ஏக்கருக்கு18 ஆயிரம் ரூபாய் மிச்சம்... செலவு குறைகிறது... மகசூல் கூடுகிறது....

இன்ப அதிர்ச்சி தரும் இருமடிப் பாத்தி ! கு. ராமகிருஷ்ணன் ,படங்கள்: ரா. அருண்பாண்டியன்

இருமடிப் பாத்தி... உழவு, உரம் என்று பலவிதமானச் செலவுகளையும் குறைப்பதோடு, கூடுதலான லாபத்தையும் தரக்கூடிய இயற்கையான ஒரு தொழில்நுட்பம். இதன் பலனை, அனுபவித்துப் பார்த்தவர்களால்தான் சிலாகித்துச் சொல்ல முடியும். இதோ சிலாகிக்கிறார், திருச்சி மாவட்டம், துறையூர் தாலூகா, செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவசண்முகம். இவர், வேளாண் பொறியியல் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிக் கொண்டே... விவசாயத்தையும் கையில் எடுத்திருப்பவர். முக்கியமாக, 'இயற்கை விவசாயக் காதலர்' என்பது குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம்!

''எனக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கர்ல நெல் இருக்கு. ரெண்டு ஏக்கர்ல சின்னவெங்காயம் போட்டிருக்கேன். 20 சென்ட் நிலத்துல மஞ்சள், கருணைக்கிழங்கு போட்டிருக்கேன். 5 சென்ட் நிலத்துல காய்கறி போட்டிருக்கேன். அஞ்சு வருஷமா இயற்கை விவசாயம்தான்'' என்று முகவுரை தந்த சிவசண்முகம்,

''எப்பவும் வழக்கமான முறையில பார் பிடிச்சுதான் வெங்காய நடவு செய்வேன். போன முறை, சோதனை முயற்சியா... 75 சென்ட் நிலத்துல மட்டும் இருமடிப் பாத்தி எடுத்து, வெங்காயம் போட்டேன். இயற்கை முறையில் செய்றதால வழக்கமா விளைச்சல் நல்லாவேதான் இருக்கும். இந்தத் தடவை இருமடிப் பாத்திங்கற விஷயத்தையும் சேர்த்து செய்ததால... கூடுதல் மகசூல். இதைப் பார்த்துட்டு, சுத்துப்பட்டு விவசாயிக அசந்துட்டாங்க. நல்ல நிறமாவும் திரட்சியாவும் இருக்கு வெங்காயம். நீர்ச்சத்தும் அதிகமா இருக்கறதால... ரொம்ப நாளைக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும்!

இருமடிப் பாத்தியில் செலவு குறைவு!

வழக்கமான முறையில வெங்காயம் போடுறப்போ... அதிகளவுல பிண்ணாக்கு, மேலுரம்னு ஊட்டம் கொடுக்கணும். அதேமாதிரி களை எடுக்கற செலவும் அதிகமா இருக்கும். இருமடிப் பாத்தி அமைக்கறப்போ செலவு குறையறதோட, வேலையும் குறைவு'' என்றவர், 75 சென்ட் நிலத்துக்கான இருமடிப் பாத்தி சாகுபடி முறை பற்றி விளக்க ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

'தேர்வு செய்த நிலத்தில், முக்கால் அடி ஆழத்துக்கு உழவு ஓட்ட வேண்டும். 20 அடி இடைவெளியில், ஒன்றரையடி ஆழத்தில் தெளிப்புநீர்க் குழாயைப் பதிக்க வேண்டும். தெளிப்புநீர்த் திறப்பான், 3 அடி உயரத்தில் இருக்க வேண்டும். 20 அடி தூரத்துக்கு ஒரு திறப்பான் அமைத்தால் போதும்.

4 அடி அகலம், 25 அடி நீளம், முக்கால் அடி ஆழத்துக்கு மண்ணைப் பறித்து, இருபுறமும் ஒதுக்கி வைக்க வேண்டும். குழியின் உள்ளே கடப்பரையால் குத்தி, மண்ணைக் கிளற வேண்டும். பிறகு, குழிக்குள் பாதி உயரத்துக்கு, கம்பஞ்சக்கை, எள்ளு சக்கை, மக்காச்சோள சக்கை மற்றும் இலை, தழைகள் என அனைத்தையும் போட்டு, அதன் மீது தொழுவுரத்தையும் போட்டு நிரப்ப வேண்டும். அதன்பிறகு, மேல் மண்ணைப் பரப்ப வேண்டும். இப்போது, தரையில் இருந்து முக்கால் அடி உயரத்துக்கு மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டிருக்கும். இதுபோல, இரண்டு அடி இடைவெளியில் வரிசையாகப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பலதானிய விதைப்பு!

பாத்திகளில் சணப்பு, அவுரி, கம்பு, சோளம், எள், பச்சைப் பயறு, தட்டைப் பயறு உள்ளிட்ட பலதானிய விதைகளை சமவிகிதத்தில் கலந்து விதைக்க வேண்டும். 75 சென்ட் நிலத்துக்கும் சேர்த்து மொத்தமாக, 15 கிலோ விதை தேவைப்படும். அனைத்துப் பாத்திகளுக்கும் பொதுவாக... 10 அடி இடைவெளிக்கு ஒரு விதை வீதம் ஆமணக்கு விதையை ஊன்ற வேண்டும். தொடர்ந்து இருபது நாட்களுக்கு ஒரு முறை 7 லிட்டர் அமுதக்கரைசலை, 70 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியின் மீது தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

அமுதக்கரைசல் மட்டும் போதும்!

இரண்டு மாதங்களில் பலதானியப் பயிர்கள் சுமார் 4 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். ஆமணக்குச் செடியை தொந்தரவு செய்யாமல், பலதானியப் பயிர்களை மட்டும் வேரோடு பறித்து, பாத்தி முழுவதும் பரப்ப வேண்டும். அதன் மீது கம்பு, எள், மக்காச்சோளச் சக்கைகளைப் போட்டு மூடாக்கு அமைத்து, அரை அடி இடைவெளிக்கு ஒரு விதை வெங்காயம் என்கிற கணக்கில் ஊன்ற வேண்டும். மூடாக்கின் மீது அழுத்திப் பதியுமாறு ஊன்றினால், போதுமானது. பலதானியத்துக்குத் தெளித்தது போலவே, தொடர்ந்து அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.

நடவு செய்த ஒரு மாதத்துக்குள் களைகள் முளைத்தால், அவற்றைக் கைகளால் நீக்க வேண்டும். அதன் பிறகு பெரும்பாலும் களைகள் முளைப்பதில்லை. நடுவில் நடவு செய்யப்பட்டுள்ள ஆமணக்குச் செடிகள் வெங்காயச் செடிகளை பனி மற்றும் வெப்பத்திலிருந்து காப்பாற்றுகின்றன. தவிர, உதிரும் ஆமணக்கு இலைகள் உரமாகவும் பயன்படுகின்றன. நடவு செய்த 70-ம் நாளுக்கு மேல், சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யலாம்.''

64 ஆயிரம் லாபம்!

சாகுபடிப் பாடத்தை முடித்த சிவசண்முகம், ''75 சென்ட் நிலத்துல இருந்து 4,500 கிலோ வெங்காயம் கிடைச்சுது. ஒரு கிலோ வெங்காயம், 18 ரூபாய்னு வித்ததுல, 81 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. 17 ஆயிரம் ரூபாய் செலவு போக, மீதி 64 ஆயிரம் ரூபாய் லாபம்.

ஊடுபயிரா போட்டிருந்த ஆமணக்கு மூலமா 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். வெங்காயம் அறுவடை முடிஞ்சதும், பாத்தியோட இரண்டு ஒரத்துலயும் மிளகாய் போட்டேன். ஒரே மாசத்துல பூ பூத்து காய்க்கத் தொடங்கிடுச்சு. இப்போ அதுல கடலையையும் நடவு பண்ணப் போறேன்'' என்று மிகவும் உற்சாகமாகச் சொன்னவர், இருமடிப் பாத்தியால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டார்.

கோழிக்கால் நோய் இல்லவே இல்லை!

''இருமடிப் பாத்தியை ஒரு தடவை அமைச்சா, வருஷக் கணக்கா சாகுபடி செஞ்சுக்கலாம். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை மூடாக்கை மட்டும் முழுமைப்படுத்தினா போதும்.

உழவு, அடியுரம், பார் அமைக்குற செலவெல்லாம் மிச்சம். பொதுவா, வெங்காயத்துல செம்பேன் தாக்குதலும், கோழிக்கால் நோயும்தான் பெரிய பிரச்னை. பெரியளவுல மகசூலை பாதிச்சுடும். ஆனா, மேட்டுப்பாத்தி முறையில இந்தப் பிரச்னைகள் கொஞ்சம்கூட இல்லை. அதேமாதிரி மழையால வர்ற பாதிப்புகளும் கம்மிதான்.

வழக்கமான முறையைவிட, ஏக்கருக்கு 18 ஆயிரம் ரூபாய் செலவைக் குறைச்சிருக்கு இந்த இருமடிப் பாத்தி. இனிமே ரெண்டு ஏக்கர்லயும் இருமடிப் பாத்தி அமைச்சுதான் வெங்காயம் பயிர் பண்ண போறேன்'' என்று மகிழ்ச்சியாக விடை கொடுத்தார், சிவசண்முகம்.  

 

தொடர்புக்கு,
சிவசண்முகம்,
செல்போன்: 94433-02650. 


 

ஆறே மாதத்தில் அருமையான வளர்ச்சி!

இருமடிப் பாத்தியில் மஞ்சள் மற்றும் கருணைக்கிழங்கு சாகுபடியும் செய்து வருகிறார், சிவசண்முகம். அதைப்பற்றி பேசியவர், ''பாத்தியோட ரெண்டு ஓரத்துலயும் முக்கால் அடி இடைவெளியில் மஞ்சளும், பாத்திக்கு நடுவுல ஒன்றரை அடி இடைவெளியில கருணைக் கிழங்கும் நடவு பண்ணியிருக்கேன். இதுக்கும் அமுதக்கரைசல் மட்டும்தான் தெளிச்சேன். 11 மாசத்துல வர வேண்டிய வளர்ச்சி, 6 மாசத்துலேயே வந்துடுச்சு. இதைப் பாத்து எல்லாரும் ஆச்சரியப்படுறாங்க. 5 சென்ட்ல இருமடிப் பாத்தி போட்டு கத்திரி, தக்காளி, வெண்டை, சுரைனு மாத்தி மாத்தி காய்கறிகளையும் சாகுபடி செய்துட்டு வர்றேன். இதுலயும் நல்ல விளைச்சல்.

எங்க குடும்பத்துக்கும், தோட்டத்துல வேலை பார்க்குற தொழிலாளர்கள் குடும்பத்துக்கும் சேர்த்து மாசத்துக்கு 750 ரூபாய்க்கு வெளியிலதான் காய்கறி வாங்கிக்கிட்டு இருந்தோம். இப்ப இந்தச் செலவும் மிச்சம்'' என்று சொன்னார்.

 விலை வீழ்ச்சியை எப்படி எதிர் கொள்ளலாம் ?

வெங்காயம் விளைந்து குவிந்தாலும், அடிக்கடி அலைபாயும் விலைதான் கவலை தரும் விஷயம். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ந.அஜ்ஜனிடம் கேட்டபோது, ''புரட்டாசி 15-ம் தேதிக்குப் பிறகு விதைப்பு செய்து, கார்த்திகை மாதக் கடைசியில் அறுவடை செய்து, மார்கழி 15-ம் தேதிக்குள் விற்பனை செய்தால், நல்ல விலை கிடைக்கும்'' என்று சொன்னார்.

 பட விளக்கம் !

கடந்த இதழில், 'பட்டையைக் கிளப்பும் பல பயிர் சாகுபடி!’ என்ற தலைப்பில் இடம் பெற்ற கட்டுரையில், சம்பந்தபட்ட விவசாயி பழனிச்சாமியின் புகைப்படங்களுக்குப் பதிலாக... இந்த இதழில் வெளியாகிருக்கும், இந்தக் கட்டுரையில் வரும் சிவசண்முகத்தின் படங்கள் தவறுதலாக இடம்பெற்றுவிட்டன. இங்கே பழனிச்சாமியின் படத்தைப் பிரசுரித்திருக்கிறோம்.

இதைப் பற்றி பேசிய பழனிச்சாமி, ''பசுமை விகடன் இதழ்ல என்னோட விவசாயம் பத்தின செய்தி பதிவாகணும்கிறதுதான் என்னோட கனவு. புகைப்படங்கள் மாறினாலும்... கருத்து அத்தனையும் சரியா பதிவாகியிருக்கு. அதையெல்லாம் படிச்சுட்டு, ஏராளமான விவசாயிங்க போன்ல கூப்பிட்டுட்டே இருக்காங்க. பல பயிர் சாகுபடியில் இப்படியரு சாதனையை நான் படைக்கக் காரணமே பசுமை விகடன்தான்'' என்று சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick