Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close.

300 சதுர அடியில் முழு குடும்பத்துக்கும் காய்கறிகள்!

விஷம் இல்லாத காய்கறிகளை, வீட்டிலேயே விளைவித்து உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் ‘பசுமை விகடன்’ மற்றும் ‘அவள் விகடன்’ சார்பில் தமிழ்நாடு முழுக்க பல பகுதிகளிலும் ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்த வகையில், மே 30-ம் தேதி, விழுப்புரம், ஜெயசக்தி திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ‘விழுப்புரம் ரோட்டரி சங்கம்’ இணைந்துகொள்ள, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

இந்தப் பயிற்சிக் கருத்தரங்கில் தலைமை உரையாற்றிய விழுப்புரம் ரோட்டரி சங்கத் தலைவர் சரவணக்குமார், “இன்றைக்கு இருக்கும் நெருக்கடியான வாழ்க்கையில் பலருக்கும், கிடைப்பது விஷங்கள் தெளிக்கப்பட்ட காய்கறிகள்தான். இந்தநிலை மாறவேண்டும். மொட்டைமாடியிலும், வீட்டைச் சுற்றி இருக்கும் இடத்திலும் நாமே காய்கறிகள் வளர்க்க வேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் ஆசை. இதை நிறைவேற்றி வைக்கும் வழிகாட்டியாக அவள் விகடனும், பசுமை விகடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன” என்றார்.

சிறப்புரை ஆற்றிய சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கத்தின் நிறுவனர் சி.கே.அசோக்குமார், ‘‘அண்மையில் ஒரு கருத்தரங்குக்கு அமெரிக்காவைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் தாமஸ் லோடி என்பவரை அழைத்து வந்திருந்தோம். அவர் பேசும்போது, மேலைநாடுகளை பார்த்து, பீட்சா, மெக்டொனால்ட் மாதிரியான ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவுகளை, இங்கு இந்தியாவில் இருப்பவர்களும் உண்கின்றனர். அந்த உணவு வகைகளில் ‘ஸ்லோ பாய்ஸன்’  (மெள்ளக் கொள்ளும் விஷம்) அடங்கி இருக்கிறது. இவை, புற்றுநோய் மாதிரியான வியாதிகளை ஏற்படுத்தக்கூடியவை. இந்த நோய் தாக்கத்துக்கான காரணம், நம் பெற்றோரின் மரபியல் அல்ல, நம்முடைய வாழ்வியல் முறைகள்தான்.

இன்றைக்கு நம்மூரிலும் புற்றுநோய் அதிகமாகி விட்டது. அதற்கு உதாரணம், மாவட்டத் தலைநகரமான கடலூரில் கேன்சருக்குத் தனியாக ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, நாம் எல்லோரும் வாழ்க்கை முறையையும், உணவு முறைகளையும் சற்று மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

பசுமை வீடுகள்!

‘செலவு குறைந்த பசுமைக் கட்டடத் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் பேசிய ஃபெரோ சிமென்ட் தொழில்நுட்பப் பயிற்றுநர்கள் ராஜராமன் மற்றும் லார்ஸ், ‘‘இன்றைக்கு வீடு கட்டுவதில் பலவிதமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவை, அதிகமான செலவு பிடித்தாலும் சூழலுக்கு உகந்ததாக இல்லை. அதற்கு மாற்றாகத்தான் ஃபெரோ சிமென்ட் தொழில்நுட்பங்களை முன்வைக்கிறோம்.

இதில் செங்கல் மற்றும் மரம் இல்லாமல், இரும்புப் பொருட்களைக் கொண்டு கட்டுகிறோம். இந்த ஃபெரோ சிமென்ட் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் வீடுகள் பூகம்பத்தையும் தாங்கி நிற்கும். நம்முடைய வடிவமைப்பு, அந்தப் பகுதியில் விற்பனையாகும் மணல் விலை ஆகியவற்றின் அடிப்படையில்... ஒரு சதுர அடி கட்டடம் கட்ட 850 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

நாங்கள் எல்லா இடங்களிலும் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதில்லை. இந்த முறையில் வீடுகட்ட ஆசைப்படுபவர்கள் அழைத்து வரும் கொத்தனாருக்குப் பயிற்சி கொடுக்கிறோம். அதன் மூலம் நீங்களே வீட்டைக் கட்டிக்கொள்ளலாம். ஃபெரோ சிமென்ட் தொழில்நுட்பத்தில் ஒரு வாரத்தில் வீடு கட்டிவிடலாம். இந்தத் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஒரே குறைபாடு, நாம் நினைத்த இடத்தில் சுவிட்ச் பாக்ஸை வைக்க முடியாது” என்றனர்.

“வீட்டுத்தோட்டத்தில் காய்கறி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் இல்லங்களில் கழிவுநீர் மேலாண்மை” என்ற தலைப்பில் அனிதா கிறிஸ்டினா, ‘‘300 சதுர அடியில் முழு குடும்பத்துக்கும் காய்கறிகள் சாகுபடி செய்ய முடியும். இடமில்லை என்று சொல்லாதீர்கள். மனமில்லை என்றுதான் சொல்லவேண்டும்’’ என்றார்.

“பணம் கொட்டும் காளான் வளர்ப்பு நுட்பங்கள்” என்ற தலைப்பில் சேகரனும்; “வீட்டுத்தோட்டத்துக்கு ஏற்ற இடுபொருள் தயாரிப்பு” என்ற தலைப்பில் பாண்டியனும் பலவிதமான தகவல்களை வழங்கினர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் லலித் ஆதித்யா, “இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டது மூலமா சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில எப்படி வீடு கட்டலாம். வீட்டு மொட்டை மாடியில தோட்டம் அமைச்சு, எப்படி பசுமையா வெச்சிக்கலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன்”என்றார் மகிழ்ச்சியாக!

காசி.வேம்பையன்

படங்கள்: தே.சிலம்பரசன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை... அச்சத்தில் விவசாயிகள்!
வீட்டுக்குள் விவசாயம் - 9
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close