பசுமை விகடன் நடத்திய வயல்வெளிச் சோதனை!

பூச்சிக்கொல்லி செலவைக் குறைக்கும் இனக்கவர்ச்சிப் பொறி!த. ஜெயகுமார் படங்கள்: ஆர். வருண் பிரசாத்

ஆய்வு

இனக்கவர்ச்சிப் பொறியை விவசாயிகள் பலர் கேள்விப்பட்டிருப்பார்கள். அரசு வேளாண்துறை சார்பில் நடத்தப்பெறும் உழவர் விழா, பயிற்சி முகாமில் இலவசமாகவும், மானிய விலையிலும் கொடுப்பார்கள். விவசாயிகளின் தோட்டத்திலும் வைத்துவிட்டுச் செல்வார்கள். ஆனால், வைப்பதோடு சரி, அது என்ன காரணத்துக்காக வைக்கப்படுகிறது என்பதை, பெரும்பாலும் சொல்லவே மாட்டார்கள். விவசாயிகளுக்குக் கொடுத்தது போக, மீதமிருக்கும் இனக்கவர்ச்சிப் பொறிகளை, சீந்துவாரின்றி வேளாண் அலுவலகங்களில் குவித்து வைத்திருப்பார்கள். ஆனால், ஆண்டுதோறும் இதற்காக கோடிக்கணக்கில் ஒதுக்கப்படும் மானியத்துக்கான கணக்கு மட்டும் சரியாகப் போய் சேர்ந்துவிடும்.

ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக, இயற்கை யான முறையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு தொழில்நுட்பம்தான் இனக்கவர்ச்சிப் பொறி. இது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை விவசாயிகளின் முழுமையான பயன்பாட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

'பூச்சிக்கொல்லிக்கே கட்டுப்படாதது, இந்தப் பொறிக்கு மிகச்சரியாகக் கட்டுப்படும்’ என்பதை விவசாயிகளின் மனதில் சரியாக விதைக்காததால், ரசாயனப் பூச்சிக்கொல்லித் தெளிப்பை, செவ்வனே செய்து வருகிறார்கள் விவசாயிகள். இதைவிடக் கொடுமை, 'இனக்கவர்ச்சிப் பொறியெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான். அதையெல்லாம் வெச்சுட்டு, பூச்சிக்குத்தான் மொத்த மகசூலையும் அள்ளிக் கொடுக்கணும்' என்கிற எதிர்மறையான கருத்துக்களையும் விவசாயிகளின் உள்ளங்களில் பரவச் செய்துள்ளனர்.

விளைவு... சூழல்கேடுகள் பெருகிக்கொண்டே இருப்பதோடு... விவசாயிகளின் பணமும் ரசாயனப் பூச்சிக்கொல்லி நிறுவனங்களின் கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கிறது. கூடவே, விஷத்தில் விளைந்த உணவுப் பொருட்களே மக்களுக்கு நிரந்தரமாகிக் கிடக்கிறது. இயற்கை விவசாயம் செய்யும் சிலர், ஆர்வமாக இதைப் பயன்படுத்தி வந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் மத்தியில் பரவுவதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.

உண்மையிலேயே இந்தப் பொறிகள் பயன் பாட்டுக்கு ஏற்றதா? என்பதை அறிய, நேரடியாக கள ஆய்வில் இறங்கியது பசுமை விகடன். இனக்கவர்ச்சிப் பொறிகள், பூச்சிகளைக் கவர்கின்றனவா; இதனால் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் கட்டுப்படுமா? என்பதை அறிய, வயலில் பொறிகளை வைத்து ஆய்வு செய்தோம். இந்தச் சோதனை ஆய்வு பற்றிய ஆர்வத்தை நமக்குள் விதைத்ததோடு, இதில் தன்னையும் முழுமையாக இணைத்துக்கொண்டார் சென்னை, சின்மயா நகரில் வசிக்கும் வேளாண் பட்டதாரியும், நிலச்சீரமைப்பு நிபுணரும் திரைப்பட இயக்குநருமான கசாலி

''இதை முறையாகப் பயன்படுத்தியிருந்தால், பூச்சிக்கொல்லிப் பயன்பாடு வெகுவாகக் குறைந்திருக்கும். இதைப் பற்றிய முழுமையான புரிதலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தாத வேளாண்துறையின் அலட்சியத்தால், பூச்சிக்கொல்லிக்காக வருமானத்தில் பெரும்பகுதியை செலவழிக்கின்றனர் விவசாயிகள். இது, பூச்சிகளைக் கட்டுப்படுத்துமே தவிர, அழிக்காது. விவசாயிகள் உடனடியாக பூச்சிகளை அழிக்க வேண்டும் என்று நினைப்பதும், இது விவசாயிகளிடையே பரவலாகாமல் போக ஒரு காரணம். இனக்கவர்ச்சிப் பொறியை, வயலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயன்படுத்தினால்தான் முழுமையான பயனை அறிய முடியும். விளக்குப் பொறி, சோலார் விளக்குப் பொறிகள் வந்திருந்தாலும், அதற்கான அடிப்படை... இனக்கவர்ச்சிப் பொறிகள்தான்' என்று சொல்லும் கசாலி, இனக்கவர்ச்சிப் பொறி பற்றி மேலும் விளக்கங்களைத் தந்தார்.

''ஆயிரம் வகையான இனக்கவர்ச்சிப் பொறிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் புள்ளிக்காய்ப்புழு, அமெரிக்கன் காய்ப்புழு, காய்ப்புழு (பயிர்களுக்கு ஏற்ற காய்ப்புழுக்கள்) இந்த மூன்றுமே பயிர்களை நாசமாக்கும் புழுக்கள். விவசாயிகள் தெளிக்கும் பூச்சிக்கொல்லிகள் அனைத்துமே, 70-80% இந்தப் புழுக்களைக் குறி வைத்துத்தான். புள்ளிக்காய்ப்புழு, அமெரிக்கன் காய்ப்புழு இரண்டுமே இலைகளைத் தாக்கும். இலையைச் சாப்பிடுவதால் செடியின் வளர்ச்சியும், மகசூலும் பாதிக்கப்படும். பூவிலிருந்து காயாகும் பருவத்தில் காய்ப்புழு, புள்ளிக்காய்ப்புழுக்களின் தாக்குதல் இருக்கும். இதனால் மகசூல் இழப்பும், காய் சொத்தையாகும் பிரச்னையும் இருக்கும்.

கவர்ந்திழுக்கும் வாசனை!

ஒரு பூச்சி 100-200 முட்டைகளை இடும். அதன் மூலம் 100-200 புழுக்கள் உருவாகும். பூச்சிகளுக்கு முட்டைப் பருவம், புழுப் பருவம், கூட்டுப்புழுப் பருவம், பூச்சிப் பருவம் என்று நான்கு பருவங்கள் இருக்கின்றன. பூச்சிகளின் மொத்த வாழ்நாட்களே 30-40 நாட்கள்தான். இதில் புழுப் பருவம் 10-12 நாட்கள். இதுதான் செடிகளைத் தாக்கும் முக்கியமான நாட்கள். அதன்பிறகு 13-22 நாட்கள் கூட்டுப்புழுப் பருவத்தில் இருக்கும். 23-25 நாட்களில் பூச்சிகளாக மாறி, அதன்பிறகு ஆண் பூச்சிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்காக பெண் பூச்சிகளைத் தேடி அலையும். இந்த நேரத்தில் பெண் பூச்சிகள், தமது உடம்பிலிருந்து ஒருவித வாசனையை வெளிப்படுத்தும். இதனால், ஆண் பூச்சிகள் கவரப்பட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஆண் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் பெண் பூச்சிகளின் வாசனையை, செயற்கை வாசனைக் குப்பிகளில் அடைத்து, பொறிகளில் பொருத்துகிறோம். இந்த வாசனைக்கு, பொறியைத் தேடி வரும் ஆண் பூச்சிகள், பொறிக்குள் சிக்கிவிடும்.

பூச்சிக்கொல்லியைக் குறைக்கும் பொறி!

இப்படி பொறியில் சிக்கி, ஆண் பூச்சிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையவே, பெண் பூச்சிகள் இனப்பெருக்கம் அடையாமல் சந்ததிகள் இல்லாத பூச்சிகளாக இருக்கும். பிறகு, தன் வாழ்நாளான 30-40 நாட்களில் இறந்துவிடும். இதுபோன்று தொடர்ந்து, பொறிகளை வைத்து, ஆண் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இது இயற்கைக்கு முரணானது என்றாலும், மொத்தமாக பூச்சிக்கொல்லியைத் தெளித்து ஒரேடியாக புழுக்களைக் கொன்று, நிலத்தையும் பாழாக்கி, அதில் உருவாகின்ற காய்களில் விஷத்தை தெளித்து, அதைச் சாப்பிடுகின்ற மனிதர்களையும் கொல்வதற்கு இது எவ்வளவோ மேல். இன்னொன்று பூச்சிக்கொல்லி என்றால், தொடர்ந்து பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறிகள் அப்படியில்லை. தொடர்ந்து பயன்படுத்த பூச்சிகளின் தாக்குதல் குறைந்துகொண்டே வரும். மூன்று ஆண்டுகளில் பெரும்பான்மையாக தாக்குதல் குறைந்திருக்கும். எஞ்சியுள்ள பூச்சிகள் மூலம் உருவாகும் புழுக்களின் பாதிப்பு, பயிர்களில் குறைவாகவே இருக்கும். அவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. பொறிகள் வைத்தபிறகு ரசாயன மருந்துகளின் பயன்பாட்டையும், குறைத்துக்கொண்டே வரவேண்டும். முடிந்த வரை இயற்கைப் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்'' என்று சொன்னார் கசாலி.

நேரடிப் பரிசோதனை!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது, சோமநாதபுரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பரத் என்ற விவசாயியின் தோட்டத்தைத்தான் சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டோம். பசுமை விகடனுடன் இணைந்து இந்த சோதனை முயற்சிக்கான ஏற்பாடுகளை கசாலி செய்திருந்தார். பொதுவாக, ஒரு பொறியில் 4-6 பூச்சிகள் விழுந்திருந்தாலே, அந்தப் பொறி நன்கு வேலை செய்திருக்கிறது என்பார்கள், பூச்சியியல் வல்லுநர்கள். இங்கே எதிர்பார்த்ததற்கு மேலாகவே பூச்சிகளைக் கவர்ந்திழுத்திருந்தது ஆய்வில் பயன்படுத்திய இனக்கவர்ச்சிப் பொறிகள்.

ஒரு பூச்சி = 400 இலைகள்!

இதைப் பற்றி பெருமையோடு பேசிய கசாலி, '' ஒரு பூச்சி 100-200 முட்டைகளை இடும். ஒரு புழு வாழ்நாளில் (12 நாட்கள்) தனக்கு உணவாக 4 இலைகளைச் சாப்பிடும். சராசரியாக ஒரு பூச்சியின் மூலம் 100 புழுக்கள் உருவானால்கூட, 400 இலைகளைச் சாப்பிடும். இதுவொரு கணக்குதான். இந்தக் கணக்கின்படி கத்திரியில், 42 ஆண் பூச்சிகளைப் (காய்ப்புழு) பிடித்திருக்கிறோம். இது 42 பெண் பூச்சிகளோடு சேர்வதாக வைத்துக்கொண்டால்கூட 4,200 முட்டைகளை இடும். அதன்மூலம் 4,200 புழுக்கள் உருவாகியிருக்கும். 4,200 புழுக்கள் மூலம் சுமார் 2,000-2,500 காய்களை, பாதிப்பில் இருந்து தடுத்திருக்கிறோம். கூடவே, அமெரிக்கன் காய்ப்புழுப் பொறியில் 2  பூச்சிகள் விழுந்திருக்கின்றன. இந்த பூச்சிகளும் 200 முட்டைகள் இட்டிருக்கும். இந்த 200 புழுக்கள் மூலம் கிட்டத்தட்ட 800 இலைகளைப் பாதிப்பிலிருந்து காப்பாற்றியிருக்கிறோம்.

நிலக்கடலையில் புள்ளிக்காய்ப்புழுவுக்கான பொறியில் 202 ஆண் பூச்சிகள் பிடிபட்டுள்ளது. 202 ஆண் பூச்சிகள், 202 பெண் பூச்சிகளோடு சேர்வதாக வைத்துக்கொண்டால் இதன்மூலம் 30 ஆயிரத்து 300 முட்டைகளை (புள்ளிக்காய்ப்புழு சராசரியாக 150 முட்டைகள்) இடும். முட்டைகள் மூலமா, 30 ஆயிரத்து 300 புழுக்கள் உருவாகும். ஒரு புழுவுக்கு 4 இலைகள் என்றால்,

1 லட்சத்து 21 ஆயிரத்து 200 இலைகளைக் காப்பாற்றியிருக்கிறோம். இதோடு 18 அமெரிக்கன் காய்ப்புழுக்கள் மூலமாக 1,800 புழுக்கள் உருவாகும். ஒரு புழுவுக்கு 4 இலைகள் வீதம் 7,200 இலைகளைக் காப்பாற்றியிருக்கிறோம்'' என்று சொன்னார்.

பயிர் பிரமாதமா வளருது!

பொறிகள் பயன்படுத்தப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரரான விவசாயி பரத், ''பொறிகளை செடிக்கு மேல அரை அடி உயரத்துக்கு நிபுணர் சொன்னமாதிரி கட்டினேன். பொறிகள் வெச்ச 3 நாட்களுக்கு, எதுவும் விழல. 4-வது நாள்ல இருந்து பூச்சிகள் விழ ஆரம்பிச்சுது. அதுகப்புறம் ரெண்டு மழையும் பெய்ஞ்சது. ஒரு வாரத்துக்குள்ளேயே 7, 8 பூச்சிகள் விழுந்துச்சு. இடையில் கொஞ்சநாள் விழாம இருந்துச்சு.

 

பிறகு, கடைசி நேரத்துல பூச்சிகள் விழுந்தது. நிலக்கடலையில் பூ எடுக்கும் பருவத்துல பொறிகள் வெச்சோம். இது மானாவாரியாக வெளையுற தோட்டம். சரியான பருவங்கறதால புள்ளிக்காய்ப்புழு நிறைய விழுந்துச்சு. இதுல மிதமான காத்து வீசுற திசையும் பூச்சிகள் பிடிப்பட்டதுக்கு சாதகமா இருந்துச்சு. நிலக்கடலையில மட்டும் நாயோ, குள்ளநரியோ பொறிகள சேதமாக்கிடுச்சு. அதனால பொறிகளை வெச்சுட்டா, அதை தினமும் கவனிக்கிறது அவசியம். இத வெச்சதுக்கு அப்புறம், நிலக்கடலை பயிர் பிரமாதமா வளர்ந்திருக்கு'' என்று தன் அனுபவம் சொன்னார்.    


பொறி வைக்கும் முறை!

 பிளாஸ்டிக் கவர் இணைக்கப்பட்ட இனக்கவர்ச்சிப் பொறிகள், வேளாண் இடுப்பொருட்கள் விற்பனை செய்யும் பிரத்யேக கடைகளில், விலைக்குக் கிடைக்கின்றன. மேலும், இனகவர்ச்சிப் பொறிகள் எங்கு கிடைக்கும் என்ற தகவலைப் பெற அருகில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகங்களைத் தொடர்பு கொண்டால் வழிகாட்டுவார்கள். பொறியின் மேற்பகுதியில் உள்ள துளையில், வாசனைக் குப்பியைப் பொருத்துவதற்கான துளை இருக்கும். அதில், தனியாக பாக்கெட்களில் வரும் குப்பியை வாங்கிப் பொருத்த வேண்டும். குப்பியில் இருக்கும் திரவம், 100 மீட்டர் சுற்றளவுக்கு வாசனையைப் பரப்பும். 21 நாட்கள் வரை வாசம் வீசும். மனிதர்களால் இந்த வாசத்தை உணர முடியாது. தோட்டத்தில் வைக்கும்போது மூன்று விரல் சைஸுக்கு கம்பை நட்டு, பொறியை அதனோடு கட்டிவிடவேண்டும். செடியின் மட்டத்திலிருந்து, அரை அடி உயரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் பொறிகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பொறியோடு இணைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பேப்பரின் அடிப்பகுதியையும் கம்போடு சேர்த்து கட்டிவிட வேண்டும். பேப்பருக்குள் நச்சுத்தன்மை கொண்ட மருந்தில் நனைக்கப்பட்ட பஞ்சைப் போட்டுவிடலாம். கவரப்படும் பூச்சி, பேப்பரில் சிக்கும்போது அந்த வாசத்துக்கு இறந்துவிடும். பொறி வைத்து, 2 நாட்களுக்கு பிறகு பூச்சிகள் விழ ஆரம்பிக்கும். மாலை 6-மணியிலிருந்து இரவு முழுவதும், பூச்சிகள் விழும். அந்தந்தப் பயிர்களைத் தாக்கும் புழுக்களுக்கு ஏற்றவாறு பொறிகளை வைக்கவேண்டும். வயலின் நடுவில் ஒவ்வொரு பொறிக்கும் ஏறத்தாழ 100 அடிக்கு ஒரு பொறி இருக்குமாறு வைக்கலாம். அமெரிக்கன் காய்ப்புழுவுக்கு வைத்த பொறிகளில், அதற்கான பருவம் முடிந்ததும், காய்ப்புழுவுக்கான குப்பிகளைப் பொருத்திக் கொள்ளலாம்.


 50% மானியத்தில் பொறிகள்!

 மானியம் குறித்து, அரசு வேளாண்துறையின் பயிர் பாதுகாப்புப் பிரிவில் கேட்டோம். ''ஒரு பொறி 14 ரூபாய் 50 காசுக்கு 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. பொறியில் பயன்படுத் தப்படும் காய்ப்புழு வாசனைக் குப்பி 3 ரூபாய் 65 காசு, அமெரிக்கன் காய்ப்புழுக் குப்பி 3 ரூபாய் 80 காசு என்கிற விலையில் வழங்கப் படுகிறது. 2013-14-ம் நிதியாண்டில் ஒரு கோடியே 82 லட்ச ரூபாய் செலவில், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 661 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு செட் இனக்கவர்ச்சிப் பொறிகள்

(2 பொறிகள், 2 குப்பிகள்) மட்டுமே வழங்கப் படும். அதுவும் பருத்தி, பருப்பு வகை களுக்குத்தான் வழங்கப்படுகிறது'' என்றனர்.  


ஆண் பூச்சிகளை மட்டுமே கவரும்!

 

இனக்கவர்ச்சிப் பொறிகள் குறித்து கூடுதல் தகவல்களை அடுக்குகிறார் பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வம். ''இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, பூச்சிகளைப் பற்றிய அடிப்படை அறிவை விவசாயிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தன்னுடைய தோட்டத்தில் என்னவிதமான பூச்சிகள் நடமாடுகின்றன என்பதைக் கண்காணிக்க வேண்டும். பருத்தியை மட்டுமே நான்கு விதமான காய்புழுக்கள் தாக்குகின்றன. இந்தப் புழுக்களை உருவாக்கும் பூச்சிகளுக்கு நான்கு விதமான இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும். எந்தவிதமான காய்ப்புழுக்கள் எந்தப் பருவத்தில் வரும், எந்தப் பயிர்களை தாக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தால், மட்டுமே இனக்கவர்ச்சிப் பொறியைப் பயன்படுத்துவதில் வெற்றி காண முடியும்.  

உதாரணமாக, பருத்தியைத் தாக்கும் இளஞ்சிவப்பு காய்ப்புழுவின் பூச்சிகள்,  விதைத்த 110-ம் நாளில்தான் வரும். அந்தப் பருவத்தில்தான் அதற்கான இனக்கவர்ச்சிப் பொறியை வைக்கவேண்டும். அமெரிக்கன் காய்ப்புழுவின் (பச்சைக் காய்ப்புழு) ஆண் பூச்சி, 16 பெண் பூச்சிகளோடு இணை சேரும். இதேபோன்று ஒவ்வொரு பூச்சிக்கும் இணை சேருவதில் வேறுபாடு உண்டு. இதில் முக்கியமாக கவனத்தில் வைத்துக்கொள்வது இனக்கவர்ச்சிப் பொறிகள் ஆண் பூச்சிகளை மட்டுமே கவரும்.

பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, பூச்சிகளைக் குழப்பிவிட, பூச்சிகளைக் கட்டுப்படுத்த என இனக்கவர்ச்சிப் பொறிகளை பலவிதமாக பயன்படுத்தலாம். இதற்காக தனித்தனியான வாசனைக் குப்பிகளும் உண்டு.  கத்திரியில் வரும் காய்ப்புழுக்கள், தென்னையைத் தாக்கும் வண்டுகள், மற்ற காய்கறிப் பயிர்களைத் தாக்கும் காய்ப்புழுக்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும், இனக்கவர்ச்சிப் பொறிகள் பயன்படுகின்றன. வயலின் நான்கு மூலைகளிலும், வரப்பிலிருந்து 10 அடி உள்ளே தள்ளிதான் பொறிகளை வைக்கவேண்டும். செடியிலிருந்து அரை அடி உயரத்தில் கட்ட வேண்டும். வாசனைக் குப்பிகளை, மாலைவேளைகளில் வைத்துவிட்டு, காலையில் எடுத்துவிட வேண்டும். பொறியில் பூச்சிகள் விழுந்திருந்தால், அவற்றை அழித்துவிட வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick