பூச்சிக்கொல்லி நாடகம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் அளவுக்கு அதிகமாக ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன’ என்று அண்மையில் கேரள அரசு குற்றம்சாட்டியது. ஆனால், தமிழக அரசும் வேளாண் பல்கலைக்கழகமும் இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், அல்டிகார்ப், அல்ட்ரின், பி.ஹெச்.சி, கால்சியம்-சயனைடு, குளோர்-பென்சிலேட் உள்ளிட்ட 27 வகையான வேதிப்பொருள் கலந்த ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதித்திருக்கிறது தமிழக அரசு.

ஆனால், இந்த விஷயத்தை காதும் காதும் வைத்தாற்போல செய்திருப்பதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது. வெறுமனே சின்னதாக ஓர் அறிக்கையோடு தமிழக அரசு வாய்மூடி நிற்பதைப் பார்த்தால், ஏதோ கேரளாவை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்ட நாடகம் போலவே தோன்றுகிறது.

‘இல்லை, எங்களுக்கு உண்மையான அக்கறை இருக்கிறது’ என்று தமிழக அரசு காட்டிக் கொள்ள நினைத்தால், ரசாயன பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட்ட தகவலை புயல், வெள்ளம், சுனாமி போன்ற அவசர கால எச்சரிக்கை அறிவிப்பு போல அல்லவா, பரப்பியிருக்கவேண்டும்.

எங்கோ ஒரு மூலையில் ஒரு பேருந்து நிழற்குடையைக் கட்டி, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளிக் காட்சி மூலம் திறந்தால்கூட, பத்திரிகைகளில் பளபளவென விளம்பரங்களைக் கொட்டிக் குவிக்கும் அரசு, மக்களின் உயிரோடு விளையாடும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பற்றி பக்கம் பக்கமாக விளம்பரம்கூட தரத் தேவையில்லை. ஆனால், துறையின் அமைச்சரோ அல்லது துறை சார்ந்த உயர் அலுவலரோ மீடியாக்களை அழைத்து, விரிவாக ஒரு பேட்டி கொடுத்திருக்கலாமே... ரசாயன தீமைகளைப் போட்டு உடைத்திருக்கலாமே!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick