மானா வாரியில் மகசூல் கூட்டும் உயர் ரக துவரை !

 எஸ்.ராஜா செல்லம்

'பேரு பெத்த பேரு... தாக நீலு லேது’ என்று தெலுங்கு மொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை சுற்றுவட்டார மலை கிராமங்கள் அனைத்துமே... ஆண்டு முழுக்க கோடை வாசஸ்தலம் போல குளுமையாகவே இருக்கின்றன. ஆனால், நிலங்களுக்கான பாசன நீருக்குத்தான் ததிங்கினத்தோம்! பெருவாரியான நிலப்பரப்பில் மானாவாரி விவசாயம்தான்.

வானம் பார்த்து கிடக்கும் இந்த பூமியில் நிலக்கடலை, கேழ்வரகு, துவரை போன்றவைதான் பிரதானமாக பயிரிடப்படுகின்றன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நாட்டுத் துவரை மட்டுமே அரசாட்சி செய்து கொண்டிருந்த இப்பகுதியில், தற்போது உயர் விளைச்சல் ரக துவரை அதிகம் பயிரிடப்பட்டுகிறது. வெறுமனே துவரை சாகுபடி மட்டும் இல்லாமல், நிலக்கடலை அல்லது கேழ்வரகில் ஊடுபயிராகவும் துவரையை விதைத்து விடுகிறார்கள்.

சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த பச்சமுத்து, ''அஞ்சு ஏக்கர் மானாவாரி நிலம் இருக்குது. அதுல நாலு ஏக்கர்ல மட்டும் துவரை விதைச்சிருக்கேன். தாத்தா, காலத்துல இருந்தே துவரைதான். அவங்க நட்டது எல்லாம் நாட்டுத் துவரை. இப்போ உயர் விளைச்சல் ரகத்தை விதைக்கிறோம். பழைய ரகமான நாட்டுத் துவரையில விளைச்சல் குறைவா இருந்தாலும், அதைப் பயன்படுத்தி சமையல் பண்ணினா... கூடுதல் ருசியோட இருக்கும். இந்த புதுரகம் அதிக விளைச்சலைக் கொடுக்குது. ஆனா, ருசி கொஞ்சம் குறைவுதான்.

திசையெல்லாம் துவரை!

தேன்கனிகோட்டையை சுத்தியிருக்குற உரிகம், கோட்டையூர், அஞ்செட்டி, சந்தேவனஅள்ளி, தக்கட்டி, தொட்டமஞ்சி, நாட்றாம்பாளையம், மஞ்சுகொண்டபள்ளி, குந்துக்கோட்டை, கக்கதேசம், மாதுப்பள்ளி, தோகரை, கொடியாளம் உள்ளிட்ட பல கிராமங்கள்ல கண்ணுக்கு எட்டின தூரமெல்லாம் துவரைதான் தெரியும். வைகாசி பிறந்ததில் இருந்து ஆனி மாசம் முன்பாதி முடியுறதுக்குள்ள (மே 15 முதல் ஜூலை 15 வரை) விதைக்கறதுதான் துவரைக்கு உகந்த பட்டம். பெரும்பாலும் நிலக்கடலையைப் போட்டு, ஊடுபயிரா துவரையை போடுவோம். சிலர் கேழ்வரகுல ஊடுபயிரா துவரையை நடுவாங்க. சிலர்தான் துவரையை தனிப்பயிரா செய்வாங்க.

பலன் கொடுக்கும் பட்டி!

தை பிறக்குறப்ப, துவரை அறுவடை முடிஞ்சு, நிலமெல்லாம் காலியா கிடக்கும். எங்க பகுதி விவசாயிங்க எல்லோருமே நிறைய ஆடு, மாடுகளை வச்சிருக்கிறதால அறுவடை முடிஞ்சதும் நிலத்தில் பட்டி (கிடை) போட ஆரம்பிச்சிடுவோம். சித்திரையில முதல் மழை பெய்யுற வரைக்கும் பட்டி போடுவோம். மழை விழுந்த உடனே உழவடிக்க ஆரம்பிச்சுடுவோம்.

உழவு மாடு இல்லாதவங்க, கூலி ஏர் வெச்சோ... டிராக்டர் வெச்சோ உழவடிப்பாங்க. வைகாசி பிறக்குறதுக்குள்ள இப்படி உழவடிச்சா... பூமி பூவா தயாராகிடும். ஏற்கெனவே குழியில் சேகரிச்சு வச்சிருந்த மிச்சம் மீதி எருவையும் (தொழுவுரம்) நிலத்துல இறைச்சுவிட்டு, ஒரு உழவடிப்போம்'' என்றவர், நிலக்கடலையில் ஊடுபயிராகத் துவரையை சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

நிலக்கடலை ஊடுபயிராக துவரை!

துவரை சாகுபடிக்கு வைகாசி பட்டம் ஏற்றது. பட்டி போட்டு அல்லது எருவைக் கொட்டி உழுது நிலத்தை பொலபொலப்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நிலத்தைத் தயார் செய்ததும், முதலில் நிலக்கடலையைத் விதைக்க வேண்டும் (ஒருவர் ஏர்க்கலப்பை மூலமாக உழுதுகொண்டே போக, மற்றொருவர் ஏருக்கு பின்னால் விதைத்துக் கொண்டே செல்ல வேண்டும்). ஒரு ஏக்கருக்கு சுமார் 50 கிலோ விதைகள் தேவைப்படும். விதைப்பு முடிந்ததும், வயலின் நீள வாக்கில் துவரைக்கு சால் விட வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 7 கிலோ விதை துவரை தேவைப்படும் (ஒருமுறை பயிர் செய்த பிறகு, அதிலிருந்தே விதையை எடுத்துக் கொள்ளலாம்).

17 மூட்டை  நிலக்கடலை!

ஒரு சாரிக்கும் இன்னொரு சாரிக்கும் சுமார் ஏழு அடி இடைவெளியும், செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளியும் இருப்பது போல துவரையை விதைத்தால், செடிகள் செழிப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். விதைத்ததில் இருந்து 25 நாட்களுக்குப் பிறகு ஒரு களை எடுக்க வேண்டும். களை முளைப்பதைப் பொறுத்து, தேவைப்பட்டால் மீண்டும் களை எடுக்கலாம். நான்கு மாதத்தில் நிலக்கடலை அறுவடை முடிந்து விடும். பராமரிப்பையும் விளைச்சலையும் பொறுத்து ஏக்கருக்கு 42 கிலோ எடை கொண்ட மூட்டையில் சராசரியாக 17 மூட்டை நிலக்கடலை கிடைக்கும்.

ஏக்கருக்கு 700 கிலோ!

நிலக்கடலை அறுவடை முடியும் நேரத்தில் துவரை பூவெடுக்க ஆரம்பிக்கும். இந்தப் பூவெல்லாம் பிஞ்சாகும் தருணத்தில் காய்ப்புழு தாக்கி, நிறைய காய்கள் சொத்தை ஆகிவிடும். ரசாயன உரங்கள் எதையும் பயன்படுத்துவது இல்லை என்றாலும், பூச்சிகளுக்கு மட்டும் ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று தடவை இதைத் தெளிக்க வேண்டும்.

மழை சரியாகப் பெய்தால், ஏழடி உயரம் வரைக்கும் துவரைச் செடிகள் வளர்ந்து செடி கொள்ளாமல் பூ பிடிக்கும். செடி பூவும் பிஞ்சுமாக இருக்கும் நேரத்தில் அடைமழை வந்தால் மட்டும் நிறைய சேதம் ஏற்படும். தொடர் மழையால் பூக்கள் அழுகி உதிர்ந்து, விளைச்சல் பாதிக்கும். விளைச்சலைப் பொறுத்து ஒரு ஏக்கருக்கு சராசரியாக 700 கிலோ துவரை கிடைக்கும்.

சாகுபடிப் பாடத்தை முடித்த பச்சமுத்து, ''42 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை, ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு விற்பனையாகும். சராசரியா 17 மூட்டை கிடைத்தாலும், இருபதாயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு கிலோ துவரை சராசரியாக 30 ரூபாய்க்கு விற்கும். எழுநூறு கிலோ துவரைனு வெச்சாலும் 21 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எப்படியும் ஒரு ஏக்கருக்கு செலவெல்லாம் போக 30 ஆயிரத்துக்குக் குறையாம வருமானம் கிடைக்கும்'' என்று சொன்னார்.

படம்:தி. விஜய்

பூச்சிகளை விரட்டும் இயற்கை மந்திரம் !

 

மானாவாரி துவரை சாகுபடியில் பூச்சி, நோய் தாக்குதலை இயற்கை முறையில் சமாளிப்பது எப்படி என்பது பற்றி கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள பட்டக்காரன்புதூரைச் சேர்ந்த பி.ஆர்.சுப்பிரமணியம் பேசுகிறார். இவர், துவரை உள்ளிட்ட பயறு வகை சாகுபடியில் நீண்ட அனுபவம் பெற்ற விவசாயி.

''70-ம் நாள் முதல் செடிகள் பூ எடுக்கும். இந்தச் சமயத்தில்தான் சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்றவை தேடி வந்து பூக்களைச் சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த, 10 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை,

90 லிட்டர் நீரில் கலந்து, கைதெளிப்பான் மூலம் 70 மற்றும் 90-ம் நாளில் செடிகள் நனையும்படி தெளித்தால்... பூச்சிகள் போய்விடும். தொடர்ந்து,

100-ம் நாளில் இருந்து செடியில் பிஞ்சுகள் வளரத் தொடங்கும். இந்தச் சமயத்தில்தான் அசுவிணி, காய்ப்புழு, இலைச்சுருட்டுப்புழு போன்றவற்றின் தாக்குதல் இருக்கும். இவற்றைத் தடுக்க... ஒரு கிலோ இஞ்சி, அரை கிலோ மிளகாய், கால் கிலோ வேப்பங்கொட்டை மூன்றையும் இடித்து, துணியில் பிழிந்து சாறு எடுக்கவேண்டும். இதை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலைவேளையில் கைத்தெளிப்பான் மூலம் புகை போன்று தெளிக்க வேண்டும். இதே கரைசலை காய் பருவத்தில் இரண்டு முறை தெளிக்கவேண்டும். இதன் மூலம் முற்றாக பூச்சி மற்றும் நோய்களில் இருந்து துவரையைக் காக்க முடியும்'' என்றார்.

ரூ.5,000 மானியம் !

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) நாகராஜ், ''சுமார் 3,500 ஹெக்டேர் பரப்பில் தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் உயர் விளைச்சல் ரக துவரை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பி. சீ-3சி என்ற ரகம் (கௌதாரியின் மேற்புறம் இருப்பது போன்று விதையில் செந்நிற புள்ளிகள் கொண்ட வெள்ளை ரகம்), TTB7-என்ற ரகம் (பழுப்பு நிறம்) மற்றும் BRG1, BRG2(வெள்ளை நிறம்) குத்து ரகங்கள் ஆகியவற்றை இந்தப் பகுதி விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். இதில் TTB7- என்ற ரக துவரையை உலர்த்திய பருப்பாக மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற மூன்று ரகங்களிலும் ஓரளவு முற்றிய காய்களைப் பறித்து சமைக்கலாம். காய்ந்த பிறகு பருப்பாக்கி குழம்பு வகைகளுக்கும் பயன்படுத்தலாம்.

வேளாண்துறை சொல்லும் அனைத்துத் தொழில்நுட்பங்களையும் சரியாகக் கடைபிடிக்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 5,000 ரூபாய் மானியம் கொடுக்கிறோம்'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick