Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close.

குழந்தைகளுக்கு மட்டி... சமையலுக்கு அடுக்குமொந்தன்!

காசி. வேம்பையன்

வ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி எஸ்.உமா மற்றும் முதுநிலை விஞ்ஞானி எம்.எஸ்.சரஸ்வதி ஆகியோர்.

அதிக நாட்கள் வாடாத அடுக்கு மொந்தன்!

இந்த ரகத்தின் வயது 12 மாதங்கள். 'புளுக்கோ’ என்ற உட்பிரிவைச் சேர்ந்தது. இதை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் பயிரிடுகிறார்கள். கொத்தியா, முத்தியா, சக்கை, சக்கியா, கல்லு என வேறு பெயர்களும் உண்டு. மரம் 8 அடி முதல் 9 அடி உயரம் வரை வளரும். ஒவ்வொரு தாரும் 12 முதல் 14 சீப்புகளுடன், 40 முதல் 50 காய்களுடன் இருக்கும். ஒவ்வொரு தாரும் 20 கிலோ முதல் 25 கிலோ வரை எடை இருக்கும். இதன் காயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். காய்களில் 'ஸ்டார்ச்’ சத்து அதிகமாக இருப்பதால், சிப்ஸ் மற்றும் மாவு தயாரிப்புக்கு ஏற்றது. மற்ற மொந்தன் வாழை ரகங்களைக் காட்டிலும் 2 முதல் 3 நாட்கள் அதிகமாக வாடாமல் தாங்கும் என்பதால், இதற்கு கூடுதல் விலை கிடைக்கிறது. மேலும், இந்த ரக வாழை வறட்சியையும், இலைப்புள்ளி நோயையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

நெய் வன்னன்!

பழம் மற்றும் காய்களுக்காகப் பயன்படுத்தப் படும் இந்த ரகத்தை தஞ்சாவூர் பகுதிகளில் 'வயல் வாழை’ என்றும்; மதுரைப் பகுதிகளில் 'நெய் வன்னன்’ அல்லது 'நெய் மன்னன்’ என்றும்' பண்ணைக்காட்டில் 'நாட்டுவாழை’ என்றும் அழைக்கிறார்கள். இந்த ரக வாழை மரங்கள்  அடர்த்தியாகவும், மிதமான உயரத்துடனும் இருக்கும். இதன் வயது 12 மாதங்கள். ஒவ்வொரு தாரும் 10 முதல் 12 சீப்புகளுடன், 50 முதல் 55 பழங்களுடன் இருக்கும். ஒவ்வொரு தாரும் 18 கிலோ முதல் 20 கிலோ வரை எடை இருக்கும். பழங்கள் சிறியதாகவும், நடுத்தரமாகவும் இருக்கும். தோல், கெட்டியாக இருந்தாலும் பழங்கள் உரிப்பதற்கு எளிமையாக இருக்கும். சதைப்பகுதி கெட்டியாகவும், வெள்ளை நிறத்தில், அதிக சுவையில்லாமலும் இருக்கும்.

அதிகப் பழம் கொடுக்கும் ஆயிரம் காய் ரஸ்தாளி!

இந்த ரகம் பொதுவாக வீட்டுத்தோட்டங்களில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் அதிகமான காய்கள் இருக்கும். பழங்கள் ரஸ்தாளியின் சுவையைப் போலவே இருக்கும். இந்த ரகத்தின் வயது 14 முதல் 15 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் அதிகமான சீப்புகள் இருந்தாலும், 7 முதல் 8 சீப்புகளில் இருக்கும் 80 முதல் 100 பழங்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு தாரும் 25 கிலோ எடை இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்ற மட்டி!

மட்டி வாழை ரகத்தை தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும், கேரள மாநிலத்திலும் அதிகமாக பயிர் செய்கிறார்கள். மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது. தார்களில் பழங்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்புச் சுவையுடன் மணமாகவும் இருப்பதால் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு ஏற்றது. இதன் வயது 11 முதல் 12 மாதங்கள். தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் இருக்கும். ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோ வரை எடை இருக்கும். ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடை இருக்கும். இந்த ரக வாழை வாடல் நோயைத் தாங்கி வளர்ந்தாலும், இலைப்புள்ளி நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாடலைத் தாங்கி வளரும் நமரை!

இந்த வாழை ரகம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கேரள மாநிலத்திலும் சாகுபடி செய்யப்படுகிறது. 5 முதல் 6 அடி உயரம் வளரக்கூடியது. இதன் வயது 9 முதல் 10 மாதங்கள். ஒவ்வொரு தாரும் 4 முதல் 5 சீப்புகளுடன், 30 முதல் 40 பழங்களுடன் இருக்கும். ஒவ்வொரு தாரும் 3 கிலோ முதல் 4 கிலோ வரை எடை இருக்கும். நன்றாக விளைந்த வாழைத்தார்கள் 5 கிலோ வரை எடை இருக்கும். இந்த ரகத்தின் வயது குறைவாக இருப்பதால், பல்லாண்டுப் பயிராக தொடர்ச்சியாக வீட்டுத்தோட்டங்களில் சாகு படி செய்யலாம். இந்த ரகத்தில் இலைப்புள்ளி நோய் தாக்குதல் இருக்கும். ஆனால், வாடல் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.

அதிக சுவை கொண்ட ராஜவாழை!

பழத்துக்காக சாகுபடி செய்யப்படும் இந்த ரகத்தை தமிழ்நாட்டில் தேன்வாழை மற்றும் தேன்கதளி என்றும், ஆந்திராவில் சக்கரகேளி, தெல்லசக்கரகேளி என்றும், வடகிழக்கு மாநிலங்களில் 'பாரத் மோனி’ என்றும் அழைக்கிறார்கள். இந்த ரக வாழை, ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி, ராஜமுந்திரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. மரங்கள், நடுத்தர உயரம் கொண்டவை. பழங்கள் அதிகமான சுவையுடன், வைட்டமின் ஏ சத்துகளைக் கொண்டுள்ளது. அசாம் மாநிலத்தில் பழுத்த பழங்களைக் கையால் கசக்கி, காம்புகளை நீக்கிவிட்டு, ஜூஸ் போல் குடிப்பதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள். இதன் வயது 13 முதல் 14 மாதங்கள். ஒவ்வொரு தாரும் 6 முதல் 7 சீப்புகளுடன், 100 முதல் 110 பழங்களுடன் இருக்கும். தாரில் இருந்து பழங்கள் உதிர்வது குறைவு என்பதால், போக்குவரத்துக்கு எளிதானது. கரிசல் மண் மற்றும் இருமண் பாங்கான மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது.

இலைவாழைக்கு ஏற்ற ரகங்கள்!

இலைவாழைக்கு என தனியான ரகங்கள் கிடையாது. பழத்துக்கும் காய்களுக்கும் பயன்படுத்தப்படும் பூவன், கற்பூரவல்லி, மொந்தன், செவ்வாழை போன்ற ரகங்களை சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு மரத்தையும் சுற்றி இருக்கும் பக்கக் கன்றுகளில் நான்கு முதல் ஐந்து கன்றுகளை விட்டு, அவற்றை முறையாகப் பராமரித்தால் தரமான வாழை இலைகளை அறுவடை செய்யலாம். 5 முதல் 6 மாதங்களில் இலை அறுவடை செய்ய ஆரம் பித்தால் தொடர்ச்சியாக 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் 4 முதல் 5 மாதங்களுக்கு அறுவடை செய்யலாம்.'

கன்றுத் தேர்வு, விதைநேர்த்தி முறைகளைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

- படிப்போம்...

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
முத்தான வருமானம் தரும் சத்தான கீரைகள்!
34 சென்ட்...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close