தென்னைக்கு நடுவே...தித்திக்கும் தீவனப்பயிர்!

நம்பிக்கை தரும் நாட்டுச்சோளம்...

மகசூல் ஜி.பழனிச்சாமி

 

பளிச்... பளிச்...
 
வயது 90 நாட்கள்.
தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் விதைக்கலாம்.
வேலைப்பளு இல்லாத விவசாயம்.

கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் உற்பத்தி மிக அத்தியாவசியமானது. பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனப்பயிரான நாட்டுச்சோளத்தை தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகிறார், திருப்பூர் மாவட்டம், நந்தவனப்பாளையம், பெரியத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி.

கனமழை தந்து போன சொதசொதப்பையும் மீறி வரப்பில் நின்று கொண்டு தோட்டத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பழனிசாமியைச் சந்தித்தோம்.

 ''கடந்த 20 வருஷத்துக்கு முன்ன வரைக்கும் எங்க பகுதியில, விவசாய நிலத்தைவிட, மேய்ச்சல் நிலங்கள் அதிகமா இருந்தது. பம்ப்செட் மோட்டார் வந்த பிறகு, மேய்ச்சல் நிலங்கள், படிப்படியா விளைநிலங்களா மாறிடுச்சு. மேய்ச்சல் நிலம் குறைஞ்சதால, அதுல மானாவாரியா மழைக் காலத்தில் விதைச்சுட்டு வந்த சோளம், கம்பு, கொள்ளு மாதிரியான தீவனப்பயிர் சாகுபடியும் குறைஞ்சி, கால்நடைகளும் குறைஞ்சு போச்சு.

இந்த நிலைமையில ஆள்பற்றாக்குறை, கட்டுப்படியாகாத விலைனு பல பிரச்னைகளால நான் தென்னை விவசாயத்துக்கு மாறிட்டேன். நாலு ஏக்கர்ல 280 தென்னை மரங்களை நட்டு, நாலு வருஷமாச்சு. போன வருஷம் வரைக்கும் இளம் தென்னைக்குள்ள வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம்னு ஊடுபயிர் சாகுபடி செய்துட்டு இருந்தேன்.

பசுந்தீவனந்தான் பாலைக் கூட்டுது!

நாலு கறவை மாடுகளை வெச்சு பாலை உற்பத்தி செய்றேன். என்னதான் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்புத் தீவனம்னு கொடுத்தாலும், பசுந்தீவனம் கொடுத்தாதான் பாலோட அளவு கூடுது. அதுவும் கோடைக் காலத்தில் பசுந்தீவனம் கொடுக்கலைனா பால் ரொம்ப குறைஞ்சிடும். அதனால, மாட்டுக்குத் தேவையான தீவனத்துக்காக நாட்டுச்சோளத்தை தென்னைக்கு ஊடுபயிரா விதைச்சிருக்கேன்'' என்றவர் தென்னைக்கு இடையில் நாட்டுச்சோளம் சாகுபடி செய்யும் முறை பற்றி சொல்லத் தொடங்கினார்.

விதைப்பு, அறுவடை மட்டும்தான்!

நாட்டுச்சோளத்தை தனிப்பயிராகவும் விதைக்கலாம், மத்த பயிர்களுக்கு இடையில் ஊடுபயிராகவும் விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து மாட்டுவண்டி தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து, உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதைச்சோளத்தை கைகளால் வீசி விதைத்துவிட வேண்டும். மீண்டும் ஒரு உழவு செய்யவேண்டும். இரண்டு அல்லது மூன்று தண்ணீர் கொடுத்தால் போதும்... பயிர் வளர்ந்து விடும். நாட்டுச்சோளத்தைப் பொறுத்தவரை உழுது, விதைப்பதைத் தவிர வேறு எந்த வேலைபாடும் தேவைப்படாது... அடுத்தது அறுவடைதான்!

100 நாட்களுக்குள் அறுவடை!

சோளத்தின் வயது 90 நாட்கள். வடிகால் வசதி உள்ள அனைத்து மண்ணிலும் வளரும். இதற்குத் தனியாக எந்தப் பட்டமும் இல்லை. விதைத்த 70 நாட்களில் கதிர்களில் பால் பிடிக்கும். பசுந்தீவனமாக கொடுக்க நினைப்பவர்கள், இந்த நிலையிலேயே தட்டைகளை அறுத்து துண்டுகளாக வெட்டி மாடுகளுக்குக் கொடுக்கலாம். 90 முதல் 100 நாட்களுக்குள் மீதமுள்ள தட்டைகளில் உள்ள முதிர்ந்த சோளக் கதிர்களை அறுவடை செய்துகொண்டு, தட்டையை அடியோடு அறுத்து, சின்னசின்னக் கட்டுகளாகக் கட்ட வேண்டும். பிறகு, இந்த கட்டுகளை நிலத்தில் கூம்பு போல நட்டு வைத்து, ஒரு மாதம் வரை நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். ஒரே இடத்தில் சோளத் தட்டைகள் மண்ணில் ஊன்றி நின்றால், கரையான் பிடித்துவிடும் வாய்ப்பு உண்டு. எனவே, அடிக்கடி கட்டுகளைத் தட்டி உலர்த்தி இடம் மாற்றி வைக்கவேண்டும்.

அறுவடை செய்த சோளக் கதிர்களைக் காய வைத்து குச்சியால் அடித்து மணியைப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஏக்கருக்கு சுமார் 300 கிலோ சோளம் கிடைக்கும். தீவனச்சோளமாக இருப்பதால், தரமும் மகசூலும் குறைவாகவே இருக்கும். இதை மூட்டை பிடித்து வைத்துக் கொண்டு, மாவாக அரைத்து காய்ச்சி, கறவை மாடுகளுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். நாமும் தோசை, பலகாரம் என சமைத்து சாப்பிடலாம்.

3 டிராக்டர் தீவனம்!

தட்டை நன்றாக காய்ந்த பிறகு, நமக்கு வசதியான இடத்தில் கல், மரங்கள் கொண்டு 2 அடி உயரம், 15 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட பட்டறை (போர்) அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மீது சோளத்தட்டைக் கட்டுகளை இரண்டாக வெட்டி, ஒரே சீராக அடுக்கிக் கொள்ள வேண்டும்.

காய்ந்த சோளத் தட்டைகளை இப்படி போர் போட்டு வைத்து கொண்டால், மழைக்காலங்கள், தீவனப் பற்றாக்குறை ஏற்படும் வறட்சிக் காலங்கள் போன்ற சமயங்களில் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.

சாகுபடி தொழில்நுட்பம் சொல்லி முடித்த பழனிசாமி, ''ஒரு ஏக்கருக்கு மூணு டிராக்டர் அளவுக்கானத் தீவனம் கிடைக்கும். 'மேய்ச்சல் நிலம் இல்லையே'னு கவலைப்பட்டுக்கிட்டு யாரும் கால்நடை வளர்ப்பைக் கைவிடணும்கிற தேவையில்ல. இளம் தென்னையா இருந்தா... சோளம், வளர்ந்த தென்னையா இருந்தா... தீவனப்புல் இதையெல்லாம் ஊடுபயிரா போட்டு, பால் உற்பத்தியைப் பெருக்கலாம்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

இரண்டும் முக்கியம்!

 

 

தீவனப்பயிர் சாகுபடி தொடர்பாக நம்மிடம் பேசிய நாமக்கல், கால்நடைப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப்பேராசிரியர் மோகன், ''கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம், உலர்தீவனம் இரண்டும் இன்றியமையாதது. 10 லிட்டர் பால் கொடுக்கும் திறன் கொண்ட மாட்டுக்கு, தினமும்

10 கிலோ உலர்தீவனமும், 30 கிலோ பசுந்தீவனமும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பாலின் அளவு குறைந்து விடும்.  பாலின் அளவை அதிகரிக்கும் பணியை பசுந்தீவனமும், பாலில் கொழுப்புச்சத்தைக் கூட்டும் பணியை உலர்தீவனமும் செய்கின்றன.

நாட்டுச்சோளம் மட்டுமல்லாமல், 45 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தொடர்ந்து மகசூல் தரும் மறுதாம்பு சோளம். 60-ம் நாள் அறுவடைக்கு வரும் கோ எஃப்.எஸ்-29 என பல வகையானத் தீவனப்பயிர்கள் உள்ளன. இதுகுறித்து, நாமக்கல், வேளாண் அறிவியல் மையம் பயிற்சி அளித்து வருகிறது'' என்று சொன்னார்.  

தொடர்புக்கு,
பழனிச்சாமி, அலைபேசி: 95004-93989
மோகன், அலைபேசி: 94432-58626
படங்கள்: ஜா. ஜாக்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick