ஆடிப்பட்டம் தேடி விதை... வகை வகையாய் காய்கறிகள்...வளமான வருமானம்!

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டுக்குக் கைகொடுக்கும் மாதங்கள், ஆனி, ஆடி, ஆவணி ஆகிய மாதங்கள். இத்தகைய ஆடிப்பட்டத்தில் விதைத்தால், தண்ணீர் பிரச்னை இருக்காது என்பதால்தான், நம் முன்னோர் இப்பழமொழியைச் சொல்லி வைத்துள்ளனர். அதனால்தான், பலவிதமான பயிர்களையும் இப்பட்டத்தில் விதைக்கிறார்கள். அவற்றில் காய்கறிப் பயிர்களும் அடக்கம். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் காய்கறி வகைகள் குறைவான பராமரிப்பிலேயே அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்!

ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி பற்றி... விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி சாகுபடிப் பயிற்சியாளர் பாண்டியனிடம் பேசியபோது அவர் விவரித்த பாடம் இதோ...

ஆடிப்பட்டத்துல நிலக்கடலை, காய்கறிகள்னு பலவிதமான பயிர்களை விதைக்கிறதுக்கு காரணம், ஆடி மாசத்துல விட்டு விட்டுக் கிடைக்கிற மழைதான். இந்தப் பட்டத்துல விதைக்கிற பயிர்கள் செழிப்பா வளரும். பூச்சி, நோய்த் தாக்குதலும் குறைவா இருக்கும். அதனால தானாவே உற்பத்தி செலவு குறைஞ்சிடும். ஆடிப்பட்டத்துல வெண்டை, கத்திரி, தக்காளி, மிளகாய், முள்ளங்கினு பல வகையான காய்கறிகளை சாகுபடி செய்யலாம்’’ என்ற பாண்டியன், சாகுபடி செய்யும் முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஏக்கருக்கு 150 கிராம் கத்திரி விதை!

“கத்திரி, மிளகாய், தக்காளி ஆகிய மூன்று பயிர்களையும் நாற்று தயாரித்து நடவு செய்வதுதான் கூடுதல் பலன் தருவதாக இருக்கும். இந்த மூன்று பயிர்களின் ஆயுட்காலம் 8 மாதங்கள். பராமரிப்புக்கு ஏற்ப ஒரிரு மாதங்கள் கூடலாம், குறையலாம். இந்தக் காய்கறிச் செடிகளை தண்ணீர் தேங்கி நிற்காத எல்லா நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். கத்திரியில் செவந்தம்பட்டி, உஜாலா, கண்ணாடி பவானி, குண்டு பவானி, ஏந்தல், இலவம்பாடி என பல ரகங்கள் உள்ளன. இந்த ரகங்களை நடவு செய்ய, ஒரு ஏக்கருக்கு 150 கிராம் விதை போதுமானது. இரண்டரை அடி இடைவெளியில பார் அமைத்து, பாரின் ஒரு பக்கம் இரண்டு அடி இடைவெளியில் 25 முதல் 30 நாட்கள் வயதுள்ள நாற்றை நடவு செய்யலாம். நடவு செய்த 55-ம் நாளில் பூவெடுத்து, 65-ம் நாள் முதல் அறுவடைக்கு வந்துவிடும்.

சராசரியாக ஒரு ஏக்கருக்கு 10 டன் முதல் 15 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். ரகத்துக்கு ரகம் மகசூல் அளவு மாறுபடும்.

10 டன் மகசூல் கொடுக்கும் மிளகாய்!

மிளகாயில் நாட்டு ரகங்கள் இருந்தாலும், விவசாயிகள் அதிகமாக விரும்பிப் பயிர் செய்வது வீரிய ரகங்களைத்தான். குண்டு மிளகாய், மானாவாரிக்கு ஏற்றது. நாற்று தயாரிக்க, ஏக்கருக்கு 150 முதல் 200 கிராம் விதை போதுமானது. 20 முதல் 25 நாட்கள் வளர்ந்த மிளகாய் நாற்றுகளை நடவு செய்யலாம். நடவு செய்த 50 முதல் 55 நாட்களில் பூவெடுத்துவிடும். 70 முதல் 75 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மிளகாய் அறுவடை இருக்கும். நல்ல முறையில் ஊட்டம் கொடுத்துப் பராமரித்தால், ஓர் ஆண்டு வரை கூட மகசூல் எடுக்கலாம். ஒரு ஏக்கரில் 4 டன் முதல் 6 டன் வரை நாட்டு ரக மிளகாயில் மகசூல் எடுக்கலாம். வீரிய ரகத்தில், 8 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும்.

13 டன் மகசூல் கொடுக்கும் பி.கே.எம்-1 தக்காளி!

தக்காளியில் நாட்டு ரகம், பி.கே.எம்-1 ஆகிய ரகங்களோடு, பல வீரிய ரகங்களும் இருக்கின்றன. ஒரு ஏக்கர் நடவு செய்ய 150 கிராம் விதையில் நாற்றங்கால் அமைத்தால் போதுமானது. நடவு செய்த 55-ம் நாளில் பூவெடுத்துவிடும். 65 நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம். நாட்டு ரக தக்காளியில் ஒரு ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரையிலும்; பி.கே.எம்-1 ரகத்தில் 12 டன் முதல் 13 டன் வரையிலும்; வீரிய ரகத்தில் 15 டன் முதல் 20 டன் வரையிலும் மகசூல் கிடைக்கும்.

வெண்டை, செடி அவரை, கொத்தவரை, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை சாகுபடி செய்வதாக இருந்தால் நேரடியாக விதைகளை விதைக்கலாம்.

வெண்டையில் அதிக மகசூல் கொடுக்கும் அடர்நடவு!

வெண்டையின் ஆயுள் காலம் 90 நாட்கள். உழவு செய்து சமப்படுத்திய நிலத்தில், 2 அடிக்கு, ஒன்றரை அடி இடைவெளியில் நாட்டு ரக விதைகளை விதைக்கலாம். வீரிய ரகமாக இருந்தால், ஒன்றரை அடிக்கு, ஒரு அடி இடைவெளியில் நடவு செய்தால் போதுமானது. ஏக்கருக்கு மூன்றரை கிலோ விதை தேவைப்படும். தவிர, அடர்நடவு முறையில் முக்கால் அடிக்கு முக்கால் அடி இடைவெளியிலும் இவற்றை நடவு செய்யலாம். இம்முறைக்கு 6 கிலோ முதல் 7 கிலோ வரை விதை தேவைப்படும். நடவு செய்த 45-ம் நாளில் பூவெடுத்து, 55-ம் நாளில் முதல் அறுவடைக்கு வந்து விடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கரில், சாதாரண முறையில் ஒரு அறுவடைக்கு 300 முதல் 350 கிலோவும், அடர்நடவுமுறையில் 550 முதல் 600 கிலோவும் மகசூல் கிடைக்கும். வழக்கமான முறையில் நடவு செய்த செடிகள் அறுவடை முடிவதற்கு முன்பே, அடர்நடவு முறையில் சாகுபடி செய்த செடிகளில் அறுவடை முடிந்து விடும். ஒரு ஏக்கருக்கு வழக்கமான முறையில் 6 டன் முதல் 7 டன் வரையும்; அடர்நடவு முறையில் 9 டன் முதல் 12 டன் வரையும் மகசூல் எடுக்கலாம்.

செழிப்பான மகசூல் கொடுக்கும் செடிஅவரை!

இதன் வயது 120 நாட்கள். 2 அடி பார் அணைத்து, 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த விதைகள் 3-ம் நாளில் முளைத்து வந்து விடும். ஏக்கருக்கு மூன்று முதல் மூன்றரை கிலோ விதை தேவை. நடவு செய்த 45-ம் நாளில் பூவெடுத்து, 55-ம் நாளில் காய்க்கத் துவங்கும். ஏக்கருக்கு 3 டன் முதல் 4 டன் வரை மகசூல் கிடைக்கும்.

வறட்சியைத் தாங்கும் கொத்தவரை!

ஆயுள் காலம் 90 முதல் 100 நாட்கள். இது வறட்சியைத் தாங்கி வளரும் காய்கறிப் பயிர். இறவையில் ஒன்றரை அடிக்கு, ஒன்றரை அடி இடைவெளியில் தனியாகவோ அல்லது ஒன்றரை அடி இடைவெளியில் பார் வரப்புகளில் ஊடுபயிராகவோ சாகுபடி செய்யலாம். மானாவாரியில் தனியாகவோ அல்லது கடலை மாதிரியான பயிர்களுடன் கலந்தோ விதைக்கலாம். இறவையில் நடவு செய்ய, ஏக்கருக்கு ஒரு கிலோவும், மானாவாரி விதைப்புக்கு 3 கிலோ விதையும் தேவை. நடவு செய்த விதைகள் 3-ம் நாளில் முளைத்து விடும். 45-ம் நாளில் பூவெடுத்து, 55-ம் நாளில் அறுவடைக்கு வந்துவிடும். இறவையில் ஒரு ஏக்கருக்கு 10 டன் முதல் 12 டன் மகசூலும்; மானாவாரியில் 3 டன் முதல் 4 டன் மகசூலும் கிடைக்கும்.

30 நாளில் வருமானம் கொடுக்கும் முள்ளங்கி!

ஆயுள்காலம் 40 நாட்கள். குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கும் காய்கறிப் பயிர். முக்கால் அடி இடைவெளியில் பார் ஓட்டி, நான்கு அங்குல இடைவெளியில் முள்ளங்கி விதைகளை நடவு செய்ய வேண்டும். 3-ம் நாளில் முளைப்பு எடுத்து விடும். 30 முதல் 40 நாளில் அறுவடை செய்து முடித்து விட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 டன் முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.

பாடத்தை முடித்த பாண்டியன், “ஆடி மாத விதைப்புக்கு ஆடி மாசம் பிறக்கிற வரை காத்திருக்காம முன் கூட்டியே தேவையானதையெல்லாம் தயார் செய்துட்டா மழை கிடைச்சதும், விதைக்க ஆரம்பிச்சுடலாம். இந்த வருஷம் கோடைமழை பரவலா கிடைச்சதால பெரும்பாலான பகுதிகள்ல கோடை உழவு ஓட்டி நிலத்தை தயார் படுத்தி வெச்சிருக்குறாங்க. அவங்க, காய்கறி சாகுபடியை முயற்சி பண்ணிப் பார்க்கலாம்” என்று வழிகாட்டினார்.

நல்ல விளைச்சலுக்கு நாட்டு ரகம்!

கத்திரி ரகத்தைப் பொறுத்தவரை, ஏந்தல், இலவம்வாடி... போன்ற நாட்டு ரகங்களுக்கு பல சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒட்டு, வீரிய ரகங்களை விட இவற்றில் பூச்சி-நோய்த் தாக்குதலும் குறைவு. இதனால், சாகுபடிச் செலவும் குறையும். விளைச்சலும் கூட ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை கொடுத்து வருகின்றன. எனவே, நாட்டு ரக கத்திரி மூலம் நல்ல வருமானமும் எடுக்க முடியும்.

கொடிவகைக் காய்களில் குதூகல வருமானம்!

ஆடிப்பட்ட கொடிவகை காய்கறி சாகுபடிகள் குறித்து... திருவண்ணாமலை மாவட்டம், சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி  சேகர் சொன்ன தகவல்கள் இங்கே...

“கொடி வகை காய்கறிகளுக்கு ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் ஏற்றது. அதிலும், ஆடிப்பட்டத்தில் பாகல், பீர்க்கன், புடலை மூன்றையும் சாகுபடி செய்யும்போது பூச்சி, நோய்த் தாக்குதல் குறைவாக இருக்கும். செடிகளின் வளர்ச்சியும் நன்றாக இருப்பதோடு, மகசூலும் சிறப்பாக இருக்கும். இந்த மூன்று பயிர்களுக்குமே ஆயுள் காலம் 6 மாதங்கள். பாகல், பீர்க்கன், புடலையில் நாட்டு ரகங்கள் விதவிதமாக இருந்தாலும், விதைகள் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை. இதனால், பெரும்பாலும் ஒட்டு மற்றும் வீரிய ரகம்தான் சாகுபடி செய்யப்படுகிறது. கொடி வகை காய்கறி சாகுபடிக்கு, சித்திரை மாதத்தில் கிடைக்கும் மழையில் கோடை உழவு செய்து கொள்ள வேண்டும். ஆனி மாதத்தில் ஏக்கருக்கு நான்கு டிப்பர் அளவில் எருவைக் கொட்டிக் கலைத்து, இரண்டு சால் உழவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து ரோட்டோவேட்டர் கொண்டு இரண்டு சால் உழவு மூலம் உழுது நிலத்தை சமன்படுத்தி, பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கன அடி அளவில் குழி எடுத்து, நான்கு நாட்கள் வரை ஆறப்போட்டு...  ஒவ்வொரு குழியிலும் அரை கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றைக் கலந்து நிரப்ப வேண்டும். பிறகு, குழிக்கு 5 விதைகள் வீதம் படுக்கை வசத்தில் விதைக்க வேண்டும். பாகல், புடலை விதைகளை விதைநேர்த்திச் செய்வது நல்லது. பீர்க்கன், நடவு செய்த மூன்றாம் நாளில் முளைக்கும். பாகல் மற்றும் புடல் ஆகியவை 7-ம் நாளில் முளைக்கும். 15-ம் நாளில் செடிகளை சுற்றி இருக்கும் களைகளைக் கையால் அகற்ற வேண்டும். 15-ம் நாளில் பீர்க்கனும்; 20-ம் நாளில் பாகல் மற்றும் புடலை ஆகியவையும் கொடி படரத் தொடங்கும். அந்தச் சமயத்தில் சின்னக் குச்சியை நட்டு, குச்சிக்கும், பந்தலுக்கும் ஒற்றைப் பிரி சணலை கட்டி கொடிகளை ஏற்றிவிட வேண்டும். கொடிகளை ஏற்றிவிடும்போது, பக்க சிம்புகளை கிள்ளி விட வேண்டும்.

பீர்க்கன் 25 முதல் 30-ம் நாட்களுக்குள் பூவெடுக்கும். 40-ம் நாளில் இருந்து அறுவடைக்கு வரும். பாகல், புடல் ஆகியவை 30 முதல் 35 நாட்களுக்குள் பூவெடுத்து, 45 முதல் 50 நாளில் இருந்து அறுவடையாக ஆரம்பித்து விடும்” என்ற சேகர்,

“ஒரு ஏக்கர் நிலத்தில் பாகல் மற்றும் பீர்க்கன் எதைப் பயிர் செய்தாலும், 5 முதல் 10 டன் வரை மகசூல் நிச்சயம். புடலையில் 10 முதல் 15 டன் மகசூல் கிடைக்கும். இவற்றுக்கு சராசரியாக ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விலை கிடைக்கும்” என்றார்.

வளர்ச்சியைத் தூண்டும் பிண்ணாக்குக் கரைசல்!

கொடிப் பயிர்களை நடவு செய்த 20-ம் நாளில் ஏக்கருக்கு 10 கிலோ கடலைப் பிண்ணாக்கை 100 லிட்டர் தண்ணீரில் 2 நாட்கள் ஊற வைத்து, ஒவ்வொரு செடிக்கும் வேர்ப்பகுதியில் 250 மில்லி அளவுக்கு ஊற்றிவிட வேண்டும். சொட்டு நீர்ப்பாசனமாக இருந்தால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், நேரடிப் பாசனமாக இருந்தால், 4 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்ய வேண்டும். பாசன நீருடன் 10 நாட்கள் இடைவெளியில் 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலையும், 200 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலையும் மாற்றி மாற்றிக் கலந்து விட வேண்டும்.

மாதம் ஒரு முறை 500 கிலோ எரு, தலா 10 கிலோ சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிழலான இடத்தில் சணல் சாக்குப் போட்டு இரண்டு நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும். இந்த எருக்கலவையை, செடிக்கு
500 கிராம் வீதம் பிரித்து வைக்க வேண்டும்.

செடியின் வளர்ச்சி குறைவாக இருந்தால்,  200 லிட்டர் தண்ணீரில்  50 கிலோ பருத்திப் பிண்ணாக்கு அல்லது  20 கிலோ கடலைப்பிண்ணாக்கை இரண்டு நாட்கள் ஊற வைத்து, செடிக்குச் செடி ஊற்றிவிட வேண்டும். ஆடிப்பட்டத்தில் பூச்சி, நோய்த்தாக்குதல் குறைவாக இருந்தாலும், காய்ப்புழுத் தாக்குதல் இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த இயற்கைப் பூச்சிவிரட்டிகளே போதுமானது.

பந்தல் செலவைக் குறைக்கும் துரிஞ்சல் மரக்கிளைகள்!

கொடிப்பயிர்களுக்கு வசதிக்கு ஏற்ப (6 அடிக்கு 6 அடி), மூங்கில் பந்தல் அல்லது கல்தூண் பந்தல் அமைக்கலாம். இன்னும் எளிமையாக செய்ய வேண்டும் என்றால், துரிஞ்சல் மரத்தின் கிளைகளை நடவு செய்து, அதன் மீது செடிகளை வளர்க்கலாம்.

6 அடிக்கு 10 அடி இடைவெளியில் பாகலும், 6 அடிக்கு 12 அடி இடைவெளியில் புடலையும், 6 அடிக்கு 10 அடி இடைவெளியில் பீர்க்கனும் நடவு செய்யலாம்.

முளைப்பைத் தூண்டும் சாணிப்பால்!

பாகல், புடலை விதைகளை சாதாரணமாக நடவு செய்யும்போது முளைப்பு எடுக்க தாமதமாகும். சாணிப்பாலில் விதை நேர்த்தி செய்தால் விரைவாக முளைப்பு எடுத்துவிடும்.

விதை நேர்த்தி செய்ய, விதைகள் மூழ்கும் அளவுக்கு சாணிப்பால் தயார் செய்து, அதில் ஓர் இரவு, ஒரு பகல் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த விதைகளை நடவு செய்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தரையில் உலர்த்தினால், விதைகள் ஒட்டாமல் தனித்தனியாக வரும். பிறகு, நடவு செய்யலாம். இப்படி நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 600 கிராம் விதைகள் தேவை.

தொடர்புக்கு,
பாண்டியன்,
செல்போன்: 78118-97510
சேகர்
செல்போன்: 97876-00991.

 காசி.வேம்பையன்

 படங்கள்: தே.சிலம்பரசன், கா.முரளி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick