இணைந்து நடத்தும் இயற்கைப் பண்ணை!

டாக்டர்,மருந்துக் கடைக்காரர், மருந்து விற்பனையாளர்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

7 ஏக்கர் நெல், 6 ஏக்கர் முள் இல்லா மூங்கில், வகை வகையான மரங்கள், 2 ஏக்கர் தீவனப்புல், 66 சென்ட் மீன்குளம், 250 நாட்டுக்கோழிகள், 25 மாடுகள், 12 கன்றுக்குட்டிகளோடு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலூகாவில் உள்ள ஆவூர், ஆவுடையார்நத்தம் ஆகிய இரு கிராமங்களும் சந்திக்கும் எல்லையில் அமைந்திருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம், பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இதற்குக் காரணம்... எம்.பி.பி.எஸ் பயின்ற ஆங்கில மருத்துவர் ஒருவருடன், மருந்துக்கடைக்காரர் மற்றும் மருந்து மொத்த விறபனையாளர் ஆகிய இருவரும் கைகோத்து இந்தப் பண்ணையை உருவாக்கியிருப்பதுதான்!

 ''நான் ஒரு டாக்டர். அதனால ரசாயன உரங்களோட பாதிப்பைக் கண்கூடா பார்த்துட்டே இருக்கேன். மருத்துவ ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்துது. கும்பகோணத்துல என்னோட வீடும், கிளினிக்கும் இருக்கு. கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் பார்க் கணும்ங்கற ஆர்வத்துனால, 20 ஆண்டுகளா இந்த ஆவூர் கிராமத்துலயும் ஒரு கிளினிக் வெச்சு, மருத்துவம் பார்த்துக்கிட்டு இருக்கேன். நஞ்சு இல்லா உணவை உற்பத்தி செய்யலாம்கிற எண்ணத்துல, இதே கிராமத்துல மெடிக்கல் ஷாப் வெச்சிருக்கிற அசோக்ராஜ், கும்பகோணத்துல அலோபதி மருந்துகளை மொத்த விற்பனை செஞ்சுட்டு இருக்குற பாலாஜி இவங்களோட நானும் சேர்ந்து இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கியிருக்கோம். மூணு பேருமே நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாத்தி மாத்தி நிலத்தைப் பார்த்துக்கிறோம்' என்று முன்னுரை கொடுத்த மருத்துவர் பாலசுப்ரமணியன், தொடர்ந்தார்.

வேலி ஓரத்தில் மரங்கள்!

'இந்தப் பண்ணை மொத்தம் 17 ஏக்கர்ல இருக்கு. மொத்தமும் களிமண் பூமி. போர்வெல், ஆற்றுப்பாசனம்னு ரெண்டு வசதிகளுமே இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்ன, 13 ஏக்கர் மட்டும் வாங்கி, இயற்கை முறையில 7 ஏக்கர்ல நெல்லும் 6 ஏக்கர்ல முள்இல்லா மூங்கிலும் சாகுபடி செஞ்சோம். வேலி ஓரத்துல வேங்கை, மகோகனி, மருது, தேக்கு, குமிழ் உள்ளிட்ட 100 மரங்களும், 90 தென்னையும் நடவு செஞ்சோம். அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் இருந்து சாணம், மாட்டுச் சிறுநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தினோம். முதல் வருஷம் வெற்றிகரமா அமைஞ்சுது. நெல்லுல எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைச்சுது. முள்இல்லா மூங்கில் உள்ளிட்ட எல்லா மரப்பயிர்களுமே நல்லா உயிர்பிடிச்சு, செழிப்பா வளர்ந்துட்டிருக்கு.

போன வருஷம் நாலு ஏக்கர் நிலம் வாங்கினோம். தலா 33 சென்ட்ல இரண்டு மீன்குளங்கள் அமைச்சோம். ஒரு குளத்துல மட்டும் தரையில் இருந்து 10 அடி உயரத்துல 16 அடி அகலம் 26 அடி நீளத்துக்குக் கொட்டகை அமைச்சி, நாட்டுக் கோழிகளை வளர்க்குறோம். ரெண்டு ஏக்கர்ல கோ4 தீவனப்புல் சாகுபடி செய்றோம். மீதியுள்ள இடத்துல மாட்டுக்கொட்டகை, வைக்கோல் போர், மாடுகள் உலாவும் பகுதி, மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கைகள், இடுபொருட்கள் வைக்கும் அறை எல்லாம் இருக்கு. வேலி ஓரத்துல 400 அகத்தி, 200 மலைவேம்பு மரங்களும் இருக்கு' என்ற பாலசுப்ரமணியன், பண்ணையிலிருக்கும் கோழி, மீன், நெல் பற்றி ஒவ்வொன்றாக விவரிக்க ஆரம்பித்தார்.

கோழிகளுக்கு பஞ்சகவ்யா!

'நாட்டுக்கோழிகள், அகத்திக் கீரையை விரும்பிச் சாப்பிடுது. இதனால், கோழிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் முழுமையா தடுக்கப்படுது. நோய் எதிர்ப்புச் சக்தியோடு ஆரோக்கியமா வளருது. கொட்டகையில அங்கங்க அகத்திக்கீரையைக் கட்டித் தொங்க விட்டுடுவோம். வாரத்துக்கு ரெண்டு தடவை 400 லிட்டர் தண்ணீர்ல ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து வடிகட்டி, கோழிகளுக்கான தண்ணி டேங்க்ல கலந்துவிடுவோம். இது 250 கோழிகளுக்குப் போதுமானதா இருக்கு. நாட்டுக்கோழிகள் இதை விரும்பிக் குடிக்குது. பிறந்த பத்து நாளைக்குப் பிறகுதான் குஞ்சுகளுக்கு பஞ்சகவ்யா கொடுக்குறோம். இப்படி அகத்தி, பஞ்சகவ்யா கொடுக்குறதுனால, கோழிகளுக்கான தீவனச்செலவு கணிசமா குறையுது.

ஆண்டுக்கு 90 ஆயிரம் கொடுக்கும் கோழிகள்!

ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுளை விலைக்கு வாங்கி, 70 நாள்ல இருந்து 80 நாள் வரை வளர்த்தா... ஒவ்வொரு கோழியும் ஒண்ணுல இருந்து, ஒண்ணரை கிலோ வரை எடை வரும். இந்த அளவுக்கு ஒரு கோழியை வளர்த்தெடுக்க ஒண்ணே முக்கால் கிலோ தீவனம் தேவைப்படுது. முதல் ஒண்ணரை மாசத்துக்கு குஞ்சுத் தீவனம் முக்கால் கிலோ கொடுக்குறோம். அடுத்த ஒரு மாசத்துக்கு கோதுமை தவிடு, அரிசி தவிடு, சோளமாவு சமவிகிதத்துல கலந்து கொடுக்குறோம். ஆக, தீவனத்துக்குனு 50 ரூபாய் செலவாகுது. ஒருநாள் வயசுடைய கோழிக்குஞ்சோட விலை 30 ரூபாய். முதல் 15 நாட்களுக்கு புரூடர்ல வெக்கிறதுக்கான மின்சாரச் செலவு, போக்குவரத்துச் செலவு எல்லாம் சேர்த்து கணக்குப் பார்த்தா, ஒரு கோழிக்கான உற்பத்திச் செலவு 90 ரூபாய். 70, 80 நாள் வயசுல ஒரு கோழி 180 ரூபாய்னு விற்பனை செய்றோம். அப்போ ஒரு கோழி மூலமா 90 ரூபாய் லாபம். இந்த ஒரு வருஷத்துல ஆயிரம் கோழிகளை விற்பனை செஞ்சிருக்கோம். இது மூலம் 90 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சிருக்கு. அடுத்தடுத்த ஆண்டுகள்ல கோழிகளோட எண்ணிக்கையை படிப்படியா அதிகப்படுத்தப் போறோம்.    

கோழிக்கழிவை உண்டு வளருது மீன்!

ஒரு குளத்துக்கு மேலதான் இந்த கோழி ஷெட் இருக்கு. கோழிகள் சாப்பிட்டுட்டு மிச்சம் வைக்கக்கூடிய தீவனக்கழிவுகளும், கோழிகளோட எச்சமும் குளத்துக்குள்ள விழுந்து, மீன்களுக்கு தீவனமாகிடுது. இந்தக் குளத்துல ஜிலேபி மீன்கள் மட்டும்தான் வளர்க்குறோம். இந்த மீன்கள்தான் கோழி எச்சத்துல இருக்குற அதிகமான நைட்ரஜனைத் தாங்கி வளரும். ஆரம்பத்துல ரோகு, கட்லா, மிர்கால், புல் கெண்டை மாதிரியான மீன்களை விட்டப்போ... அதெல்லாம் இறந்துடுச்சு. அதனால, ஜிலேபி மட்டும்தான் இந்தக் குளத்துல வளர்க்கிறோம். இந்த மீன்களுக்கு வேற தீவனம் எதுவுமே போடுறது இல்லை. 750 ஜிலேபி மீன்கள் இந்தக் குளத்துல இருக்கு.

இன்னொரு 33 சென்ட் குளத்துல ரோகு, கட்லா உள்ளிட்ட 750 மீன்களை வளர்க்குறோம். இதுலதான் தினமும் மாடுகளைக் குளிப்பாட்டுவோம். மாடுகளோட உடம்புல இருக்கக்கூடிய உண்ணிகளை, மீன்கள் சாப்பிட்டு சுத்தப்படுத்துது. மாடுக மேல ஒட்டியிருக்கக்கூடிய சாணம் தண்ணீர்ல கலந்து மீன்களுக்கு உணவா பயன்படுது. இந்தக் குளத்துல முதல் ரெண்டு மாசத்துக்கு தினமும் 100 கிராம் கடலைப்பிண்ணாக்கும், 400 கிராம் கோதுமைத்தவிடும் கலந்து போடுவோம். 3ம் மாசத்துல இருந்து 5 நாளைக்கு ஒரு முறை நாலு கிலோ கோதுமைத்தவிடும் ஒரு கிலோ கடலைப்பிண்ணாக்கும் கலந்து போடுவோம். வாரம் ஒரு முறை நாலு கிலோ அரிசியை பொங்கி சாதமா போடுவோம். இந்த ரெண்டு குளங்கள்ல உள்ள மீன்களையுமே 8ம் மாசத்துல பிடிச்சி விற்பனை செஞ்சோம்.

900 கிலோ மகசூலாச்சு. ஒரு கிலோ சராசரியா 120 ரூபாய்னு விலை போச்சு. இதன் மூலமா ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. செலவு போக, 80 ஆயிரம் ரூபாய் நிகர லாபம்!' என்று சொன்னார் பாலசுப்பிரமணியன்.

கழிவுநீரில் தீவனப்புல்!

அடுத்து, நெல் மகசூல் பற்றிய தகவல்களுக்குள் புகுந்தவர், 'குறுவையில ஆடுதுறை43 நவீன ரக நெல்லும், தாளடியில மாப்பிள்ளை சம்பாவும், வாசனை சீரகச் சம்பாவும் சாகுபடி செய்றோம். நவீன ரகம், பாரம்பரிய ரகம் இந்த ரெண்டுக்குமே ஒரே மாதிரிதான் இடுபொருட்கள் கொடுக்குறோம். ஏக்கருக்கு அடியுரமா 250 கிலோ மண்புழு உரம், 100 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, ஒரு டன் மாட்டுஎரு போடுவோம். நடவு செஞ்ச 20ம் நாள், 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிப்போம். 25ம் நாள் 100 கிலோ மண்புழு உரம் போடுவோம். 30ம் நாள் 120 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரோடு கலந்து விடுவோம். இதுபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை அமுதக்கரைசலும், 20 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யாவும் கொடுப்போம்.

7 ஏக்கரில் 210 மூட்டை மகசூல்!

குறுவையில் நவீன ரகம் ஏக்கருக்கு 30 மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் ஆகுது. ஏழு ஏக்கருக்கு 210 மூட்டை கிடைக்குது. ஒரு மூட்டை 900 ரூபாய்னு விற்பனை செய்ததுல ஒரு லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. எல்லா செலவும் போக, 90 ஆயிரம் ரூபாய் லாபம். தாளடியில பாரம்பரிய ரக நெல், ஏக்கருக்கு 950 கிலோ மகசூலாகுது. இதை அரைச்சா, 500 கிலோ அரிசி கிடைக்குது. ஒரு கிலோ அரிசி சராசரியா 80 ரூபாய் வீதம் 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல சாகுபடிச் செலவு, அரவைக் கூலி எல்லாம் போக, 22 ஆயிரம் ரூபாய் நிகர லாபம். மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் லாபம். குறுவை, தாளடி ரெண்டு போகத்தையும் சேர்த்தா... 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது, ஏழு ஏக்கர்ல இருந்து. இதுபோக மாடுகளுக்குத் தேவையான வைக்கோல், தவிடு கிடைச்சுடுது.

மனதை நிறைக்கும் மரக்கணக்கு!

ஏக்கருக்கு ஆயிரம் மரங்கள்னு 6 ஏக்கர்ல 6 ஆயிரம் முள்ளில்லா மூங்கில் மரங்களை வளர்க்குறோம். இதுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைச்சிருக்கோம். இதுக்கும் பஞ்சகவ்யா கொடுக்குறதால செழிப்பா வளர்ந்துகிட்டு இருக்கு. வேலி ஓரத்துல இருக்கற தென்னை, வேங்கை உள்ளிட்ட மற்ற மரப்பயிர்களும் செழிப்பா விளையுது. இன்னும் ரெண்டு அல்லது மூணு வருஷத்துல முள் இல்லா மூங்கில்ல இருந்து ஏக்கருக்கு 50 டன் வீதம் வருஷம்தோறும் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். ஒரு டன் 2 ஆயிரத்து 500 ரூபாய்னு விலை வெச்சுக்கிட்டா...

6 ஏக்கர்ல இருந்து ஏழரை லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். தென்னை, வேங்கை உள்ளிட்ட மரங்களும் இன்னும் சில வருஷங்கள்ல வருமானம் கொடுக்க ஆரம்பிச்சுடும். வேங்கை, தேக்கு, குமிழ்தேக்கு, மகோகனி உள்ளிட்ட மரங்கள்ல இருந்து 20 வருஷங்களுக்குப் பிறகு வருமானம் பார்க்கலாம்' என்ற பாலசுப்ரமணியன்,'முழுக்க இயற்கை முறையிலதான் இந்தப் பண்ணையை நாங்க நடத்திட்டிருக்கோம். பசுமை விகடன்ல வர்ற இயற்கைத் தொழில்நுட்பங்கள் எங்களுக்கு நிறையவே கைகொடுக்குது. நிறைய இயற்கை விவசாயிகளோட தொடர்புகளை ஏற்படுத்தி, அவங்களோட அனுபவங்களையும் நாங்க பயன்படுத்திக்கிட்டு வர்றோம். இப்போதைக்கு இந்தப் பண்ணையில இருந்து வருஷத்துக்கு 4 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது (பால் தவிர்த்து). இது, இப்போதைக்கு பெரிய அளவு லாபம் இல்லை. ஆனா, எதிர்காலத்துல வருமானம் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கு அப்படிங்கறதை உறுதிபடுத்துற லாபம்' என்றார் முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்க!


கட்டுப்படியாகாத பால்...!

மாடு வளர்ப்புப் பற்றி பேசிய பாலசுப்பிர மணியன், 'எங்ககிட்ட 25 மாடுகள் இருக்கு. இதுல 3 நாட்டு மாடுகள். பஞ்சகவ்யா தயாரிப்புக்காக இதை வளர்க்குறோம். மற்றவை கலப்பின மாடுகள். கலப்பின கன்றுக்குட்டிகள் 12 இருக்கு. ஒரு மாட்டுக்கு தினமும் 10 கிலோ அளவுல கோ4 தீவனப்புல்லும், அகத்தியும் கலந்து கொடுக்குறோம். அரிசித் தவிடு, கடலைப்பிண்ணாக்கு, குச்சித்தீவனம், சோளமாவு, கோதுமை தவிடு சமவிகிதத்துல கலந்து 6 கிலோ கொடுக்குறோம். இதுக்கு 100 ரூபாய்க்கு மேல செலவாகுது. கன்றுக்குட்டிகளுக்கு தினமும் அரை கிலோ அடர்தீவனமும், 2 கிலோ பசுந்தீவனமும் கொடுத்துக்கிட்டு இருக்கோம். 18 மாடுகள்ல இருந்து தினமும் 150 லிட்டர் பால் கிடைக்குது. ஒரு தனியார் பால் நிறுவனம் லிட்டருக்கு 23 ரூபாய் விலை கொடுத்துக் கொள்முதல் பண்ணிக்குறாங்க. இதன்மூலமாக, தினமும் 3 ஆயிரத்து 450 ரூபாய் வருவாய் கிடைக்குது. ஆனா, பால் தராத மாடுகள், கன்றுக்குட்டிகள் எல்லாத்துக்கும் சேர்த்து அடர் தீவனத்துக்கான செலவை கணக்குப் பார்த்தா இதுல கொஞ்சம்கூட லாபம் இல்லை. இதனால் நாங்களே நேரடியா மக்கள்கிட்ட பாலை விற்பனை செய்யலாம்னு இருக்கோம். இந்த மாடுகளுக்காக தீவனப்புல்லும் வளர்க்கிறோம். மாட்டுக்கொட்டகையோட கழிவு நீரை, வாரம் ஒரு முறை பாசனநீரோடு கலந்து தீவனப்புல்லுக்குப் பாய்ச்சுறோம். இதைத்தவிர வேற எந்த இடுபொருளும் கொடுக்குறதில்லை'' என்று சொன்னார்.


மாடுகளைக் காக்கும் பஞ்சகவ்யா!

இந்த எம்.பி.பி.எஸ் டாக்டர், தங்கள் பண்ணையில் வளர்க்கும் மாடுகளுக்கு பஞ்சகவ்யா கொடுத்து வருகிறார் என்பது... ஆச்சர்யத் தகவல்! 100 லிட்டர் தண்ணீரில், 3 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து நன்றாக வடிகட்டி, 25 மாடுகளுக்கும் சமவிகிதத்தில் பிரித்துத் தருகிறார் இந்த டாக்டர். மாடுகளுக்கு தண்ணீர் வைக்கும்போது வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் பஞ்சகவ்யா கலந்து கொடுத்தால்... மாடுகளுக்கு நன்கு பசி எடுத்து தேவையான தீனியைச் சாப்பிடும். பஞ்சகவ்யா மூலமாக நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகும் என்கிறார் டாக்டர்.

பகல் நேரங்களில் மாடுகளை அவிழ்த்துவிட்டு, திறந்தவெளியில உலாவ விடுவதோடு... மாட்டுக்கொட்டகையில் கொசுக்களை விரட்டி அடிக்க, மலைவேம்பு இலைகளை மூட்டம் போடுவதையும் செய்து வருகிறார்கள் இந்தப் பண்ணையில். இதற்கு நல்ல பலன் இருக்கிறதாம்!

தொடர்புக்கு,

பாலசுப்ரமணியன், செல்போன்: 9443275972

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick