இயற்கையில் மாடித்தோட்டம்... பாடம் சொல்லும் படம்...!

லையாளத்தில் வெளியான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் வந்துள்ள திரைப்படமே ’36 வயதினிலே’. ரகுமான் ஜோதிகா நடிப்பில் வெளிவந்துள்ள இந்தத் திரைப்படத்தின் பிரதான கருத்து, ‘சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதும் இயற்கை விவசாயத்துக்கு வளரும் தலைமுறையினர் முக்கியத்துவம் தர வேண்டும்’ என்பதும்தான். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியான போது, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ... ஒரு பசுமைத் திரைப்படம்’ என்ற  கட்டுரையை பசுமை விகடனில் வெளியிட்டிருந்தோம்.

இனி தமிழ்ப்படத்தைப் பார்ப்போம்... அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் 36 வயதாகும் பெண்ணாக ‘வசந்தி’ என்கிற கதாபாத்திரமேற்று ஜோதிகா நடித்துள்ளார். அவரது கணவர் ரகுமான், ரேடியோ ஜாக்கியாக பணியாற்றுகிறார். இந்தத் தம்பதிக்கு 13 வயதில் மிதுலா என்கிற மகள். மிதுலாவின் பள்ளிக்கு வருகை தரும் குடியரசுத் தலைவரிடம் மிதுலா ஒரு கேள்வி கேட்கிறார். அந்த கேள்வியை தன்னுடைய தாய் வசந்திதான் தனக்கு சொல்லிக் கொடுத்ததாக மிதுலா கூற, வசந்தியை சிறப்பு விருந்தினராகச் சந்திக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுக்கிறார். அதை ஏற்று குடியரசு தலைவர் மாளிகைக்குச் செல்லும் வசந்தி அவரைப் பார்த்ததும் மயங்கி விழ, மொத்த நாடும் ஃபேஸ்புக்கில்  கேலிச்சித்திரமாக வசந்தியை விமர்சிக்கிறது. ஒரு கட்டத்தில் கணவரும் மகளும் கூட வசந்தியைப் புரிந்து கொள்ளாமல் அயர்லாந்துக்குச் சென்றுவிடுகிறார்கள்.

வசந்தி வீட்டின் மாடித்தோட்டத்தில் விளைந்த இயற்கைக் காய்கறிகளை தொழிலதிபர் ஒருவர் சுவைக்க, அதன் தொடர்ச்சியாக அவரது மகளின் திருமணத்துக்காக ரசாயனம் கலக்காத காய்கறிகளை 2,000 பேருக்கு சமைத்துத் தருமாறு கேட்கிறார். மறுக்க இயலாமல் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறிகளை ஆர்டர் கொடுக்க செல்லும் வசந்திக்கு அந்த இடத்தில், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நாம் சமைக்கும் காய்கறிகள் 15 நாட்களுக்கு முன்பாக செடியில் இருந்து பறிக்கப்பட்டு, ரசாயனப் பூச்சிக்கொல்லி விஷத்தால் முக்கி எடுக்கப்படுகின்றன என்று கடைக்காரர் சொல்கிறார்.

இதனால், தன் வீட்டில் உள்ளதைப் போலவே, அக்கம்பக்கத்திலும் இயற்கை விவசாயத்தில் மாடித் தோட்டம் அமைத்து, 2,000 பேருக்கான காய்கறிகளை விளைவித்துக் கொடுகிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் வசந்தி தன் கல்லூரித்தோழியைச் சந்திக்கிறார். அவர் கொடுக்கும் உத்வேகத்தாலும் முயற்சியாலும் தமிழக அரசு நடத்தும் விவசாயக் கருத்தரங்கில் வசந்தி பேசுகிறார்.

வசந்தியின் முயற்சி வெற்றி அடைந்து, ‘மாடித் தோட்டத் திட்டம்’ வெற்றி பெறுகிறது. இதனால், மீண்டும் குடியரசுத் தலைவர், அவரை அழைத்துப் பாராட்டுகிறார்.

‘‘எல்லா காய்கறிகளிலுமே சத்துக்கள் நிறையவே இருக்கு. ஆனா, அதையும் தாண்டி ரசாயன மருந்துகளும் நிறையவே கலந்திருக்கு...”

 “5 வயசு குழந்தை கூட பார்வை குறைபாட்டால் கண்ணாடி போடுது. 10 வயசு குழந்தைக்குக் கூட சர்க்கரை வியாதி வருது....’’ போன்ற வசனங்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தைப் பாடமாக எடுத்துச் சொல்லுகின்றன.

 பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick