குதிரைவாலி...

குறைந்த மழையிலும் குஷியான வருமானம் !

பளிச்... பளிச்...

 மானாவாரிக்கு மிகவும் ஏற்றது.
 வயது : 90 நாட்கள்.
 அரை ஏக்கரில் 300 கிலோ.
 ஊடுபயிராக தட்டைப் பயறு.
 பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.

வேலை ஆள் பற்றாக்குறை, குறைவான மகசூல் போன்ற காரணங்களால் அழிவுநிலைக்கு வந்துவிட்ட சிறுதானியங்களில் குதிரைவாலியும் ஒன்று. ஆனால், குறைந்த அளவில் கிடைக்கும் மழையிலேயே மானாவாரி பூமியில் சிறப்பாக வளரக்கூடியப் பயிர்தான் குதிரைவாலி. இந்த ரகசியம் அறிந்த விவசாயிகள் மட்டும், ஆங்காங்கே விடாமல் இந்தக் குதிரைவாலியைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்து கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வாகையூர் அன்பழகனும் அவர்களில் ஒருவர். ஆனால், சில ஆண்டுகளாக குதிரைவாலியைக் கைவிட்டிருந்தவர், தற்போது மறுபடியும் கைப் பிடித்திருக்கிறார்... நல்ல விலை கிடைக்கிறது என்கிற உற்சாகத்தோடு!

''எனக்கு சொந்தமா நாலு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, ரெண்டு ஏக்கர் கிணத்துப் பாசனம், ரெண்டு ஏக்கர் மானாவாரி. கிணத்துல இருக்குற தண்ணியை வெச்சு நெல், காய்கறி, தென்னை, கடலை, வரகுனு இயற்கை முறையில சாகுபடி செய்துகிட்டிருக்கேன். ரசாயன உரத்தைக் கொட்டிக்கிட்டிருந்த நான், அஞ்சு வருஷத்துக்கு முன்ன 'ரோஸ் தொண்டு நிறுவன'த்துக்காரங்க மூலமா மண்புழு உரம், பஞ்சகவ்யா, மூலிகை பூச்சிவிரட்டிகளைத் தயாரிக்கக் கத்துக்கிட்டேன். அதில் இருந்தே, இயற்கை விவசாயத்தைக் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

விதைக்க வைத்த விலை!

என்னோட செம்மண் பாங்கான நிலத்துல ஆடிப்பட்டத்துலதான் குதிரைவாலியை விதைச்சுக்கிட்டிருந்தேன். ரொம்ப வருஷமா மானாவாரியில இதை சாகுபடி செய்தாலும், இடையில ஏழு வருஷமா ஆள் பற்றாக்குறை, சரியான விலை இல்லாததனால விதைக்கல. இப்ப சிறுதானியத்துக்கு நல்ல விலை கிடைக்கறதால, இந்த வருஷம் சாகுபடி செய்திருக்கேன்'' என்ற அன்பழகன், மானாவாரியில் குதிரைவாலி சாகுபடி செய்யும் முறை பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

ஆடிப்பட்டம் தேடி விதை..!

குதிரைவாலியின் வயது 90 நாள். பாசன வசதியுள்ளவர்கள் ஆண்டு முழுவதும் விதைக்கலாம். மானாவாரி விவசாயிகள் மழைக் காலங்களில் விதைப்பதுதான் சிறந்தது. சித்திரை, வைகாசி மாதங்களில் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை நன்றாக உழவு செய்து வைத்துக் கொண்டு, ஆடி மாதம் விதைக்கலாம். விதைப்புக்கு முன்பாக இரண்டு டன் தொழுவுரத்தைத் தூவி, உழவு செய்து விதைக்க வேண்டும். இந்த அடியுரத்தைத் தவிர அறுவடை வரை எந்த உரமும் தேவையில்லை.

அரை ஏக்கரில் சாகுபடி!

அரை ஏக்கருக்கு ஒரு கிலோ விதையை 10 கிலோ மணலுடன் கலந்து தூவி விதைக்க வேண்டும். 10 கிலோ மணலுக்கு பதிலாக

50 கிலோ மண்புழு உரத்தைக் கலந்தும் விதைக்கலாம் (இவர் மண்புழு உரம் கலந்து  விதைத்திருக்கிறார்). விதைத்த பிறகு, மீண்டும் ஒரு உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒவ்வொரு சால் பாரிலும் 100 கிராம் தட்டைப் பயறு விதைகளை இரண்டு அடிக்கு ஒன்று வீதம் ஊன்ற வேண்டும். இந்தத் தட்டைப் பயறுக்காக தனியாக எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. 80-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கி 150 நாட்கள் வரை மகசூல் கிடைக்கும். தோராயமாக அரை ஏக்கரில் 100 கிலோ வரை தட்டைப் பயறு மகசூல் கிடைக்கும்.

45 நாள் வரை தாக்குப் பிடிக்கும்!

குதிரைவாலி 5-ம் நாளில் முளைவிடும். 20 முதல் 25-ம் நாளில் களையெடுத்து விட்டு, நெருக்கமாக இருக்கும் பயிர்களைக் களைத்துவிட வேண்டும். ஒரு களை மட்டும் எடுத்தாலே போதும். ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் வளர்ச்சி இருப்பதால், விரைவாக பயிர் வளர்ந்து நிழல் கட்டிக்கொள்ளும். அதன் பிறகு களை எடுக்கத் தேவையில்லை. ஒரு மழை பெய்தபின், 45 நாட்கள் வரை மழை இல்லாவிட்டாலும், தாக்குப் பிடிக்கும். பூச்சி, நோய்கள் தாக்குவது இல்லை.

90 நாளில் அறுவடை!

குதிரைவாலி 75-ம் நாளில் இருந்து கதிர் எடுக்கத் தொடங்கி, 90-ம் நாளில் முற்றிவிடும். சரியான மழை கிடைக்காவிட்டால், முற்றுவதற்கு 100 நாட்கள் வரைகூட ஆகலாம். அறுவடையின்போது குதிரைவாலியின் தாள்களை (தட்டை) நிலத்திலேயே விட்டுவிட்டு கதிரை மட்டும் அறுவடை செய்து, காய வைக்க வேண்டும். பிறகு, கம்பு மூலம் அடித்தோ அல்லது மாட்டை விட்டு மிதிக்க வைத்தோ கதிரில் இருந்து மணிகளைப் பிரிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, தூசும் சேர்ந்தே வரும். புடைத்து சுத்தம் செய்தால்... 300 முதல் 400 கிலோ வரை மணிகள் கிடைக்கும்.

குதிரைவாலித் தாள் மற்றும் தட்டைப் பயறுச் செடிகள் கால்நடைகளுக்கு நல்லத் தீவனமாக அமையும். அதனால், அறுவடையின்போது, கவனமாக கதிர்களையும், தட்டைப் பயறையும் மட்டும் அறுவடை செய்வது நல்லது. சாகுபடி பாடம் சொல்லி முடித்த அன்பழகன், ''எனக்கு குதிரைவாலி 300 கிலோ கிடைச்சுது. அதோட தாள் 1 டன் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.

குதிரைவாலியை உணவுத் தேவைக்குனு விலை வெச்சுக் கொடுத்தா... கிலோ 35 ரூபாய் வீதம் எடுத்துக்குவாங்க. விதைக்குனு கொடுத்தா... கிலோ 50 ரூபாய் வரைக்கும் போகும். எங்கிட்டேயிருந்து ரோஸ் தொண்டு நிறுவனத்துக்காரங்களே கிலோ 50 ரூபாய்னு விதைக்காக வாங்கிக்கறாங்க. மொத்தத்துல சாகுபடி செலவு போக 12 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும். அரை ஏக்கர்ல, அதுவும் மானாவாரியில இந்த லாபமே பெரிய லாபம்தாங்க'' என்றார் சந்தோஷம் பொங்க.

குறிப்பு : குதிரைவாலித் தாள், தட்டைப் பயறுச் செடிகளை மாடுகளுக்குத் தீவனமாக பயன்படுத்தலாம். இதன் மதிப்பு கணக்கில் சேர்க்கப்படவில்லை.

 

விதை வேண்டுமா..?

குதிரைவாலியில் இருந்து கிடைக்கும் அரிசியில் குறைவானக் கலோரிகள், அதிகமானப் புரதச்சத்து, கோதுமையைவிட ஆறு மடங்கு அதிகமான நார்ச்சத்தும் இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது சிறப்பான உணவு. குதிரைவாலி அரிசி மூலம் பொங்கல், சாதம், கூழ் என பலவிதமான உணவுகளைத் தயாரிக்கலாம். 

 கொதுமையைவிட சத்தானது

புதுக்கோட்டை பகுதியில் விவசாயிகளிடம், இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வரும் 'ரோஸ் தொண்டு நிறுவனத்தின்’ ஒருங்கிணைப்பாளர் விஜயா, ''பொதுவாகவே குடும்பத்துக்குத் தேவையான சிறுதானியங்கள், பருப்பு வகைகளை மானாவாரியாகத்தான் சாகுபடி செய்வார்கள். அந்தப் பழக்கம் தற்போது குறைந்துள்ளது. இதை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக எங்களது தொண்டு நிறுவனம் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் பாரம்பர்ய விதைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவையுள்ள விவசாயிகள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்'' என்றார். 

 

காசி வேம்பையன்
தொடர்புக்கு,
அன்பழகன், அலைபேசி: 99438-31850
விஜயா, அலைபேசி: 99655-93144
படங்கள்: பா: காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick