வாழையடி வாழை!

காசி. வேம்பையன்படம்: ரா.ராம்குமார்

வ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடி பற்றிப் பார்த்து வருகிறோம். கடந்த இதழில் சில வாழை ரகங்களைப் பற்றி பார்த்தோம். தொடர்ந்து, வாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி எஸ். உமா மற்றும் முதன்மை விஞ்ஞானி குமார் ஆகியோர்.

ஏற்றுமதிக்கு ஏற்ற ரொபஸ்டா!

உலக அளவில் 'கேவண்டிஸ்’ என்றழைக்கப்படும் ரொபஸ்டா ரகம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. பச்சைவாழை, பச்சபாலே, புஷாவால், மான்ஸ்மரி, ஹரிச்சால், பச்ச அரட்டி போன்ற பெயர்களிலும் இந்த ரகம் அழைக்கப்படுகிறது. ஏற்றுமதிக்கு ஏற்ற இந்த வாழை ரகத்தை அடர்நடவு முறையிலும் பயிரிடலாம். இதற்கு சொட்டு நீர்ப்பாசனம் மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த ரக வாழைப்பழங்களில் வைட்டமின்ஏ மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதன் வயது 12 மாதங்கள் முதல் 13 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 12 சீப்புகள் முதல் 13 சீப்புகளும் 200 பழங்கள் முதல் 220 பழங்களும் இருக்கும். ஒவ்வொரு தாரும் 20 கிலோ முதல் 25 கிலோ வரை எடை இருக்கும். சிறப்பான முறையில் சாகுபடி செய்யும்போது, 40 கிலோ வரை எடை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சுவையும் மணமும் நிறைந்த விருப்பாச்சி!

தமிழ்நாட்டில் விளையும் மலைவாழை ரகங்களில் விருப்பாச்சி ரகம் மக்களால் விரும்பி வாங்கப்படுகிறது. இந்த ரகம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், கீழ்பழனி, சிறுமலை ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகம் மலைப்பகுதியில் விளைவ தால் 'மலைவாழை’ என்றும் அழைக்கப்படுகிறது. 1,200 அடி முதல் 1,500 அடி உயரத்தில் வளர்வ தால் பழங்கள் மணத்துடனும், சுவையாகவும் இருக்கின்றன. சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் போது, சுவை மற்றும் மணம் குறைந்து, புளிப்புச் சுவை அதிகமாக இருக்கும்.

இந்த ரகத்தின் வயது 14 மாதங்கள். விவசாயிகள் வாழையடி வாழையாக பல ஆண்டுகளாக இதை சாகுபடி செய்கிறார்கள்.

மரங்கள் 10 அடி முதல் 12 அடி உயரம் வரை வளர்ந்தாலும்... பழங்கள் குறைவாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தாரிலும் 7 சீப்புகள் முதல் 8 சீப்புகளும், 80 பழங்கள் முதல் 90 பழங்கள் மட்டுமே இருக்கும். ஒவ்வொரு தாரும் 9 கிலோ முதல் 10 கிலோ வரை எடை இருக்கும். இந்த ரகத்தை பல்லாண்டுப் பயிராக சாகுபடி செய்வதால், முடிக்கொத்து நோய், வாடல் நோய், கிழங்கு கூன்வண்டு ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதனால், நோய் தாக்குதல் இல்லாத கிழங்குகளைத் தேர்வு செய்து நடுவதுடன், சரியான பயிர் பாதுகாப்பு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

செம்மண் நிலத்துக்கேற்ற செவ்வாழை!

மக்களால் அதிகமாக விரும்பி வாங்கப்படும் செவ்வாழை ரகம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இந்த ரகத்தை, லால்கேளா, சந்திரபாலே, துளசிமனோகர், செங்கதலி என்றும் அழைக்கிறார்கள். 9 அடி முதல் 10 அடி உயரத்தில் தடித்த தண்டுகளுடன் இருக்கும் இந்த ரக வாழை மரத்தின் தண்டு, இலை, காம்பு மற்றும் பழத்தோல் ஆகியவை செம்மை நிறத்திலேயே இருக்கும். இதன் வயது 15 மாதங்கள் முதல் 16 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 7 சீப்புகள் முதல் 8 சீப்புகளுடன், 80 பழங்கள் முதல் 85 பழங்கள்வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 15 கிலோ முதல் 20 கிலோ வரை எடை இருக்கும். இதற்கு, எல்லா மண்வகைகளும் ஏற்றது என்றாலும், செம்மண் வகைகளில் சிறப்பாக வளரும். மலைப்பிரதேசங்களில் பாக்கு மற்றும் தென்னை மரங்களில் ஊடுபயிராகப் பயிரிடலாம். இந்த ரக வாழையில் அதிகமான வாசனை, நல்ல இனிப்பு, அதிக அளவு வைட்டமின்ஏ சத்துகள் உள்ளன. வாடல் நோய், முடிக்கொத்து நோய் மற்றும் இலைப்புள்ளி நோய், கிழங்கு கூன்வண்டு மற்றும் தண்டுத்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இதைத் தவிர்க்க தரமான கன்றுகளைத் தேர்வு செய்வதுடன், சரியான பயிர்ப் பாதுகாப்பு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

செவ்வாழை ரகங்களில் சடுதி மாற்றத்தால் காய்கள், பச்சை நிறத்திலும், பழமாகக் கனியும்போது மஞ்சள் நிறத்திலும் மாறலாம். இதனை விவசாயிகள் வெண்கதலி, சந்தனவாழை, வெள்ளைவாழை என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர்.

பஜ்ஜிக்கு ஏற்ற மொந்தன்!

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மொந்தன் ரகத்தின் காய்கள் பெரிதாகவும், நுனிப் பகுதி கொண்டை போன்றும் இருக்கும். இந்த ரகம் காறிபாலே, சாறுபாலே, காச்கேளா என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பிடி மொந்தன் மற்றும் ஈரோடு மொந்தன் ஆகிய இரண்டு ரகங்கள் குணங்களிலும், அளவிலும் ஒன்று போல இருந்தாலும், சிறிய வேறு பாடுகள் இருக்கும். மேலும், சாம்பல் பூச்சு இருக்கும் வாழை ரகத்தினை 'சாம்பல் மொந்தன்’ என்கிறார்கள். இந்த ரக வாழைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன. இந்த வாழை ரகங்களின் வயது 10 முதல் 12 மாதங்கள்.

10 அடி உயரம் வரை வளரும். ஒவ்வொரு தாரும் 7 சீப்புகள் முதல் 8 சீப்புகளுடன், 50 காய்கள் முதல் 60 காய்களுடன் இருக்கும். ஒவ்வொரு தாரும் 20 கிலோ முதல் 25 கிலோ எடை இருக்கும். பெரும்பாலும் காயாகவே சந்தைக்கு அனுப்பப்பட்டு, சமையலுக்கே பயன்படுத்தப்படுகிறது. காய்விட்ட 75 முதல் 85 நாட்களில் அறுவடை செய்யலாம். காய்களில் அதிகமான மாவுச்சத்து (ஸ்டார்ச்) இருப்பதால், இனிப்பு குறைவாகத்தான் இருக்கும். தோல் நீக்கிய காய்களைக் காய வைத்து மாவாக மாற்றி, பூரி மற்றும் சப்பாத்தி மாவுகளுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். வாழைக்காய் பஜ்ஜி செய்வதற்கு ஏற்ற ரகம் இது.

நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள பேயன்!

இந்த ரகம் உடலுக்கு அதிகமான குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. இந்த ரக வாழையை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதிகளவில் சாகுபடி செய்கின்றார்கள். இந்த ரகத்துக்கு சப்போட்ட அரட்டி, நுக்கல பொந்தா போன்ற பெயர்களும் உண்டு. இது, 13 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலைகள் கரும்பச்சை நிறத்திலும், சற்று நீளமாகவும் இருக்கும்.

இந்த ரகத்தின் வயது 14 மாதங்கள் முதல் 16 மாதங்கள். ஒவ்வொரு தாரும் 7 சீப்புகள் முதல் 8 சீப்புகளுடன், 45 பழங்கள் முதல் 55 பழங்களுடன் இருக்கும். காய்கள் சாம்பல் பூசியது போன்றும், நன்கு பழுத்த பழத்தின் சதைப் பகுதி ஆரஞ்சு நிறத்தில் சப்போட்டா மணத்துடனும் இருக்கும். இந்தப் பழங்களில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இந்தப் பழங்களை மலமிலக்கியாகவும், சித்த வைத்திய முறையில் மூலநோய்க்கான மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த ரக வாழை மரங்கள் இலைப்புள்ளி நோய் தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மை கொண்டவை.

அடுக்கு மொந்தன், நெய் மன்னன், ஆயிரம்காய் ரஸ்தாளி, மட்டி, நமரை, ராஜாவாழை போன்ற ரகங்களைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick