ஏக்கருக்கு 2 லட்சத்து 10 ஆயிரம்...

பட்டையைக் கிளப்பும் ஜீரோ பட்ஜெட் பப்பாளி!

ஆர்.குமரேசன்

 பளிச்... பளிச்...

ஏக்கருக்கு 600 மரங்கள்.
பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.
விற்பனையிலும் வில்லங்கமில்லை.

வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக, பிழைப்பு தேடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுவோரின் எண்ணிக்கை இங்கே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எதிர்விளைவாக... பெரும்பாலான விளைநிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இத்தகையச் சூழலுக்கு நடுவே... சிவகங்கை, சூரக்குளம் கிராமத்தில், ஜீரோ பட்ஜெட் முறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பப்பாளி சாகுபடி!

புதுச்சேரி மாநிலத்தில் கூரியர் நிறுவன முகவராக இருக்கும் சிவா என்பவருக்குச் சொந்தமான பண்ணைதான் இது. ஒரு காலத்தில் இந்தப் பகுதியை பூர்விகமாகக் கொண்ட அவர், தற்போது தன் தொழிலைப் பார்த்துக் கொண்டே... விவசாயத்தையும் கையில் எடுத்திருக்கிறார். தோட்டத்தை முழுக்க கவனித்துக் கொள்வதற்காக செல்வம் என்பவரை பண்ணை மேலாளராக நியமித்திருக்கிறார் சிவா. இங்கே... பண்ணையை நமக்குச் சுற்றிக் காட்டியபடியே விஷயங்களைப் பகிர்கிறார் மேலாளர் செல்வம்.

''உரிமையாளர், வாரம் ஒரு முறை தோட்டத்துக்கு வந்துட்டு போவாரு. மத்தபடி தினமும் செல்போன் மூலமா அவரு சொல்ற ஆலோசனைப்படி விவசாயம் நடக்குது. இங்க 5 ஏக்கர்ல 'ரெட்லேடி' ரக பப்பாளியைக் கூட்டுப்பயிர்களோட சேர்த்து ஜீரோ பட்ஜெட் முறையில சாகுபடி செய்றோம். இந்த பப்பாளியோட வயசு ரெண்டு வருஷம்தான். இப்ப மகசூல் முடியற நேரம்'' என்றவர், ஜீரோ பட்ஜெட் முறையில் பப்பாளி சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி சொல்லத் தொடங்கினார் பாடமாக...

நாற்று தயாரிப்பு!

'செம்மண் மற்றும் செஞ்சரளை பூமியில் பப்பாளி நன்றாக வளரும். முதல் தடவை பப்பாளி விதையை கடையில் வாங்கலாம். அடுத்த தடவைகளில் இருந்து நாமே நாற்று தயாரித்துக் கொள்ளலாம் (பார்க்க, பெட்டிச் செய்தி). 4ஜ்7 இஞ்ச் அளவுள்ள பிளாஸ்டிக் பையில், பப்பாளி விதைகளை நட்டு, நிழலில் வைத்து, தினமும் இரண்டு வேளை பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீரில் ஜீவாமிர்தத்தையும் கலந்து தெளித்தால்... நோய் எதிர்ப்புச் சக்தியோடு நாற்று வளரும். விதைத்த 10-ம் நாளில் முளைக்கத் தொடங்கும். அரையடி உயரத்துக்கு மேல் செடிகள் வளர்ந்ததும், நடவு செய்யலாம். அதிகபட்சம் 40-ம் நாளுக்குள் நடவு செய்து விடவேண்டும். நாற்றுத் தயாராகும் நேரத்தில் நடவுக்கான நிலம் தயாரிக்கும் வேலைகளை முடித்துவிட வேண்டும்.

முக்கோண நடவு!

நிலத்தை நன்றாக உழுது கொள்ளவேண்டும். பின்பு, ஒரு ஓரத்தில் இருந்து வயல் தயாரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டும். வரப்பில் இருந்து ஒரு அடி தள்ளி, இரண்டு அடி அகலம் மற்றும் ஆழத்தில் நீளமாக கால்வாய் (ஜிக்ஷீமீஸீநீலீ) வெட்ட வேண்டும். அந்தக் கால்வாயில் இருந்து 24 அடி தள்ளி, அதேபோல மற்றொரு கால்வாய் எடுக்க வேண்டும்.  இப்படி ஒவ்வொரு 24 அடிக்கும், வயலின் அளவைப் பொறுத்து கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். பிறகு, அவற்றில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழைக் காலங்களில் மேல்மண் அரித்துச் செல்வதைத் தடுப்பதோடு, மழைநீர் நிலத்திலேயே சேகரமாவதற்கும் இந்தக் கால்வாய்கள் உதவும்.  இரண்டு கால்வாய்களுக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில்,  வசதிக்கு ஏற்ப மேட்டுப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல வயல் முழுவதும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

வயலில் உள்ள காய்ந்தப் புற்களைக் கொண்டு மேட்டுப் பாத்திகளில் மூடாக்கு போடவேண்டும். பின்பு, சணப்புச் செடிகளைப் பாத்திகளில் பரவலாக நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 9 அடி இடைவெளியும், வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியும் வருவதுபோல பப்பாளிச் செடிகளை நடவேண்டும் (முதல் வரிசையில் பாத்தியின் ஆரம்பத்தில் ஒரு பப்பாளிச் செடியும், அடுத்த வரிசையில் 9 அடி தள்ளி ஒரு பப்பாளியும், மூன்றாவது வரிசையில் பாத்தியின் ஆரம்பத்திலும் என மாற்றி மாற்றி நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 9 அடிக்கு 6 அடி இடைவெளியில் முக்கோண முறையில் செடிகள் இருக்கும்). இந்த முறையில் ஏக்கருக்கு 600 செடிகள் வரை நடலாம்.

ஊக்கம் கொடுக்கும் ஊடுபயிர்!

பப்பாளிகளுக்கு இடையில் ஊடுபயிராக முருங்கை அல்லது வாழையை நடவு செய்யலாம். பாத்தியில் இரண்டு பப்பாளிச் செடிகளுக்கு மத்தியில் ஒன்று என முருங்கை அல்லது வாழையை நடவேண்டும் (இவர் முருங்கை சாகுபடி செய்துள்ளார்). மீதமுள்ள இடங்களில் செண்டுமல்லி, மக்காச்சோளம், சணப்பு, தட்டைப் பயறு, அகத்தி, காய்கறிகள் போன்றவற்றை பயிர் செய்து கொள்ளலாம். செண்டுமல்லி நடுவதால், மாவுப்பூச்சித் தாக்குதலில் இருந்து பப்பாளியைக் காப்பாற்றலாம். காற்றிலுள்ள நைட்ரஜன் சத்துக்களை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையை தட்டைப் பயறு போன்ற வேர்முடிச்சுப் பயிர்கள் செய்துவிடும். சணப்பு, வேகமாக வளர்ந்து, வயலில் ஒரு நிழல்வலையைப் போல் செயல்படுவதால்... பப்பாளிச் செடிகள் பாதுகாப்பாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

வழக்கமாக பாத்திகளின் மேல் சொட்டுநீர்க் குழாய்களை அமைப்பது போல் இல்லாமல், ஒவ்வொரு பப்பாளிச் செடிக்கும் அருகில் குழாய்கள் வருமாறு குறுக்குவசத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு புறமும் வாய்க்காலில் உள்ள தண்ணீர், சொட்டுநீர் மூலம் கசியும் தண்ணீர் மற்றும் பாத்திகளில் உள்ள மூடாக்கு ஆகிய காரணங்களால் பாத்திகள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். எனவே, ஊடுபயிர்களுக்கு என்று தனியாக நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை.

ஏக்கருக்கு 30 டன்!

வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை ஒரு வாரம் பாசனத்தின் மூலமாகவும், மறுவாரத்தில் தெளிப்பு முறையிலும் மாற்றி மாற்றி செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். இலை வழியாக தெளிக்க பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். பயரின் தேவைக்கு ஏற்ப எத்தனை டேங்க் என்று முடிவு செய்துகொள்ளலாம். 20 நாட்களுக்கு ஒரு தடவை 200 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் மோரைக் கலந்து செடிகள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நடவு செய்த முதல் 5 மாதம் வரை அக்னி அஸ்திரத்தைத் தெளிக்க வேண்டும். நடவு செய்த 6-ம் மாதம் பப்பாளி பூக்கும். பொதுவாக, பூக்கும் தருணத்தில்தான் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். தொடர்ந்து மோர்க் கரைசலைத் தெளித்தால் பூச்சித் தாக்குதல் சுத்தமாக இருக்காது.

நடவு செய்த 8-ம் மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை வீதம் காய்களை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 16 மாத காலம் வரை மகசூல் கிடைக்கும். நன்கு பெருத்த, முனையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்களை மட்டுமே பறிக்கவேண்டும். ஒரு மரம் 50 கிலோ முதல் 150 கிலோ வரை மகசூல் கொடுக்கும். 16 மாத காலத்தில் ஒரு மரம் குறைந்தபட்சம் 50 கிலோ மகசூல் கொடுப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஏக்கரில் உள்ள 600 மரங்களில் இருந்து 30 டன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்சம் 7 ரூபாய்க்கு விற்பனை செய்தால்... 2 லட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதில் செலவு போக ஏக்கருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

முருங்கை 30 ஆயிரம்!

ஊடுபயிராக சாகுபடி செய்யும் முருங்கை அல்லது வாழைக்குத் தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. வாழையைத் தாக்கும் நூற்புழுவை செண்டுமல்லி கட்டுப்படுத்தி விடும். வாழையைத் தாக்கும் வைரஸ் நோயை, வயலில் ஆங்காங்கே உள்ள அகத்தி விரட்டி விடும். மோர்க் கரைசலும், அக்னி அஸ்திரமும் முருங்கையில் புழு தாக்காமல் செய்கிறது.

ஒரு ஏக்கர் பப்பாளிக்கு நடுவே ஊடுபயிராக 600 வாழை அல்லது 600 முருங்கையை (இவர் செடிமுருங்கை நடவு செய்திருக்கிறார்) நடலாம். ஒரு முருங்கைச் செடியிலிருந்து குறைந்தபட்சம் 15 கிலோ காய் கிடைக்கும். ஆக, 600 முருங்கைச் செடிகளில் இருந்து, 9,000 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக 5 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், 45 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக 30 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

மற்றொரு ஊடுபயிரான செண்டுமல்லி, குறைந்தபட்சம் 1,600 கிலோ என்கிற அளவில் கிடைக்கும். கிலோ 15 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் (இவர், செண்டுமல்லியை ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்துள்ளார்), 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். காய்கறிகள் மூலமாக 10 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும். தட்டைப் பயறு மகசூலை ஜீவாமிர்தம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். அகத்தி குறைந்த அளவே இருப்பதால், அதை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

''பப்பாளி, தட்டைப் பயறு, செண்டுமல்லி, முருங்கைனு சொல்றதுக்கு மலைப்பாதான் இருக்கும். ஆனா, செய்து பார்த்தா... ஜீரோ பட்ஜெட் விவசாயம்கிறதுதான் எளிமையான, லாபகரமான விவசாயம்கிறது புரியும். பப்பாளி, ஊடுபயிருங்க மூலமா... ஒரு ஏக்கர்ல, 24 மாசத்துல குறைந்தபட்சம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்கிறப்ப... ரசாயனம் அது, இதுனு எதுக்காக யோசிக்கணும்?'' என்ற நியாயமானக் கேள்வியை எழுப்பினார் செல்வம்.

பண்ணை உரிமையாளர் சிவாவிடம் பேசியபோது, ''சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி பக்கத்துல இருக்கற முத்தூர்... எங்க பூர்விக கிராமம். விவசாயம்தான் பரம்பரைத் தொழில். இடையில படிப்புக்காக எல்லாரும் டவுனுக்கு வந்துட்டோம். ஆனாலும், அம்மா மட்டும் கிராமத்துக்குப் போயி விவசாயத்தைப் பாத்துகிட்டு வந்தாங்க. அப்படி போறப்ப என்னையும் அழைச்சிட்டு போவாங்க. அப்ப இருந்தே விவசாயத்து மேல தனிஈடுபாடு.

என்னைப் பொறுத்தவரைக்கும் விவசாயம்ங்கிறது, சமூகப் பொறுப்போட கூடிய ஒரு தொழில். படிச்சவங்க விவசாயத்துக்கு வரணும். நான், படிச்சுட்டு தொழிலுக்கு வந்து சம்பாதிச்சதும், நிலம் வாங்கி விவசாயத்தை ஆரம்பிச்சாச்சு. அந்த நேரத்துல எதேச்சையா நான் படிச்ச 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகம், இயற்கை வேளாண் விஞ்ஞானிகளோட அறிமுகம், இதெல்லாம்தான் இயற்கை விவசாயம் பக்கம் ஈர்த்துச்சு. இயற்கை விவசாயப் பண்ணையாவே ஆரம்பிச்சுட்டேன்.

பாதை காட்டிய பாலேக்கர்!

எங்க நிலம் செம்மண் சரளை பூமி. மழை வந்தா தண்ணி தேங்காது. மண்ணை அரிச்சுகிட்டு ஓடிடும். இப்படி பல பிரச்னைகளால, ஆரம்பத்துல இருந்தே இயற்கை முறையில பப்பாளியை சாகுபடி செஞ்சாலும், பெருசா வருமானம் கிடைக்கல. இது எல்லாத்துக்கும் ஒரு தீர்வா, எனக்கு கிடைச்சசதுதான் ஜீரோ பட்ஜெட். என் நிலத்துல இதுவரைக்கும் எது, எது பிரச்னையினு நினைச்சிருந்தனோ, அத்தனைக்கும் மாற்று வழி இருக்குனு பாலேக்கரோட பயிற்சியில கலந்துகிட்ட பிறகுதான் தெரிஞ்சுது.

அவரோட சிந்தாந்தப்படி 5 ஏக்கர்ல ரெட்லேடி பப்பாளியையும், இடையில் முருங்கை, செண்டுமல்லி, சணப்பு, தட்டைப் பயறு என பல பயிர்களைக் கலந்து பயிர் செஞ்சேன். கூட்டுப்பயிரா செய்றதால நோய் தாக்குதல் இல்லை. மேட்டுப் பாத்தி அமைச்சதால களை எடுக்கும் செலவு இல்லை. ஜீரோ பட்ஜெட்ல விளையற காயோட தோல் கெட்டியா இருக்குறதால அதிகநாள் கெடாம இருக்கு.

வழக்கமா பப்பாளியில இலை சுருங்கி, காய் சின்னதா காய்க்கும். செண்டுமல்லி நட்டதால அந்தப் பிரச்னையும் இல்ல. கால்வாய் வெட்டி, நிலத்தைத் தயாரிக்கற தொழில்நுட்பம் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. என்னோட செஞ்சரளை பூமியில மழை பெஞ்சா, தண்ணி வயலையே அரிச்சிடும். இப்ப எல்லா தண்ணியும், சத்தும் நிலத்துக்குள்ளயே சேகரமாகுது.

எங்க தோட்டத்தை நேர்ல வந்து பார்த்த பாலேக்கர், 'இது, ஜீரோ பட்ஜெட் பண்ணைக்கு நல்ல முன்மாதிரியான பண்ணை’னு பாராட்டுற அளவுக்கு என் பண்ணை அமைஞ்சது எனக்குப் பெருமையான விஷயம். அதனால, ஜீரோ பட்ஜெட் முறையில இன்னும் 10 ஏக்கருக்கு பப்பாளி சாகுபடி செய்யப்போறேன்'' என்று குஷியோடு சொன்ன சிவா,

விற்பனைக்கும் உதவி!

''எங்க பண்ணையில விளையிற பப்பாளியை சென்னையில் இருக்கற இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்ற கடைகளுக்குக் கொடுத்துகிட்டு இருக்கோம். இயற்கை முறையில பப்பாளிக் கூழையும் தயாரிக்குறோம். பப்பாளியைப் பொறுத்தவரைக்கும் விற்பனை வாய்ப்பு பிரகாசமா இருக்கு. உள்ளூர் பழமுதிர்சோலையிலயே வித்துடலாம். இயற்கை முறையில பப்பாளியை விளைய வெக்குற விவசாயிக, விற்பனை செய்ய முடியாத நிலை இருந்தா, என்னைத் தொடர்பு கொள்ளலாம். விற்பனைக்கு ஏற்பாடு செய்ய தயாரா இருக்கேன்.

பப்பாளி, கரும்பில் இருந்து மதிப்புக்கூட்டப்பட பொருள்கள் தயாரிக்கும் பணிகளையும் செஞ்சுகிட்டு இருக்கோம். அதனால இயற்கை முறையில கரும்பை விளையவிக்கிற விவசாயிகள் தொடர்பு கொண்டாலும், கரும்பை நல்ல விலைக்கு வாங்கிக்குறேன்'' என்று கூடுதல் தகவல்களையும் தந்தார்.

 

படங்கள்:எஸ். சாய்தர்மராஜ், எஸ். தேவராஜன்
தொடர்புக்கு, சிவா, அலைபேசி: 98942-40000.

நீங்களே விதை உற்பத்தி செய்யலாம்!

 

ஒரு தடவை மட்டும் கடைகளில் இருந்து விதைகளை வாங்கிவிட்டால், அடுத்தடுத்த சாகுபடிக்குத் தேவையான விதைகளை நாமே தொடர்ந்து உற்பத்தி செய்து கொள்ளலாம். ஒரு தோட்டத்தில் இருக்கும் பப்பாளி மரங்களில் சராசரியாக 10 பெண் மரத்துக்கு ஓர் ஆண் மரம் வீதம் உருவாவது இயற்கை. அவற்றில் திடகாத்திரமான, திரட்சியான, அதிகளவு காய்க்கும் பெண் மரங்களைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அந்த மரத்திலிருக்கும் மொட்டுகளை சிறிய பிளாஸ்டிக் பையை வைத்து, ரப்பர் பேண்ட் மூலம் காற்றுப் புகாதவாறு கட்டிவிட வேண்டும். ஓரிரு நாட்களில் பூ மலர்ந்ததும், அருகிலிருக்கும் ஆண் மரத்தின் பூவிலிருந்து மகரந்தத்தை எடுத்து வந்து, பெண் பூவுக்குள் லேசாக தட்டிவிட்டு, மறுபடியும் பிளாஸ்டிக் பையை வைத்துக் கட்டிவிட வேண்டும். பூ, பிஞ்சாக மாறியதும் பையை எடுத்து விடவேண்டும். இந்தப் பிஞ்சு பழமானதும்... அதிலுள்ள விதைகளை எடுத்து நாற்றுத் தயாரித்துக் கொள்ளலாம். இந்த முறையில்தான் ஆராய்ச்சி நிலையங்களில் விதை உற்பத்தி நடக்கிறது!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick