'இயற்கை வாழ்வே... இனிய வாழ்வு’

பாடம் சொல்லும் நல்வாழ்வு ஆசிரமம்... த.கதிரவன்

இயற்கை உணவு

'இயற்கை விவசாயத்தை அடியோடு மறந்துவிட்டதால்தான் மனிதனைத் தேடி புதுப்புது நோய்கள் புறப்பட்டு வருகின்றன’ என்று விசனப்படுகிறார்கள், இயற்கை ஆர்வலர்கள். ஆனால், 'இயற்கை விவசாயத்தில் விளையும் உணவுப் பொருட்களை சமைக்காமல், அப்படியே சாப்பிட்டால்தான் முழுமையாக ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்’ என்கிறார், இயற்கை மருத்துவர் நல்வாழ்வு.

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிவசைலம் கிராமத்தில், இருக்கிறது 'நல்வாழ்வு ஆசிரமம்.’ ஆசிரமம் என்றாலே காவி உடை, ஜடா முடி, பூஜை, வழிபாடுகள்தான் மனக்கண்ணில் வந்து போகும். ஆனால், இவற்றில் எதுவுமே இந்த ஆசிரமத்தில் கிடையாது.

'என்ன இது உப்பு, சப்பு இல்லாத ஆசிரமம்?’ என்றுதானே நினைக்கிறீர்கள். ஆமாம்... இது உப்பு, சப்பு இல்லாத ஆசிரமமேதான். இங்கு சமையல் என்பதே கிடையாது. தேங்காய், பழம், காய்கறிகள்... என முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் விளைந்த பச்சைக் காய்கறிகளையே உணவாகச் சாப்பிட்டு வருகிறார்கள் ஆசிரமவாசிகள்.

இயற்கையை அடிப்படையாகக் கொண்ட விவசாயம், உணவு, வாழ்வியல் கருத்துக்களை உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில், 1969-ம் ஆண்டு புலவர் ராமகிருட்டிணன் என்பவரால் துவங்கப்பட்டது, இந்த ஆசிரமம். 33 ஏக்கர் பரப்பளவில், தென்னை, வாழை, மா, கொய்யா, பலா... என பார்க்கும் இடமெல்லாம் சிரிக்கும் பசுமை, ஆசிரமத்துக்கு அழகு சேர்க்கிறது.

'சமைத்து உண்பது தற்கொலைக்குச் சமம்’ என்ற கொள்கையையே பிரதானமாக வலியுறுத்தும் இந்த ஆசிரமத்தில் எங்கு திரும்பி னாலும், ஓங்கி உயர்ந்த பழ மரங்கள்தான். உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படையான 'இயற்கை உணவு’ குறித்த துண்டுப் பிரசுரங்கள், புத்தக வெளியீடு போன்ற பிரசாரங்களோடு... இயற்கை மருத்துவச் சிகிச்சைகளும் இங்கே அளிக்கப்படுகின்றன. வெளியூரில் இருந்து ஆசிரமத்துக்கு வருகை தரும் பெரும்பாலானோர்கள், இங்கேயே தங்கியிருந்து இயற்கை உணவுகளை உண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.

தற்போது ஆசிரமத்துக்குத் தலைமை ஏற்று நடத்திவரும் இயற்கை மருத்துவர் நல்வாழ்வு, ''இயற்கை கொடுத்திருக்கும் எல்லா செல்வங்களையும் மனம் போன போக்கில், அனுபவித்து அழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன். விவசாய உற்பத்தியைப் பெருக்க செயற்கை உரங்களைப் பயன்படுத்தி, நிலத்தைப் பாழாக்கி விட்டோம். 'பூச்சிகளிடம் இருந்து பயிரைக் காக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டு ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து உணவுப் பொருட்களையும் நஞ்சாக்கி விட்டோம்.

கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் பழுது உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மூலக் காரணமாக இருப்பவை செயற்கைப் பூச்சிக்கொல்லிகளும், ரசாயன உரங்களும்தான். சமீபத்தில், எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லியின் விஷத்தன்மை பற்றி பேசப்பட்டு, அதற்கு தடை விதித்துள்ளனர். ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் அனைத்துமே மனித உயிர்க்கொல்லிகள்தான்'' என்று ஆவேசப்பட்ட நல்வாழ்வு, தொடர்ந்தார்.

''இங்கே இருக்கும் பழமரங்கள் அனைத் துக்கும் மாட்டுச் சாணம், கொழுஞ்சி, ஆவாரை இலை, விராலி இலைகளைத்தான் உரமாக இடுகிறோம். அவ்வப்போது குளத்துக் கரம்பை மண் அடிப்போம். மரங்களில் இருந்து உதிரும் இலைச் சருகுகளை அப்படியே கூட்டியெடுத்து அந்தந்த மரங்களின் அடியிலேயே போட்டு விடுவோம். தென்னை மரங்களில் இருந்து விழும் மட்டைகளை இந்தச் சருகுக் குப்பைகள் மேல் போட்டு மூடி விடுவோம். அதனால், மரத்துக்குப் பாய்ச்சும் தண்ணீர் சூரிய வெப்பத்தால் சீக்கிரம் ஆவியாகிடாமல், நிலத்தில் ஈரம் இருந்து கொண்டே இருக்கும். இலை, மட்டைகளெல்லாம் மட்கி நல்ல உரமாகி விடும்.

பப்பாளி, வெள்ளரி.... என அனைத்து விதைகளையும் காய வைத்து, பத்திரப்படுத்திக் கொள்வோம். இப்படி இயற்கையாக வெயிலில் காயும் விதைகள் பூஞ்சை பிடிப்பதில்லை. ஒவ்வொரு மரத்தின் அடியிலும் சிறு துளையுள்ள குடத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து விடுவோம். அதன் மூலம் சொட்டுநீர்ப் பாசனம் போல கசிந்துகொண்டே இருக்கும். இதனால் தண்ணீரையும் மிச்சப்படுத்தலாம்.

இயற்கை உரங்கள் இட்டால்... பயிர்களில் பூச்சிகளின் தொல்லையும் பெரிய அளவில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், இயற்கைப் பூச்சிவிரட்டிகள் மூலம் கட்டுப்படுத்தி விடலாம்.

விருந்தைவிட கஞ்சி நல்லது!

உடல் பலமாக இருந்தால்தான் விவசாய வேலைகளைத் திறம்படச் செய்ய முடியும். ஊருக்கெல்லாம் உணவை உற்பத்தி செய்யும் நமக்கே வடை, பாயாச விருந்து சாப்பிட வசதி இல்லையே என்று விவசாயிகள் ஏங்கக் கூடாது. ஏனெனில், உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், விருந்தைக் காட்டிலும் கஞ்சிதான் நல்லது. கஞ்சியை விடவும் கூழ் மேலானது. இந்தக் கூழைக் காட்டிலும் இயற்கையாகக் கிடைக்கும் தேங்காயும் வாழைப்பழமும் சிறந்தது.

இயற்கையான வைக்கோல், புற்களை சாப்பிடும் காளை எவ்வளவு வலுவாக இருக்கிறது. இயற்கையோடு ஒன்றி வாழும் பறவைகளும் விலங்குகளும் எந்தளவுக்கு ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் சுற்றித் திரிகின்றன. ஆனால், நாகரீகம், விஞ்ஞானம் என்ற பெயர்களில் இயற்கையை விட்டு விலகி ஓடுவதால்தான் மனிதனுக்கு மட்டும் அடுக்கடுக்கான துன்பங்கள்.

கனிகளை உண்டால் பிணியில்லை!

இயற்கையாகக் கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்களை சமையல் என்ற பெயரில், அவித்து, பொரித்து, வறுத்து... ஒன்றுமில்லாத சக்கையாக மாற்றிச் சாப்பிடுகிறார்கள். இதனால், உடம்புக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதோடு, உப்பு, காரம், புளி என்று அதிகப்படியான நச்சுக்களும் உடலுக்குள் சேர்ந்து நோய்களும் வரவழைக்கப்படுகின்றன.

'மனிதன் எதை உண்கிறானோ அதுவாகவே ஆகி விடுகிறான்’ என்பதுதான் உண்மை. அதனால்தான், 'சமைத்து உண்பது தற்கொலைக்குச் சமமானது, கனிகளை உண்டு பிணியின்றி வாழலாம்’ என்ற தத்துவத்தை எடுத்துச் சொல்கிறோம் நாங்கள்'' என்ற நல்வாழ்வு நிறைவாக,  

தேங்காய் துண்டும், வாழைப்பழமும் போதும்!

''ஆரோக்கியமான மனிதனுக்கு ஒருவேளை உணவாக இரண்டு துண்டு தேங்காயும் சில வாழைப்பழங்களுமே போதுமானது. ஆயிரக்கணக்கான வருடங்கள் சமைத்து உண்டு பழகி விட்ட உடம்பை திடுதிப்பென்று இயற்கை உணவுக்குப் பழக்கப்படுத்துவது முதலில், சிரமமாக இருக்கலாம். முதல் கட்டமாக இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட ஆரம்பியுங்கள். அடுத்தக் கட்டமாக பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அப்படியே சாப்பிட்டுப் பழகி இயற்கையோடு இயைந்து வாழுங்கள். பிறகு நோயும் இல்லை.... நொடியும் இல்லை!'' என்று விடை கொடுத்தார்.

 

தொடர்புக்கு இரா. நல்வாழ்வு,
அலைபேசி (செல்போன்): 94430-43074.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick