இயற்கைக் குடமிளகாய்....

பசுமைக்குடிலுக்குள் காய்க்குது பணம் !

பளிச்... பளிச்...

கால் ஏக்கரே போதுமானது.
50 சதவிகிதம் மானியம்.
9 மாதங்கள் காய் கிடைக்கும்.

 

குடமிளகாய் சேகரிக்கும் பணியில் சவுந்திரராஜன்...

பருவம் தப்பிய மழை, தாங்க முடியாத நிலைக்குத் தள்ளும் வகையில் தகிக்கும் வெயில்... போன்றவற்றையெல்லாம்கூட சமாளித்து, ஆண்டு முழுவதும் தேவையானவற்றை விளைவிக்க உருவாக்கப்பட்டதுதான் பசுமைக்குடில்!

 

வெளிநாடுகள் பெரும்பாலானவற்றில் தக்காளி, கத்திரி உட்பட பல வகைக் காய்கறிகள் பசுமைக்குடிலுக்குள்தான் விளைகின்றன. இந்தியாவில் ஆரம்ப காலங்களில் மலைப்பகுதியில், கொய்மலர்கள் மற்றும் குடமிளகாய் விவசாயத்துக்கு மட்டுமே பசுமைக்குடில்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சமவெளிப் பகுதிகளிலும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

பசுமைக்குடில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பம் என்பதால், ரசாயனத்தைக் கொட்டிதான் விவசாயம் செய்கிறார்கள் 99% விவசாயிகள். அவர்களில் இருந்து வேறுபட்டு பசுமைக்குடிலுக்குள் இயற்கை விவசாயம் செய்கிறார் தர்மபுரி மாவட்டம், அமானிமல்லாபுரம் சவுந்திரராஜன்.

கால் ஏக்கரே போதுமானது!

''பத்து பதினஞ்சு ஏக்கருல, சுத்தி அலைஞ்சி விவசாயம் பாக்க தோதுப்படாதுனு சொல்றவங்களுக்கு... பசுமைக்குடில் ஒரு வரப்பிரசாதமுங்க. அதில்லாம ஏக்கர் கணக்கான நிலத்துல சம்பாதிக்கிற பணத்தை, கால் ஏக்கர்ல சம்பாதிச்சுடலாம் பசுமைக்குடில் இருந்தா'' என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் சவுந்திரராஜன்.

''கிணறு, போர் செட்டோட பத்து ஏக்கர் நிலமிருக்கு. அஞ்சு ஏக்கர்ல தென்னை வெச்சு விட்டுட்டேன். ரெண்டு ஏக்கர்ல வாழை. மீதி மூணு ஏக்கர்ல நெல், காய்கறினு மாத்தி மாத்தி பண்ணிக்குவேன். விவசாயம்தான் முழு நேரத்தொழில்ங்கறதால, அதுபத்தி நிறைய விஷயங்களைச் சேகரிக்க ஆரம்பிச்சப்போ... ரெண்டு வருஷத்துக்கு முன்ன பசுமைக்குடில் பத்திக் கேள்விப்பட்டேன். மானியமும் கிடைச்சதால உடனே கால் ஏக்கர் அளவுல பசுமைக்குடில் அமைச்சு ரோஜா போட்டேன்.

இயற்கையில் குட மிளகாய்!

ரோஜாவுக்கு முழுக்க முழுக்க ரசாயனம் கொடுத்துதான் வளர்க்கணும். ஆனா, அது ஒண்ணும் சரிப்பட்டு வரல. என்னா செய்யலாம்னு நிறைய பேர்கிட்ட யோசனை கேட்டப்போதான், 'ஆர்கானிக் உரங்களைப் பயன்படுத்தி, கேப்ஸிகம் (குடமிளகாய்) போடுங்க. நல்லா வரும்’னு சொன்னாங்க. உடனே அதையும் செயல்படுத்தினேன். நான் எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூலும் லாபமும் கிடைக்க ஆரம்பிக்கவே, அதையே தொடர முடிவெடுத்துட்டேன்’' என்றவர், பசுமைக்குடிலில் குடமிளகாய் சாகுபடி பற்றி பாடமே நடத்தினார்.

செம்மண் அவசியம்!

''1,000 அல்லது 500 சதுர மீட்டரில்தான் பசுமைக்குடிலை அமைக்க முடியும். அதிகபட்சம் 1,000 சதுர மீட்டர் அளவுக்கான குடிலுக்கு மட்டுமே ஒருவர் மானியம் பெற முடியும். இதற்கு குறைந்தது கால் ஏக்கர் நிலம் தேவை. செம்மண் பூமியாக இருப்பது நல்லது. பல தனியார் நிறுவனங்களே இதை அமைத்துத் தரும் பணியைச் செய்து வருகின்றன.

குடிலை அமைத்த பிறகு, ஓரிரு நாள் இடைவெளியில் நாட்டுமாடு மூலமாக நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது.

5 லோடு தொழுவுரம், 160 பாக்கெட்டுகள் உயிர் உரங்கள், 4 மூட்டை வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, உழவு செய்ய வேண்டும்.

கிழக்கு மேற்காகப் பாத்தி!

அடுத்து... குடிலுக்குள் கிழக்கு மேற்காக மூன்றடி அகலத்தில் பாத்தி (பெட்) அமைக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடைவெளி ஒரு அடி, உயரம் ஒன்றரை அடியும் இருக்க வேண்டும். அதையடுத்து, சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். 250 அடி நீளம், 50 அடி அகலத்தில் உள்ள குடிலில் 60 பாத்திகள் அமைக்க முடியும்.

குட மிளகாய்க்கு நாற்றைத்தான் நடவு செய்ய வேண்டும் என்பதால், பாத்திகள் அமைக்கத் தொடங்குவதற்கு முன்னரே சிறிய நிழல்வலைப் பசுமைக்குடிலில் குழித் தட்டுகளில் 40 கிராம் அளவுக்கான விதைகளை விதைக்க வேண்டும். குட மிளகாயில் மஞ்சள், பச்சை, சிவப்பு என மூன்று வண்ணங்கள் இருப்பதால், மூன்றையும் சரிக்குச்சமமாக இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். 27 நாட்கள் வளர்ந்த நாற்றை நடவு செய்யலாம்.

முக்கோண நடவு முக்கியம்!

பாத்தியின் இரண்டு ஓரங்களிலும் நாற்றுகளை 40 சென்டி மீட்டர் இடைவெளியில் முக்கோண நடவு செய்து, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மிதமாக தண்ணீர்விட வேண்டும். பத்து நாட்களில் வேர் பிடித்து விடும். அதிலிருந்து பாத்தி காயாத அளவுக்கு தினமும் சிறிது நேரம் நீர் விட்டு வரவேண்டும். தொழுவுரம் இடுவதால், களைகள் முளைத்து வரும். நடவு செய்த 15ம் நாளுக்கு மேல் களை எடுக்க வேண்டும். அதன் பிறகு களைகள் வராது.

கவாத்து முக்கியம்!

ஒவ்வொரு பாத்திக்கும் நேர் மேலே, பாத்திக்கு இணையாக கட்டுக்கம்பிகளை இழுத்து இருபுறமும் கட்டவேண்டும். குடில் அமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் இரும்புக் குழாய்களிலேயே கட்டலாம். ஒரு செடிக்கு நான்கு பிளாஸ்டிக் கயிறுகள் என்கிற விகிதத்தில், செடிகளுக்கு மேலே செல்லும் கம்பிகளில் கட்டித் தொங்கவிட வேண்டும்.

செடி வளரும்போது கவட்டை வடிவில் ஒரு தண்டை மட்டும் விட்டுவிட்டு மீதித் தண்டுகளைக் கிள்ளிவிட வேண்டும். அந்தக் கவட்டைத் தண்டின் இரண்டு முனைகளில் வளரும் தண்டுகளையும், கவட்டை போலக் கவாத்து செய்து விட்டால்... மொத்தம் நான்கு தண்டுகள் மட்டும் வளரும். ஒவ்வொரு தண்டையும் மேலே தொங்கும் பிளாஸ்டிக் கயிறு நான்கிலும் ஏற்றி விட வேண்டும். கயிற்றின் கீழ்ப்பகுதியை செடியில் கட்டி விட வேண்டும்.

80 நாட்களில் அறுவடை!

50ம் நாளுக்கு மேல் பூவெடுத்துப் பிஞ்சு விட ஆரம்பிக்கும். அதன் பிறகு 15 நாளுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து பயிர்கள் மீது தெளித்து விட வேண்டும். முதல்முறை பஞ்சகவ்யா தெளித்து பத்து நாட்கள் கழித்து 'பவர் பிளான்ட் ப்ளூம்’ என்னும் பயோ ஆர்கானிக் மருந்தை டேங்குக்கு (10 லிட்டர்) 20 மில்லி வீதம் தண்ணீரில்  கலந்து 10 டேங்க் தெளிக்க வேண்டும். வேறு எந்த ஊட்டங்களும் தேவையில்லை.

பச்சைக்காயாக தேவையென்றால், 65ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம். வண்ணமாக மாற வேண்டும் என்றால், 80 முதல் 90 நாட்கள் காத்திருந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து மாதத்துக்கு ஏழு முறை என ஒன்பது மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்’

மிருதுவாகக் கையாள வேண்டும்!

சாகுபடிப் பாடம் முடித்த சவுந்திரராஜன், ''பெரும்பாலும் கலர் வந்த காய்களுக்குதான் நல்ல விலை கிடைக்கும்.  நாங்க, நல்ல நிறம் வந்தபிறகுதான் அறுவடை செய்றோம். முதல் முறை அறுவடை பண்ணினப்போ 300 கிலோ கிடைச்சது. அதுக்கடுத்து,  400 கிலோவில் இருந்து 500 கிலோ வரைக்கும் கிடைச்சது. சராசரியா 400 கிலோனு வெச்சுக்கலாம். மொத்தம் 63 அறுப்புக்கு 25,200 கிலோவுக்கு மேல கிடைக்கும். காயை ரொம்ப மிருதுவாத்தான் கையாளணும். இல்லாட்டி வீணாயிடும்.

ஒப்பந்தம் போட்டால் ஒரே விலை!

அறுவடை பண்ணி, வியாபாரிங்க கொடுக்குற அட்டைப் பெட்டியில அடுக்கி, ஓசூர்ல கொண்டு போய் கொடுத்துட்டு வந்துடுவோம். இதை விக்கிறதுக்கு வேளாண் வணிகப்பிரிவு மூலமா வியாபாரியை ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்காங்க. கிலோ 35 ரூபாய்னு ஒப்பந்தம் போட்டிருக்கோம்.  அறுவடைக்கு முன்னாடியே இப்படி ஒப்பந்தம் போட்டுக்கலாம்.மார்க்கெட்ல 25 ரூபாயில இருந்து 60 ரூபாய் வரைக்கும்கூட ஏறி இறங்கும். ஒப்பந்தம் போட்டுட்டா ஒரே விலை கிடைச்சுடும்.

25 ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும்!

ஒரு தடவை குடில் அமைச்சுட்டா 25 வருஷம் வரைக்கும் கூடத் தாங்கும். அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை மராமத்து பாத்தா போதும். இந்த பிளாஸ்டிக் ஷீட்டை மாத்துறதுக்கு 87,000 ரூபாய் ஆகுமாம். குடில் அமைக்கறதுக்கு ஆறு லட்ச ரூபாய் வரை செலவாகும். அதுல 50 சதவிகிதம் மானியம் கிடைக்கும். முதல் வருஷத்துலேயே மொத்தச் செலவையும் எடுத்துட முடியும். ரெண்டாவது வருஷத்துல இருந்து வருஷத்துக்கு 7 லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் பாக்க முடியும்'' என்றார், சந்தோஷமாக.

படங்கள்: க. தனசேகரன்
தொடர்புக்கு,
சவுந்திரராஜன், அலைபேசி: 96884-74260.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick