சிறப்பான லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் மஞ்சள் !

ஊடுபயிர்களோடு ஒரு கொண்டாட்ட மகசூல்

 

காசி.வேம்பையன்

பளிச்... பளிச்...

குறைவான விதைக் கிழங்குகளே போதும்.
பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.
ஊடுபயிர் மூலம் கூடுதல் வருமானம்.

''படிப்பு, வேலைனு நகரத்திலே வளர்ந்தாலும், விவசாயத்து மேல இருந்த ஆர்வத்தால விவசாயம் பார்க்க வந்தேன். எல்லாரையும் மாதிரியே ரசாயன உரத்தைக் கொட்டி... நெல்லு, மஞ்சள்னு விவசாயம் செஞ்சேன். அதுல இருந்து போதுமான வருமானம் கிடைச்சாலும், மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அந்த நேரத்துலதான் நண்பர் ஒருத்தர் மூலம் 'பசுமை விகடன்' படிக்குற வாய்ப்பு கிடைச்சுது. அதுக்குப் பிறகு, விவசாயத்துல மட்டும் இல்லை, என் வாழ்க்கையிலயும் திருப்புமுனைதான்''

-இப்படி நெகிழ்ந்து போய் சொல்கிறார் பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்.

விவசாயம் ஒரு கையில்... வழக்கறிஞர் தொழில் மற்றொரு கையில் என்றபடி வீறு நடைபோட்டுக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனை, மாலை வேளையன்றில் தன்னுடைய வயலில் வலம் வந்து கொண்டிருந்தபோது சந்தித்தோம்.

''அப்பா, வக்கீலா இருந்ததால பெரம்பலூர்ல குடியேறிட்டோம். கிராமத்துல இருந்த 25 ஏக்கர் நிலத்தை ஆள் வெச்சு அப்பா விவசாயம் பாத்தார். நானும் வக்கீலுக்குப் படிச்சிட்டு, அப்பாவோடயே சேர்ந்து தொழிலை பார்த்துக்கிட்டிருந்தேன். 'நாமளும் விவசாயம் செய்யணும்'கற ஆசை உள்ளுக்குள்ள ஓடிகிட்டே இருக்க... ஒரு கட்டத்துல விவசாயத்தையும் சேர்த்தே பார்க்க ஆரம்பிச்சேன்.

பாதை காட்டிய பசுமை விகடன்!

ஆரம்பத்துல, வேளாண்மைத் துறைக்காக உளுந்து, நெல்லு, எண்ணெய்வித்துப் பயிர்கள்னு பலவிதமான விதைகளை உற்பத்திச் செய்து கொடுத்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரம், பூச்சிமருந்து, ஆளுங்க கூலினு செலவு கூடிக்கிட்டே போச்சி. எதிர்பார்த்த லாபம் இல்ல. அதனால இயற்கை விவசாயம் செய்யலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்பதான் 'பசுமை விகடன்’ கையில கிடைச்சது.

சொல்லிக் கொடுத்த சோதனைமுயற்சி!

புத்தகத்தைப் படிக்கவும், என்னோட ஆர்வம் அதிகமாகிப் போச்சு. பிறகு, திண்டுக்கல் மற்றும் ஈரோடுல நடந்த 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புகள்ல கலந்துக்கிட்டேன். அங்க பாலேக்கர் சொல்லிக் கொடுத்த விவசாய முறைகளை முழுமையா குறிப்பு எடுத்துக்கிட்டு வந்தேன். ஊருக்கு வந்த அடுத்த நாளே, மஞ்சள், கரணைக் கிழங்குனு தலா அரை ஏக்கர்ல 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறையில சோதனைமுயற்சியா செய்ய ஆரம்பிச்சேன். செலவு குறைவாகவும், பொருள் தரமானதாகவும் கிடைச்சுது.

ஜீரோ பட்ஜெட் மகிமையை அனுபவப்பூர்வமா உணர்ந்ததும், ஒரு ஏக்கர்ல இருந்த ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை, 15 ஏக்கருக்கும் விரிவுபடுத்திட்டேன். ஏழு ஏக்கர்ல நெல்லு, மூணு ஏக்கர்ல தென்னை, நாலரை ஏக்கர்ல மஞ்சள், அரை ஏக்கர்ல கரணைக் கிழங்குனு விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். மீதி 10 ஏக்கர் நிலம் தனியா, தொலைவுல இருக்கு. அதுல தற்போதைக்கு ரசாயன உரங்கள போட்டு 'கோலியாஸ் கிழங்கு’ சாகுபடி செய்றேன்.

நாலரை ஏக்கர் மஞ்சள்...அரை ஏக்கர் கரணை!

பாலேக்கர் சொல்ற முறையில ஐந்து ஏக்கர்லதான் ஊடுபயிர் சாகுபடி செய்றேன். அதாவது, நாலரை ஏக்கர்ல மஞ்சள், அரை ஏக்கர்ல கரணை சாகுபடி செய்து, அதுல ஊடுபயிராக ஆமணக்கு, தட்டைப்பயறு, வெங்காயம், முருங்கைனு சாகுபடி செய்திருக்கேன். முதல் வருடம்  மகசூல் குறைவாக இருந்துச்சு. அடுத்தடுத்த வருஷங்கள்ல மகசூல் ரெட்டிப்பாகிடுச்சு'' என்று உற்சாகம் குறையாமல் முன்கதை சொன்னவர், ஜீரோ பட்ஜெட் முறையில் மஞ்சள் மற்றும் கரணை சாகுபடி பாடத்தை நடத்த தொடங்கினார். அவற்றை அப்படியே தொகுத்துள்ளோம்.

மேம்பட்ட மகசூல் கொடுக்கும் மேட்டுப்பாத்தி!

மஞ்சள் சாகுபடிக்கு வைகாசி முதல் ஆனி பட்டம் ஏற்றது. வடிகால் வசதியுடைய எல்லா மண் வகைகளிலும் நடலாம். முதலில் நிலத்தை களை இல்லாமல் குறுக்கு-நெடுக்காக இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். பின்பு, நான்கு அடி அகலத்துக்கு மேட்டுப் பாத்தி அமைக்க வேண்டும். பாத்தியின் நீளத்தை இடத்துக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் நடந்து செல்வதற்கு வசதியாக ஒரு அடி இடைவெளி இருக்குமாறு பாத்திகளை அமைக்க வேண்டும். பாத்தியின் மீது இரண்டு வரிசையில் மஞ்சளை நடவு செய்ய வேண்டும். வரிசையின் இடைவெளி இரண்டரை அடி இருக்க வேண்டும். செடிக்குச் செடி முக்கால் அடி இடைவெளி இருக்க வேண்டும் (பார்க்க, படம்). களைக்கொத்து மூலம் நாலு விரல் அளவுக்கு பள்ளம் எடுத்து, விதைக் கிழங்குகளைத் தனித்தனியாக நடவு செய்ய வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை மேட்டுப்பாத்தியின் மையத்தில், 50 செ.மீ. இடைவெளியில் சொட்டுநீர் வெளிவருவது போன்று அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதைநேர்த்தி முக்கியம்!

நடவுக்கு பயன்படுத்தும் மஞ்சள், விரலிமஞ்சளாகவும், மூன்று அங்குலம் நீளம் உள்ளதாகவும் இருப்பது முக்கியம் (இவர், சேலம்  ரக மஞ்சள் விதைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்). நடவுக்கு முன்பாக பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்ய மறக்கக்கூடாது.

அடுத்தநாள், சொட்டுநீர் மூலம் நிலத்தை ஈரமாக மாற்றி, பாத்தியின் இரு ஓரத்திலும் தட்டைப்பயறை நடவு செய்ய வேண்டும். அவற்றிலிருந்து முறையே ஒன்றரை அடி இடைவெளி விட்டு மேலும் இரண்டு வரிசைக்கு தட்டைப்பயறை நடவு செய்யவேண்டும். மொத்தம் நான்கு வரிசையில் தட்டைப் பயறு அமையும். செடிக்குச் செடி இடையே முக்கால் அடி இடைவெளி இருக்க வேண்டும் (பார்க்க, படம்).

சொட்டுநீர்க் குழாயை ஒட்டி, பாத்தியின் துவக்கத்தில் ஆமணக்கு விதைக்க வேண்டும். அதிலிருந்து ஆறு அடி தள்ளி மீண்டும் ஆமணக்கு விதைக்க வேண்டும். அதிலிருந்து 6 அடி  தள்ளி  செடி முருங்கையை விதைக்க வேண்டும். இதேபோல மாற்றி மாற்றி பாத்தியின் நீளத்தைப் பொறுத்து நடவு செய்யவேண்டும். நடவுக்கு முன்பாக அனைத்து விதைகளையும் விதைநேர்த்தி செய்யவேண்டும் என்பது முக்கியம்.

குறைந்த விதையே போதும்!

வழக்கமாக ஏக்கருக்கு 800 முதல் 1,000 கிலோ விதைமஞ்சள் தேவைப்படும். ஆனால், மேட்டுப்பாத்தியில் நடவு செய்யும் போது, ஏக்கருக்கு 600 கிலோ விதைமஞ்சள் போதுமானது. அத்துடன் 200 கிராம் முருங்கை விதை, 4 கிலோ தட்டைப்பயறு, 1 கிலோ ஆமணக்கு விதை போதுமானது. நடவு செய்த 7-ம் நாளில் தட்டைப்பயறும், 15-ம் நாளில் ஆமணக்கும், 25 நாளில் முருங்கையும், 30-ம் நாளில் மஞ்சளும் முளைப்பு எடுக்கும்.

30 மற்றும் 60-ம் நாளில் களை எடுத்து, களைச் செடிகளை நிலத்திலேயே மூடாக்காக போட்டுவிட வேண்டும். 60-ம் நாளுக்கு மேல் பயிர் வளர்ந்து நிழல் கட்டிவிடும், என்பதால் அதற்கு பிறகு களை எடுக்கத் தேவையில்லை. மேலும், தட்டைப்பயறு உயிர்மூடாக்காக மாறிவிடும். மண்ணின் ஈரப்பத்தை பொறுத்து, தினமும் ஒரு மணி நேரம் சொட்டுநீர்ப் பாசனம்  செய்தால் போதும்.

பூச்சி, நோய் தாக்குதலே இல்லை!

20 நாளைக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும். 30-ம் நாளில் இருந்து, ஒவ்வொரு மாதமும் ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும். முதல் மாதம் டேங்குக்கு (10 லிட்டர் டேங்க்) 500 மில்லி ஜீவாமிர்தம், 2-ம் மாதம் 700 மில்லி, 3-ம் மாதம் 1,000 மில்லி, 4-ம் மாதம் 1,200 மில்லி என தண்ணீரோடு கலந்து தெளிக்க வேண்டும்.  5-ம் மாதத்தில் பயிர் வளர்ச்சி ஊக்கியாக 10 லிட்டர் டேங்கில் ஒரு லிட்டர் புளித்தமோரைக் கலந்து தெளிக்க வேண்டும். இப்படி 'ஜீரோ பட்ஜெட்’ முறையில் சாகுபடி செய்யும்போது எந்தவிதமான பூச்சி, நோய் தாக்குதலும் இல்லாமல் பயிர் சிறப்பாக வளரும்.

10-ம் மாதம் அறுவடை!

நடவு செய்த 60-ம் நாளில் இருந்து 10 நாள் இடைவெளியில் தட்டைப்பயறு நெற்றுகளை அறுவடை செய்யலாம். 90-ம் நாளில் இருந்து 10 நாள் இடைவெளியில் ஆமணக்கு அறுவடை செய்யலாம். 6-ம் மாதத்தில் இருந்து முருங்கை அறுவடைக்கு வந்துவிடும். 6-ம் மாதம் கிழங்கு வைக்க ஆரம்பித்து 10-ம் மாதம் முற்றி மஞ்சள் அறுவடைக்கு வந்துவிடும்.

இந்த முறையில் சாகுபடி செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 150 கிலோ தட்டைப்பயறு, 400 கிலோ ஆமணக்கு, 15 குவிண்டால் (காயவைத்து பாலீஷ் செய்தது) மஞ்சளும் கிடைக்கும்.

தட்டைப்பயறுக்கு பதில் வெங்காயம்!

கரணை சாகுபடிக்கு வைகாசி பட்டம் ஏற்றது. மஞ்சள் நடவு போன்றே அதே இடைவெளியில், அதே முறையில் கரணைக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். அரை ஏக்கருக்கு 400 கிலோ விதைக் கிழங்கு தேவைப்படும். ஊடுபயிர்களையும் மஞ்சள் வயலில் செய்ததை போல அதே முறையில்தான் நடவேண்டும். தட்டைபயறுக்கு பதிலாக முக்கால் அடி இடைவெளியில் வெங்காயத்தை நடவு செய்யலாம். இதற்கு 100 கிலோ விதைவெங்காயம் தேவைப்படும்.

நடவு செய்த 4-ம் நாள் வெங்காயமும், 20-ம் நாள் கரணையும் முளைக்கும். மற்ற பராமரிப்புகள் அனைத்தும் மஞ்சளுக்கு செய்த அதே முறையில் செய்ய வேன்டும். 60 முதல் 70 நாளில் வெங்காயம் அறுவடைக்கு வந்துவிடும். 8 முதல் 10 மாதங்களில் கரணை அறுவடைக்கு வந்துவிடும். அரை ஏக்கரில் ஊடுபயிராக செய்யும்போது சராசரியாக 500 முதல் 800 கிலோ வெங்காயமும், 2 முதல் 3 டன் கரணையும் மகசூலாகக் கிடைக்கும்.

10 மாதம்! ஏக்கருக்கு ஒன்றரை லட்சம்!

சாகுபடிப் பாடத்தை முடித்த ராமகிருஷ்ணன், ''நாலரை ஏக்கர்ல இருந்து 700 கிலோ தட்டைப்பயறு அறுவடை செய்தேன். அதை சொந்தப் பயன்பாட்டுக்கு வெச்சுக்கிட்டேன். விலைக்குக் கொடுத்திருந்தா, கிலோ 25 ரூபாய் வீதம் 17 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சிருக்கும். அரை ஏக்கர்ல ஊடுபயிர் மூலமா 700 கிலோ வெங்காயம் விளைஞ்சுது. கிலோ 20 ரூபாய்னு வித்ததுல 14 ஆயிரம் கிடைச்சது. இது மட்டும்தான் மகசூல் கிடைச்சிருக்கு. மத்ததெல்லாம் இன்னும் அறுவடை முடியலை.

2,000 கிலோ ஆமணக்கு, 67 குவிண்டால் மஞ்சள், ரெண்டரை டன் கரணை கிழங்கு கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். போன முறை கிடைச்ச மஞ்சள், கரணை மகசூல் அடிப்படையிலயும், இப்ப பயிர் விளைஞ்சு நிக்கறதையும் பார்த்த பிறகுதான் இப்படி எதிர்பார்க்கிறேன். இதைவிட அதிகமாகத்தான் கிடைக்குமே தவிர, குறையறதுக்கு வாய்ப்பில்ல. ஜீரோ பட்ஜெட் முறையில சாகுபடி செய்றப்ப எல்லாச் செலவுகளும் போக எப்படியும், ஏக்கருக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும்'' என்றார் நம்பிக்கை பொங்க!

 

படங்கள்:செ. சிவபாலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick