மண்புழு மன்னாரு

உருளைக்கிழங்கு விவசாயியும்... பிஸினஸ் மேனேஜ்மென்ட் பாடமும்!ஓவியம்: ஹரன்

மாத்தி யோசி

அந்த கிராமம் முழுக்க உருளைக்கிழங்கு விவசாயம்தான். கிழங்கை அறுவடை செய்த உடனே, வடிவத்துக்கு ஏத்தமாதிரி தரம் பிரிச்சு, தனித்தனியா எடை போட்டு, தனித்தனியா மூட்டை கட்டி, சந்தைக்கு அனுப்புறதுதான் எல்லா விவசாயிங்களுக்கும் இருக்கிற முக்கியமான கடமை. இந்த வேலைகளுக்கு ஒருநாள்கூட செலவாகும். ஆனா, ஒரே ஒரு விவசாயி மட்டும் இப்படியெல்லாம் மெனக்கெட்டு தரம் பிரிக்காம.... அறுவடை செய்த கையோட மொத்தமா லாரியில அள்ளிப்போட்டுக்கிட்டு, சந்தைக்குப் போவாரு. மத்த விவசாயிகளைக் காட்டிலும், ஒருநாள் முன்னதா சந்தைக்குப் போறதால, இவருக்கு நல்ல விலையும், ஓய்வும் கிடைச்சுது.

ஒருகட்டத்துல ஊர்ல உள்ள விவசாயிங்க எல்லாம் கூடி, ‘‘நாம, எல்லாரும் விழுந்து, விழுந்து வேலை செய்றோம். இவரு மட்டும், கஷ்டப்படாம லாபம் பார்க்கிறாரு. எப்படினு அவருக்கிட்டயே கேப்போம்னு முடிவு பண்ணி, மறுநாள் காலையில அந்த விவசாயி தோட்டத்துக்குப் போனாங்க. ரொம்ப குஷியா தோட்டத்தை சுத்திக்கிட்டு இருந்தவரு, ஊரு விவசாயிங்கள பார்த்ததும்... ‘‘எல்லாரும் என்னைத் தேடி வந்ததுக்கு நன்றி. முதல்ல மூலிகைத் தேநீர் குடிக்கலாமா?”னு கேட்டுக்கிட்டே, முருங்கை இலை, செம்பருத்தி இலைகளை உருவி, படபடனு மூலிகைத் தேநீர் போட்டுக் கொடுத்தாரு.

‘‘உங்கள பார்க்கும்போதே, எங்களுக்கு இனம்புரியாத சந்தோஷமா இருக்கு. எங்களைவிட, வயசுல சின்னவரு, பட்டணத்துல, பெரிய, பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க. ஆனாலும், எங்களைவிட விவசாயத்தை ரசிச்சு, ருசிச்சு செய்யுறீங்க. இந்த கிராமத்துலேயே பொறந்து, வளர்ந்தாலும், விவசாயத்தை விட்டா, வேற வழியில்லைனு சலிச்சிக்கிட்டேதான் சாகுபடி செய்றோம். நாள் முழுக்க உழைச்சாலும், நல்ல லாபம் கிடைக்கிறதில்ல. ஆனா, எங்களவிட, நீங்க ஜாலியா இருக்கீங்க. குறிப்பா, உருளைக்கிழங்கை நாங்க எல்லாரும், ஒரு நாள் முழுக்க மாங்குமாங்குனு தரம் பிரிக்கிறோம். நீங்க, கஷ்டப்படாம அப்படியே, லாரியில ஏத்தி, நல்ல லாபத்துக்கு விற்பனை செய்யுறீங்க. அந்த ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்’’னு அந்த ஊரு நாட்டாமை கேட்டாரு.

‘‘நம்ம விவசாயிங்க, எல்லாருமே இதைச் செய்ய முடியும். உருளையை அறுவடை செஞ்சு, லாரியில அள்ளிப்போட்டு கரடுமுரடான, மேடுபள்ளமான சாலையில சந்தைக்குப் போவேன். அந்த எட்டு மைல் காட்டுப் பாதையில, லாரி அலுங்கிக் குலுங்கிப் போகும்போது, பொடி உருளைங்க தானாவே அடியாழத்துக்கு இறங்கிடும். நடுவாந்திரமான உருளைங்க நடுவில நின்னுக்கும். கனமான பெரிய உருளைங்க ஜம்முனு மேலே தங்கி நின்னுடும். சந்தைக்குப் போனதும், தரம் வாரியா, கொடுத்துட்டு, பணத்தை வாங்கிட்டு வந்துடுவேன்னு லாப விவசாயி பதில் சொன்னார். சட்டுனு எல்லா விவசாயிகளும் சேர்ந்து, அவரைத் தூக்கி தோள்ல உட்கார வெச்சு கொண்டாடினாங்க.

‘‘அடடா... இவ்வளவு சுலபமான வழிமுறை இருந்தும், இத்தனை வருஷமா கஷ்டப்பட்டுட்டோம். இனி நாங்களும், உங்கள மாதிரியே, சிந்திச்சு விவசாயம் செய்யப் போறோம். இனி இந்த ஊரு விவசாயிங்களுக்கு நீங்கதான் வழிகாட்டினு பாராட்டிட்டு, குஷியா திரும்பி நடைபோட்டாங்க.
இந்தக் கதையை படிக்கும்போது,... எல்லா பிரச்னைக்கும், சுலபமான தீர்வு இருக்கிறதை உணர முடியும். அதனாலதான், இந்த உருளைக்கிழங்கு விவசாயி கதையை வெளிநாடு, உள்நாடுனு பல பல்கலைக்கழகங்கள்ல, பிஸினஸ் மேனேஜ்மென்ட்னு சொல்லப்படுற நிர்வாகவியல் படிக்கிறவங்களுக்குப் பாடமா சொல்லிக் கொடுக்கிறாங்க.

இந்த விவசாயி மாதிரி, நம்ம ஊர்லயும், பச்சை மிளகாய் விவசாயி, இளநீர் விவசாயினு ‘பலே’ விவசாயிங்க பலபேரு இருக்காங்க. மிளகாயை காய வைச்சு, வத்தலா விக்கறதைவிட, பச்சை மிளகாயா வித்தா கூடுதல் லாபம் கிடைக்கும். பச்சை மிளகாயை, நடவு செஞ்ச 60-ம் நாள்ல இருந்து அறுவடை செய்யலாம். அதேசமயம், வத்தல் மிளகாய் அறுவடைக்கு 100 நாள் ஆகும். மீதி 40 நாளுக்கும் தண்ணி பாய்ச்சுற வேலையில இருந்து உரச்செலவு, பூச்சிவிரட்டினு எல்லாம் மிச்சம். அவசர செலவுக்கு பணம் வேணும்னா... அதுக்கு ஏத்தது பச்சை மிளகாய்தான். பொறுமையா பணம் வந்தா போதும்னா... வத்தல் மிளகாய் பக்கம் போகலாம்.

இதே மாதிரிதான், இளநீர் விஷயமும். இளநீரை சீக்கிரமா வெட்டி, வித்துடலாம். தேங்காயா விற்கறதுக்கு மாசக் கணக்குல காத்திருக்கணும். தேங்காய் ஒண்ணு பத்து ரூபாய்க்கு வித்தாலே பெரிய விஷயம். அதேநேரம்... இளநீர் 20 ரூபாய்க்குக் குறைஞ்சு விலை போகாது. இப்படி ஒவ்வொரு பயிருக்கும் சுலபமான சூத்திரம் இருக்கும். இதையெல்லாம் கத்துக்கிட்டவங்கதான் நல்ல லாபம் எடுத்து, விவசாயத்துல ஜெயிக்கிறாங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick