மானாவாரியில் மகத்தான மகசூல்... துவள விடாத துவரை!

மிழ்நாட்டின் பாரம்பர்யமான மானாவாரிப் பயிர்களில் துவரையும் ஒன்று. ஆனால், ஆழ்துளைக் கிணறுகளின் வரவுக்குப் பிறகு, மற்ற சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு குறைந்தது போல... துவரை சாகுபடிப் பரப்பும் குறைந்து விட்டது. தமிழ்நாட்டின் முக்கிய உணவுப் பொருளான துவரை உற்பத்தி இங்கு குறைந்து வருவதால்... வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பருப்புதான் தமிழ்நாட்டின் தேவையை நிறைவு செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட, பாரம்பர்யத்தை மறக்காத சில விவசாயிகள் இன்றும் துவரையை சாகுபடி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக, தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள குருவாடிப்பட்டி, முன்னையம்பட்டி, செல்லப்பன்பேட்டை, திருமலைசமுத்திரம், வல்லம்புதூர் ஆகிய கிராமங்களில் பல விவசாயிகள் மானாவாரியாக துவரை சாகுபடி செய்து மகுடம் சூடி வருகிறார்கள்.

குருவாடிப்பட்டி கிராமத்தில் துவரை சாகுபடியில் ஈடுபட்டு வரும் பன்னீர்செல்வத்தைச் சந்தித்தோம். செழிப்பாக விளைந்து காற்றில் அசைந்தாடிய துவரைச் செடிகளை நம்மிடம் காட்டிய பன்னீர்செல்வம், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“எனக்கு எட்டு ஏக்கர் நிலம் இருக்கு. போர்வெல் வசதியுள்ள ஆறு ஏக்கர்ல நெல்லையும் கரும்பையும் சாகுபடி செய்றேன். தண்ணி வசதியில்லாம தனியா அமைஞ்சிருக்குற இந்த ரெண்டு ஏக்கர்ல துவரை சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். இது செம்மண் பூமி. இதுல துவரை சிறப்பா விளையும். சாகுபடி செய்றதும் சுலபம். தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. மாட்டுச் சாணத்தை அடியுரமா கொடுத்தா போதும். மேலுரமே தேவையில்லை. அதில்லாம துவரையை விற்பனை செய்றதும் கஷ்டமில்லை” என்று துவரைக்குக் கட்டியம் கூறிய பன்னீர்செல்வம், தொடர்ந்தார். 

“அரை ஏக்கர்ல நாட்டுத் துவரையையும், ஒண்ணரை ஏக்கர்ல பவானிசாகர்-1 நவீன ரக துவரையையும் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். ரெண்டுமே 6 மாசப் பயிர். பவானி சாகர்-1 ரக துவரையை 3 போகம் வரை வெச்சிருக்கலாம். முதல் போகத்துல 500 கிலோவுல இருந்து 600 கிலோ வரை கிடைக்கும்.  2-ம் போகத்துல 400 கிலோவும், 3-ம் போகத்துல 300 கிலோவும் கிடைக்கும். ஆனா, மாசத்துக்கு ஒரு தடவையாவது கண்டிப்பா மழை கிடைச்சாத்தான் பயிர் தாங்கும். இல்லாட்டி பயிர் வாடி வதங்கிப்போயிடும்.

நாட்டுத் துவரையில ஒரு போகம்தான் எடுக்கமுடியும். ஆனா, அந்த ஒரு போகத்துக்கான ஆறு மாச காலத்துக்குள்ள மூணு தடவை மழை பெய்ஞ்சா போதும், உத்தரவாதமான மகசூல் கிடைச்சுடும். ஏக்கருக்கு 500 கிலோ வரை மகசூலாகும். நாட்டுத் துவரை நல்லா சுவையாவும் வாசனையாவும் இருக்கும்”  என்று சொன்ன பன்னீர்செல்வம் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யும் விதம் பற்றிச் சொன்னார். அது பாடமாக இங்கே...

ஆடிப்பட்டம் தேடி விதை!

“இரண்டு ரகங்களுக்குமே சாகுபடி முறை ஒன்றுதான். ஆடி அல்லது ஆவணிப் பட்டம் விதைப்புக்கு ஏற்றது. சித்திரை, வைகாசி மாதங்களில் கோடை மழை பெய்த அடுத்த மூன்று நாட்களுக்குள் இரண்டு சால் புழுதி உழவு ஓட்ட வேண்டும். அடுத்த மழை பெய்ததும் ஏக்கருக்கு மூன்று டன் என்ற கணக்கில் எருவை நிலம் முழுக்க பரவலாகக் கொட்டி, இரண்டு சால் உழவு ஓட்டி வைக்க வேண்டும்.

ஏக்கருக்கு 2 கிலோ விதை!

ஆடி மாதம் அல்லது ஆவணி மாதத்தில் ஒரு மழை கிடைத்ததும்... வரிசைக்கு வரிசை 5 அடி செடிக்குச் செடி முக்கால் அடி இடைவெளியில் இரும்பு கம்பியால் கோடு ஆழமாக கோடு கிழித்து விதையைத் தூவ வேண்டும்.ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதைகள் தேவைப்படும். அடுத்த சில நாட்களில் விதைகள் முளைத்து வரும். 20-ம் நாள் முதல் 25-ம் நாளுக்குள் செடிகள், அரையடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். இந்த சமயத்தில் களை எடுக்க வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. விதைப்பில் இருந்து 30 நாட்களுக்குள் மழை பெய்துவிட்டால், அடுத்த 15 நாட்களில் இரண்டரை அடி உயரத்துக்கு செடிகள் வளர்ந்து விடும். விதைத்த 5-ம் மாதத்துக்குப் பிறகு பூ பூக்கும். அதிலிருந்து ஒரு வாரத்தில் காய்கள் காய்க்கும். அடுத்த 15 நாட்களில் காய்கள் முற்றி, நெற்றுகள் உருவாகி அறுவடைக்குத் தயாராகி விடும்.

அறுவடையின் போது 5 அடி உயரத்துக்கு மேல் செடிகள் வளர்ந்திருக்கும். நாட்டுத் துவரைச் செடிகளைத் தரையில் இருந்து ஓரடி உயரத்துக்கு விட்டு அறுத்து வெயிலில் காய போட வேண்டும். மறுநாள் அதிகாலையில் பனி நேரத்தில் செடிகளைக் கட்டுகளாகக் கட்டி, காய்கள் இருக்கும் பகுதிகள் மேல்நோக்கி இருக்குமாறு குத்து போல நிறுத்தி வைத்தால், இலைகள் உதிர்ந்துவிடும். ஒரு வாரம் கழித்து களத்தில் பரத்தி, சில மணிநேரங்கள் காய வைத்து... மரப்பலகையில் கொட்டி மரக்கட்டையால் அடித்தால் மிளார் தனியாகவும் துவரை தனியாகவும் பிரியும். முறத்தால் தூற்றி, துவரையைச் சுத்தப்படுத்த வேண்டும்.

பவானிசாகர்-1 ரக துவரையாக இருந்தால்... அறுவடைக்குத் தயாரானதும், இரண்டரை அடி உயரத்துக்கு செடிகளை விட்டுவிட்டு, மேல் பகுதியை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். கீழ்ப்பகுதியில் இருக்கும் செடிகள் அடுத்த போகத்துக்குத் தயாராகும். 2 மற்றும் 3- ம் போகங்களுக்கு உழவு, உரம், களையெடுப்பு எதுவுமே தேவையில்லை.’’

சாகுபடிப் பாடம் சொன்ன பன்னீர்செலம், “இரண்டு ரகங்கள்லயும் மகசூலில் பெரிய வித்தியாசம் இருக்காது. சராசரியா ஏக்கருக்கு 500 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். இப்போதைக்கு ஒரு கிலோ சராசரியா 60 ரூபாய் விலைக்கு விற்பனையாகுது. இந்தக் கணக்குல பார்த்தா... ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். இதுல சாகுபடி செலவு போக, ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்” என்று சொல்லி விடை கொடுத்தார்.   

தொடர்புக்கு,
பன்னீர்செல்வம்,
செல்போன்: 97513-50411

 கு.ராமகிருஷ்ணன்

 படங்கள்: கே.குணசீலன், சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick