பனியில் விளையும் தனியா!

2 ஏக்கர்... 3 மாதம்...40 ஆயிரம் லாபம்...

எஸ்.ராஜாசெல்லம்

 பளிச்... பளிச்...

35 ஆண்டுகளாக மல்லி சாகுபடி.
ஐப்பசி மாதம் கடைசி வாரம் விதைப்புக்கு ஏற்றது.
தொழுவுரம் மட்டும் போதும்.

 கொத்தமல்லி இலை மற்றும் தனியா (மல்லி) இரண்டும் சமையலில் தவிர்க்க முடியாத அங்கங்கள். அதன் காரணமாகவே அவற்றுக்கு எப்போதுமே நிலையான சந்தை வாய்ப்பு இருக்கிறது. இதை மனதில் வைத்து, தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தூர், கடகத்தூர், பழைய தர்மபுரி, வெள்ளையக் கவுண்டம்பாளையம், குள்ளனூர் என பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கொண்டைக்கடலையோடு கூட்டுப் பயிராகவும் இதை சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கே கொத்தமல்லி இலைகளுக்காக என்றில்லாமல், பெரும்பாலும் தனியாவை மனதில் வைத்துதான் இதைப் பயிரிடுகிறார்கள். மானவாரிப் பயிராக, இயற்கை முறையில்தான் சாகுபடி நடக்கிறது. அந்த வகையில், 35 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், வெள்ளையக் கவுண்டம்பாளையம் கோவிந்தசாமி. காலை வேளையன்றில் தோட்டத்து வேலைகளில் தீவிரமாக இருந்தவரைச் சந்தித்தபோது... ''எங்க பகுதியில 60 வருஷத்துக்கு மேல கொத்தமல்லி சாகுபடி நடக்குது. கரிசல் பூமியில பனிக் காலத்துல கொத்தமல்லி நல்லா வர்றதால, பனிக் காலம் ஆரம்பிச்சுடுச்சுனாலே... கொத்தமல்லியை விதைச்சு விட்டுடுவாங்க. மூணே மாசத்துல அறுவடை பண்ணி காசு பாத்துடலாம். எனக்கு சொந்தமா ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. நான் வருஷா வருஷம் மானாவாரியா உளுந்து விதைப்பேன். அதை அறுவடை செய்த கையோடு கொத்தமல்லியை விதைச்சிடுவேன்'' என்று முன்னுரை கொடுத்தவர், இரண்டு ஏக்கருக்கான சாகுபடி பற்றி தெளிவாக எடுத்து வைத்தார். அதைப் பாடமாக இங்கே தொகுத்திருக்கிறோம்.

மழைக்குப் பிறகு விதைப்பு!

'கொத்தமல்லி 90 நாள் பயிர். ஐப்பசி மாதக் கடைசி வாரம் விதைப்புக்கு ஏற்ற காலம். தேர்வு செய்த நிலத்தை ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, 4 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து நன்கு உழவு செய்ய வேண்டும். ஐப்பசி மாதம் மழை குறைந்த பிறகு விதைப்பது நல்லது. அதற்கு முன் விதைத்தால்... ஈரப்பதத்தால் சாம்பிராணி நோய் தாக்க வாய்ப்பு உண்டு. நிலம் தயாரான பிறகு, மாடு பூட்டி உழவு செய்துகொண்டே சோளம் விதைப்பது போல தூவி விதைக்க வேண்டும். இரண்டு ஏக்கருக்கு 40 கிலோ விதை தேவைப்படும்.

அதிக பனி... ஆபத்து!

விதைத்த 11ம் நாளில் முளைப்பு எடுக்கும். 30ம் நாள் களை எடுக்க வேண்டும். 40ம் நாளுக்கு மேல் பூவெடுத்து மலரத் தொடங்கும். 80ம் நாளுக்கு மேல் அறுவடைக்குத் தயாராகி விடும். ஆரம்பத்தில் நிலத்தில் இடும் தொழுவுரம் மட்டும்தான். வேறு எந்த ஊட்டமும் கொடுக்கத் தேவையில்ல. தவிர, பனி மட்டும்தான் இதற்கு ஆதாரம். ஆனால், பூவெடுக்கும் சமயத்தில் அதிக பனி இருந்தால், பூக்கள் கருகி விளைச்சல் பாதிக்கும். விளைந்த மல்லிச் செடிகளை கைகளாலேயே அரித்து எடுத்து விடலாம். அறுவடை செய்த செடிகளின் மீது மாடுகளை மிதிக்க விட்டு காய்களைப் பிரித்து எடுக்க வேண்டும். அவற்றை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து மூட்டை பிடித்துக் கொள்ளலாம். தொடர்ந்து மல்லி விதைக்க விரும்பினால்... செடியிலேயே தேவையான அளவுக்குக் காய்களை முற்ற விட்டு விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.’

ஏக்கருக்கு 6 மூட்டை மகசூல்!

மேற்கொண்டு மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்த கோவிந்தசாமி, ''ரெண்டு ஏக்கர் நிலத்துல பன்னெண்டு மூட்டையில இருந்து, இருபது மூட்டை (60 கிலோ மூட்டை) வரை மல்லி கிடைக்கும். பனியால விளைச்சல் பாதிக்காம இருந்தா, சராசரியா பதினாலு மூட்டைக்குக் குறையாமக் கிடைக்கும். போன வருஷம் வரைக்கும் கிலோ 40 ரூபாய்க்குதான் வித்துட்டிருந்துச்சி. இப்போதைக்கு 50 ரூபாய்ல இருந்து 70 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. சராசரி விலையா கிலோ 60 ரூபாய்னு வெச்சிக்கிட்டாலே பதினாலு மூட்டைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். செலவெல்லாம் போக 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம்'' என்றார், உற்சாகமாக.

 படங்கள்: எம். தமிழ்ச்செல்வன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick