடவு செய்ய, 6 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைத்து, 500 கிலோ தொழுவுரம் போட்டு, 25 கிலோ விதையைப் பரவலாகத் தூவி விட்டு, தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 30-ம் நாளில் நாற்று தயாராகி விடும். இந்த நாற்றை 50-ம் நாளில் கூட நடவு செய்யலாம். மற்ற ரகங்களில் இவ்வளவு நாள் நாற்றங்காலில் வைத்து நட்டால், மகசூல் பாதிக்கும். வாலான் ரகத்தில் மகசூல் பாதிக்காது.

வயலில் இரண்டு சால் உழவு ஓட்டி, அடியுரமாக இரண்டு மூட்டை பாக்டம்பாஸ் போடவேண்டும். மறுபடியும் ஒரு சால் உழவு ஓட்டி நடவு செய்ய வேண்டும். அரையடி இடைவெளியில் இரண்டு இரண்டு நாற்றாக சேர்த்து நட வேண்டும். இந்த ரகத்தில் தூர் அதிகமாக வெடிக்கும். அடித்தண்டும் மொத்தமாக இருப்பதால், நாற்றுகளை அதிகமாக சேர்த்து நடக்கூடாது. நடவுக்குப் பிறகு 20 நாள் கழித்து களையெடுத்துவிட்டு, ஒரு மூட்டை பொட்டாஷ், 30 கிலோ யூரியா, 4 கிலோ குருணைமருந்து போடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

நடவிலிருந்து 135-ம் நாள் அறுவடை செய்யலாம். அறுவடையின்போது பயிரின் உயரம் மூன்றரையடி இருக்கும். அதிகளவு வைக்கோலும் கிடைக்கும். ஆனால், வைக்கோலில் சுனை அதிகமாக இருப்பதால், சினைமாடுகளுக்கு போடக்கூடாது. நிலத்திலேயே வைக்கோலைப் போட்டு (மூடாக்கு) தண்ணீர் பாய்ச்சிவிட்டால், அது மட்கி உரமாகிவிடும்''

ஆடி மாசம் அதிக விலை கிடைக்கும்!

தன்னுடைய சாகுபடி பாணியைச் சொன்ன லட்சுமணன், ''இது மோட்டா ரகம். ஏக்கருக்கு 30 மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைக்கும். ஒரு மூட்டை 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் விலை போகும். 2005-ம் வருஷத்துல ஒரு மூட்டை 2,000 ரூபாய் வரைக்கும்கூட விலை போச்சு. ஒரு கிலோ அரிசி 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரைக்கும் விலை போகும்.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் இப்பவும் பெரும்பாலான இடங்கள்ல ஆடிப்பெருக்குக்கு வாலான் அரிசி வெச்சுதான் சாமி கும்பிடுறாங்க. அந்தச் சமயத்துல கண்டிப்பா அதிக விலை கிடைக்கும்'' என்றவர்,

“இயற்கை விவசாயம் செய்தா, இதைவிட கூடுதலா விலை கிடைக்கும்னு வேற சொல்றாங்க. அதனால, அடுத்த போகத்துல இருந்து முழுக்க இயற்கை முறை விவசாயத்துக்கு மாறலாம்னு இருக்கேன்'' என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.
இதுதான் இயற்கை முறை சாகுபடி!

'வாலான் நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்வது எப்படி..?'' என, நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சோமு.இளங்கோவிடம் கேட்டோம்.

''பொதுவாக பாரம்பர்ய நெல் ரகங்களுக்கு ரசாயன உரங்கள் தேவையில்லை. சில ரகங்களுக்கு ரசாயன உரத்தைப் போட்டால்... தாள் அழுகி கீழே சாய்ந்து விடும். அந்தக் காலத்தில் வாலான் நெல்லை வெறும் இலை, தழைகளை மட்டுமே போட்டு சாகுபடி செய்தார்கள். இதை அந்த விவசாயியே ஆமோதித்திருக்கிறார். அதனால் வாலான் நெல்லையும் இயற்கை முறையில் சாகுபடி செய்வதுதான் சிறந்தது. அதோடு அதிக மகசூலையும் பெற முடியும்.

ஒரு ஏக்கருக்கு 300 ஆடுகளைக் கொண்ட கிடை கட்ட வேண்டும். மூன்று டன் மட்கிய தொழுவுரம், அரிசி ஆலையில் கிடைக்கக்கூடிய உமி, சாம்பல் இரண்டு டன் இதையெல்லாம் போட்டு, நடவு செய்தால் மகசூல் அதிகரிக்கும். இயற்கை முறையில் உரமிட ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 2,500 ரூபாய்தான் செலவாகும். இதை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டாலே போதுமானது. மகசூலும் காலப்போக்கில் அதிகரிக்கும்.

இதேவேளையில் செயற்கை உரமென்றால், ஒவ்வொரு போகத்துக்கும் உரம் போட வேண்டியிருக்கும். மகசூலும் குறைய வாய்ப்பிருக்கிறது'' என்று சொன்ன சோமு. இளங்கோ,

''தற்போது, லட்சுமணன் விளைவிக்கும் வாலான் ரகத்தில் ரசாயனத் தாக்குதல் இருக்கும். எனவே, அவரிடம் விதைநெல் வாங்குபவர்கள், அதை பஞ்சகவ்யாவில் 24 மணிநேரம் ஊற வைத்து விதைத்தால், முழுமையான இயற்கை விதையாக அது கிட்டத்தட்ட மாறிவிடும். அதை விதைத்து புதிதாக நெல் வரும்போது 100% இயற்கை நெல்லாகக் கிடைக்கும்'' என்று சொன்னார்.

இவர், 'பூங்கார்' எனும் பாரம்பர்ய ரக நெல்லை மீட்டெடுத்து, பலருக்கும் அதன் விதைகளை கொடுத்து பரப்பி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் மு.ராமசாமி

வாலான் அரிசி புட்டு!

வாலான் அரிசியைத் தண்ணீரில் ஊற வைத்து, அதோடு எள், வெல்லம், தேங்காய் கலந்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும். மற்ற அரிசியைவிட இதில் இனிப்பு அதிகம். இட்லி, புட்டு போன்ற பலகாரங்களை இந்த அரிசியில் செய்தால், ருசியாக இருக்கும். இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. பெண்கள் பருவமடையும்போதும், மாதவிடாய் காலங்களிலும் வாலான் அரிசியில் புட்டு செய்து கொடுப்பது அந்தக் கால வழக்கம்.


பால் விவசாயிகள் மீது பரிவு!

''தீவன விலையேற்றம், பசுந்தீவனம் இல்லாமை போன்ற பல காரணங்களால் இந்தியா முழுக்கவே பால் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது'' என்று பால் உற்பத்தியாளர்கள், பண்ணையாளர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை எந்த மாநில அரசும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் கால்நடைத்துறை சார்பாக நடந்த ஒரு விழாவில் பேசிய அம்மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திவாகரன், இந்த உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

''கேரளாவுக்குள் மூன்று லட்சம் லிட்டர் அளவில் பாலுக்குத் தட்டுப்பாடு வந்திருக்கிறது. பாலின் விலையை உயர்த்திக் கொடுப்பதன் மூலம் இதை சரி செய்துவிட முடியாது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை ஆராய்ந்து, அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றையெல்லாம் தீர்த்து வைத்தால் மட்டுமே, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்'' என்று ஆக்கப்பூர்வமான வகையில் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்.

இனியாவது, இந்த விஷயத்தை உருப்படியான வகையில் கையாண்டு, பால் விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண அனைத்து மாநில அரசுகளும் முன்வரவேண்டும்.

- ஜி. பிரபு

                            
      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick