“மரங்களை வெட்டினால் யாரிடம் புகார் கொடுப்பது?’’

‘‘இ.எம். திரவத்தை விவசாயம் மற்றும் பண்ணையைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்துவது எப்படி?’’

ரெ.முத்தையா, காரைக்குடி.

ஆரோவில் பகுதியில் உள்ள ஈகோ-புரோ அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லூக்காஸ் பதில் சொல்கிறார்.

‘‘எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிஸம்ஸ் (Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம். (E.M.). இதைத் தமிழில், ‘திறன்மிகு நுண்ணுயிர்’ என்று அழைக்கிறார்கள். இத்திரவத்தில் நுண்ணுயிர்கள், உறக்க நிலையில் இருக்கும். இந்தத் திரவம், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. 50 மில்லி இ.எம். திரவத்தை, 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களின் மேல் தெளித்து வந்தால்... நல்ல பலனைக் காண முடியும். இந்த இ.எம். திரவம், இயற்கை உர விற்பனையாளர்களிடமும் கிடைக்கும்.

ஒரு கிலோ வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கரைத்து, மூடியுடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவும். இதனுடன் குளோரின் கலக்காத சுத்தமான தண்ணீர் 20 லிட்டர், இ.எம். திரவம் ஒரு லிட்டர் ஆகியவற்றையும் சேர்த்து, தொட்டியை மூடி வைக்கவும். தினமும், ஒருமுறை ஒரு வினாடி மட்டும் மூடியைத் திறந்து மூடி, உள்ளே உற்பத்தியாகும் வாயுவை வெளியேற்ற வேண்டும். ஒரு வாரத்தில், இக்கலவை, இனிய மணம், புளிப்புச் சுவையுடன் வெண்நுரையுடன் காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, இ.எம். சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம்.

இப்படித் தயாரிக்கப்பட்ட கலவையை 4 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். பண்ணைக் குப்பை மற்றும் காய்கறிக் கழிவுகள் மீது இதைத் தெளித்தால் சீக்கிரமாக மட்கி உரமாக மாறும். துர்நாற்றம் வீசும் கழிவுகளின் மீதும் குளியலறைகளிலும் நீருடன் கலந்து இதைத் தெளிக்கலாம். துணி துவைக்கவும் பயன்படுத்தலாம்.

இ.எம். திரவத்தை மையமாக வைத்து, 5 பொருட்களைக் கலந்து ‘இ.எம்-5’ என்கிற திரவமும் தயாரிக்கப்படுகிறது. இது, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சண நோய்கள் மற்றும் சிலவகை பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறனுடையது. ஒரு கிலோ வெல்லத்தை சமபங்கு நீரில் நன்கு கரைத்துக் கொண்டு, அதில், ஒரு லிட்டர் காடி (வினிகர்), ஒரு லிட்டர் ரம் அல்லது விஸ்கி (40% ஆல்கஹால்), 6 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் இ.எம். ஆகியவற்றைச் சேர்த்து, காற்றுப் புகாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வார காலத்துக்கு மூடி வைத்தால், இ.எம்-5 கரைசல் தயார்.

 இதிலும் தினமும் வாயுவை வெளியேற்றி வர வேண்டும். தயாரான திரவத்தைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து, மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஒரு மடங்கு இ.எம். 5 திரவத்துடன், 200 மடங்கு தண்ணீரைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம் (50 மில்லி கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர்). நோய்கள் கட்டுப்படும்வரை, இரண்டு நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து தெளிக்கலாம்.

இந்த இ.எம். தொழில்நுட்பத்தை ஜப்பான் நாட்டில் கண்டுபிடித்தார்கள். ஜப்பான், கொரியா, தாய்லாந்து, மலேசியா... போன்ற நாடுகள் இ.எம். பயன்படுத்துவதில் முன்னிலையில் உள்ளன.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 0413-2622469.

‘‘முப்பது ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்துள்ளோம். இதற்கு வழங்கப்படும் மானியங்கள் பற்றி சொல்லுங்கள்?’’

ஆர்.நாகராஜன், அன்னூர்.

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநரகத்தின், உதவி இயக்குநர் பழனிதுரை பதில் சொல்கிறார்.

‘‘பட்டு வளர்ப்புக்கு முக்கிய மூலப்பொருள் மல்பெரித் தழைகள். இந்தத் தழைகளை உண்டுதான், பட்டுப்புழுக்கள் தரமான பட்டுக்கூடுகளை உருவாக்கும். தரமான பட்டுக்கூடு உற்பத்தி செய்ய, மல்பெரித் தழைகளின் பங்களிப்பு முக்கியமானது. இதைக் கருத்தில் கொண்டுதான், மல்பெரி சாகுபடிக்கு மானியம் அளித்து வருகிறோம். வீரிய ரகக் கன்றுகளை நடவு செய்தால், ஏக்கருக்கு 10,500 ரூபாய் என, அதிகபட்சம் ஐந்து ஏக்கர் அளவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தைப் பெற, நிலத்தில் முன்பே மல்பெரி நடவு செய்திருக்க வேண்டும். சிட்டா அடங்கலுடன், எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், மானியம் வழங்குவதற்கான நடைமுறைகளை விளக்குவோம். எங்கள் அலுவலர்கள் தோட்டத்தைப் பார்வையிட்ட பிறகு, மானியம் வழங்க பரிந்துரைப்பார்கள்.

மானியங்களைப் பொறுத்தவரை வரிசை (சீனியாரிட்டி) முறையில்தான் வழங்கப்படுகின்றன. அதாவது, உங்களுக்கு முன்பு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்பட்ட பிறகுதான் உங்களுக்கு மானியம் கிடைக்கும். இதுதவிர பட்டு வளர்ப்புக்குத் தேவைப்படும் நவீன தளவாடங்கள் வாங்கவும் 70 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. தற்போது, நடைபெறும் சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் மானியக்கோரிக்கையின் போது, மானியங்களின் தொகையில் மாற்றங்களும், புதிய அறிவிப்புகளும் இடம் பெறலாம். எனவே, மானியம் வேண்டி விண்ணப்பத்தைக் கொடுத்தால், அப்போது, நடைமுறையில் இருக்கும் திட்டத்துக்கு ஏற்ப மானியம் வழங்கப்படும்.’’

தொடர்புக்கு: உதவி இயக்குநர் அலுவலகம்,
தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறை, 8/52,
டாக்டர் பாலசுந்தரம் சாலை,
கோயம்புத்தூர்-641018.

தொலைபேசி: 0422-2246948.

‘‘மிருகங்களுக்குத் தீங்கு செய்தால், ‘புளூ கிராஸ்’ அமைப்பில் புகார் செய்ய முடியும். இதேபோல, பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டினால் யாரிடம் புகார் கொடுப்பது?’’

-எம்.பாலாஜி, காட்டுக்காநல்லூர்.

தமிழக வனத்துறையின் ஒய்வுபெற்ற வனச்சரகர் ர.ராம்நாத்சேகர் பதில் சொல்கிறார்.

‘‘காப்புக் காடுகள் (ரிசர்வ் ஃபாரஸ்ட்) மற்றும் வனப்பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டினால், அருகில் உள்ள வனச்சரகர், மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலர்களுக்குத் தகவல் கொடுக்கலாம். உடனடியாக மரம் வெட்டுவதைத் தடுக்க, அமைக்கப்பட்டுள்ள வனத்துறையின் ரோந்து பிரிவு வனவர்கள் அங்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள். ஒருவேளை பொது இடத்தில் உள்ள மரத்தை வெட்டினால், அந்தப் பகுதிக்கு உட்பட்ட வி.ஏ.ஓ, தாசில்தார் மற்றும் காவல்நிலையத்துக்குப் புகார் கொடுக்கலாம். புகார் கிடைத்தவுடன், மரம் வெட்டப்படும் இடத்துக்கு இந்தத் துறைகளின் அலுவலர்கள் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். மரம் வெட்டுவது என்பது இயற்கையை அழிக்கும் செயல். ஆகவே, இதற்கு அபராதமும், சிறை தண்டனையும் உண்டு.

பொது இடத்தில் மட்டுமல்ல, சொந்த நிலத்தில் நாம் வளர்க்கும் மரங்களை வெட்டுவதற்கு கூட, வி.ஏ.ஓ வின் அனுமதி அவசியம். அது எந்த மரமாக இருந்தாலும் சரி. உதாரணத்துக்கு வேப்ப மரமாக இருந்தாலும் அனுமதி பெற வேண்டும்.

சொந்த பயன்பாட்டுக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால், அங்கு குறைந்தபட்சம் நான்கு மரங்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையில் மரங்கள் இருந்தால்தான், மரம் வெட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும், ஒரு மரத்தை வெட்டினால், அங்கு நான்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும்... என்பது போன்ற நல்ல விஷயங்களை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நடைமுறையில் யாரும் பின்பற்றுவதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94860 -82995.

 புறா பாண்டி

 படம் : க.ரமேஷ்

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும்
pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick