இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

மோடியின் சதியாட்டம் ஆரம்பம்!

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி

அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி’

என்ற கதையாகிவிட்டது இன்றைய விவசாயிகளின் நிலை.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயிகளுக்குச் சாதகமான சில ஷரத்துக்களைக் கொண்டு வருவதற்கே 120 ஆண்டுகள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அப்படிப் போராடிக் கொண்டுவந்த சட்டத்தை மாற்றி, முற்றிலும் விவசாயிகளுக்கு எதிராகத் திருப்பியிருக்கிறார், பிரதமர் மோடி. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை என்ன பகீரதப் பிரயத்தனம் செய்தும் நாடாளுமன்றத்தில் அவரால் நிறைவேற்ற முடியாத நிலை. இதனால், தற்போது தந்திரமாக இந்த விஷயத்தை மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து, ‘மாநில அரசுகள் தங்கள் விருப்பம் போல சட்டத்தை இயற்றிக் கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறது, மத்திய அரசு. விவசாயிகளை அடிக்கும் தடியை, மாநில அரசுக்குக் கைமாற்றி விடுகிறது. இது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

ஓட்டுக்காகப் போட்டிப் போட்டுக் கொண்டு இலவசங்களை அள்ளிக் கொடுத்து நாட்டையே நாசமாக்கிய மாநில அரசியல்வாதிகள், நிலப்பறிப்பு விஷயத்திலும் தவறாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? பெரும்பான்மை மக்களைப் பாதிக்கும் ஒரு சட்டம் வரும்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்து, அந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க முடியும்.

கூச்சல் போடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற சட்டம் இல்லை. ஆனால், மாநிலத்தில் அப்படியல்ல. எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சி உறுப்பினர்களைக் கூண்டோடு, குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றிவிட்டு, வேண்டியபடி சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.

அரசு, தனது பொதுச் சேவைக்குப் போக வணிக நோக்கத்துடன் பொதுத்துறை, தனியார் துறை ஆகியவை கூட்டாக நடத்தும் தொழிலுக்குத் தேவையான நிலத்தை எடுக்கும்போது 70 சதவிகித விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். முழுக்க முழுக்கத் தனியார் துறைக்கு என்றால், 80 சதவிகித விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்கிறது, 2013-ம் ஆண்டில் மன்மோகன் சிங் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம். மோடி கொண்டு வரும் புதிய சட்டமோ... விவசாயிகளிடம் ஒப்புதல் கேட்க முடியாது என்கிறது.

மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கட்டிய கணவன்கூட மனைவியைத் தீண்டக்கூடாது என்கிறது, சட்டம். அப்படி அத்துமீறினால், குடும்ப வன்முறைச் சட்டம் கணவன் மீது பாயும். ஆனால், காலம் காலமாக, வாழ்ந்து வளர்ந்து, தன் உயிரை விட மேலாக நேசிக்கும் மண்ணை, யார் வேண்டுமானாலும் சொந்தக்காரரின் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம் என்பது எந்த வகையில் நியாயம்?

தமிழகத்தைப் பொறுத்த வரை இரண்டு கழகங்களுமே விவசாயிகளுக்கு எதிராகவே தான் செயல்பட்டு வருகின்றன. கொள்ளை என்றால் கூட்டு; கொள்கை என்றால் அடிதடி, வெட்டு. 1980-ம் ஆண்டு நான், ‘உழவன் முரசு’ பத்திரிகை நடத்தி வந்தபோது ஒரு தொடர் வெளி வந்தது. அதன் தலைப்பு, ‘சுதந்திர பூமியில் நிரந்தரக் கைதிகள்’. அதாவது, அப்போது விவசாயிகளைக் கைதிகளைப் போலத்தான் அரசுகள், அதிகாரிகள் நடத்தி வந்தனர். ஆனால், இன்றைய நிலைமை அதைவிட மோசமாக இருக்கிறது. ‘சுதந்திர பூமியில் நிரந்தர அடிமைகள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

விவசாய விளை பொருட்களுக்கு, உழவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. போகட்டும்... அவன் நிலத்துக்கும் அவனால் விலை வைக்க முடியாது என்றால் எப்படி? ‘அரசு கொடுக்கும் இழப்பீட்டை வாங்கிக்கொண்டு ஓடி விட வேண்டும்’ என்பது, எந்த வகையில் நியாயம்?. சரி, விவசாயி வயிற்றில் அடித்துப் பிடுங்கும் நிலத்தைத் தேச நலனுக்கா பயன்படுத்த போகிறார்கள்... இல்லையே, சில அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுக்கத்தானே இத்தனை ஆர்ப்பாட்டம். கடந்த 10 ஆண்டுகளாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்திய அரசு கொடுத்த சலுகை 43 லட்சம் கோடி. விவசாயிகளுக்குக் கொடுத்த மானியம் வெறும் 2 லட்சம் கோடி.

1970-ம் ஆண்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டால் 76 ரூபாய். 2015-ம் ஆண்டில் 1,450 ரூபாய். 19 மடங்கு விலை கூடி இருக்கிறது. ஆனால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 110 மடங்கிலிருந்து 120 மடங்கு வரை கூடி இருக்கிறது. பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் 280 மடங்கு முதல் 320 மடங்கு வரை கூடி இருக்கிறது. கல்லூரி ஆசிரியர்கள் சம்பளம் 150 மடங்கு முதல் 170 மடங்கு வரை கூடி இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளின் சம்பளம் 350 மடங்கு முதல் 1,000 மடங்கு வரை கூடி இருக்கிறது. இவர்களோடு விவசாயி எப்படி போட்டி போட்டு வாழ்வது?

இந்த லட்சணத்தில் அவனுடைய நிலத்தையும் ஜப்தி ரேட்டில் பறித்துக்கொள்ள சட்டம் போட்டால், என்னாவது?

மோடிக்குள் இருந்த கார்ப்பரேட் பூனை இப்போது வெளியே குதித்து, சதியாட்டம் போட ஆரம்பித்துவிட்டது. இனியும் விவசாயிகள் விழித்துக் கொள்ளவில்லை என்றால்?

-தொடரும்

தூரன் நம்பி

படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்பிரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick