சணப்பு சொல்லும் சத்தான சங்கதி !

பளிச்... பளிச்...

வயது 90 நாட்கள்.
பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.
10 நாளைக்கு ஒரு தண்ணீர்.

மண்ணை வளப்படுத்துவதற்காக சணப்பு விதைக்கும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. ஆனால், 45 நாட்களில் பூ வந்ததும் மடக்கி உழுவதோடு சரி, அதிலிருந்து வருமானம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. அதேசமயம், வருமானத்துக்காக சணப்பு விதைப்பவர்கள், மண்ணை முழுமையாக வளப்படுத்துவதில்லை. ஆனால், வளம் மற்றும் வருமானம் என ஒரே விதைப்பில் இரண்டு பலன்களை அறுவடை செய்து வருகிறார், நாகப்பட்டினம் மாவட்டம், முருகமங்கலம், முன்னோடி இயற்கை விவசாயி சம்பந்தம் பிள்ளை.

 

100 நாளில் அறுவடை!

''கடந்த 9 வருசமா இயற்கை விவசாயம் செய்றேன். மூணு வருசத்துக்கு முன்ன வரைக்கும் முழுமையா நெல்லுதான் போட்டுக்கிட்டு இருந்தேன். தண்ணீர் அதிகமா தேவைப்பட்டதாலயும், உழைப்புக்கு ஏத்த விலை கிடைக்காததாலயும் நெல்ல கைவிட்டுட்டு சணப்பு விதை உற்பத்தி மூலம் நிறைவான லாபம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

கடந்த மூணு வருசமா, எங்க சாப்பாட்டுக்காக ஒரு ஏக்கர்ல மட்டும் நெல் சாகுபடி செஞ்சுக்கிட்டு, மத்த இடங்கள்ல சணப்பை சாகுபடி செய்றேன். இப்ப ஒன்பது ஏக்கர்ல சணப்பு இருக்கு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் டெல்டா மாவட்டத்துல வேற யாரும் இவ்வளவு பெரிய பரப்புல சணப்பு சாகுபடி செய்றதா தெரியல.

சணப்பைப் பொறுத்தவரை 90 முதல் 100 நாள்ல விதை எடுத்து விற்பனை செஞ்சுடலாம். அதிகம் செலவில்லாததால ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். விதைக்காக சணப்பு சாகுபடி செய்ற விவசாயிகள்ல பல பேரு, தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு மட்டும் செடியை விட்டுட்டு, 5 அடி உயரம் உள்ள மேற்பகுதியை அறுத்து, விதையைப் பிரிச்செடுத்ததும் செடியைக் கொளுத்திடறாங்க. இதனால மிகப் பெரிய இழப்பு ஏற்படுது. இதுக்கு மாற்றா புது வழிமுறையை நான் பயன்படுத்துறேன்.

சணப்புப் பயிரோட மேல்பகுதியில ஒரு அடியில இருந்து அதிகபட்சம் ஒன்றரை அடி வரைக்கும்தான் காய்கள் இருக்கும். முத்தின பிறகு அந்தப் பகுதியை மட்டும் அறுத்து எடுத்துக்கிட்டு, கீழே உள்ள நாலடி உயரமுள்ள செடியை விட்டுடுவேன். அப்படியே தண்ணி பாய்ச்சி, மடக்கி உழுது மண்ணையும் வளப்படுத்திடுவேன்'' என்றவர், சணப்பு சாகுபடி முறை குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

ஏக்கருக்கு 20 ஆயிரம்!

''இதற்கு பட்டம் கிடையாது. எல்லா காலங்களிலும் சாகுபடி செய்யலாம். களிமண்ணைத் தவிர, மற்ற அனைத்து மண்ணிலும் சிறப்பாக விளையும். தண்ணீர் தேங்காத நிலமாக இருப்பது அவசியம். ஒரு சால் புழுதி உழவு ஓட்டி, ஒரு ஏக்கருக்கு ஒரு டன் தொழுவுரம் போட்டு, மேலும் இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். ஒரு ஏக்கருக்கு எட்டு கிலோ விதை தூவி, உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மூன்று நாட்கள் கழித்து, மீண்டும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த சில நாட்களிலேயே வேகமாக வளரத் தொடங்கும். அதன் பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். மழைக் காலத்தில் அதுவும் தேவையில்லை.

பூச்சி, நோய்கள் தாக்குவது இல்லை. இயற்கை இடுபொருட்கள்கூட அதிகம் தேவைப்படாது. 90 நாட்களில் காய் நன்கு முற்றி, நெற்றாகி விடும். அந்த நேரத்தில் செடியில் காய்கள் உள்ள  பகுதியை மட்டும் அறுவடை செய்து, வெயிலில் காய வைத்து, டிராக்டர் விட்டு அடித்தால்... குச்சி தனியாகவும், விதை தனியாகவும் பிரிந்து விடும்.

குச்சியை நீக்கிவிட்டுப் புடைத்தால்... தரமான விதைகள் கிடைக்கும். ஏக்கருக்கு நான்கு முதல் பத்து குவிண்டால் மகசூல் கிடைக்கும். சராசரியாக 7 குவிண்டால் மகசூல் பார்க்க முடியும். ஒரு கிலோ 25 ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரை விலை போகிறது. சராசரியாக 35 ரூபாய் விலை கிடைத்தாலே... ஏழு குவிண்டாலுக்கு 24,500 ரூபாய் கிடைக்கும். அனைத்து செலவுகளும் போக, இருபதாயிரம் ரூபாய் லாபம் பார்க்கலாம்.'

சாகுபடி குறிப்புகளைச் சொல்லி முடித்த சம்பந்தம், ''பசுந்தாள் உரங்கள போடுங்கனு பெருசா பிரசாரம் நடக்குது. ஆனா, போதுமான அளவுக்கு அதெல்லாம் கிடைக்கறதில்ல.

எல்லா கிராமத்துலயும் சணப்பு விதை தாராளமா கிடைச்சாதான், எல்லா விவசாயிகளும் பசுந்தாள் உரமாக இதைப் பயன்படுத்த முடியும். அதனால, பொது நோக்க அடிப்படையிலாவது அனைத்து இயற்கை விவசாயிகளுமே குறைந்தபட்சம் ஒரு ஏக்கர்ல சணப்பு விதை உற்பத்தி செய்யணும்'' என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

சணப்புக்குப் பின் உளுந்து கடுகு!

தொடர்ந்தவர், ஆடியில் சணப்பு, மார்கழியில் உளுந்து கடுகு, சித்திரையில் உளுந்து துவரை என்று புதுவித யுக்தியோடு வருமானம் பார்க்கும் ஒரு வழியையும் சொன்னார்.

'ஆடியில் சணப்பு விதைத்து, 100 நாட்களில் காய்களை அறுவடை செய்த பின்பு, நிலத்தைச் சேறாக்கி செடிகளை மடக்கி உழவு செய்தால், மண் வளமாகி விடும். மார்கழி மாதம் மூன்று சால் புழுதி உழவு செய்து, ஒரு டன் தொழுவுரம் இட்டு, 12 கிலோ விதை உளுந்தை தூவிவிட வேண்டும்.

ஊடுபயிராக 300 கிராம் நாட்டுக் கடுகு தூவலாம். 15 மற்றும் 30-ம் நாட்களில், 90 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா, 10 லிட்டர் பூச்சிவிரட்டி, ஒன்றரை லிட்டர் மீன் அமிலம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தெளிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.

வழக்கமாக உளுந்தில் 21-ம் நாள் களை எடுப்பார்கள். ஆனால், கடுகு ஊடுபயிராக சாகுபடி செய்திருக்கும் நேரத்தில் களை எடுக்க வேண்டியதில்லை. மற்றபடி, கடுகில் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. 75-ம் நாள் கடுகு அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 35 முதல் 75 கிலோ வரை கிடைக்கும். கிலோ 40 ரூபாய் விலை போனாலே... 1,500 முதல் 3,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். உளுந்துக்காக நாம் செய்யும் செலவுகளை கடுகு வருமானம் மூலம் ஈடு செய்துவிடலாம். கடுகு அறுவடை செய்த அடுத்த சில நாட்களில் உளுந்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு சராசரியாக 5 குவிண்டால் கிடைக்கும்.

கடுகுக்குப் பின் உளுந்து துவரை!

மீண்டும் நிலத்தை உழுது, சித்திரையில் உளுந்து விதைத்து ஊடுபயிராக துவரையை சாகுபடி செய்யலாம். வரிசைக்கு வரிசை 4 அடி, செடிக்கு செடி 3 அடி இடைவெளியில் துவரை விதைகளை (ஒரு குழியில் இரண்டு விதை) போடவேண்டும். உளுந்து விதைகளை ஏகத்துக்கும் தூவி விட வேண்டும்.

மார்கழி பட்டத்தில் செய்தது போலவே இடுபொருள் கொடுக்க வேண்டும். 75 முதல் 80 நாட்களில் உளுந்தையும், 105-ம் நாள் துவரையையும் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு சராசரியா, 5 குவிண்டால் உளுந்தும், 75 கிலோ துவரையும் கிடைக்கும். உளுந்து கிலோ 40 விலை போனாலே, 5 குவிண்டாலுக்கு .20 ஆயிரம் கிடைக்கும்.  துவரை கிலோ 40 ரூபாய் வீதம் விலைபோனாலே... 3,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மறுபடியும் ஆடியில் புழுதி உழவு ஓட்டி, சணப்பு சாகுபடி செய்யலாம்.

நிறைவாகப் பேசிய சம்பந்தம், ''மேற்படி முறையிலதான் இந்தத்தடவை சாகுபடி செய்றதுக்குத் திட்டம் போட்டிருக்கேன். கடந்த தடவை கடலையில கடுகை சாகுபடி செஞ்சு, 35 கிலோ மகசூல் எடுத்தேன். அந்த அனுபவத்தை வெச்சுதான் இதையெல்லாம் சொல்றேன். இந்தத் தடவை உளுந்துல ஊடுபயிரா சாகுபடி செய்ய இருக்கிறேன். டெல்டா பகுதியில கடுகு விளையும்கிறதே பலருக்கும் தெரியாது. சோதனை முயற்சியாகூட செய்து பார்க்கலாம்'' என்று சொன்னார் ஆர்வம் பொங்க.

படங்கள்: மு. ராமசாமி
தொடர்புக்கு,
சம்பந்தம்பிள்ளை,
அலைபேசி: 94880-04889

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick