சின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய அளவில் பலன்கள்...!

கு. ராமகிருஷ்ணன்படங்கள்: கே. குணசீலன்

ன்னதான் நவீன தொழில் நுட்பங்கள், பாரம்பரிய முறைகள் என்று இருந்தாலும், அவற்றோடு சில தனித்துவமான செய்முறைகளைச் சேர்த்து கூடுதலான பலன்களை எடுத்து வருகிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலரும். இப்படிப் பட்டவர்களை அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, 'பசுமை விகடன்’. இந்த வரிசையில் தானும் இணைகிறார்... திருச்சி மாவட்டம், திருவானைக்காவல், கீழக்கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்.

 ''இந்த ஆண்டு எனக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டு. என்னோட நெற்பயிர்கள்ல, மஞ்சள் நோய், குலை நோய் கொஞ்சம்கூட எட்டிப் பார்க்கல. எலிகள் தொல்லையும் இல்லை. கதிர்நாவாய்ப்பூச்சி, சிகப்புவண்டு, அசுவிணி, குருத்துப் பூச்சித் தாக்குதல்களும் கூட ஏற்படல. இதைவிட, ரெட்டிப்பு மகிழ்ச்சியாக அதிக எண்ணிக்கையில தூர்கள் வெடிச்சு, எல்லா தூர்கள்லயும் வழக்கத்துக்கு மாறா, நெல்மணிகள் அதிகமாக நிறைஞ்சிருக்கு'' என மகிழ்ச்சி பொங்க அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார், ஹரிகிருஷ்ணன். கண்முன் சாட்சியாக அவருடைய வயலில் செழிப்பாக விளைந்து நிற்கின்றன, நெற்பயிர்கள். இவர், திருச்சியில் உள்ள பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தில் துணைப்பொறியாளர் பணியையும் செய்துகொண்டே விவசாயத்தையும் செய்து வருகிறார்.

விவசாயத்தை இவர் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதை, இவருடைய நிலம் அமைந்துள்ள பகுதியே பளிச்சென படம் பிடித்துக் காட்டுகிறது. திருச்சிசென்னை நான்கு வழிச்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது, அவரது வயல். சுற்றிலும் பிரமாண்ட வீடுகள்தான் காட்சியளிக்கின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வேறு எங்குமே விவசாயம் இல்லை. இந்தப்பகுதியில் ஒரு ஏக்கர் சுமார் 9 கோடி ரூபாய் அளவுக்கு விலை போகிறது. இவருடைய மூன்று ஏக்கர் நிலத்தை 27 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க, ரியல் எஸ்டேட்காரர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். ஆனாலும் விவசாயம் செய்து வருகிறார் ஹரிகிருஷ்ணன்.

பசுமை விகடன் ஏற்படுத்திய தாக்கம்!

விடுமுறை நாள் ஒன்றில் தோட்டத்தில் குதூகலமாக இருந்த ஹரிகிருஷ்ணனைச் சந்தித்தோம். ''எங்க தாத்தா விவசாயம் செஞ்சுட்டு இருந்தார். அவருக்கு பிறகு எங்க அப்பாவுக்கு இதுல ஆர்வம் இல்லாததால, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டாங்க. நான் மறுபடியும் விவசாயத்தைக் கையில் எடுத்து, பத்து வருஷமா நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். பசுமை விகடனோட தாக்கத்தால,3 வருஷமா இயற்கைக்கு மாறிட்டேன். படிப்படியா ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் குறைச்சி, இப்போ நூறு சதவிகிதம் இயற்கை முறையில நெல் பயிர்களை வளர்த்தெடுத்திருக்கேன். இயற்கை இடுபொருட்களுக்காக பத்து மாடுகளை வளர்க்குறேன். ஒரு ஏக்கர்ல நெல்லும், ரெண்டு ஏக்கர்ல கரும்பும் இருக்கு. கரும்பை இன்னும் முழுசா இயற்கைக்கு மாத்தல. இது மணலும் களியும் கலந்த இருமண் பாடு. வழக்கமா, குறுவையில ஆடுதுறை36 ரகத்தைத்தான் சாகுபடி செய்வோம்.

இப்போ, நெல் நடவு பண்ணி 65 நாள் ஆகுது. வழக்கமா இந்த நேரத்துல ரெண்டு அடி உயரம்தான் இருக்கணும். ஆனா, இயற்கையில ரெண்டரையடி உயரத்துக்கு மேல செழிப்பா வளர்ந்திருக்கு. ஒவ்வொரு குத்துலயும் நாப்பதுக்கும் மேற்பட்ட தூர்கள் வெடிச்சு, எல்லா தூர்கள்லயும் நல்லா வாளிப்பா கதிர்கள் வந்திருக்கு. ஒரு கதிர்ல வழக்கமா 100 முதல் 110 நெல்மணிகள்தான் வரும். ஏக்கருக்கு 30 முதல் 33 மூட்டைதான் மகசூல் கிடைக்கும். ஆனா, இந்த வருஷம் ஒவ்வொரு கதிருக்கும் சுமார் 160 நெல்மணிகள் வந்திருக்கு. இதை வெச்சு பாக்கும்போது, 40 மூட்டைக்கு மேல மகசூல் கிடைக்கும்னு உறுதியா நம்புறேன்' என்று குஷியோடு சொன்ன ஹரிகிருஷ்ணன், தொடர்ந்தார்.

செலவு குறைக்கும், இயற்கை நுட்பங்கள்!

'அக்கம்பக்கத்துல வேற எங்கயுமே வயல்கள் இல்லாததுனால, என்னோட வயல்ல எலித் தொல்லை ரொம்பவே அதிகமா இருக்கும். பூச்சிகளும் அதிகமா வரும். அதனால, முன்னாடி நிறைய இழப்புகள் ஏற்பட்டிருக்கு. ஆனா இந்த முறை அதுமாதிரியான பிரச்னைகள் எதுவுமே இல்லை. மூலிகைப் பூச்சிவிரட்டியோடு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பயிர்களுக்குத் தெளிக்கிறேன். நல்லெண்ணெய், பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்குது. பயிர்களோட வேர்ப்பகுதி மற்றும் தண்டுப்பகுதியில உள்ள பூச்சிகள் எல்லாமே... தேங்காய் எண்ணெயோட வாடையால் ஈர்க்கப் பட்டு, பயிர்களோட மேற்பரப்புக்கு வந்துடுது.

மூலிகைப் பூச்சிவிரட்டியில் வேப் பெண்ணெயோட தேங்காய் எண்ணெயும் இருக்கிறதால பிசுபிசுப்புத் தன்மை அதிகமா இருக்கு. அதுல மாட்டி தீமை செய்ற பூச்சிகள் மட்டும் சிக்கி, இறந்து போயிடுது. தட்டான், வெட்டுக்கிளி மாதிரி நன்மை செய்ற பூச்சிகள் எல்லாம், பயிர்களோட மேற்பரப்புல உட்கார்ந்து, தீமை செய்ற பூச்சிகளைச் சாப்பிட்டு, லாவகமா பறந்துடுது.

மூன்றுவிதமான எண்ணெய் கலந்த இந்த மூலிகைப் பூச்சிவிரட்டி, பயிர் ஊக்கியாகவும் செயல்படுது. பயிர்ல பசுமைத் தன்மை எப்போதுமே நிரந்தரமா இருக்கு. கதிர் வரும் வரைக்கும்தான் இந்த மூலிகைப் பூச்சிவிரட்டியை அடிச்சேன். அதுக்கு பிறகும் அடிச்சா, நெல்மணிகள்ல கசப்புத்தன்மை வந்துடும். வயலைச் சுற்றிலும் எருக்கன், பூவரசு, வேம்பு, வாதமடக்கி, தூங்குமூஞ்சி, பப்பாளினு 80 மரங்கள் இருக்கு. இதனால் இலைதழைகள் தாராளமா கிடைக்குது. பம்புசெட்டுல தண்ணீர் கொட்டக்கூடிய இடத்துல, இந்த இலைதழைகளைப் போட்டு, அதுக்கு மேல நல்லா கனமான கற்களை வெச்சிடுவோம். அடுத்த சில நாட்கள்ல அது நல்லா அழுகிடும். வாரம் ஒரு முறை கற்களை எடுத்துடுவோம். அழுகின இலைதழைகள், பாசன நீரோடு பயிர்களுக்குப் போகும்.இந்த இலைதழைக் கஷாயத்தைத் தொடர்ச்சியா செஞ்சுக்கிட்டு இருக்கோம். அதோட சாணத்தை, மாட்டுச் சிறுநீர்ல ஊற வெச்சும், பாசனநீரோடு ஒருநாள் விட்டு ஒரு நாள் கலந்து விடுறோம்'' என்று சொன்ன ஹரிகிருஷ்ணன் நிறைவாக,''என் உயிர் உள்ளவரைக்கும் இந்த நிலத்துல விவசாயம்தான் நடக்கும். பயிர் விளையுற இடத்துல கட்டடங்கள் முளைக்கிறது, கொடுமையிலும் கொடுமை. பணம் பணம்னு எல்லோருமே பணத்துக்கு மட்டுமே ஆசைப்பட்டு அலைஞ்சா... நாடு அழிஞ்சு போகும். நம்மோட சொந்த திறமையாலும் உழைப்பாலும் பயிர்களை வளர்த்தெடுத்து, அதுல கிடைக்கக்கூடிய லாபத்தைப் பார்க்குறதுலதான் உண்மையான மனதிருப்தி இருக்கு. என் மனைவியும் என்னை மாதிரிதான். அவங்களும் ஆத்மார்த்தமா விவசாயத்தை நேசிக்கிறாங்க. அவங்களோட உழைப்புதான் இதுல அதிகம்'' என்று சொல்லி விடைகொடுத்தார்.


ஏக்கருக்கு 80 டன் கரும்பு!

கரும்பு பற்றிப் பேசிய ஹரிகிருஷ்ணன், 'இரண்டு ஏக்கர்ல கரும்பு சாகுபடி செய்றோம். இது மூணாம் தாம்பு. 80 சதவிகிதம் இயற்கை இடுபொருட்களும் 20 சதவிகிதம் ரசாயன உரங்களும் கொடுத்துக்கிட்டு இருக்கேன். தற்போது 5 மாத வயதிலேயே அபார வளர்ச்சி. தண்டு மட்டுமே அஞ்சரையடி உயரம் இருக்கு. தோகையோடு பார்த்தா, 10 அடியைத் தாண்டுது. இதுக்கும் சாணக் கரைசல் விடுறோம். ஒவ்வொரு விதைக் கரும்புல இருந்தும், 42 தூர்கள் வந்திருக்கு. இதை கரும்பு ஆலை அதிகாரிங்க பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டாங்க. முதல் தாம்புல 75 டன் கிடைச்சுது. ரெண்டாவது தாம்புல, மண் அணைக்காம விட்டுட்டேன்... கூடவே பருவநிலையும் கைக்கொடுக்கல... அதனால 65 டன்னா இறங்கிடுச்சு. அந்தத் தப்பைத் திருத்திக்கிட்டு வேலை செஞ்சோம்... அதனாலதான் கரும்பு ஜோரா வளர்ந்து நிற்குது. எப்படியும் இந்த முறை ஏக்கருக்கு 80 டன்னுக்கு பக்கமா மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறோம்.  

 

ஒரு ஏக்கர் கரும்புல இருந்து வருஷத்துக்கு 30 டன் தோகை கிடைக்கும். இதைத்தான் மாடுகளுக்குத் தீவனமா கொடுக்குறோம். கன்றுக்குட்டிகளுக்கு தினமும் ஒன்றரை கிலோவும், பெரிய மாடுகளுக்கு 4 கிலோவும் கொடுக்குறோம். இதை பசுமையாவும் கொடுக்கலாம். காய வெச்சும் கொடுக்கலாம். இதுல உள்ள சுணையினால மாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படலை. தீவனப்புல்லுல உள்ள மாதிரியேதான் இதுலயும் சுணை இருக்கு. அதனால, பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், 'இதை சாப்பிட்டால், மாடுகளுக்கு சினை பிடிக்காது... ஒருவேளை சினை பிடிச்சாலும், கரு கலைஞ்சிடும்’னு விவசாயிகள்ட்ட ஒரு தயக்கம் இருக்கு. என்னோட மாடுகளுக்கு எந்த பாதிப்பும் வந்ததில்லை. சினை பிடிக்குது. கருவும் தங்குது. இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருப்பு வெச்சிருந்து கொடுக்கலாம். அதிக நாள்பட்ட தோகையில சுணை குறைஞ்சு, சுவையும் அதிகமா இருக்கிறதால, மாடுகள் விரும்பி சாப்பிடுது. இதனால் உலர்தீவனச் செலவு மிச்சமாகுது'' என்றார்.

'ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 8 சென்ட் அளவு நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 2 சால் உழவு ஓட்டி, 15 கிலோ எருக்கன் தழைகளைப் போட்டு, நன்கு மிதிக்க வேண்டும். இதில் நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் இருப்பதால், மண் வளமாகி, நாற்றுகளுக்கு ஊட்டம் கிடைக்கும். தவிர, இதில் கசப்புத்தன்மை இருப்பதால், வேரைத் தாக்கும் பூச்சிகளும் தடுக்கப்படும்.

 250 கிலோ மாட்டு எரு போட்டு, ஒரு வாரம் கழித்து, இரண்டு சால் உழவு ஓட்டி, நன்கு சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.

20 கிலோ விதையை மாட்டுச் சிறுநீரில் அரைமணிநேரம் ஊற வைத்து, சணல் சாக்கில் மூட்டை கட்டி, மூன்று நாட்கள் தண்ணீர் தெளித்து வர வேண்டும். நான்காம் நாள் விதைகளை பரவலாக நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். அதன் பிறகு காய்ச்சலும் பாய்ச்சலுமாக தன்ணீர் விட வேண்டும். 8ம் நாள் நாற்றங்காலை நன்கு காயவிட வேண்டும். 9ம் நாள் ஓர் அங்குல உயரத்துக்கு தண்ணீர் நிறுத்த வேண்டும். 10ம் நாள் 5 லிட்டர் ஜீவாமிர்தத்தை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15ம் நாள் அரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியோடு தலா 25 மில்லி தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, 45 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றின் மீது தெளிக்க வேண்டும். 22ம் நாள் சுமார் 3 அங்குல உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து, நடவுக்குத் தயாராக இருக்கும்.

நடவு வயலில் 2 சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு 2 டன் இலைதழைகள், 500 கிலோ கனஜீவாமிர்தம் போட்டு, மீண்டும் இரண்டு சால் உழவு ஓட்டி, நிலத்தைச் சமப்படுத்தி, தலா முக்கால் அடி இடைவெளியில் குத்துக்கு 2 அல்லது 3 நாற்றுகளாக நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 8ம் நாள் 20 லிட்டர் மாட்டுச் சிறுநீரில்2 கிலோ சாணத்தை ஊற வைத்து, மறுநாள்100 லிட்டர் தண்ணீர் கலந்து பாசன நீரோடு விட வேண்டும். இதுபோல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ச்சியாகப் பாய்ச்ச வேண்டும். 15ம் நாள் எண்ணெய் கலந்த மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் தெளிக்க வேண்டும். கதிர் முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும்.


 ஹரிகிருஷ்ணனின் சாகுபடி முறை!

'ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 8 சென்ட் அளவு நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 2 சால் உழவு ஓட்டி, 15 கிலோ எருக்கன் தழைகளைப் போட்டு, நன்கு மிதிக்க வேண்டும். இதில் நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் இருப்பதால், மண் வளமாகி, நாற்றுகளுக்கு ஊட்டம் கிடைக்கும். தவிர, இதில் கசப்புத்தன்மை இருப்பதால், வேரைத் தாக்கும் பூச்சிகளும் தடுக்கப்படும்.

250 கிலோ மாட்டு எரு போட்டு, ஒரு வாரம் கழித்து, இரண்டு சால் உழவு ஓட்டி, நன்கு சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.

20 கிலோ விதையை மாட்டுச் சிறுநீரில் அரைமணிநேரம் ஊற வைத்து, சணல் சாக்கில் மூட்டை கட்டி, மூன்று நாட்கள் தண்ணீர் தெளித்து வர வேண்டும். நான்காம் நாள் விதைகளை பரவலாக நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். அதன் பிறகு காய்ச்சலும் பாய்ச்சலுமாக தன்ணீர் விட வேண்டும். 8ம் நாள் நாற்றங்காலை நன்கு காயவிட வேண்டும். 9ம் நாள் ஓர் அங்குல உயரத்துக்கு தண்ணீர் நிறுத்த வேண்டும். 10ம் நாள் 5 லிட்டர் ஜீவாமிர்தத்தை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15ம் நாள் அரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியோடு தலா 25 மில்லி தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, 45 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றின் மீது தெளிக்க வேண்டும். 22ம் நாள் சுமார் 3 அங்குல உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து, நடவுக்குத் தயாராக இருக்கும்.

நடவு வயலில் 2 சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு 2 டன் இலைதழைகள், 500 கிலோ கனஜீவாமிர்தம் போட்டு, மீண்டும் இரண்டு சால் உழவு ஓட்டி, நிலத்தைச் சமப்படுத்தி, தலா முக்கால் அடி இடைவெளியில் குத்துக்கு 2 அல்லது 3 நாற்றுகளாக நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 8ம் நாள் 20 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 2 கிலோ சாணத்தை ஊற வைத்து, மறுநாள் 100 லிட்டர் தண்ணீர் கலந்து பாசன நீரோடு விட வேண்டும். இதுபோல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ச்சியாகப் பாய்ச்ச வேண்டும். 15ம் நாள் எண்ணெய் கலந்த மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் தெளிக்க வேண்டும். கதிர் முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும்.


எண்ணெய்  மூலிகைப் பூச்சிவிரட்டி!

தலா 2 கிலோ ஊமத்தன் இலை, எருக்கன் இலை, வேப்பந்தழை, பப்பாளி இலைகளை எடுத்து, 20 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, மூங்கில்தட்டு போட்டு மூடி வைக்கவேண்டும். காற்றோட்டம் இருந்தால் இலைதழைகள் சீக்கிரம் அழுகும். தேவையற்ற வாயுக்கள் வெளியேறுவதால், துர்நாற்றம் குறையும். 15ம் நாள், இக்கரைசலை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இக்கரைசலில் இருந்து 4 லிட்டர் எடுத்து, தலா 200 மில்லி தேங்காய் எண்ணெணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து, 8 லிட்டர் மாட்டுச் சிறுநீர் மற்றும் 120 லிட்டர் தண்ணீரையும் கலந்து தெளிக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick