''கூட்டு மரங்களால் கூடுதல் லாபம்!''

புயல் கடந்த பூமிக்கு... பொன்னான யோசனைகள்... காசி. வேம்பையன்

ஆலோசனை

தானே’ புயலின் கோர தாண்டவத்தால், கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதத்துக்குள்ளாகிக் கிடக்கின்றன பலா, முந்திரி மரங்கள். தப்பிப் பிழைத்திருக்கும் மரங்களைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக இயற்கை விவசாய வல்லுநர்கள் மூன்று பேரை 'பசுமை டாக்டர்'களாக அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றது 'பசுமை விகடன்'. மரங்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து, அந்த மூவரும் விவசாயிகளுக்கு நேரடியாக தந்த ஆலோசனைகளை 'தண்ணீரைத் தேக்கினால்... தாராள விளைச்சல்!' என்ற தலைப்பில் கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். மேற்கொண்டு... மரங்களைத் தொடர்ந்து பராமரிப்பது; புதிய கன்றுகளை நடுவது; இயற்கை முறையிலேயே பராமரித்து நல்ல லாபத்தை ஈட்டுவது தொடர்பாக, 'பசுமை டாக்டர்'கள் மூவரும் தந்த ஆலோசனைகள் இங்கே இடம் பிடிக்கின்றன...

குருணை மருந்து கூடாது !

ஐம்பது ஆண்டுகளாக முந்திரி சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம், முத்தாண்டிக்குப்பம் ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் கூடியிருந்த முந்திரி விவசாயிகளுக்குச் சொன்ன ஆலோசனைகளைப் பாடமாகவே தொகுத்திருக்கிறோம். அவை- 'கோடைக் காலத்தில் முந்திரிச் செடிகளை நடவு செய்யக் கூடாது. மழை கிடைக்கும் மாதங்களான ஆடி, ஆவணிதான் நடவுக்கு ஏற்றவை. ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள், நடவின்போது குருணை மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அதனால், மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் நுண்ணுயிர்கள் இறந்து விடுகின்றன. இது மகசூலை பாதிக்கும். எனவே, குருணை மருந்தைத் தவிர்த்துவிட வேண்டும்.

நடவு செய்யும் குழிகளில், தலா 2 கிலோ மண்புழு உரம் அல்லது ஒரு கூடை தொழுவுரம் இட்டு சிறிய சருகுகள், சின்னச்சின்ன குச்சிகளைப் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மாதம் வரை ஆறவிட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் 100 கிராம் வேப்பங்கொட்டைத் தூள் இட்டு முந்திரிக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

12 அடி இடைவெளி !

முந்திரியைப் பொறுத்தவரை நாட்டுச்செடிகளைவிட, ஒட்டுச் செடிகள்தான் நன்கு காய்க்கின்றன. அதனால், ஒட்டுச் செடிகளைத் தேர்வு செய்வது நல்லது. ஏற்கெனவே உள்ள மரங்களுக்கு இடையே 10 அடி இடைவெளி கொடுத்துத்தான் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். புதிதாக நடவு செய்வதாக இருந்தால், 12 அடி இடைவெளி தேவை. ஒட்டு முந்திரி, மூன்று அல்லது நான்கு வருடங்களில் காய்ப்புக்கு வந்து விடும். ஆனால், மரங்கள் நன்கு நெருக்கமாக வளர்ந்து அதிகளவில் காய்க்க, கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிடும். அதுவரை கிடைக்கிற மகசூலை எடுத்துக் கொண்டு, பூச்சிகளால் தாக்கப்படும் மரங்கள், சரியாகக் காய்க்காத மரங்கள்... அனைத்தையும் கழித்துவிட வேண்டும்.

கூட்டு மரங்களால் கூடுதல் லாபம் !

முழுக்க முந்திரி மரங்களை மட்டும் நம்பி இருக்காமல், அவற்றுக்கு இடையில் வேம்பு, தேக்கு, வேங்கை, செம்மரம் (செஞ்சந்தனம்) போன்ற மரங்களை நடலாம். 20 வருடங்கள் கழித்து, ஒரு செம்மரம், ரூபாய் 1 லட்சத்துக்கு விலை போகும். மற்ற ஒவ்வொரு மரமும் 20 வருடங்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகும்.

கடலூர் மாவட்டம் வறட்சிப் பகுதியாக இருந்தாலும், பெரும்பாலும் யாரும் மழைத் தண்ணீரைத் தேக்கி வைப்பதில்லை. ஐம்பதடி இடைவெளியில் வரிசையாக வரப்பு கட்டி, மழை நீரைத் தடுத்துத் தேக்கி வைக்கலாம். அதனால், நிலத்தடி நீர் பெருகுவதோடு, மரங்களின் விளைச்சலும் அதிகமாகும்.

மாதம் ஒருமுறை, 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து தெளித்துவிட வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இதேபோல பஞ்சகவ்யாவையும் தெளித்துவிட வேண்டும். இதனால், பூச்சித்தாக்குதல் குறைவதோடு, காய்ப்பும் அதிகரிக்கும். வருடத்துக்கு ஒரு முறை தொழுவுரம் வைக்க வேண்டும்.

காற்றைத் தடுக்க மூங்கில் !

வரும்காலங்களில் புயல் பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விவசாயிகள் எடுக்க வேண்டும். முதலில் காற்றைத் தடுக்கும் வேலிகளை அமைக்க வேண்டும். தோட்டத்தின் வேலி ஓரத்தில் முள்ளில்லா மூங்கில் கன்றுகளை

5 அடி இடைவெளியில நடவு செய்ய வேண்டும். இது காற்றைத் தடுத்து விடும். ஐந்தாண்டுகளில் மூங்கில் மூலமாகவும் வருமானம் கிடைக்கும்.'

சுள்ளிக் குச்சிகள் சிறந்த உரம் !

ஞானப்பிரகாசத்தைத் தொடர்ந்து பேசிய மதுரை, இயற்கை விவசாய ஆலோசகர் செந்தில்நாயகம், ''இயற்கை உரத்தை இன்னொரு வழி மூலமாவும் முந்திரிக்குக் கொடுக்கலாம். ஒவ்வொரு மரத்துல இருந்தும் 5 அடி இடைவெளியில் 5 அடி நீளம், 3 அடி அகலம், 2 அடி ஆழம்கிற கணக்குல குழி எடுத்து, அரையடி உயரத்துக்கு சுள்ளி... அதுக்கு மேல கலவை எருனு மாத்தி மாத்தி போட்டு நிரப்பணும் (தொழுவுரம் - 100 கிலோ, ஊற வைத்த கடலைப்பிண்ணாக்கு-

3 கிலோ, தயிர்-2 லிட்டர், நாட்டுச் சர்க்கரை-அரை கிலோ. இதையெல்லாம், 5 லிட்டர் தண்ணீர் விட்டு கலந்து, 3 நாட்கள் நிழல்ல குவிச்சு வெச்சுட்டா... கலவை எரு தயார். இந்த எருவை, பகிர்ந்து ஒவ்வொரு குழிக்கும் பயன்படுத்திக்கலாம்). குழி மேல பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை தண்ணி தெளிச்சுக்கிட்டே வந்தா, மூணு மாசத்துக்குள்ள நல்லா மட்கு உரமாயிடும். அந்தச் சத்துக்களை அப்படியே மரம் எடுத்துக்கும். மரத்தைச் சுத்தி பள்ளம் பறிச்சும் இந்த மட்கைப் போடலாம்'' என்றவர்,

''புயல் காத்துல இருந்து முந்திரியைக் காப்பாத்த... மூங்கில் மரங்களை நடச் சொன்னார் ஞானப்பிரகாசம் ஐயா. அதேபோல வேலி ஓரங்கள்ல பனை, பரம்பை முள், கலாக்காய், நாட்டுக்கருவேல், வெள்ளைக்கருவேல்... மாதிரியான மரங்களையும் முக்கோண முறையில் வளர்க்கலாம்'' என்றும் தன் பங்குக்கு ஆலோசனை தந்தார் செந்தில்நாயகம்.

கடலூர் மாவட்டத்தின் சா. நெல்லித்தோப்பு கிராமத்தில், பலா மரங்களைக் காப்பாற்றுவதற்காக, இயற்கை முறையில் பலா சாகுபடி செய்து வரும் சிவகங்கை மாவட்டம், கல்லுவளி கிராமத்தைச் சேர்ந்த ஆபிரகாம் நிறைய யோசனைகள் தந்தார். அவை, கடந்த இதழில் இடம்பிடித்தன. மேற்கொண்டும் பேசிய ஆபிரகாம், ''பொதுவா, பலா மரத்துல நோய் அதிகமா தாக்காது. பிஞ்சு பருவத்துல காய்ப்பூச்சி தாக்கறதுக்கு வாய்ப்பிருக்கு. ரெண்டு லிட்டர் தண்ணியில ஐம்பது கிராம் வேப்பம்பிண்ணாக்கை நல்லா ஊற வெச்சுத் தெளிச்சா, காய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்திடலாம். காப்பர் சத்து குறைஞ்சா, மரத்துல பூஞ்சணம் தென்படும். அப்படி இருந்தா, மரத்தை சுத்தி, துத்திச் செடியை வளர்த்து மடக்கி உழுதுட்டா சரியாகிடும்'' என்று இயற்கைத் தீர்வையும் சொல்லி, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

பசுமைக்கு நன்றி !

அனைத்து ஆலோசனைகளையும் கேட்டு முடித்தபின் முத்தாண்டிக்குப்பம் விவசாயிகளின் சார்பாக நம்மிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ''தக்க சமயத்துல வல்லுநர்களை அழைச்சிட்டு வந்து எங்களுக்கு ஆலோசனை கொடுத்திருக்கீங்க. இந்த ஆலோசனைகள் எங்களை கண்டிப்பா கைத்தூக்கி விடும்னு நம்புறோம். இந்தத் தொழில்நுட்பங்களை உடனடியா செஞ்சு பாக்கிறோம். எங்களோட பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்டு, எங்களைத் தேடி வந்து ஆலோசனை கொடுத்த பசுமை விகடனுக்கு நன்றி'’ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

சா.நெல்லித்தோப்பு விவசாயிகளின் சார்பாகப் பேசிய சந்திரன், முத்தையா இருவரும்... ''உரம், பூச்சிக்கொல்லி இல்லாமலே எப்படி பலா சாகுபடி செய்யலாம்னு விளக்கமா தெரிஞ்சுக்கிட்டோம். உடனடியா தண்ணீர் பாய்ச்சி பலா மரங்களைக் காப்பாத்துறதுதான் முதல் வேலை. எங்க மேல அக்கறையோட ஆலோசனை சொன்ன ஐயாங்களுக்கும், அவங்கள அழைச்சுக்கிட்டு வந்த பசுமை விகடனுக்கும் நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்'' என்றனர், உருகியபடியே!

 

தொடர்புக்கு,

ஞானப்பிரகாசம்,தொலைபேசி: 94428 57292.
செந்தில்நாயகம், செல்போன்: 99651-82001.
ஆபிரகாம், செல்போன்: 98431-85444.
விவசாயிகள்: ராதகிருஷ்ணன் (முந்திரி) செல்போன்: 99768-08844.
சந்திரன் (பலா) செல்போன்: 95514-43667.
முத்தையா (பலா) செல்போன்: 98423-86413.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick