திப்பிலி !

வண்டுகளை விரட்டும்...வருமானத்தைத் திரட்டும்... தென்னைக்கு உரமூட்டும் உற்சாக ஊடுபயிர்...!

 என்.சுவாமிநாதன்

 பளிச்... பளிச்...

 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளரும்.
ஆண்டுக்கு 3 அறுவடை.
ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய்.

ஆங்கில மருத்துவமானாலும் சரி, சித்த மருத்துவமானாலும் சரி... அவற்றின் மருந்துத் தயாரிப்பில் திப்பிலிக்கு முக்கிய இடம் உண்டு. இதன் காரணமாக திப்பிலிக்கான சந்தை வாய்ப்பு, ஏறுமுகத்தில் இருப்பதால்... தென்னையில், ஊடுபயிராகத் திப்பிலியை சாகுபடி செய்து வருகிறார்கள், கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் !

பொதுவாக மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படும் திப்பிலி, பேச்சிப்பாறையில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் முயற்சியால், சமவெளிப் பகுதியிலும் சக்கைப் போடு போடுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கொடுப்பைக்குழி. இங்கு இரண்டரை ஏக்கர் தென்னையில் ஊடுபயிராக வாழை மற்றும் திப்பிலியை சாகுபடி செய்து வருகிறார், சகாயதாஸ். இவர், குருந்தன்கோடு வட்டார இயற்கை விவசாயிகள் சங்கச் செயலாளர் மற்றும் மாவட்ட பூமி பாதுகாப்புச் சங்க உதவிச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலும் இருக்கிறார்.

'தொடக்கக் காலங்களில் நெல் சாகுபடிதான் பண்ணிட்டிருந்தேன். அப்ப ஏக்கருக்கு

15 கோட்டை (ஒரு கோட்டை என்பது, 75 கிலோ எடையுள்ள மூட்டையைக் குறிக்கும்) மகசூல் கொடுத்த பூமி இது. ஆனா, நெல்லுக்குக் கட்டுப்படியான விலையில்லை, வேலையாட்கள் கிடைக்கல, அதனால தென்னை விவசாயத்துக்கு மாறிட்டேன்.

அரசாங்கப் பள்ளிக்கூடத்துல தலைமையாசிரியரா இருந்து ஓய்வு பெற்றவன். பணியில் இருக்கும்போதும், விவசாயத்தைத் தொடர்ந்துகிட்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, முழுநேரத்தையும் இதுக்கே ஒதுக்கிட்டேன். கூடுதல் முயற்சியா, இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, முழுசா இயற்கை விவசாயத்துக்கும் மாறி அஞ்சு வருஷமாயிடுச்சி.

மொத்தம் ரெண்டரை ஏக்கர் நிலமிருக்கு. ஒன்றை ஏக்கரில் தென்னைக்கு ஊடுபயிரா... செவ்வாழை, சிங்கம், ஏத்தன், ரசகதளி ரக வாழைகளை நடவு செஞ்சுருக்கேன். ஒரு ஏக்கர்ல மட்டும் தென்னை, வாழைக்கு இடையில திப்பிலியை நடவு செஞ்சுருக்கேன். ஆரம்பத்துல வாழை மட்டும்தான். தோட்டக்கலைத் துறையில திப்பிலி சாகுபடி செய்யச் சொல்லி விதைக்குச்சிகளை இலவசமா கொடுத்தாங்க. சரி, நடவு செஞ்சுதான் பார்ப்போமேனு நட்டேன். ஆனா, மன நிறைவான மகசூல் கிடைச்சு என்னை மகிழ்ச்சியில ஆழ்த்திடுச்சி'' என முன்னுரை கொடுத்த சகாயதாஸ், திப்பிலி சாகுபடி தொடர்பாகத் தந்த தகவல்களைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.

மழைக் காலங்களில் நடலாம்!

திப்பிலியை நடுவதற்கு பட்டம் கிடையாது. ஒரு முறை பயிர் செய்தால்... அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். சாரல் மழை பெய்யும் சமயத்தில் நடவு செய்யலாம். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மே, ஜூன் மாதங்களில் சாரல் இருப்பதால், அந்த சமயங்களில் நடவு செய்யலாம். செம்மண் கலந்த வண்டல் மண் மிகவும் ஏற்றது. முப்பது சென்டி மீட்டர் நீளமுள்ள திப்பிலித் தண்டை வெட்டி, மணல், எரு நிரப்பப்பட்ட பாலித்தீன் பையில் 60 நாட்கள் வைத்திருந்து காலை, மாலை என இருவேளையும் தண்ணீர் தெளித்து வந்தால்... வேர் பிடிக்கும். பிறகு, பாலித்தீன் பையை அப்புறப்படுத்திவிட்டு, தண்டை நடவு செய்யலாம்.

தண்ணீர் தேங்கினால் அழுகிவிடும்!

செடிக்கு, செடி மற்றும் வரிசைக்கு, வரிசை ஐந்து அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு அடி நீள, அகலம் மற்றும் முக்கால் அடி ஆழமுள்ள குழி எடுக்க வேண்டும். அதில், இரண்டு கையளவு நிலத்தின் மேல் மண்ணைப் போட்டு, 500 கிராம் வீதம் தொழுவுரத்தைப் போட்டு, நடவு செய்ய வேண்டும் (ஏக்கருக்கு 600 விதைக் குச்சிகள் தேவைப்படும்). நடவு செய்தவுடன் குழியில் நேரடியாக தண்ணீர் பாய்ச்சாமல், ஒரு வாரம் வரை தினமும் தெளித்து விடவேண்டும். பிறகு, 3 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். திப்பிலிக்கு எப்போதுமே ஈரப் பதம் இருக்கவேண்டும். அதேசமயத்தில் அளவுக்கு அதிகமாகவும் தண்ணீர் தேங்கக்கூடாது. தேங்கினால், வேர் அழுகி விடும்.

தொழுவுரமே போதும்!

திப்பிலியை நடவு செய்த 15-ம் நாள், ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிலோ தொழுவுரம் போடவேண்டும். இதேப்போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொழுவுரத்தை மட்டும் போட்டாலே போதும். இதை பூச்சி, நோய்கள் தாக்குவது இல்லை. இதன் வாசனை, தோட்டம் முழுவதும் வீசுவதால், தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, வாழையை வாட்டும் கூன் வண்டு ஆகிவற்றின் தாக்குதலும் குறைகிறது. களைகளும் அதிகம் முளைப்பதில்லை. அத்தோடு, திப்பிலியின் காய்ந்த இலைகள் நிலத்துக்கு உரமாகவும் ஆகிவிடும்.

ஆறாவது மாசம் அறுவடை!

தொழுவுரமும், முறையான நீர்மேலாண்மையும் செய்தால்... ஆறாவது மாதத்தில் திப்பிலி காய்ப்புக்கு வந்துவிடும். திப்பிலிக் காய்கள், முதலில் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பிறகு, வெண்மை, பச்சை நிறத்துக்கு மாறி, இறுதியில் கருப்பு நிறத்துக்கு வந்துவிடும். அதுதான் அறுவடைக்கு ஏற்றப் பருவம். அந்த நேரத்தில் கையினால் கிள்ளி எடுத்து, ஆறு நாட்கள் வெயிலில் உலர வைத்தால்... தரமான திப்பிலி கிடைத்துவிடும். முதல் அறுவடை முடிந்த பிறகு, நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை என, ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும். ஊடுபயிராக நடவு செய்தால்... ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 100 கிலோ வரை மகசூல் கிடைக்கும். குறைந்தப் பட்சமாக கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அறுவடை முடிந்ததும் சந்தை வாய்ப்பைப் பொறுத்து இருப்பு வைத்து விற்கலாம். உள்ளூர் சித்த மருத்துவக் கடைகளிலேயே வாங்கிக் கொள்கிறார்கள்’

நிறைவாகப் பேசிய சகாயதாஸ், ''திப்பிலிக்கான பராமரிப்புனு பார்த்தா... ரொம்ப சிறுசுதான், ஆனா அது தர்ற வருமானமோ ரொம்பப் பெருசு!' என்றார், உற்சாகம் பொங்க!

இரைப்பைக்கு இதமானது!

 திப்பிலியின் தாவரவியல் பெயர்... 'பைப்பர் லாங்கம்' (Piper longum).திப்பிலியின் காய்களை வறுத்துப் பொடியாக்கி, தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டால்... இருமல், தொண்டை வலி, பசியின்மை போன்ற நோய்கள் குணமாகிவிடும். இரைப்பை மற்றும் ஈரலுக்கும் நல்ல ஆரோக்யத்தை கொடுக்கும்.  

 வேரையும் விற்கலாம்!

திப்பிலி சாகுபடி குறித்து பேச்சிப்பாறை வேளாண் அறிவியல் மையத்தின் இணைப் பேராசிரியர் தங்கசெல்வபாயிடம் கேட்டபோது, 'தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். இதற்கு நிழல் தேவை என்பதால், தனிப்பயிராக நடவு செய்ய முடியாது. வாழையைவிட தென்னைக்கு இடையில்தான் நன்றாக வளரும். 25 அடி இடைவெளியில், நல்ல நீர் வளத்துடன் உள்ள தென்னந் தோப்புகளில் திப்பிலியை நடவு செய்யலாம். அதிக அடர்த்தி இல்லாமல், நிழலும் வெப்பமும் சம அளவு கிடைக்கக்கூடிய இளவயது தென்னைகள் உள்ள தோட்டங்களிலும் நடலாம்.

உரத்தைப் பொறுத்தவரை இயற்கையில் கிடைக்கும் தொழுவுரமே போதுமானது. நன்றாக பராமரித்தால், ஒரு ஹெக்டேருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இருப்பு வைத்து விற்கும்போது, ஈரம் புகாத பைகளில் திப்பிலியைச் சேமித்து வைக்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் பூஞ்சணம் தாக்கி வருவாய் இழப்பு ஏற்படும்.

அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். அதன்பிறகு, திப்பிலியின் வேரையும் விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் இருந்து 2 டன் வேர் கிடைக்கும். கிலோ 20 ரூபாய் என்று விலை வைத்து, சித்த மருத்துவ நிறுவனங்கள் வாங்கிக் கொள்கின்றன. இதன் மூலம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆந்திராவில் வேர்களுக்காகவே திப்பிலி சாகுபடி செய்யப்படுகிறது'' என்று சொன்ன தங்கசெல்வபாய்,

''திப்பிலி சாகுபடியில் இறங்கும் முன்பாக... உள்ளூர் சந்தையில் அதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உறுதிபடுத்திக் கொள்வது மிகமுக்கியம்' என்ற எச்சரிக்கை குறிப்போடு முடித்தார்.

தொடர்புக்கு, தங்கசெல்வபாய், அலைபேசி: 04651-281759.    

 

தொடர்புக்கு
சகாயதாஸ், அலைபேசி: 97516-68745.
படங்கள்
ரா. ராம்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick