Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close.

அதிக மகசூல் தரும் அடர்நடவு!

வயல்வெளிப் பள்ளி!காசி.வேம்பையன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

வ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழைச் சாகுபடி பற்றிப் பார்த்து வருகிறோம். வாழை நடவுக்கான கன்றுத்தேர்வு, விதைநேர்த்தி பற்றிய தகவல்களைத் தொடர்ந்து, நிலம் தயாரிப்பு, அடர்நடவு முறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் எம்.எம்.முஸ்தபா.

 'வாழைக்கன்றுகளை நடவு செய்வதற்கான நிலத்தை எவ்வாறு தயார் செய்வது?''

''நடவு செய்யப்படும் நிலத்தை மூன்று, நான்கு முறை உழவு செய்து நிலத்தைச்  சமப்படுத்திக் கொள்ள வேண்டும். கடைசி உழவுக்கு முன்பு ஏக்கருக்கு 4 முதல்

5 டன் தொழுவுரத்தைக் கொட்டி பரவிவிட வேண்டும். ஒன்றரை அடி நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும். உழவின்போது தொழுவுரம் இடாவிட்டால்... ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ முதல் 15 கிலோ தொழுவுரத்தை இட்டு நடவு செய்யலாம்.''

'எந்த வகையான நடவு முறையில் வாழையில் அதிக மகசூல் கிடைக்கும்?'

''குறைந்த நிலப்பரப்பில், அதிக உற்பத்திக்கு 'அடர்நடவு சாகுபடி’ என்ற புதிய தொழில்நுட்பம் மிகவும் சிறந்தது. வழக்கமாக சாகுபடி செய்யப்படும் 6*6 அடி இடைவெளிக்கு பதிலாக... 5*5 அடி இடைவெளியிலும், 5*4 இடைவெளியிலும் நடவு செய்வதுதான் அடர்நடவு. 5*5 அடி இடைவெளியில் ஹெக்டேருக்கு 4 ஆயிரத்து 444 கன்றுகள் நடலாம். 5*4 அடி இடைவெளியில் ஹெக்டேருக்கு 5 ஆயிரத்து 555 கன்றுகள் வரை நடவு செய்யலாம். இதன் மூலம் அதிகமான மகசூலும், வருமானமும் கிடைக்கும். இதில், ஒரே குழியில் மூன்று வாழைக்கன்றுகள் நடவு முறை, ஜோடி வரிசை நடவு முறை என இரண்டு முறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு குழியில் மூன்று கன்றுகள்!

செடிக்குச் செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 10 அல்லது 12 அடி இடைவெளி விட்டு, ஓர் அடி இடைவெளியில் ஒரு குழியில் மூன்று கன்றுகளை நடும்போது, கன்றுகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. குழிக்கு மூன்று கன்றுகள் வீதம் 6 அடிக்கு 12 அடியில் ஏக்கருக்கு 1,850 கன்றுகளும்; ஆறரை அடிக்கு 10 அடியில் ஏக்கருக்கு 2 ஆயிரம் கன்றுகளும் நடவு செய்யலாம். நடவு செய்யப்படும் மூன்று வாழைக்கன்றுகளும் ஒரே அளவுள்ளதாகத் தேர்வு செய்ய வேண்டும். நடவு செய்த பிறகு, கன்றுகளின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருந்தால், உயரமாக வளர்ந்த கன்றுகளை அறுத்துவிட்டு ஒரே சீரான வளர்ச்சியைப் பராமரிக்க வேண்டும்.

ஒரே குழியில் மூன்று கன்றுகளை நெருக்கி நடும்போது, வேர்கள் ஒரே இடத்தில் அடர்த்தியாக வளர்கின்றன. இதனால் நீர், உரங்களின் தேவை நான்கில் ஒரு பங்கு குறைகிறது. இதன் மூலம் 30 சதவிகிதம் முதல் 40 சதவிகித பாசன நீரும், 25 சதவிகித உரமும் சேமிக்கப்படுகிறது. அத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும்போது செலவு குறைகிறது. இப்படி நடவு செய்யும்போது, சிறிய ரக டிராக்டர்களைக் கொண்டு களை எடுக்கலாம்.

ஜோடி வரிசை நடவு முறை!

இந்த நடவு முறையில் குட்டை வாழை ரகங்களை 4*4 *6.5 அடி (1.2 *1.2 *2 மீட்டர்) இடைவெளியில் ஏக்கருக்கு 2 ஆயிரத்து 80 கன்றுகள் நடவு செய்யலாம். நேந்திரன், ரஸ்தாளி, ரொபஸ்டா, கிராண்ட் நைன் (ஜி-9), நெய்ப்பூவன் போன்ற ரகங்களை 5*5 *6.5 அடி (1.5 *1.5 *2.0 மீட்டர்) இடைவெளியில் ஏக்கருக்கு 1,525 கன்றுகள் நடவு செய்யலாம். இந்த முறையில் கன்று நடவு செய்ததிலிருந்து 5 முதல் 6 மாதங்கள் வரை குறுகிய கால பயறு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் மலர்களை ஊடுபயிராக சாகுபடி செய்து, களைகளைக் கட்டுப்படுத்துவதுடன் கூடுதல் வருமானமும் பார்க்கலாம்.

40 சதவிகிதம் கூடுதல் மகசூல்!

அடர்நடவு முறைகளில், வாழையின் உயரம் அதிகமாக இருப்பதுடன், 3 முதல் 4 வாரங்கள் வரை தார் ஈனுதல் தள்ளிப்போகும். சாதாரண நடவு முறையில் கிடைக்கும் தார்களின் எடையைவிட 3.5  கிலோ முதல் 4 கிலோ வரை எடை குறைவாக இருந்தாலும், அதிகமான அளவு வாழைக் கன்றுகளை நடவு செய்யும்போது, சாதாரண நடவு முறையில் கிடைக்கும் மகசூலைக் காட்டிலும் 30 முதல் 40 சதவிகிதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். பழங்கள் கூடுதல் சுவையுடன் இருக்கும். பக்கக் கன்றுகளின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும். காற்றில் பரவக் கூடிய பூஞ்சண நோய்களின் தாக்குதல் குறைவாக இருக்கும்.'

அடுத்த இதழில் பாடம் முடியும்


திசு வாழை நடவு முறை!

திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை நடவு செய்யும் முறை குறித்து தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி வாழை விவசாயி கோட்டைச்சாமியிடம் பேசினோம்.

''வாழை சாகுபடி செய்யப்படும் நிலத்தைக் கட்டியில்லாத அளவுக்கு முதலில் சட்டிக்கலப்பை கொண்டு உழவு செய்து ஆட்டுக்கிடை கட்ட வேண்டும். அல்லது ஏக்கருக்கு 10 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து விட்டு, மீண்டும் ரோட்டோவேட்டரில் உழவு செய்ய வேண்டும். திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை 6 அடிக்கு 6 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். திசு வாழைக்கன்றுகளின் பை இருக்கும் உயரத்துக்கு ஏற்ற ஆழத்துக்கு குழி எடுத்தால் போதுமானது. அதிகமான ஆழத்துக்கு குழி எடுத்தால், கன்று அழுகிப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நடவுக்கு முன் ஒவ்வொரு குழியிலும், 250 கிராம் மண்புழு உரம், 20 கிராம் வேம், 10 கிராம் வேஸ்டிலோமைசின் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட வேண்டும். வெயில் காலமாக இருந்தால், முதல் நாளே தண்ணீர் கட்டி ஈரப்படுத்திய பிறகுதான் நடவு செய்ய வேண்டும். மழை அல்லது குளிர் காலமாக இருந்தால், கன்றுகளை நடவு செய்த பிறகு பாசனம் செய்தால் போதுமானது. இந்த முறையில் நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 1,200 கன்றுகள் வரையில் நடவு செய்யலாம்'' என்றார்.


வழக்கமான முறையில் வாழை நடவு!

நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் வழக்கமான முறையில் வாழை நடவு செய்வது பற்றி விளக்குகிறார், திருச்சி மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்த முன்னோடி வாழை விவசாயி கோவிந்தன்.

''நன்செய், புன்செய் என எந்த நிலமாக இருந்தாலும், வடிகால் வசதி இருக்க வேண்டும். நன்செய் நிலமாக இருந்தால், ஏழேகால் அடிக்கு ஏழேகால் அடி இடைவெளியில், முக்கால் அடி ஆழத்துக்குக் குழி எடுத்துக் கிழங்குகளை நடவு செய்ய வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 25 கிலோ பலதானிய விதைகளை விதைக்க வேண்டும். இரண்டு வாழைக் கன்றுக்கு இடையில்  முக்கால் அடி அகலத்தில், ஒன்றரை அடி ஆழத்தில் கிடங்கு வெட்ட வேண்டும். இதன் மூலம் நிலத்தில் தண்ணீர் தேங்காது. பல தானியங்கள் நிலத்தில் வளருவதால், களைகள் குறைவாக இருக்கும். இந்த முறையில் நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 1,000 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். பூவன் வாழை ரகமாக இருந்தால், ஆறு அடிக்கு ஆறரை அடி இடைவெளி கொடுத்தால் போதுமானது. இந்த முறையில் 1,100 வாழைக்கன்றுகளை நடவு செய்யலாம்.

புன்செய் நிலமாக இருந்தால், நிலத்தில் கட்டி, களைச் செடிகள் இல்லாத அளவுக்கு ரோட்டோவேட்டர் கொண்டு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவில் பலதானிய விதைகளை விதைத்துவிட்டு, மேற்சொன்ன இடைவெளியில் வாழைக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பல தானியங்கள் முளைத்து வளர்ந்து பூ வைத்ததும், செடிகளை வேருடன் பிடுங்கிப் போடாமல் வேர்ப் பகுதியை நிலத்தில் விட்டு, செடிகளை மட்டும் அறுத்து வாழைக்கன்றுகளைச் சுற்றி மூடாக்காக இடவேண்டும்'' என்றார்.


 நானும் பசுமை விகடனும்

சாஃப்ட்வேர் விவசாயி!

’எனக்கு சொந்த ஊர் சீர்காழி. அப்பா, தாத்தானு எல்லாருக்கும் விவசாயம்தான் தொழில். இன்ஜினீயரிங் படிச்சதால, சென்னையில வேலை கிடைச்சு கிளம்பி வந்துட்டேன். எல்லா திறமைகளையும் சாப்ட்ஃவேர் பீல்டுல கொட்டி வேலை பார்த்து, மனஉளைச்சலோட இருந்த சமயத்துல, ஒரு பெட்டிக் கடையில் பசுமை விகடனைப் பார்த்து, எதார்த்தமா வாங்கி படிச்சேன். அதுவரைக்கும் இருந்த என்னோட மனஉளைச்சலுக்கு மருந்து மாதிரி இருந்துச்சு. தொடர்ந்து நாலு வருஷமா பசுமை விகடனை படிக்கவும் , விவசாயம் பார்க்கலாம்கிற நம்பிக்கை வந்துடுச்சு. குடும்ப தேவைகளுக்காக, சொந்த நிலங்களை எல்லாம் ஏற்கெனவே விற்பனை செஞ்சுட்டதால, கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணத்துல ஒண்ணரை ஏக்கர் நிலத்தை வாங்கிருக்கேன். இன்னும் கொஞ்ச நிலம் வாங்குறதுக்காகத்தான் இப்பவும் வேலை பாத்துக்கிட்டிருக்கேன். இன்னும் சில வருஷங்கள்ல விவசாயத்தைப்  பார்க்கக் கிளம்பிடுவேன்' என்கிறார் பாபு, உற்சாகமாக!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சட்டமும்... சந்தேகமும்!
பணம் வளரும் பண்ணைக்குட்டை!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close