'இது பணம் காய்க்கும் பந்தல்..!'

பங்கமில்லாமல் வருமானம் கொடுக்கும், ஜீரோ பட்ஜெட் பாகல்..!

 ஜி.பழனிச்சாமி

 பளிச்... பளிச்...

 200 நாள் பயிர்.
மார்கழிப் பட்டத்தில் 20 டன் மகசூல்.
வைகாசிப் பட்டத்தில் 30 டன் மகசூல்.

பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல், எப்போதுமே சந்தையில் நிலையான விற்பனை வாய்ப்புள்ள காய்கறிகளில் பாகற்காயும் ஒன்று. இந்த வாய்ப்பை, சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பந்தல் சாகுபடி செய்யும் பலரில்... தொடர்ந்து பாகல் சாகுபடியில் ஈடுபட்டு வருபவர்... கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை கிராமத்தைச் சேர்ந்த சி. திருமலைசாமி.

ஏமாற்றிய திராட்சை... நம்பிக்கையூட்டிய பாகல்!

காலை வேளையன்றில் தோட்டத்திலிருந்த திருமலைசாமியைச் சந்தித்தோம். ''எங்களுக்குப் பத்து ஏக்கர் நிலம் இருக்கு. நல்ல செம்மண் பூமி. அதோட கிணத்துல தண்ணியும் நல்லா இருக்கறதால தொடர்ந்து விவசாயம் பாத்துக்கிட்டுருக்கோம். என்னோட மனைவி சரஸ்வதி கூடமாட உதவியா இருக்கறாங்க. 5 ஏக்கர் நிலத்துல தென்னை மரங்க இருக்குது. மீதி 5 ஏக்கர் நிலத்துல பாகல், வாழை, தக்காளினு சாகுபடி செய்றோம்.

நாலஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒரு ஏக்கர்ல பந்தல் போட்டு திராட்சை சாகுபடி பண்ணேன். பெரியளவுல விளைச்சல் இல்லை. நம்ம ஏரியாவுக்கு அது சரிப்பட்டு வராதுனு அப்படியே தோட்டத்தை அழிச்சிட்டேன். ஆனா, அதுக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிச்சுப் போட்ட பந்தலைப் பிரிக்க மனசில்ல. அதையே கொஞ்சம் திருத்தம் பண்ணி, பாகல் சாகுபடியில இறங்கினேன். நல்ல விளைச்சல் கிடைச்சுது. பாகலுக்கு எப்பவுமே பங்கமில்லாம விலை கிடைக்கிறதால நாலு வருஷமா தொடர்ந்து அந்த சாகுபடியைப் பண்ணிக்கிட்டிருக்கேன். வைகாசிப் பட்டத்துல ஒரு தடவை, மார்கழிப் பட்டத்துல ஒரு தடவைனு ரெண்டு தடவை பாகல் போட்டுடுவேன். அதனால வருஷம் முழுசும் என் தோட்டத்துல பாகல் இருக்கும்'' என்று முன்னுரை கொடுத்தவர், ஒரு ஏக்கருக்கான சாகுபடி விவரத்தைச் சொன்னார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

எட்டடி உயரத்துக்குப் பந்தல்!

''பாகலுக்கு 200 நாட்கள் வயது. செம்மண்ணில் நன்கு வளரும். இதற்கு மார்கழி மற்றும் வைகாசிப் பட்டங்கள் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தில்

10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து, நன்கு உழவு செய்ய வேண்டும். கல்தூண்கள், மூங்கில்,பந்தலுக்கான கனமான கட்டுக் கம்பி... இவற்றைப் பயன்படுத்தி 8 அடி உயரத்துக்குப் பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும். மூங்கில்களை ஊன்றுவதற்கு முன்னர், அடிப்பகுதியில் தார் அல்லது வர்ணம் பூசி விட்டால் கரையான் பிடிக்காது.

பூச்சிகளை விரட்ட சுரைக்காய்!

பந்தல் அமைத்த பிறகு, 5 அடி இடைவெளியில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, கொத்து மூலம் லேசாகக் கொத்தி பாகல் விதைகளை விதைத்து, மண்ணால் மூடி, ஒரு மணி நேரம் சொட்டுநீர்ப் பாசனம் செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 8 அடி, விதைக்கு விதை 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். 1 ஏக்கருக்கு 600 கிராம் விதைகள் தேவைப்படும்.

பாகல் நடவுக்குப் பிறகு, தோட்டத்தைச் சுற்றிலும் நெருக்கமாக உயிர்வேலி போட்ட மாதிரி 50 கிராம் நாட்டுச் சுரைக்காய் விதைகளை விதைத்துவிட வேண்டும். இந்தச் செடியில் இருந்து வீசும் நாற்றம் காரணமாக பாகல் தோட்டத்துக்குள் பெரும்பாலும் பூச்சிகள் வருவதில்லை.

ஜீவாமிர்தம் மட்டுமே போதும்!

விதைப்பில் இருந்து தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்சினால், போதுமானது. மாதம் இருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில், வடிகட்டிய ஜீவாமிர்தக் கரைசலை சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும். விதைத்த

15 நாட்களுக்கு ஒரு முறை 500 கிலோ தொழுவுரத்தைப் பிரித்து செடிகளுக்கு அருகில் இட வேண்டும் (ஒரு செடிக்கு முக்கால் கிலோ வீதம்). தொடர்ந்து ஜீவாமிர்தம் பாய்ச்சும் வசதி இருந்தால்... அது மட்டுமே போதுமானது. தொழுவுரம் இடத் தேவையிருக்காது.

60 நாளுக்கு மேல் அறுவடை!

விதைத்த 40-ம் நாளுக்கு மேல் கொடிகள் படரத் தொடங்கும். அந்த சமயத்தில் சணல் கயிறு மூலம் கொடிகளைப் பந்தலில் ஏற்றி விட வேண்டும். பக்கவாட்டில் படரும் கொடிகளைக் கிள்ளிவிட வேண்டும். அப்போதுதான் விரைவாகப் பூ எடுக்கும். 50-ம் நாளுக்கு மேல் பூ எடுத்து, பிஞ்சுகள் பிடிக்கத் தொடங்கும். இது, சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளை ஈக்கள் மற்றும் காய்ப்புழுக்கள் ஆகியவை தாக்குவதற்கு வாய்ப்புள்ள நேரம். அப்படி அவற்றின் தாக்குதல் தென்பட்டால்... 500 மில்லி ஆர்கானிக் பூச்சிக்கொல்லியை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

60-ம் நாளுக்கு மேல் கொஞ்சமாகக் காய்கள் கிடைக்கத் தொடங்கும். 80-ம் நாளுக்கு மேல் முழுஅளவில் காய்கள் கிடைக்க ஆரம்பிக்கும். 3 நாட்களுக்கு ஒரு பறிப்பு எனத் தொடர்ந்து, 120 நாட்களில் 40 பறிப்புகளுக்கு மகசூல் எடுக்கலாம்.''

மார்கழிப் பட்டத்தில் மகசூல் குறையும்!

திருமலைசாமி சாகுபடிப் பாடத்தை முடித்தவுடன், வருமானம் மற்றும் மகசூல் பற்றிப் பேச ஆரம்பித்தார், அவருடைய மனைவி சரஸ்வதி. ''மார்கழிப் பட்டத்துல விதைச்சா மாசி மாசக் கடைசியில இருந்து ஆனி மாச மத்தி வரைக்கும் அறுவடை பண்ணலாம். இந்தப் பட்டத்துல விளைச்சல் கம்மியாத்தான் கிடைக்கும். ஒரு பறிப்புக்கு 400 கிலோவுல இருந்து 600 கிலோ வரை காய் கிடைக்கும். மொத்தமா 20 டன் அளவுக்குத்தான் மகசூல் கிடைக்கும். ஆனா, அறுவடை சமயத்துல சந்தையில பாகல் வரத்து கம்மியா இருக்கறதால, இந்தப் பட்ட பாகலுக்கு நல்ல விலை கிடைக்கும். கிலோ 30 ரூபாய் வரை கூட விக்கும்.  

வைகாசிப் பட்டத்துல விதைச்சா, பறிப்புக்கு 750 கிலோ வரை காய் கிடைக்கும். மொத்தமா 30 டன் வரை மகசூல் கிடைக்கும். அதேசமயம், இந்தப் பட்டத்துல வரத்து அதிகமா இருக்கறதால கிலோவுக்கு 10 ரூபாயில இருந்து 20 ரூபாய் வரைக்கும்தான் விலை கிடைக்கும்.

விலை பற்றிக் கவலை இல்லை!

பாகலைப் பொறுத்தவரைக்கும் தக்காளி மாதிரி திடீர்னு விலை சரிஞ்சு, அடிமாட்டு விலைக்குப் போயிடுமோனெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. குறைஞ்சபட்சம் எட்டு ரூபாய் விலை கிடைச்சிடும். அதனால பாகல் போட்டா... கிலோவுக்கு சராசரியா பத்து ரூபாய் நிச்சய விலையா கிடைச்சிடும். அதுவுமில்லாம வியாபாரிக தோட்டத்துக்கே வந்து எடை போட்டு எடுத்துட்டுப் போறதுனால, போக்குவரத்துச் செலவும் மிச்சம்.

இது மார்கழிப் பட்டத்துல போட்டது. இதுவரை12 டன்னுக்கு மேல அறுவடை பண்ணியாச்சு. இன்னும் இருபது பறிப்புக்கு மேல பறிக்கலாம். அதுல எப்படியும் 10 டன்னுக்கு குறையாம மகசூல் கிடைக்கும்.

ஒன்றரை லட்சத்துக்கு மேல் லாபம்!

இதுபோக, பூச்சிகளை விரட்டுறதுக்காக விதைச்சி விட்ட சுரைக்காயிலயும் ஒரு வருமானம் பாத்துடலாம். 200 நாள்ல 2,000 கிலோ அளவுக்கு காய்க கிடைக்கும். இன்னிக்கு நிலைமைக்கு கிலோ நாலு ரூபாய்க்கு விக்குது. இதன் மூலமா 8,000 ரூபாய் கிடைக்கும்.

பாகல்ல குறைஞ்ச அளவா 20 டன் மகசூலுக்கு சராசரி விலையா கிலோவுக்கு 10 ரூபாய்னு வெச்சிக்கிட்டாலே...

2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். எப்படிப் பாத்தாலும், செலவெல்லாம் போக ஒரு ஏக்கர்ல ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிடும்'' என்றார் சந்தோஷமாக.

பந்தல் போட்டா பத்து வருஷம்!

நிறைவாகப் பேசிய திருமலைசாமி, ''ஆரம்பத்துல நான் ஆர்கானிக் உரங்களைப் பயன்படுத்திதான் சாகுபடி பண்ணினேன். இப்போ ஒரு வருஷமா அதை நிப்பாட்டிட்டு கோழிக் குப்பை, தொழுவுரம் ஜீவாமிர்தம்... இதுகள மட்டும்தான் பயன்படுத்திக்கிட்டிருக்கேன். என்கிட்ட நாட்டுமாடுக இருக்கறதால தினமும் தோட்டத்துக்கு ஜீவாமிர்தம் கொடுக்குற மாதிரி தொட்டிகளைக் கட்டி ஏற்பாடு செஞ்சுக்கிட்டிருக்கேன். தொட்டி தயாராயிடுச்சுனா அது மட்டுமே போதும். மத்த தொழுவுரம்கூட தேவைப்படாது.

அதேமாதிரி ஒரு தடவை கல்தூணை வெச்சுப் பந்தல் போட ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும். அது பத்து வருஷத்துக்குத் தாக்குப் பிடிக்கும். ஒவ்வொரு முறைக்கும் விதை ஊன்ற வரிசையை மட்டும் கொஞ்சம் தள்ளிப் போடணும். இப்போ கோவைக்காய்க்கு நல்ல மார்க்கெட் இருக்கறதால ஜீரோ பட்ஜெட் முறையில இன்னொரு ஏக்கர்ல பந்தல் போட்டு கோவைக்காய் சாகுபடியையும் ஆரம்பிக்கப் போறேன்'' என்றார் உற்சாகத்துடன்.

 படங்கள் வெ.பாலாஜி
தொடர்புக்கு திருமலைசாமி, அலைபேசி: 99767-64940

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick