‘இதோ ஒரு நிஜ தன்னூத்து..!’

விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனம்பிரச்னைசி. ஆனந்தகுமார், படங்கள்: தே. தீட்சித்

'கத்தி’ படத்தில் 'தன்னூத்து’ என்றொரு கற்பனை கிராமம் வரும். ஆனால், நிஜத்திலும் இப்படியொரு கிராமம் இருக்கிறது. அதன் பெயர்... சூரியூர்! திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பின்புறம் அமைந்திருக்கும் அழகிய கிராமம்தான் இந்த சூரியூர். ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன இங்கு, தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரே தொழில் விவசாயம். காவிரி ஆற்றை நம்பி விவசாயம் செய்யும் திருச்சி பகுதியில், சிறு அளவு வாய்க்கால் பாசனம்கூட இல்லாத வானம் பார்த்த மானாவாரி பூமிதான் இந்த சூரியூர். ஆனால், தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்ட போதும் முப்போகம் விளைந்த பூமி. காரணம், இந்த ஊரைச் சுற்றியுள்ள ஏரிகளும், அதிகமான குளங்களும் நிலத்தடி நீரை வற்றாமல் பார்த்துக் கொண்டிருந்ததுதான்.

இதெல்லாம் பழங்கதை. இன்றோ... பரிதாப பூமியாக பரிதவித்து நிற்கிறது சூரியூர்.

இந்த ஊரிலிருக்கும் நீர்வளத்தைச் செயற்கைக்கோள் உதவியுடன் கண்டறிந்த பெப்சி நிறுவனம், இங்கு தனது தொழிற் சாலையை நிறுவ நினைத்தது. இதற்காக அடைக்கலராஜுக்கு (முன்னாள் காங்கிரஸ் எம்.பி.) சொந்தமாக, திருச்சியில் இருக்கும் 'எல்.ஏ. பாட்டிலர்ஸ்’ என்ற  நிறுவனத்துடன் கைகோத்தது பெப்சி. 'பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப் போகிறோம்’ என்று சொல்லி, சூரியூர் ஊராட்சி மன்றத்தில் அனுமதி வாங்கி, 2012ம் ஆண்டு முதல் தொழிற்சாலையைத் துவக்கியது. அடுத்த மூன்றே மாதங்களில் படிப்படியாக விவ சாயக் கிணறுகளின் நீர்மட்டம் குறையத் தொடங்க... விசாரித்தபோதுதான் ஆலைக்குள் அமைக்கப்பட்டுள்ள ராட்சத போர்வெல்கள் தான் காரணம் எனத் தெரிய வந்திருக்கிறது.

'கத்தி’ திரைப்படத்தில் வருவதைப் போல... நிலத்தடி நீரை உறிஞ்சும் பெப்சி நிறுவனத்துக்கு எதிராக ஆண்டுக்கணக்கில் போராடி வருகிறார்கள், சூரியூர் கிராம விவசாயிகள். ஆனால், தொடர் போராட்டங்கள், அதிகார வர்க்கத்தினரின் 'கவனிப்பு’களால் வெளி உலகின் கவனத்துக்கு வராத நிலையில்... 'தண்ணீர் இயக்க’த்தின் மாநில அமைப்பாளர் வினோத்ராஜ் சேஷன், சமூக வலைதளங்கள் மூலம் இப்பிரச்னையை வெளி உலகுக்குக் கொண்டு வந்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பெப்சி ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பும் இளைஞர்களை சமூக வலைதளங்கள் வழியாக ஒருங்கிணைத்த தண்ணீர் அமைப்பு, அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து, சூரியூர் சமுதாயக்கூடத்தில் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, 'தூக்கு போடும் போராட்டம்’ மற்றும் பெப்சி கம்பெனிக்கு செல்லும் சாலைகளை சேதமாக்கும் முயற்சியில் இறங்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.

தண்ணீர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் வினோத்ராஜ் சேஷனிடம் பேசினோம். 'இந்தப்பகுதி மக்களோட போராட்டத்தில் தண்ணீர் இயக்கமும் இணைந்துகொண்டு, உலக தண்ணீர் தினமான மார்ச் 22ம் தேதி பெப்சி கம்பெனிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தோம். அந்தப் போராட்டத்தின்போது தாசில்தார், மற்றும் ஆர்.டி.ஓ ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், எங்களின் கோரிக்கையை ஏற்காமல் கம்பெனிக்கு ஆதரவாகவே பேசினார்கள். தொடர்ந்து தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆதாரங்களைத் திரட்டியதில், அந்த நிறுவனம் அடிப்படையான அனுமதிகள்கூட வாங்காமல் இயங்கி வந்ததைக் கண்டு பிடித்தோம். மாசுக்காட்டுப்பாடு வாரியம் வழங்கிய அனுமதி மார்ச் 31ம் தேதியே காலாவதி ஆகிவிட்டது. இன்று வரை அதை புதுப்பிக்கவில்லை. மொத்தத்தில் இந்த நிறுவனம் சட்டவிரோதமாகச் செயல்படுகிறது. இனி அரசாங்கத்தை நம்பி பலனில்லை என்றுதான் சமூக வலைதளங்களில் மக்கள் ஆதரவைத் திரட்டி வருகிறோம்' என்றார், காட்டமாக.

'இனி, உலகப்போர் ஏற்படுமேயானால், அது நீருக்கான ஒரு போராகவே இருக்குமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல’ என கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அறிவிய லாளர்களும் சமூக அறிஞர்களும் எச்சரித்து வருகின்றார்கள். இதற்கான அறிகுறிகள் பெரிய அளவில்  இப்போது தென்பட ஆரம் பித்துவிட்டன, என்பதைத்தான் காட்டுகிறது சூரியூர்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick