வறண்ட நிலத்திலும் வளமைகாட்டும் பாமரோசா..!

பராமரிப்பு குறைவு... பலனோ நிறைவு..

 ஆர். குமரேசன்.

 பளிச்... பளிச்...

பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.
60 நாளைக்கு ஒரு அறுவடை.
ஏக்கருக்கு ஒரு லட்சம் வருமானம்.

''பூச்சி, நோய் தாக்குதலே இல்ல; பராமரிக்கறதுக்காக ரொம்ப மெனக்கெடவும் தேவையில்ல; தண்ணீரும் அதிகமா தேவையில்ல; ஒரு வருஷம் வரைக்கும்கூட தண்ணி இல்லாம தாக்குப் பிடிக்கும்... அப்படியரு அபூர்வப் பயிரான பாமரோசா, வறண்ட பூமியில வசிக்கற எங்கள மாதிரியான விவசாயிகளுக்கு வரப்பிரசாதமா வாய்ச்சிருக்கு'' என்று உருகி உருகிச் சொல்கிறார் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பரளச்சி கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செழியன்.

புல் வகை பயிர்தான் பாமரோசா. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதற்கு உண்டான 'ஜெரோனியம்' என்ற வேதிப்பொருள் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய், வாசனைத் திரவியம், கொசுவர்த்தி உள்ளிட்ட பல்வேறு விதமான தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் அதிக தேவை இருப்பதால், விவசாயிகளிடம் மெள்ள இப்பயிர் பரவி வருகிறது.

பாமரோசா புல் விளைந்து கிடக்கும் தோட்டத்தில் வலம் வந்தபடியே உற்சாகமாகப் பேச்சைத் தொடர்ந்த அன்புச்செல்வன், ''பரம்பரை பரம்பரையா விவசாயம்தான் எங்க தொழில். பெரும்பாலும் கரும்புதான் போடுவோம். இடையில, முட்டை உற்பத்திக்காக கோழிப்பண்ணை ஆரம்பிச்சேன். இந்தப் பகுதியில பண்ணைக அதிகம் இல்லாததால... தீவனம், மருந்து வாங்குறதுல சிரமமா போயிடுச்சு. அந்த நேரத்துல எங்க பெரியப்பா பாமரோசா புல்லை நடவு செஞ்சிருந்தாரு. அதுல கிடைச்ச வருமானத்தைப் பார்த்ததும், கோழிப் பண்ணையை மூடிட்டு, பாமரோசா பயிர் செய்யத் தொடங்கினேன்.

முதல்ல எங்க தோட்டத்துல நடவு செஞ்சேன். குறைஞ்ச பராமரிப்புலயே நல்ல வருமானம் கிடைச்சுது. அதுக்குப் பிறகுதான் அதிக அளவுல அதை பயிர் செய்ய ஆரம்பிச்சேன். இப்ப கோவில்பட்டியில 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பாமரோசா சாகுபடி செஞ்சிகிட்டு இருக்கேன். இதுல பெரிய முதலீடுனு பார்த்தா... பாமரோசா புல்லுல இருந்து எண்ணெயை எடுக்கறதுக்காக பாய்லர் அமைக்கறதுதான். அதுவும் ஒரு தடவை அமைச்சிட்டா... ரொம்ப வருஷத்துக்கு கவலையில்லாம இருக்கலாம். இதுக்காக போட்ட பணத்தை, முதல் வருஷத்துலயே எடுத்துடலாம்.

தண்ணி இல்லாமல் ஒரு வருடம் தாக்குப்பிடிக்கும் !

இந்த பாமரோசா அற்புதமான புல்லு. தண்ணி இல்லாட்டியும் வருஷக் கணக்குல உசுரோட இருக்கும். அடுத்து ஒரு தண்ணி வேர்ல பட்டதும் துளிர்க்க ஆரம்பிச்சுடும். மானாவாரியிலயும் சாகுபடி செய்யலாம். மானாவாரி விவசாயம்னா... புரட்டாசி கடைசியில விதைச்சுவிட்டா மழையிலயே பயிர் வளந்து மார்கழியில அறுவடைக்கு வந்துடும். அடுத்து... தை, மாசி, பங்குனி வரைக்கும் பனியிலயே ஒரு அறுவடை எடுத்துடலாம். பிறகு, அடுத்த மழை வரைக்கும் வெறும் தூர் மட்டுமே இருக்கும். புரட்டாசி, ஐப்பசியில் மழை கிடைச்சதும் மறுபடியும் துளிர்த்து வந்துரும்'' என்றவர், பாமரோசா சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி சொன்னார். அது பாடமாக கீழே விரிகிறது...

ஏக்கருக்கு 5 கிலோ விதை !

'எல்லா வகை மண்ணிலும் இது செழித்து வளரும். சுமாரான தண்ணீர் வசதி உள்ள இடங்களிலும் நன்றாக வளரும். உப்பு நீர், சப்பை நீர் என எந்தவிதத் தன்மை கொண்ட நீராக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. நெல் சாகுபடி போலவே நாற்றங்கால் அமைத்து நாற்று தயாரிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளைத் தயாரிக்க 9 அடி நீளம்,

3 அடி அகலத்தில் 5 பாத்திகளை அமைக்க வேண்டும். விதை மெல்லியதாக இருப்பதால், முதலில் பாத்திக்குள் விதையைத் தூவவேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். அதற்கு மேல் பாலாடை போல் மணலைத் தூவி, நீர் தெளிக்க வேண்டும். மூன்று, நான்கு நாட்களில் முளைத்துவரும். பிறகு, நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒருபக்கம் நாற்று தயாராகிக் கொண்டிருக்கும்போதே... சாகுபடிக்கான நிலத்தைத் தயார் செய்துவிட வேண்டும். ஏக்கருக்கு 5 வண்டி மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி, நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். பிறகு, நிலத்தின் வாகுக்கு ஏற்ப அளவான வட்டப் பாத்தி அமைத்து நாற்றை நடலாம் (நாற்றங்காலில் விதைவிட்ட 18 முதல் 25 நாட்களுக்குள் நாற்றைப் பறித்து, நடவு செய்துவிட வேண்டும்). ஒவ்வொரு நாற்றுக்கும் இடையே அரையடி இடைவெளி இருக்க வேண்டும். ராம பாத்தி (பார் அமைப்பு பாத்தி) அமைத்தால், இரு கரையிலும் நடலாம். நடவு செய்த 10 நாட்களுக்குப் பிறகு, களைகளைக் கொத்திவிட வேண்டும்.

ஒரு அறுவடைக்கு 5 டன் புல் !

20-ம் நாளில் மேலுரமாக சாம்பல் கலந்த தொழுவுரத்தை இறைத்துவிட்டு, களை இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொத்து மூலமாக மண்ணைக் கிளறிவிட வேண்டும். இதனால் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். இடையில் வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. 60-ம் நாள் அறுவடைக்கு வந்துவிடும்.

பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு பூங்கதிர் மாறியவுடன் அறுவடையைத் தொடங்கலாம். தரையில் இருந்து முக்கால் அடி வரை தாளை விட்டுவிட்டு, புல்லை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். அடுத்த 60-ம் நாள் இரண்டாவது அறுவடையைத் தொடங்கலாம். இறவை சாகுபடி  என்பதால், 60 நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் வருடத்தில் ஆறு முறை அறுவடை செய்யலாம். ஒரு அறுவடைக்கு, ஒரு ஏக்கரில் இருந்து 5 டன் புல் கிடைக்கும்.

அறுவடை செய்த புல்லை சிறிய, சிறிய கட்டுகளாக கட்டி பாய்லரில் வைத்து அவிக்க வேண்டும். இந்த புல், சிறந்த கிருமிநாசினி என்பதால்... பூச்சி, நோய் தாக்குவதில்லை. பாமரோசாவைப் பொறுத்தவரை ரசாயன உரங்களை பயன்படுத்தும்போது வேரின் ஆயுள் அதிக வருடம் நீடிப்பதில்லை. எனவே முடிந்தவரை ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. விதைகள் தேவைப்படுபவர்கள், 60-ம் நாள் புல்லை அறுவடை செய்யாமல் விட்டால், பூங்கதிர் முற்றி விடும். அதிலிருந்து விதைகளைச் சேகரித்துக் கொள்ளலாம்.

ஒரு கிலோ எண்ணெய் ரூ.2,000 !

புல்லை அவிப்பதற்காக சிறிய பாய்லரை வயலின் ஒரு பகுதியில் அமைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம்

5 ஏக்கர் முதல் அதிகபட்சம் 20 ஏக்கர் பயிர் செய்தால், ஒரு டன் கொள்ளளவு கொண்ட பாய்லர் அமைத்துக் கொள்ளலாம் (இதை அமைத்துக் கொடுக்க தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்). ஒரு ஏக்கர் புல்லை அவிக்க 5 நாட்கள் ஆகும். ஐந்து ஏக்கரில் புல் இருந்தால், சுழற்சி முறையில் எப்போதும் பாய்லரை பயன்படுத்திக் கொண்டே இருக்கலாம்.

ஒரு டன் கொள்ளளவு உடைய பாய்லர் முழுவதும் புல்லை வைத்து மூடி, நீரை சூடுபடுத்த வேண்டும். நான்கு முதல் நான்கரை மணி நேரத்தில் புல் அவிந்து ஆவியாக, குழாய் மூலம் தொட்டிக்குச் செல்லும். அது குளிர்விக்கப்பட்டு எண்ணெய் மற்றும் தண்ணீர் என இரண்டுவிதமாக கலன்களில் சேகரமாகும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 80 கிலோ முதல் 120 கிலோ வரை எண்ணெய் கிடைக்கும். சராசரியாக 100 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ எண்ணெய் 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. சராசரியாக 2,000 ரூபாய்க்கு விற்பனையாகும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய 300 ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கும். அவித்து எண்ணெய் எடுத்த புற்களை காய வைத்து, பத்திரபடுத்தினால், அடுத்த தடவை பாய்லர் எரிக்கும்போது எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விற்பனையில் சிக்கல் இல்லை !

பாமரோசா விதை முதல் எண்ணெய் ஆக மாற்றுவது வரை பேசிய அன்புச்செழியன், ''நம்ம ஊருல தயாரிக்கப்படுற எண்ணெய், பெரும்பாலும் வெளிநாடுங்களுக்குத்தான் ஏற்றுமதி ஆகுது. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கொச்சி, மும்பை மாதிரியான இடங்கள் இப்படிப்பட்ட வாசனை எண்ணெய்க்கான முக்கிய சந்தையா இருக்குது. மும்பையில விக்டோரியா டெர்மினல் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்கற பிரின்ஸ் தெரு முழுக்கவே வாசனை எண்ணெய் வியாபாரிங்கதானாம். தமிழ்நாட்டுலயும் சென்னை, கோவை, மதுரை பகுதிகள்ல மொத்த வியாபாரிங்க இருக்கிறாங்க. அதனால, விற்பனையில பிரச்னை எதுவும் எனக்கு வந்ததில்ல'' என்று சொன்னார்.

 படங்கள்:என்.ஜி. மணிகண்டன்
தொடர்புக்கு, அன்புச்செழியன்,
அலைபேசி: 95247-60455.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick