லாபம் தருவது நாட்டு மாடா... கலப்பின மாடா ?

ஓர் அனுபவ அலசல்

கால்நடை

 எஸ்.கதிரேசன், ஜி.பிரபு, ஆர்.குமரேசன்

 'நிலமற்ற ஏழை, எளியோருக்கு இலவச ஆடு, மாடு வழங்கப்படும்' என்று சமீபத்திய தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை, நிறைவேற்றும் வேலைகளை அதிரடியாகத் தொடங்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. முதல்கட்டமாக அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி...

1,600 கலப்பின ஜெர்ஸி கறவை மாடுகளையும், அதே எண்ணிக்கையிலான ஆடுகளையும் வழங்குவதற்கானப் பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில், ''கறவை மாடு வழங்கும் திட்டத்தில், வெளிநாட்டுக் கலப்பின மாடுகளை வழங்கக் கூடாது. நாட்டு மாடுகளைத்தான் வழங்க வேண்டும்'' என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கைக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலனும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்.

அதேசமயம், ''நாட்டுமாடுகளை வழங்குவது லாபகரமாக இருக்காது. வெளிநாட்டு கலப்பின மாடுகள்தான் சரி'' என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் தரப்பினர்.

இங்கே... ''எந்த மாடு லாபகரமாக இருக்கும்? எதை எளிதாக வளர்க்க முடியும்?'' என்பதைப் பற்றி அலசுகிறார்கள், ஏற்கெனவே கலப்பின மாடு, நாட்டுரக மாடு மற்றும் தார்பார்க்கர் மாடு (நாட்டு ரகம்) ஆகியவற்றை வளர்த்து வரும் அனுபவசாலிகள்!

கலப்பின மாடுதான் சரி!

திண்டுக்கல் மாவட்டம், நொச்சியோடைப்பட்டி கிராமத்தில் கலப்பின மாடுகளை வளர்த்து வரும் சிவபாலன், ''இலங்கையில் இருந்து அகதியா வந்தவன் நான். எங்க நாட்டுல 40 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரனா இருந்த நான், நிறைய மாடுகளையும் வளர்த்துக்கிட்டிருந்தேன். இங்க வந்த பிறகு, மாடுங்க இல்லாம என்னால இருக்க முடியல. உடனே அனுமதி வாங்கி மாடு வளர்க்க ஆரம்பிச்சுட்டேன். போலீஸ் அனுமதியோட முகாமை விட்டு வெளியில வந்து, நண்பரோட 2,000 சதுரடி இடத்துல மாடு வளர்த்துக்கிட்டிருக்கேன்.

எட்டு கலப்பினக் கறவை மாடுகளும், ரெண்டு கன்னுகளும் இருக்கு. மேய்ச்சல் நிலம் கிடையாது. பசுந்தீவனம் சாகுபடி பண்றதுக்கு நிலம் கிடையாது. ஆனாலும், நல்ல முறையில வளத்துக்கிட்டிருக்கேன். அடர் தீவனத்தை நானே தயாரிச்சுக்கிறேன். பசுந்தீவனத்தையும் வைக்கோலையும் விலைக்கு வாங்கிப் போடுறேன். ஒரு நாளைக்கு எட்டு மாடுக மூலமா சராசரியா 75 லிட்டர் பால் கிடைக்குது. ஒருநாளைக்கு 1,200 ரூபாய் வருமானம் கிடைக்குது. எல்லாச் செலவும் போக ஒருநாளைக்கு 400 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. நாட்டு மாட்டை விட, கலப்பின மாடு வளர்த்தா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று சொன்னார்.

காங்கேயம் மாடுகளைக் கொடுக்க வேண்டும்!

'மாடு வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழகத்தைச் சேர்ந்த காங்கேயம் ரக மாடுகளை கொடுக்க வேண்டும்’ என்று அரசிடம் மனு கொடுத்திருக்கிறார் 'சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய'த்தின் அறங்காவலரான கார்த்திகேயன். அவர் நம்மிடம், ''மேய்ச்சல் நிலங்கள் இருந்தால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுரக மாடுகளை எந்தச் செலவும் இல்லாமல் வளர்க்கலாம். மேய்ச்சலுக்குச் சென்று வந்து வெறும் தண்ணீர், அல்லது தவிடு கலந்த தண்ணீரைக் குடித்து விட்டே இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை பால் கொடுக்கும். குறைந்தபட்சம் 2 லிட்டர் கொடுத்தாலும், பெரிதாக செலவு இல்லாமலே 60 ரூபாய் கிடைத்துவிடுமே! இதுவே கலப்பின மாடாக இருந்தால்... 5 லிட்டர் பால் கறக்கும். அதற்கு மேல

கறக்க... 2 லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ தீவனம் என்கிற கணக்கில் கொடுக்க வேண்டும். ஒரு கிலோ தீவனத்துக்கு 12 ரூபாய்க்கு மேல் செலவாகும்.

நாட்டு மாடு என்றால், பெரிதாகக் கொட்டகையெல்லாம் போட வேண்டியதில்ல. கலப்பின மாடுகளுக்குக் கண்டிப்பாக அது தேவை. அப்படியெல்லாம் பராமரித்தால்தான் அவை நோய் நொடியில்லாமல் இருக்கும். அத்தோடு, மனிதர்களின் உணவுக்கு நாட்டு மாடுகள் போட்டிப் போடுவதில்லை. ஆனால், மக்காசோளம், அரிசி மாவு என மனிதர்களுக்கு உணவாகக்கூடியப் பொருட்கள்தான் கலப்பின மாடுகளுக்கும் உணவாகக் கொடுக்கப்படுகின்றன. எனவே, அனைத்து வகையிலும் நாட்டு மாடுகளே சிறந்தவை'' என்றார்.

இந்திய மாடுகளைத்தான் தரவேண்டும்!

தார்பார்க்கர் ரக மாடுகளை வளர்த்து வரும் செங்கல்பட்டு முகுந்தன், '''நாட்டு மாடு வளர்த்தா நல்ல லாபம் கிடைக்காது’ங்கிற தப்பான அபிப்பிராயத்தை ரொம்ப நாளாவே நம்ம ஜனங்க மத்தியில பரப்பி வெச்சுருக்காங்க. அதுல துளிகூட உண்மையில்ல. நம்ம விவசாயிங்க நஷ்டப்படுறதுக்குக் காரணம்... மாட்டோட ரகத்தை வெச்சு கிடையாது. விற்பனை முறையாலதான். பாலை நேரடியாகவோ, மதிப்புக்கூட்டியோ விக்க முன்வராததுதான் நஷ்டத்துக்குக் காரணம்.

எல்லாருக்கும் நாட்டு மாடு கொடுக்கறது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். இந்தியாவுலயே தார்பார்க்கர், காங்கிரேஜ், சிந்து, கிர்னு ஏகப்பட்ட நாட்டுரக மாடுங்க இருக்கு. இந்த மாதிரியான மாடுகள் ஒரு நாளைக்கு 15 லிட்டர் வரைக்கும் பால் கறக்கக்கூடியவை. கொஞ்ச கால அவகாசம் எடுத்து இந்த மாடுகளை வரவழைச்சு கொடுத்தா நல்லா இருக்கும். எங்கயோ இருக்கற வெளிநாட்டு கலப்பின மாடுகள கொடுக்கறதைக் காட்டிலும்... இந்தியாவிலேயே இருக்கிற... நிறைய பால் தரக்கூடிய மாடுகள கொடுத்தா... அந்த ஏழைகளுக்கு அது பலனுள்ளதா இருக்குமே'' என்று சொன்னார்.

நாட்டுமாடுதான் நல்ல மாடு!

இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன், இதுபற்றி பேசியபோது, ''பாரம்பரியக் கட்டடங்கள், கலைகள், உணவு முறைகள், விளையாட்டுக்கள் என்றெல்லாம் பாதுகாப்பது போல... நம் நாட்டோட அடையாளமான நாட்டு மாடுங்களையும் பாதுகாக்க வேண்டியது நம்ம கடமை. நம்ம ஊர் சீதோஷன நிலைக்கு வெளிநாட்டுக் கலப்பின மாடுகளெல்லாம் சரிபட்டு வராது.

அது உழவுக்கும் பயன்படாது. இப்போ இயற்கை விவசாயத்துக்கு அதிகம் பேர் மாறி வர்றதால நாட்டு மாடுகளுக்கு அதிகத் தேவை இருக்கு. ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மண்புழு உரம் இதையெல்லாம் தயாரிக்க நாட்டு மாடு ரொம்ப அவசியம். நாட்டு மாடுங்க குறைச்சலாச் சாப்பிட்டு நெறைய உழைக்கிற திறனுடையவை. அதனாலதான் நாட்டுப் பசுவைக் கொடுக்கணும்னு வலியுறுத்துறோம்'' என்று சொன்னவர்,

''நாம் இறக்குமதி செய்யும் மாடுகளும், கலப்பின மாடுகளும் அதிகமான ரசாயனம் அடங்கின தீவனங்களைச் சாப்பிடுதுங்க. அதனால, அதுங்களோட பால்ல ரசாயனம் கலந்திருப்பதாக ஆய்வு பண்ணி சொல்லியிருக்காங்க. அதேபோல அந்த மாடுகளோட பால்ல கேசின் ஏ-1 புரதம் இருக்கு. இந்தப் பாலை சாப்பிடறவங்களுக்கு மாரடைப்பு, சர்க்கரை வியாதி வர்றதுக்கு வாய்ப்பிருக்குனும் கண்டுபிடிச்சிருக்காங்க.

அதேசமயம் நாட்டுமாட்டுப் பால்ல இருக்கற கேசின் ஏ-2 புரதம் ஆபத்து இல்லாததுனும் சொல்லியிருக்காங்க. ஆக, எப்படி பார்த்தாலும் நம் நாட்டு மாடுகளோட பால்தான் தரமானதா இருக்கு. அதனால நம்ம நாட்டு இன மாடுகளைத்தான் கொடுக்கணும்'' என்று சொன்னார் ஆணித்தரமாக!

சுதேசியா... விதேசியா... என்ன முடிவெடுக்கப் போகிறார் முதல்வர்?

''ஆடு மாதிரி சுலபமில்ல... மாடு!''

 

 

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திண்டுக்கல், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக விவசாயத்துறைப் பேராசிரியர் ரங்கநாதன், ''ஆடு கொடுத்தா... தோட்டத்துல கூலி வேலைக்குப் போறப்போ அப்படியே பக்கத்துல மேய விட்டுடலாம். வீட்டுக்குப் பக்கத்துலேயே கூட மேஞ்சா போதுமானதா இருக்கும். ஆனா மாடு... சாதாரண விஷயமில்ல. அதுக்கு மொத்தமா தீவனம் தர வேண்டியிருக்கும். பச்சைப் புல், காய்ஞ்சப் புல், அடர்தீவனம்.. மூணையும் சரியான விகிதத்துல கொடுக்கணும். இப்படிப் பராமரிக்க முடியாதவங்களுக்கு மாடு கொடுக்குறதுல அர்த்தமே கிடையாது. ஒழுங்காப் பராமரிக்கலேனா ஒரு ஈத்துதான் ஒழுங்கா இருக்கும். அப்பறம் பத்து லிட்டர் கொடுத்த மாடு 4 லிட்டர்தான் கொடுக்கும். இது பொருளாதார ரீதியா பிரச்னையை உண்டாக்கிடும். அப்பறம் அரசாங்கத்தோட திட்டத்துக்கு பலனே கிடைக்காமப் போயிடும்.

கலப்பினக் கறவை மாடு கொடுக்கறதா இருந்தா 'ஃபாடர் பேங்க்'குனு சொல்லப்படுற 'தீவன வங்கி'யையெல்லாம் உருவாக்கிட்டுதான் கொடுக்கணும். அப்படி இல்லேனா... நிலமில்லாத விவசாயிகளுக்குனா ஆடுகள கொடுக்குறதுதான் சரியான திட்டமா இருக்கும்'' என்றார்,

தொடர்புக்கு முகுந்தன், அலைபேசி : 93823-37818.
கார்த்திகேயன், அலைபேசி : 99944-33456.
சிவபாலன், அலைபேசி : 98435-98332.

படங்கள்: தி. விஜய், வீ. நாகமணி, வீ. சிவக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick